தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைக்கும் 11 அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றினை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி நிரல் முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார சமநிலையினை மேலும் சாய்ப்பதனை முன்மொழிகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளிலே, நாணயக்காரவின் முன்மொழிவுகள் மிகவும் விரிவானவையாக இருந்தாலும், அவை எமது பார்வையிலே மிகவும் மேலோட்டமானவையாகவே உள்ளன. அவற்றின் அபாயத்தன்மை என்னவெனில் அவை முறைசார் துறையில் பணியாற்றும் உழைக்கும் மக்களின் கூட்டுப் பலத்தை திட்டமிடப்பட்ட வகையிலும், சூழ்ச்சியான முறையிலும் சிதைவடையச் செய்யும் நோக்கிலே உருவாக்கப்பட்டுள்ளன. “எங்களிடம் இன்னும் காலவதியான தொழிலாளர் சட்டங்களே உள்ளன; அவை முதலீட்டாளர்களை நாட்டுக்குள் உள்ளீர்க்காமல் வெளியே திருப்பிவிடும் சட்டங்களாகவே இருக்கின்றன,” என நாணயக்கார தனது உரையின் ஆரம்பத்திலேயே சொன்னமை, முன்மொழியப்படும் சட்டத் திருத்தங்களின் அபாயத்தினை தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்துகிறது.
அமைச்சர் நாணயக்காரவினால் முன்மொழியப்பட்ட 11 அம்சத் திட்டமானது, முந்தைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தொழிலாளர் உரிமைகளைப் பாதிப்புக்கு உட்படுத்தும் விதத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாகத் தொழிற்படையினைத் பிளவுபடுத்தல், முறையான ஒப்பந்தத்துக்கு உட்பட்டு செய்யப்படும் வேலைகளை வெளியிடங்களுக்கு மாற்றிவிடுதல் அல்லது அவ்வாறான வேலைகளை ஒப்பந்தங்கள், விதிகள் எதற்கும் உட்படாத கைப்போக்கான முறையில் கையாளப்படக் கூடியவையாக மாற்றுதல், மற்றும் ஏனைய பல வழிகளிலே தொழிலாளர்களைப் பலமிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மூலம் இந்த முன்மொழிவுகள் தொழிலாளர்களுக்குப் பாதகமான ஒரு நிலைமையினை உருவாக்குகின்றன. இவ்வாறான சில நடைமுறைகள் இப்போதும் கூட அவதானிக்கப்படுகின்றன; ஆனால் அவை இப்போது விதிமுறைகள் என்ற வடிவத்திலே அமுல்படுத்தப்படுவதில்லை. கோவிட் நெருக்கடியின் போது தொழிலாளர்கள் எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். அவர்கள் தமது வேலைகளை இழந்தனர்; தாம் வேலைக்காக வாழ்ந்த இடங்களிலே சிக்கித் தவித்தனர்; பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். உழைப்பை கைப்போக்கான முறையிலே சாதாரணமாக்குவது நீண்ட காலமாகவே அவதானிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது முன்மொழியப்படும் சீர்திருத்தங்கள் மூலம் இந்த சூழ்நிலை முறைப்படுத்தப்படும்; உத்தியோகபூர்வமாக்கப்படும். தொழிலாளர் சட்டங்கள் பழமையாகிப் போய்விட்டன என, முதலீட்டாளர்களுக்கு ஆதரவான வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்களின் நோக்கம் என்னவெனில், பணியிடத்தில் தொழிலாளி பாதுகாப்பாக இருப்பதற்கான உரிமையையும், முக்கியமாக, தொழிலாளிக்கு இருக்கும் தொழிற் பாதுகாப்பினையும் சிதைவடையச் செய்வதே ஆகும். மேலும், இன்று மிகவும் குறைந்த அளவிலான பாதுகாப்புகள், குறைவான தொழிற்பாதுகாப்பைக் கொண்ட, முறைசாராத் துறையில் பணியாற்றும், ஏற்கனவே பலவீனமான இருக்கும் மக்களின் உழைப்பை அதிக அளவில் சுரண்டுவதே இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கமாகும். இந்தச் சீர்திருத்தங்களின் காரணமான இவ்வாறான ஊழியர்களின் கூட்டு பலம் வெகுவாக சிதைந்துவிடும். உண்மையைச் சொல்லின், ஊழியர்களின் கூட்டுப்பலம் என்ற விடயம் முற்றாகவே அழிந்துவிடலாம். தொழிலாளர் நலனுக்காக அமைச்சர் நாணயக்கார பரிந்துரைக்கும் புதிய சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் கூட இந்த நிலையிலே தொழிலாளர்களுக்கு உதவப் போவதில்லை.
தொழிலாளர் சட்டங்களை வலுவிழக்கச் செய்வதன் மூலம், கூடியளவிலான முதலீட்டை ஈர்க்க முடியும் எனவும், பொருளாதாரத்தை உயர்த்த முடியும் எனவும் அரசாங்கம் நம்புகிறது. இது முதலீட்டாளர்களை கவருவதற்கான ஒரு காட்சிப்படுத்தலே தவிர வேறொன்றும் இல்லை. தற்போதைய ஆட்சியானது எம்மைச் சூழ இருக்கும் பொருளாதார யதார்த்தங்கள் பற்றி எதனையும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உலகளாவிய ரீதியில் இப்போது ஒரு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளினைச் சேர்த்து நோக்குகையில், எமது நாட்டின் பொருளாதாரம் எட்டில் ஒரு பங்கினால் சுருங்கிவிட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் காரணமல்ல; அவற்றைச் சீர்திருத்துவது இந்த நெருக்கடிக்குத் தீர்வாகாது. அரச செலவுகளைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாகவும், புதிய தொழில்களை உருவாக்குவதற்கான அரச கொள்கைகள் இல்லாமை காரணமாகவும், உழைக்கும் மக்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு மற்றும் நிவாரணம் இல்லாமையினாலும், எமது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. இறுதியில், தொழிலாளர்களின் உரிமைகள் மீளவும் மாற்றியமைக்கப்பட முடியாத அளவுக்கு பலவீனப்படுத்தப்படும் ஒரு நிலைமை மாத்திரமே எம்மத்தியில் எஞ்சப் போகிறது.
தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தல் எம்மை நெருங்குகிறது! அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை நாம் ஒரு நாட்டவராக ஒன்றுபட்டு எதிர்ப்போம். தொழிலாளர் சட்டங்கள் சீர்திருத்தப்படுவதனை இப்போதைக்கு நாம் அனுமதிக்க மாட்டோம்!
Meeting Information
17th June 2023 at the Sri Lanka Foundation Institute
Speakers: Prof. Shamala Kumar (University of Peradeniya)
Swasthika Arulingam (President, Commercial and Workers’ Union, and Attorney-at-Law)
B. Skanthakumar (Social Scientists’ Association)
Organisers: Kuppi Collective, Law and Society Trust, Social Scientists’ Association, Young Researchers Network