உயர்கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்போம்

சிவமோகன் சுமதி

பாராளுமன்ற தேர்வுக்குழுவால் அண்மையில் உயர்கல்வி மற்றும்
பொதுக்கல்வியில் ஏற்படுத்தவிருக்கும் சீர்திருத்தங்கள் தொடர்பான
நிகழ்ச்சிநிரல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. கலாநிதி விஜேதாச ராஜபக்ச
அவர்களால் தலைமைதாங்கப்படும் 10 பேர் கொண்ட இக்குழுவில் உயர்கல்வி
தொடர்பில் சம்பந்தப்பட்டோரென கருதப்படக்கூடியவர்கள் கலாநிதிகளான
ஹரினி அமரசூரிய மற்றும் சரித்த ஹேரத் ஆகியோர் மட்டுமே.
இவ்வாறிருக்கையில் இக்குழு கல்வித்துறையில் குறிப்பாக
உயர்கல்வித்துறையில் அடிப்படையான மற்றும் அதிரடியான மாற்றங்களை
பரிந்துரைத்துள்ளது. இவ்வறிக்கையிலிருந்து விலகியுள்ள கலாநிதி அமரசூரிய
அவர்கள் தான் கருத்துவேறுபடும் அடிப்படையான விடயங்களை மேற்கோள்
காட்டி இன்னொரு அறிக்கை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவ்வறிக்கையின் பகுதியளவான எனது பரிசீலனை இரு பகுதிகளை
மையப்படுத்தியிருக்கின்றது; அதிகமான கவனக்குவிப்பு கருத்தியல்சார்
நழுவல்தன்மை கொண்ட உயர்கல்விக் கொள்கையின் மீதும் குறைந்தளவான
கவனக்குவிப்பு நிதி தொடர்பான கேள்விகள் மீதும் செலுத்தப்படுகின்றது.
இலவசக்கல்வி மீதான செல்லரிப்பு 90’களின் பின்னான அரசாங்கக்
கொள்கைகளில் ஆரம்பித்துவிட்டது. சீர்திருத்தங்களுக்கான படிக்கற்கள்
பல்கலைக்கழகங்களையும் அதன் உறுப்பினர்களையும் குறிவைத்தல், அதன்
மாணவ அமைப்பின் அரசியல் செயற்பாடுகளை தூற்றுதல் போன்ற
செயர்பாடுகளின் மூலம் அமைக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களை, குறிப்பாக
சமூக விஞ்ஞானத்துறைகளை கற்ற மாணவர்களின் வேலையில்லா
சிக்கல்களுக்காக குற்றஞ்சாட்டுவதும், அதையே பொதுப்படையாக
முன்வைத்து அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் “வேலையில்லா
பட்டதாரி” என்ற பதத்துக்குள் வைத்து விமர்சிப்பதும் வாடிக்கையாக
மாறியுள்ளது. மறுதலையாக இதற்கான காரணமாக குறைந்தளவிலான நிதியளிப்பு காட்டப்படுவதோடு கல்விக்குரிய அர்த்தத்தை மறந்த
நிலையிலிருக்கும் பல்கலைக்கழகங்களை மேலும் அரசாங்க அமைப்புகளுக்கு
தலையாட்டிகளாக மாற்றியுமுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்களையும்
மாணவர்களையும் தனியார் கல்விக்கு சரிசமமாக இருக்கமுடியாதவர்களாக
குற்றஞ்சாட்டும் அரசாங்கம் இவர்களை சுமைகளாகவும் நாட்டிம் வரிகளை
வீணாக செலவளிப்பவர்களாகவும் ஆதலால் வரிசெலுத்துபவர்களின் மீதான
சுமைகளாகவும் சித்தரிக்கின்றது. இதற்கு முரணாக பல்தேசிய நிறுவனங்கள்
பெருந்தன்மையுள்ள கடவுளர்களாகவும் போற்றப்படுகின்றார்கள்.
பல்கலைக்கழகங்களிலும் வெளியிலும் கொள்கைவகுப்பின் போது
இப்பல்தேசிய நிறுவங்களின் மாதிரிகளே கொள்கைகளின்
உள்ளடக்கங்களிலும் நிர்வாக ஒழுங்கமைப்பிலும் முன்னோடிகளாகவும்
முன்மாதிரிகளாகவும் காட்டப்படுகின்றார்கள்.

உயர்கல்வி தொடர்பான பகுதியின் அறிமுகமானது சீர்திருத்த
முன்மொழிவின் கருத்தியல் சட்டகமாக இயங்குகின்றது. இது “இலங்கையில்
[உயர்கல்வி]யானது வரையறுக்கப்பட்ட அணுகல், தரங்குன்றியநிலை மற்றும்
பொருந்தும்தன்மையற்றநிலை, மோசமான நிர்வாகம், மோசமான
மேலான்மைத்திறன் மற்றும் பொருத்தமற்ற வளங்களால்
பாதிக்கப்பட்டுள்ளது” போன்ற விழுமிய திறனாய்வு முடிவுகளோடும் “ஆசிய
அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி (2020) அரச பல்கலைக்கழகங்களின்
ஆய்வு வெளியீடுகளில் பெரும்பாலானவை தரங்குன்றியனவாகவும் தேசிய
தேவைகளுக்கு தகுந்தவாறல்லாமலும் இருக்கின்றன” போன்ற
அபத்தங்களோடும் ஆரம்பிக்கப்படுகின்றது. “பல்கலைக்கழக‍‍‍‍‍‍‍‍-
தொழில்துறை ஆய்வு கூட்டுசெயற்பாடுகள் மிக குறைந்தளவிலேயே
காணப்படுகின்றன” போன்ற‌ சில நிலைப்பாடுகள் எவ்வித பின்னணியோ
இலங்கையில் சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானக்கல்வியின் மாதிரி
குறித்த எந்த அரிதலோ இன்றி முன்வைக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக
இந்நிலைப்பாடு இலங்கையின் தொழில்துறை பற்றிய எந்த அரிதலையும்
கொண்டிருக்கவில்லை! எம்மிடம் ஆய்வு அடிப்படையிலான
செயற்றிட்டங்களை கொண்டுள்ள வளர்ந்துவரும் தொழில்துறையொன்று
காணப்படுகின்றதா? எமது நாட்டின் பெருநிறுவனத்துறை வளர்ச்சியடையாததாகவும் தன்னையே நிலைநிறுத்த முடியாததாகவுமே
காணப்படுகின்றது. இதைவிட அடிப்படையான பல கேள்விகள்
தொக்கிநிற்கின்றன. எமது ஆய்வுகள் ஊழல்நிறைந்த, ஒழுங்கற்ற
பெருநிறுவனங்களின் பிடியிலா இருக்க வேண்டும்? உலகளவிலான
ஆய்வுகள் பெருநிறுவனங்களின் நிதியளிப்பிலுள்ள சிக்கல்களைப்பற்றி
கூறவில்லையா? இன்னும் அழுத்தி சொல்ல வேண்டுமானால், இந்த அரசு
ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியீடு போதுமானதா?

ஆணைக்குழு

முன்மொழிவின் படி புதிய பல்கலைக்கழக சட்டமூலம் உருவாக்கப்பட
வேண்டி இருப்பதோடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)
இல்லாமலாக்கப்பட வேண்டும். அதன் இடத்தில் “தேசிய உயர்கல்வி
ஆணைக்குழு” ஒன்று அமைக்கப்பட இருப்பதோடு அதன்கீழ் அரச
பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள்/ உயர்கல்வி அமைப்புகள்,
தொழிற்கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் தர உறுதிப்பாடு
ஆகிய நான்கு பகுதிகள் காணப்பட வேண்டும். இவ்வாணைக்குழுவின்
செயற்பாடுகள் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஒரே கோட்டில்
இணைக்கின்றன. தற்போதைய அமைப்பிலிருந்து முற்றிலும் மாறான ஒரு
மாற்றமாக இது காணப்படுகின்றது. அதன் அனைத்து குறைப்பாடுகளோடும்
UGCயானது உயர்தரப்பரீட்சையில் தேற்றி பல்கலைக்கழகங்களுக்குள்
நுழையும் மாணவர்களை மேற்பார்வை செய்வதன் மூலல்
பல்கலைக்கழகங்களோடு ஒத்திசைந்து உயர்கல்வி அமைப்புக்கும்,
முக்கியமாக இலவசக்கல்விக்கும் ஒருங்கலை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான ஒரு அமைப்பை இல்லாமலாக்கி அந்த இடத்தில் அரச
பல்கலைக்கழனக்களையும் தனியார் உயர்கல்வி அமைப்புகளையும் ஒரே
கூரையின் கீழ் நிர்வகிக்கும் அதனையே ஆதரிக்கும் அமைப்பொன்றை
கொண்டுவருவது தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கான
வித்தியாசத்தையே மழுங்கடிக்கச்செய்யும் நடவடிக்கையாகும்.
முன்மொழியப்பட்டுள்ள இவ்வாணைக்குழுவின் கீழ், மாணவ அமைப்பானது
இருபடித்தானதாக காணப்படும்; உயர்தரப்பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்த மாணவர்களையும் இவ்வாறு
எதனையும் செய்யாமல் நுழைந்த கல்விக்காக கட்டணங்களை செலவளித்து
படிக்கும் மாணவர்களையும் இது கொண்டிருக்கும். இது பாரியளவிலான
ஊழல்களுக்கு வழிவகுக்கக்கூடியது. சமூக, அரசியல் சமத்துவமின்மைக்கு
மேலும் தூபமிடும் வழியாகவும் இலவசக்கல்வி மீதான பாரிய அடியாகவும்
இது விழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும்.

இம்முன்மொழிவுகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்கு குறித்த
தூரநோக்கோடு வரையப்பட்டிருக்கின்றன. உயர்கல்வியின் அனைத்து
படித்தரங்களிலும் தமது சேவைகளை வழங்கக்கூடிய முக்கிய பங்காளர்களாக
இவர்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு நாடுபூராகவும் புதிய
பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டிய முக்கிய பொறுப்பை
சுமந்தவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள். பல்கலைக்கழகங்களுக்கான
நிதிகளை குறைத்துவிட்டு மாணவர்கள் தாம் விரும்பிய
பல்கலைக்கழகங்களில் கற்கக்கூடிய வாய்ப்பை வழங்கும் அமைப்பை
உருவாக்குவது அரச பல்கலைக்கழக அமைப்பை மேலும் பலவீனப்படுத்தும்
செயற்பாடாகும். இம்முன்மொழிவுகள் அரச-தனியார் பங்குரிமையை (PPP)
ஆதரிப்பதோடு PPP என்ற நவதாராளவாத மந்திரத்தை அழுத்தமாக
முன்வைக்கின்றன. மேம்போக்காக சொல்ல முடியுமானால் என்பது அரச
அமைப்புகள் மீதான தனியார் நிறுவனக்களின் பங்களிப்பாகும். ஆனால்
யதார்த்தத்தில் இது அரச அமைப்புகளின் வளங்களை பாவித்து தனியார்
அமைப்புகள் தம்மை நிலைநிறுத்தும் செயர்பாடாகவே இருக்கின்றது.
கொள்கைவகுப்பாளர்களின் தொடர்பான நிலைப்பாடு, 2016ல் வெளியிடப்பட்ட‌
‘இலங்கையின் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடனான மருத்துவ
கல்வியின் விரிவாக்கம்: தொழிநுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான
தென்னாசிய நிறுவனத்தை (SAITM) ஒரு மாதிரியாகக் கொள்ளுதல்’ என்ற
கொள்கை ஆவணத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இதன்மூலம் தனியார்
நிறுவனங்கள் எந்தளவு தூரம் அரச அமைப்புகளின் மீது ஒட்டுண்ணிகளாக
இருப்பார்கள் என்பது புலனாகின்றது. இதனை விளங்குவதற்கான முக்கிய
ஆக்கமாக ரம்யா குமாரின் “உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கான அரச-
தனியார் பங்குரிமை? இலங்கையில் இலவச மருத்துவத்தின் எதிர்காலம்” ஆக்கம் இருக்கின்றது.
https://globalizationandhealth.biomedcentral.com/articles/10.1186/s12992-019-0522-6

தர உறுதிப்பாடு

பல்கலைக்கழகங்களிலுள்ள பெரும்பாலானோர் உடன்படும் விடயம் தர
உறுதிப்பாடு ஒரு தரநெறிசார் சட்டகமாக சிக்கலுக்குரிய விடயம் என்பதாகும்.
ஒரு பல்கலைக்கழக அமைப்பின் மீது தர உறுதிப்பாடு (QA) என்ற
சட்டகமானது எதிர்பார்க்கும் விடயங்கள் தரம் என்ற விடயத்தில் சட்டகத்தில்
காணப்படும் தெளிவற்ற விளக்கத்தின் காரணமாக‌ வெறுமனே
கருத்தியல்தன்மையுடையனவாக இருப்பதோடு கல்விசாரா அம்சங்களில்
அதிக கவனத்தை குவிப்பதோடு கல்விசார் அம்சங்களில் அதன் ஈடுபாடு மிக
குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. தர உறுதிப்பாடு என்பது
பெரும்பாலும் கல்வி நிர்வாகத்தை சார்ந்தே காணப்படுகின்றதே தவிர இது
கல்வியை குறித்ததல்ல. இது வரைவாளர்கள் எவ்வளவு நேர்த்தியாக
காகிதாதிகளை முகாமை செய்கின்றார்கள் என்பதை பற்றியதாகும்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் இவ்வாறான முகாமைத்துவம் சார்ந்த
விடயங்களில் அதிக நேரத்தை விரயமாக்க‌ உந்தப்படுவதோடு இதன்மூலமே
தர உறுதிப்பாடுக்குரிய தேவைப்பாடுகளை “ஆதாரங்களாக்கி” அவர்களால்
பூர்த்திசெய்ய முடிகின்றது. தர உறுதிப்பாடு உண்மையில் தரத்தை
உறுதிப்படுத்தவுமில்லை, அதனை நோக்கமாகக் கொள்ளவுமில்லை.

தரம் என்பது தற்காலத்தில் பெருநிறுவன தேவைப்பாடுகளுக்கேற்ப
வரையப்படுவனவாகவும் ஆய்வு என்பது பெருநிறுவனங்களுக்கு சேவகம்
புரிகின்றனவாகவும் மாறியிருக்கின்றன. முன்மொழியப்பட்டுள்ள
ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தர உறுதிப்பாட்டு அமைப்பானது அரச
மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஒரே தட்டில் வைத்து அளப்பதோடு
கட்டுப்பாடு, ஒருமைப்பாடு மற்றும் அனுசரிப்பை புகட்டுவதன் மூலம் அரச
பல்கலைக்கழகங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு
தொண்டுதாரர்களாக மாற்ற முயல்கின்றது.

அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைப்பதன் மூலம் அவற்றை
இல்லாமலாக்குதல்

அண்மைய காலங்களில் அரச பல்கலைக்கழகங்கள் கற்பனைக்கெட்டாத
வகையில் நிதியிழப்புக்குள்ளாகியிருக்கின்றன. அதன் உச்சகட்டமாக
தற்போதைய யில் 1.5 வீதமே கல்விக்காக ஒதுக்கப்படுகின்றது. மறுதலையாக
அரசாங்கமானது பல்கலைக்கழகங்களை கட்டணம் அறவிடும்
கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த கூறுவதோடு அதன் மூலம்
பல்கலைக்கழகங்களுக்கான நிதிகளை
உருவாக்குமாறு வேண்டுகின்றது. ஊழியர் குறைபாடு, நிதி குறைபாடு
போன்ற சிக்கல்கள் அதிகமாகக் காணப்படும் சமூக விஞ்ஞானங்கள் போன்ற
துறைகள் வெளிவாரி பட்டப்படிப்புகள், சான்றிதழ் மற்றும் டிப்லோமா
கற்கைநெறிகள் போன்ற கட்டணம் அறவிடக்கூடிய கற்கைநெறிகளை
அறிமுகப்படுத்தி பணம் சேர்க்கும் அழுத்தத்தில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் எமது ஒவ்வொரு பீடங்களும் நிதிகளை
உருவாக்கும் நோக்கில் அவ்வாறான பாடநெறிகளை அறிமுகப்படுத்த
வேண்டிய கடப்பாட்டில் உள்ளன. சில பீடங்கள் இளமானிபட்ட
பாடநெறிகளிலேயே கட்டணம் அறவிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகளை
தேடிக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் கொள்கைகள் அரச பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளை
செல்லுபடியாக்க முனைவதோடு மட்டுமன்றி நிதியீட்டை குறைப்பதை
அப்பட்டமாக்கவும் செய்கின்றன.

நிதியீட்டை கவனமாக குறைப்பதனூடாக உயர்கல்வியில் தனியார் கல்வி
நிறுவனங்கள் ஊடுருவ வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதோடு அரச
பல்கலைக்கழகங்கள் தனியார்மயப்படும் வழிகளும்
சாத்தியப்படுத்தப்படுகின்றன.

ஜனநாயகத்தை குழிபறித்தல்

2022ல் நடைபெற்ற ஒரு மக்கள் கிளர்ச்சியில் பாராளுமன்ற பிரதிநிதிகளின்
பணிக்கான தகுதியாக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இன்று, போதிய
புரிதலில்லாத சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு வருட காலமாக
மேலதிகமாக ஆட்சியில் தங்கியிருக்கும் சட்டவிரோதமான அரசாங்கமும்
இணைந்து நாட்டின் சமூக அரசியல் வரைபடத்தின் முக்கிய மைல்கல்லாக
விளங்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் இலவசக்கல்வி என்ற விடயத்தில்
அடிப்படையான மாற்றங்களை கொண்டுவர எத்தனிக்கின்றார்கள்.

நாடு ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கின்றது.
வாழ்க்கைச்செலவு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றது.
தொழிலாளர்கள் தொழில்வாய்ப்புகளை இழந்துவருவதோடு
தோட்டத்துறைகளில் இருக்கும் மக்கள் வெறுமையாகும் வளங்களை வைத்து
உழைப்பதற்கான இயலுமைகள் குன்றிப்போகும் நிலையில்
அல்லலுறுகின்றார்கள். கல்வித்துறையில் முன்மொழியப்பட்டுள்ள
சீர்திருத்தங்கள் நாட்டின் இளைஞர்களை கல்வியை விட்டும்
தூரமாக்குவதோடு ஏற்கனவே காணப்படும் சமூக விரிசல்களை மேலும்
அதிகரிக்கும். இந்த அரசாங்கமும் பாராளுமன்றமும் எவ்வித
முன்மொழிவுகளையும் வைக்க சட்டப்படி தகுதியற்றவர்களாக
இருக்கின்றார்கள். எனவே அக்கறையுள்ளோர் அனைவரும் இதற்கான
பலமான எதிர்ப்பை கட்டாயம் முன்வைக்க வேண்டும்!