கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . .

சிவமோகன் சுமதி

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அதீதப் பரப்புரைகள் சற்றே ஓய்ந்துள்ள போதிலும், அந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கவே செய்கிறது. இங்கு ‘சர்ச்சை’ என்று நான் குறிப்பிடுவது, ஆறாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடப்புத்தகத்தில் இணையவழித் தளத்திற்கான இணைப்பு (link) தவறாக அச்சிடப்பட்டதால் ஏற்பட்ட அந்தத் தவறை அல்ல. அந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவம் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற மற்றும் மோசமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிவகுத்த போதிலும், சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை அக்கறைகள் அதன் பின்னர் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவை அவசரமாக விவாதிக்கப்பட வேண்டியதுடன், மேலதிக பகுப்பாய்வு செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்குமானதொரு பொறிமுறையையும் கோரி நிற்கின்றன. ‘குப்பி’ (Kuppi) அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களாக இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து எழுதி வருவதுடன், இதில் காணப்படும் ஆழமான கவலைக்குரிய அம்சங்கள் குறித்தும் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கடந்த வாரம் கூட, குப்பி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு, 94 அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்று பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது .https://island.lk/general-educational-reforms-to-what-purpose-a-statement-by-state-university-teachers/. அது இந்தச் சீர்திருத்தங்களின் பின்னாலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. தவறாக அச்சிடப்பட்ட அந்த இணையத்தள இணைப்பு குறித்த கோபமும் விவாதங்களும் பொதுவெளியில் கொதித்துக் கொண்டிருந்த அதேவேளை, இந்த  சீர்திருத்தத்தை முழுமையாக வரவேற்பவர்களும் இருக்கவே செய்தனர். எமது கல்வி முறையில் சாதனை என்பது அளவிடப்படும் முறை மற்றும் சமூக வர்க்கம், பால்நிலை ரீதியான பணிகள், திறமை மற்றும் நாட்டங்களில் காணப்படும் வேறுபாடுகளால் பிளவுபட்டுள்ள மக்களுக்கு உதவாத இந்தத் தீவிரப் போட்டித்தன்மை கொண்ட முறைமை ஆகியவற்றிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியாக இதனை அவர்கள் பார்க்கின்றனர்.

இருப்பினும், அரசும் அமைச்சரும் கூறுவது போல, இந்தச் சீர்திருத்தங்கள் உண்மையில் இக்கவலைகளுக்குத் தீர்வைத் தருகின்றனவா அல்லது கல்விக்கான அணுகல் மற்றும் சமத்துவத்தை நோக்கிய முற்போக்கான திசையில் நகர்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இதற்கான பதில், ‘இல்லை’ என்பதேயாகும்.

94 பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அந்த அறிக்கை, பொதுமக்களுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தப்படாமல், மிகவும் அவசரமான முறையிலும் தன்னிச்சையாகவும் இந்தச் சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்ட விதத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. கல்வி கட்டமைப்பு மற்றும் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் ஆகிய விவகாரங்களில், இந்தச் சீர்திருத்தங்களின் சாராம்சத்தில் உள்ள சிக்கல்களை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சீர்திருத்தங்களின் அடிப்படைக் கருத்தாக்கத்திலேயே  பிரச்சினை ஆரம்பமாகிறது. சொல்லப்படும் கருத்தாக்கங்கள் கற்பனைக்கு எட்டாத வகையில் ஜனநாயகமானதாகவும், அனைைரைையும் உள்ளடக்கியதாகவும், யதார்த்தமானதாகவும் அதேவேளை உணர்வுப்பூர்வமானதாகவும் தெரிந்தாலும், சீர்திருத்தங்களின் விரிவான கட்டமைப்பு விவரங்கள் அந்தக் கருத்தாக்கத்திற்கும் நடைமுறை அம்சங்களுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியை வெளிப்படுத்துகின்றன. இந்த முரண்பாடு பிரதானமாக இரண்டு இடங்களில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக, இரண்டாம் நிலைப்பள்ளித் திட்டம் – குறிப்பாகக் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட இரண்டாம் நிலைப்பள்ளியின் முதலாம் கட்டம் (Phase I) கட்டமைக்கப்பட்டுள்ள விதத்திலும், இரண்டாவதாக, பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் உள்ளிட்ட கற்பித்தல் சார்ந்த (pedagogic) பகுதிகளிலும் ஆகும். பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்தச் சீர்திருத்தங்களின் முக்கிய சூத்திரதாரிகள் சில முற்போக்கான சொற்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ‘மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி’, ‘எண்ணியல் கற்றல் முறைகள்’, ‘தேர்வு மையக் கல்வியிலிருந்து விலகுதல்’ போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் இதற்கு உதாரணமாகின்றன. அண்மையில் ஒரு பாடசாலையில் இந்தச் சீர்திருத்தங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கலாநிதி ஹரிணி அமரசூரிய, “தற்போதுள்ள பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி முறைக்குப் பதிலாக, 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்து மாணவர்களை மையமாகக் கொண்ட, நடைமுறை கற்றல் அணுகுமுறையை இந்தச் சீர்திருத்தங்கள் முன்னிறுத்துகின்றன” எனக் குறிப்பிட்டதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான டெய்லி நியூஸ் (Daily News) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியையே இங்கு நான் குறிப்பிடுகிறேன் (https://www.facebook.com/reel/1866339250940490). மேலும், செப்டம்பர் 29, 2025 அன்று ஆற்றிய உரையில், எண்ணியல் மாற்றம் மற்றும் கல்விக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்கள் குறித்தும் அவர் பாராட்டிப் பேசியுள்ளார் (https://www.facebook.com/share/v/14UvTrkbkwW/). சமீபத்திய உரைகளிலும் இதே போன்ற தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறையையே அவர் வலியுறுத்தி வருகின்றார். (https://www.dailymirror.lk/breaking-news/PM-pledges-safe-tech-driven-digital-education-for-Sri-Lankan-children/108-331699).


கற்பவர் அல்லது மாணவர் மையக் கல்வி என்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு கருத்தாக்கமாகும். இது பாலோ பிரையர் (Paulo Freire), இவான் இல்லிச் (Ivan Illich) மற்றும் உலகளவில் பல கல்விச் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையிலிருந்து உருவானது. குறிப்பாக பிரையர், கற்பவர் மையக் கல்வியை (அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றாலும்) ஒரு மாற்றத்திற்கான கருவியாக முன்வைக்கிறார்: இது கற்பவர் மற்றும் ஆசிரியர் இருவரின் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சூழல் சார்ந்த, செயற்பாட்டு கற்றல் முறையாகும்; அச்சூழலில் நிலவும் உறவுகளையே இது மாற்றியமைக்கிறது.

பிரபல மொழியியலாளரும் கல்வியாளருமான லெவ் வைகாட்ஸ்கி (Lev Vygotsky), கூட்டு முயற்சியிலான கற்றலை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவராவார். ஆனால் அவரது சிந்தனையில், ‘அண்மை வளர்ச்சி மண்டலம்’ (Zone of Proximal Development – ZPD) என்று அவர் குறிப்பிட்ட அந்த கூட்டுப் பணி என்பது ஒரு ‘செயல்முறை’ சார்ந்ததே தவிர, நமது இன்றைய கல்வித் திட்டங்களில் காணப்படும் மதிப்பெண்கள், ஒப்படைப்புகள் (assignments) மற்றும் திட்டப்பணிகளில் (projects) என்பவற்றால் குறிக்கப்படும் இலக்கு சார்ந்த ‘குழுப்பணி’ (teamwork) போன்றது அல்ல. அவரது கற்பித்தல் முறையில், பாடத்தில் ஆழ்ந்த அறிவும் முறையான பயிற்சியும் பெற்ற ஓர் ஆசிரியர் இருப்பது அவசியம். நல்ல பாடப்புத்தகங்களும் முக்கியமானவை. ஆனால், வைகாட்ஸ்கியின் ZPD என்ற கருத்துருவானது, மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஒரு பணியைச் செய்து முடிக்கும் ‘குழுப்பணி’யாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை நான் கண்டிருக்கிறேன். வைகாட்ஸ்கியைப் பொறுத்தவரை, ஒரு வகுப்பறை என்பது மாற்றத்தையும் கூட்டுழைப்பையும் உருவாக்கும் ஒரு களம்.

ஆனால், இன்றைய நவ தாராளவாத காலத்தில் (Neo-liberal times), படிநிலை அமைப்பைக் கொண்ட (இன்றும் தொடர்கின்ற) வகுப்பறைகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு குறுக்குவழித் தீர்வாகவே இந்த ‘கற்பவர் மையக் கல்வி’ என்பது மாறிப்போயிருக்கிறது. இது உண்மையில் சாதித்தது என்னவென்றால், ஆசிரியர்களை எங்கோ வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தின் வெறும் பற்சக்கரங்களாக (cogs) மாற்றியதுதான்: வெறும் வெற்றுச் சொற்களையும் வழிகாட்டுதல்களையும் அப்படியே பின்பற்றும், சுயசிந்தனையற்ற ஒரு கூட்டமாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக, இந்த கற்பவர் மைய அணுகுமுறையானது, ஆசிரியர்கள் தங்களுக்கெனவும் தங்கள் வகுப்பறைகளுக்கெனவும் வெவ்வேறு கற்பித்தல் முறைகளை உருவாக்கிப் பரிசோதிப்பதற்கான சுதந்திரத்தையும் செயல்திறனையும் (agency) அழிப்பதற்கே உதவியிருக்கிறது; அத்துடன் கலைத்திட்ட உருவாக்கத்தில் பங்களிப்பதற்கும், வகுப்பறையில் விமர்சன ரீதியான சிந்தனைக்கான ஒரு இடத்தை உருவாக்குவதற்கும் இருந்த வாய்ப்புகளையும் இது பறித்துள்ளது.

எனவே, நமது கல்விமுறை பாடப்புத்தகங்களை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கக் கூடாது என்று கலாநிதி அமரசூரிய கூறும்போது, இதில் எனக்கு உடன்பாடு இல்லை (https://www.newsfirst.lk/2026/01/29/education-reform-to-end-textbook-tyranny). இங்கே சிக்கல் பாடப்புத்தகங்களைச் சார்ந்திருப்பது அல்ல, மாறாகச் சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களை உருவாக்க முடியாமல் இருப்பதுதான். பாடப்புத்தகங்களை இவ்வாறு மிக எளிதாகப் புறக்கணிப்பது நம்மை தவறான தகவல்கள் நிறைந்த, மோசமாக வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் என்ற படுகுழிக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எனது கருத்தை விளக்க 94 பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதியை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்.

“6-ஆம் வகுப்புப் பாடப்பரப்புக்கான பாடப்புத்தகங்களில்… எக்கச்சக்கமான அச்சுப் பிழைகள் இருப்பதோடு, (வெளியிடப்படாத) AI-மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களும், மாணவர்களின் அனுபவங்களுக்குத் தொடர்பில்லாத படங்களும் இடம் பெற்றுள்ளன. சில பாடப்புத்தகங்களில் தவறான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் உள்ளன. ‘பூகோள கல்வி’ (Global Studies) பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட முக அமைப்புகள், தலைமுடி நிறம் மற்றும் தோல் நிறம் ஆகியவற்றைச் சில குறிப்பிட்ட நாடுகளுடனும் பிராந்தியங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன; மேலும், பழங்குடி இன மக்களை அந்தச் சமூகங்களால் நீண்டகாலத்திற்கு முன்பே நிராகரிக்கப்பட்ட இழிவான சொற்களைக் கொண்டு (உதாரணமாக “பிக்மிகள்” (Pygmies), “எஸ்கிமோக்கள்” (Eskimos)) குறிப்பிடுகிறது. நைஜீரியர்கள் ஏழைகளாக, விவசாயிகளாக மற்றும் மின்சாரம் இல்லாதவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ‘தொழில்முனைவு மற்றும் நிதிசார் அறிவு’ (Entrepreneurship and Financial Literacy) பாடப்புத்தகம், மாணவர்களுக்கு ‘உலகப் புகழ்பெற்ற தொழில்முனைவோர்களை’ அறிமுகப்படுத்துகிறது; அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள், மேலும் இது வெற்றியை வெறும் வணிகத் திறமையோடு மட்டுமே அடையாளப்படுத்துகிறது. இத்தகைய உள்ளடக்கங்கள், ‘சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் சமூக நீதி ஆகிய விழுமியங்களுக்கு’ (பக்கம் 9) மதிப்பளிப்பதாகக் கூறும் அரசின் கொள்கை உறுதிப்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. நமது பாடப்புத்தகங்களில் இத்தகைய உள்ளடக்கங்களையா நாம் விரும்புகிறோம்?”
கல்வியின் கட்டமைப்பைப் பொறுத்தவரை, முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் பாடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை, ஒரு பாடவேளையின் கால அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது திகைப்பூட்டுகிறது. குறிப்பாக, கனிஷ்ட இரண்டாம் நிலை மட்டத்தில் (junior secondary level), ஒரு தவணைக்கு கணிதம் மற்றும் தாய்மொழிப் பாடங்களுக்கு தலா 30 மணித்தியாலங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதில் இது அப்பட்டமாகத் தெரிகிறது. சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேயப் பாடங்களுக்கு (humanities) வழங்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு கவலைக்குரிய விடயமாகும்.

தொலைக்காட்சி அலைவரிசைகளும் யூடியூப் (YouTube) காணொளிகளும் மனிதநேயப் பாடங்கள் தொடர்பாக எவ்வித ஆதாரமுமற்ற, கேள்விக்குரிய விடயங்களை எவ்வாறு அள்ளி வீசுகின்றன என்பதை நாம் கண்டு வருகிறோம். எனது அனுபவத்தின்படி, மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பாடங்கள் முறையாகக் கற்பிக்கப்படாதபோது — அதுவும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படாதபோது — அந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் வேறு வழியின்றி சர்ச்சைக்குரிய மற்றும் தரமற்ற ஊடகங்களையே சார்ந்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு ஒரே மூலாதாரமாக அமையும். இதன் விளைவாக, வரலாறு போன்ற பாடங்கள் மெல்ல மெல்ல கேள்விக்குரிய யூடியூப் சேனல்களிடமும் ஏனைய இணையத்தளங்களிடமும் தங்கியிருக்கும் நிலை ஏற்படும்.

 மக்களின் சிந்தனையை வடிவமைப்பதில் வெகுஜன ஊடகங்கள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன; ஆனால், முறையாக வடிவமைக்கப்பட்ட மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான கற்பித்தல் கொள்கையினால் மட்டுமே முறையான ஆய்வுகளையும் விமர்சன ரீதியான சிந்தனையையும் கொண்டு அதனை எதிர்கொள்ள முடியும். இந்தச் சீர்திருத்தங்களின் மற்றொரு வருந்தத்தக்க அம்சம் என்னவென்றால், மாணவர்கள் அவர்களது மாணவர் பருவத்தின் மிக ஆரம்பத்திலேயே ஏதாவதொரு தொழில் பாதையை நோக்கி நகருமாறு ஊக்குவிக்கும் ஏற்பாடுகள் இதில் உள்ளமையாகும்.

 சர்ச்சைக்குரிய தரம் 6 பாடப்பரப்பு தொடர்பாக ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து, தேசிய கல்வி நிறுவகமானது (NIE) கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அறிக்கையிலிருந்து மாறுபட்ட, கல்வித்துறையின் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் வெளியிடப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அவர்கள் கல்விச் சீர்திருத்தங்களை வரவேற்ற அதேவேளை, தேசிய கல்வி நிறுவகத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் (https://ceylontoday.lk/2026/01/16/academics-urge-govt-safeguard-integrity-of-education-reforms). இந்தத் தவறைத் தொடர்ந்து, சீர்திருத்தச் செயல்பாட்டில் ஈடுபட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் முக்கிய அதிகாரிகளை அரசாங்கமே பணியிடை நீக்கம் செய்துள்ளது. பல்கலைக்கழக சமூகத்தின் ஆர்வமுள்ள உறுப்பினர்களுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும், தேசிய கல்வி நிறுவகத்தின் மீதான இத்தகைய விமர்சனங்கள் ஒருமித்த கருத்தாகவே காணப்பட்டன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகளுமே, தேசிய கல்வி நிறுவகத்தின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குறைந்தபட்சம் இடைக்காலத்திற்காவது அதன் நடவடிக்கைகளை வழிநடத்தக்கூடிய ஒரு பொறிமுறையை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வி நிறுவகமானது அரசின் ஒரு கல்விசார் அமைப்பாகும்; எனவே அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது இறுதியாக அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த நிறுவனம் தகுதியான பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், கொள்கை மற்றும் கலைத்திட்ட உருவாக்கத்தின் போது பல்வேறு துறைகளைச் சார்ந்த கல்வியாளர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுக்களையும் கலந்துரையாடல் பொறிமுறைகளையும் முன்னெடுக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

முடிவாக, அரசாங்கம் துணிச்சலுடனும் பொறுமையுடனும் செயல்பட்டு, இந்தச் சீர்திருத்தத்தின் சில அடிப்படை அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைக்குமாறு மீண்டும் வலியுறுத்துவதுடன், 94 பல்கலைக்கழக  விரிவுரையாளர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, “ஆரம்பப் பிரிவு உட்பட புதிய கலைத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மீளாய்வு செய்ய வேண்டும்” என்றும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன