அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்

ஹர்ஷன ரம்புக்வெல்ல


குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில்,
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில்
இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில்
நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு வலுவான சிற்றின்பத்
தூண்டுதலை உணர்கின்றார். எனினும் சொற்ப நேரத்தில் அத்தகைய உணர்ச்சியையிட்டுக்
குற்றவுணர்வடையும் பியதாஸ, அவ்விடத்தை விட்டுக் கிரி வெஹெரவை நோக்கிச் செல்கிறார்.
கதிர்காமத்தின் கட்டடத்தொகுதியின் ஒரு பகுதியான அப் பெளத்த ஸ்தூபியில் அச் சிற்றின்ப
உணர்வைத் திசைதிருப்ப முயல்கிறார். இச் சம்பவத்தை மீட்டிப்பார்க்கும் பியதாஸ, தன்னுடன்
அச்சமயம் அங்கிருந்த தனது மாமனாராகிய பாலா மஹத்தயாவிற்கு இவ்வாறான உணர்ச்சி ஏன்
தோன்றவில்லை எனச் சிந்திக்கிறார். தான் பெற்ற கல்வியாலும், சட்டேர்லி அம்மையாரின்
காதலன் (Lady Chatterly’s Lover) போன்ற நூல்களை வாசித்ததாலுமே தனக்கு இத்தகைய
உணர்வு எழுந்தது என்ற சாமானிய முடிவுக்கு அவர் வருகின்றார். அதே சமயம் பியதாஸவின்
கண்ணோட்டத்தில் சாட்ஷாத் கிராமப்புறவாசியான பாலா மஹத்தயா, அவரது
கல்வியறிவின்மையால் அவ்வாறான உணர்ச்சிகளுக்கு ஆளாக மாட்டார் எனவும் பியதாஸ
கருதுகின்றார். கருமக்காரயோ, தெபா நொலத்தோ ஆகிய நூல்களின் பின்னான அமரசேகரவின்
நூல்களில் பெரும்பாலானவை, பாலியல் ரீதியாகத் துணிவான கருத்துக்களையும்,
மேற்கண்டவாறான தார்மீக அடிக்குறிப்புகளையும் கொண்டுள்ளன. ஊழல் நிறைந்தவையாக
அவர் கருதும் மேற்கத்திய விழுமியங்களுக்கும், காதல்மயப்படுத்தப்பட்டச் சிங்கள
கிராமப்புறத்தின் தனித்துவத்துக்குமிடையே முரண்பாடுகளை முன்வைப்பதில் அமரசேகரவிடம்
ஒரு கடுமை காணப்பட்டது எனலாம்.
குணதாஸ அமரசேகரவின் புனைக்கதையோடு நான் இக்கட்டுரையை ஆரம்பித்தது ஏன்? இக்
கதையானது இலங்கைச் சமூகத்தில், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தில், ஆழமாக ஊடுருவி நிற்கும்
ஒரு பிரச்சினையை எடுத்தியம்புகின்றது. அதோடு எமது கல்வி முறையும் எவ்வாறு இப்
பிரச்சினையை மீள்பிறப்பிக்கின்றது என்பதும் இதில் புலனாகின்றது. நான் இங்கு குறிப்பிடும்
பிரச்சினையானது பாலினப்பண்பு தொடர்பான காலங்கடந்த மனப்பான்மை அல்ல. மாறாகச்,
சமூகத்தை அநுசரித்துப் போதல் தொடர்பான போக்குகளையே இங்கு நோக்க விளைகின்றேன்.
மேற்கத்திய விழுமியங்களால் தனது எண்ணங்கள் சீர்குலைக்கப்பட்டதாக பியதாஸ எண்ணுவது
இத்தகைய கலாசார அநுசரிப்புக்கான உதாரணமாகும். மார்டின் விக்ரமசிங்கவின்
வெளிப்படையான விமர்சனத்தைத் தொடர்ந்து, தனது முந்தைய நூல்களின் கொள்கைகளை
மறுத்ததன் மூலம் அமரசேகரவும் இவ்வநுசரிப்பைப் பின்பற்றியமை, பியதாஸவின் மேற்கண்ட
போக்கைப் பிரதிபலிக்கின்றது. சிங்களக் கலசாரத்தைத் திரித்துச் சித்தரிப்பதாக அமரசேகரவை
விக்ரமசிங்க விமர்சித்திருந்தார். இவ்விமர்சனத்தைத் தொடர்ந்து, அமரசேகரவும் சமூகத்திற்கு
இணக்கமான ஒரு கலசாரக் கதைப் போக்கைப் பின்பற்ற விளைந்தார்.
அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்தின் முன் ஒரு மாணவர் சோடி
ஒருவரையொருவர் தழுவிக்கொண்டதை உடல்ரீதியாகவும், வாய்மொழியாகவும் கண்டித்த
செய்தியை அறிந்தவுடன் அமரசேகரவின் இக் கதை மனதில் எழுந்தது. வெளிப்படையாகக்

காதலை வெளிப்படுத்துவதைக் கண்டு முகஞ்சுளிக்கும் மனப்பான்மையானது எமது நாட்டிலும்,
குறிப்பாக எமது பல்கலைக்கழகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது. முற்போக்கான
களங்களாகக் கருதப்படும் பல்கலைக்கழகங்களில் இவ்வாறான போக்குகள் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது. இச் சகிப்பின்மைக்குக் கலைப் படைப்புகளும் விலக்கல்ல. உதாரணமகாக
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2016 இல் ஒரு முத்தமிடும் காட்சி மேடையேற்றப்பட்டதைத்
தொடர்ந்து அந்த நாடகப் படைப்பையே கைவிட நேர்ந்தது. இச் சகிப்பின்மையின் மறைமுகமான
வடிவத்தை உடல் மற்றும் உள ரீதியாக மாணவர்களைத் துன்புறுத்தும் பகிடிவதைக்
கலாசாரத்திலும் காணலாம். கலாசார மற்றும் அரசியல் ரீதியான அநுசரிப்பை உறுதிசெய்யும் ஒரு
கருவியாகப் பகிடிவதை பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் எமது பல்கலைக்கழகச் சூழலில்
மேற்கூறியவற்றிற்கு முரணான ஒரு போக்கையும் காணலாம். உதாரணமாக நிறுவனங்களின்
மேலாதிக்கம், நாட்டின் அரசியல் கலாசாரம், மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி
ஆகியவற்றுக்கெதிரான தொடர் மாணவப் போராட்டங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. இப்
போராட்டங்களைப் பெரிதும் முன்னெடுப்பது மாணவ ஒன்றியங்களாக இருப்பதுடன், கடந்த
வருடத்தின் அரகலய போராட்டம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது. மாறாக,
பின்வருமாறும் நாம் மேற்கண்டவற்றை நோக்க முடியும். உண்மையில் அநுசரிப்பு ரீதியான முரண்
பல்கலைக்கழகங்களில் இல்லாது காணப்படலாம். ஏனெனில் மாணவர்கள் இவ்வளவு வலுவான
அரசியல் சக்தியாகக் காணப்படுகின்றமைக்கு அவர்கள் மத்தியில் காணப்படும் அநுசரிப்புக்
கலாசாரம் காரணமாக அமையக்கூடும். ஆகவே அதனை மறுப்பதும் எதிர்ப்பதும்
இன்றியமையாததாகின்றன.
ஒரு புறம் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உடல் ரீதியாகவும் உளரீதியாகவும்
வலுக்கட்டாயமாக ஒரு குறித்த நெறிக்குட்படுத்தும் கலாசாரம் காணப்படுகின்றது. குறிப்பாகப்
புதிதாகப் பல்கலைக்கழகம் நுழையும் போது உடைகள், அடக்கமான நடத்தை, மற்றும் வயது
கூடிய மாணவர்களோடு கலந்துரையாடும் முறை ஆகியவை தொடர்பாக குறித்த நெறியானது
மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. இவை புதிதாக வரும் மாணவர்களின் ஆளுமைகளைப்
பாதிக்கக்கூடியவை. மாணவர்கள் பெரும்பாலும் வீடுகளிலும், பாடசாலைகளிலும், அவர்களது
சமூகங்களிலும் வேறுபட்ட கலாசார அநுசரிப்புகளைப் பின்பற்றியிருப்பார்கள். இதற்கு
மாறானதோர் கலாசாரத்தை அநுசரிக்கும் கட்டாயத்தின் பேரில், எதிர்ப்பின்றி அப் புதிய
கலாசாரத்தை அவர்கள் தழுவிக்கொள்கின்றார்கள். இங்கு முரணான இரு சக்திகள்
காணப்படுகின்றமை தெளிவாகின்றது. அதாவது பொதுவான அரசியல் கலாசாரத்தை
எதிர்ப்பதற்கும், மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்
கலாசாரமானது, அவர்கள் எதிர்க்கும் கலாசாரத்தினின்றும் வேறுபட்டதல்ல. மாணவர்கள்
ஆர்வத்தோடு பரந்த சமூகத்தின் அதிகாரப் படிநிலைகளை விமர்சிக்கின்றார்களேயன்றி, தமது
பல்கலைக்கழகங்களுக்குள் நிலவும் அதிகாரப் படிநிலைகளை எதிர்க் கேள்வி கேட்பதில்லை.
தனியொரு மாணவனின் சுதந்திரமானது, பரந்ததோர் “நலன்” கருதி மட்டுப்படுத்தப்படுகின்றது.
சிங்கள மற்றும் தமிழ்ச் சமூகங்களில் காலாகாலமாக தேசியவாதப் போக்கைக் கொண்ட எமது
நாட்டில் இவ்வாறான அநுசரிப்புக் கொள்கைகள் சமூகத்தினை முன்னேற விடாது தடுக்கின்றன.
நிறுவனங்களாக இயங்கும் பல்கலைக்கழகங்கள் இக் கலாசார அநுசரிப்பை மேலும்
சிக்கலாக்குகின்றன. சுதந்திரமானதும் தர்க்க ரீதியானதுமான சிந்தனையைத் தூண்டுவதை
விடுத்துப் பல படிநிலைகளிலும் அநுசரித்து போவதையே பல்கலைக்கழகங்கள் போதிக்கின்றன.

வகுப்பறைகளில் ஆசிரியர்களின் கருத்துகளும் கொள்கைகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
பரீட்சைகளில் ஆசிரியர்களின் கருத்தியல்களைப் பிரதிபலித்துப் பதிலெழுதுவது அதிக
புள்ளிகளைத் தரும் என்பதையும் மாணவர்கள் குறிப்பறிவர். மாணவர்கள் ஏற்கனவே
அனுபவிக்கும் மாணவ அரசியல் மற்றும் நாளாந்த வாழ்வு சார் அநுசரிப்புக் கலாசாரத்துக்கு
மேலதிகமாக அறிவியல்சார் அநுசரிப்பும் இங்கு உருவாக்கப்படுகின்றது. அனைத்து
மாணவர்களும் அல்லது மாணவக் குழுக்களும் இவ்வாறு மறுப்பின்றி இக் கலாசாரங்களை
அநுசரிக்கின்றார்கள் எனக் கூற முடியாத போதிலும் பெரும்பாலானோர் இவற்றிற்குக்
கட்டுப்பட்டுத்தான் நடக்கின்றனர். இத்தகைய மேலாதிக்கமான அநுசரிப்புக் கலாசாரமானது
மாணவர்கள் மீதுள்ள ஆசிரயர் எதிர்பார்ப்புக்களின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. பல
ஆசிரியர்கள் சுதந்திரமான, தர்க்கரீதியான சிந்தனையைப் பற்றிப் பேசுகின்றபோதும்,
வகுப்பறைகள் இவற்றுக்குத் தகுந்த களமாக அமைவதில்லை. ஆசிரியர்களின் கற்பித்தல்
முறைகளும் மறைமுகமாக அநுசரிப்பையே ஆதரிக்கின்றன.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, பல்கலைக்கழக நிர்வாகமும் அநுசரிப்பையே
விரும்புவதாகத் தென்படுகின்றது. உதாரணமாகச் சில நிர்வாகத்தினர் மாணவர்களை “மகன்”
அல்லது “மகள்” என அழைப்பதுண்டு. இது வெளியே பாசத்தை வெளிப்படுத்துவது போல்
தென்பட்டாலும், உண்மையில் இவை சட்டரீதியாக வளர்ந்தோரான மாணவர்களைச்
சிறுபிள்ளைகள் போல் நடாத்தும், அவர்களைத் தாழ்மைப்படுதும் பதங்களாகும். மற்றுமோர்
சிறந்த உதாரணமாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைகையில் மாணவர்கள் எழுந்து
“மரியாதை” செலுத்துவதைக் குறிப்பிடலாம். இங்கு ஆசிரியர்கள் மாணவர்களை எழுந்து நிற்கப்
பணிக்காத போதிலும் இது ஓர் எழுதாச் சட்டமாகக் காணப்படுவதுடன், ஆசிரியர்-மாணவர்
அதிகாரப் படிநிலையையும் இந் நடத்தை உறுதிசெய்கின்றது. நான் மேலே குறிப்பிட்ட
மாணவர்கள் முத்தமிடும் சம்பவமானது, நிறுவனம் மட்டுமல்லாது பெரும்பாலான மாணவர்கள்
மத்தியிலும் நிலவும் அநுசரிப்புக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றதெனலாம்.
மாணவர்களைச் சிறுபிள்ளைகளாக்கும் அதே நிறுவனம், “அன்பிலிருந்து” வன்முறைக்குத் தாவி,
மாணவர்களை நெறிப்படுத்த அரச ரீதியான அடக்குமுறைகளைக் கையாளுகின்றது. சில
பல்கலைக்கழகங்கள் நிறுவனம் சார் பாரம்பரியங்களைப் பயன்படுத்தி அநுசரிப்புக் கலாசாரத்தை
நிலைநாட்டுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் எந்தவொரு வேலையில் ஈடுபட்டிருப்பினும்
அவற்றை விடுத்து வேலை நேரங்களில் இசைக்கப்படும் தேசிய கீதத்துக்கு மரியாதை
செலுத்துமாறு எதிர்பார்க்கப்படுவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இது அண்மைக் காலத்தில்
இலங்கையின் பல அரசுசார் நிறுவனங்களில் கொண்டுவரப்பட்ட தேசியவாத அநுசரிப்பு
முறையாகும்.
ஆகவே அநுசரிப்புக் கலாசாரமானது பல திசைகளினின்றும், பல வடிவங்களிலும்
நிலைநாட்டப்படுகின்றது. இலங்கையின் பள்ளிக்கூடங்கள் பெரிதும் “நெறிமுறை”
சார்ந்தவையாகக் காணப்படுவதோடு, வழக்கத்துக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் மாணவர்கள்
விரைவில் “நெறிப்படுத்தப்படுகின்றனர்”. பள்ளிக்கூடங்கள் வீட்டுச் சூழல்களில், குறிப்பாக
நடுத்தரக் குடும்பங்களில் காணப்படும் அநுசரிப்புக் கலாசாரத்தின் நீட்டிப்பாக உள்ளனவேயன்றி
மாணவர்களை விடுவிக்கும் களங்களாக அவை அமைவதில்லை. இந் நிலையானது, சுதந்திரமான
சிந்தனைக்கும் முற்போக்கிற்கும் இடமாக அமையவேண்டிய பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இவ்வாறான அநுசரிப்புக் கலாசாரத்தையும்,

கட்டுக்கோப்பான தன்மையையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து, விமர்சித்து, அதனை எதிர்க்கும்
உத்திகளை ஆராய வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது. இத்தகைய பிரச்சினைக்கு
எளிதான, குறுகிய காலத் தீர்வைப் பெறுவது இயலாத விடயமாகும். இவ்வாறானதோர்
பிரச்சினை நிலவுவதை ஆமோதிப்பது, தீர்வுக்கான முதல்ப் படியாக அமையலாம். பின்னர்
குறைந்த பட்சம் பல்கலைக்கழகங்களிலாவது இதனை எவ்வாறு எதிர்ப்பது என்பதை ஆராய்தல்
வேண்டும். இருப்பினும் இதனை பேற்கொள்ளப் பல்கலைக்கழக வாழ்வின் பின்வரும் நான்கு
அம்சங்களும் மீளாராயப்பட்டு, மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். அவையாவன
மாணவர்களதும் நிறுவனத்தினதும் நம்பிக்கைகளும் நடத்தைகளும், கற்றல்-கற்பித்தல் ரீதியான
பீடத்தின் கொள்கைகளும் நடவடிக்கைகளும், நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களோடு
தம்மைத் தொடர்புபடுத்தும் முறைகளுமாகும். இது ஒர் புனைக்கதை உலகிற்கான
எதிர்பார்ப்பாகக் காணப்படும்போதும், இது பற்றிய கலந்துரையாடல்கள் எங்காவது
ஆரம்பிக்கப்பட வேண்டுமல்லவா?