‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்

கௌஷல்யா பெரேரா

நான் அமரகீர்த்தி லியனகே எழுதிய ‘விஷ்வவித்யாலய யனு குமக்த?
[பல்கலைக்கழகம் என்பது யாது?] எனும் நூலை வாங்குவதற்காக‌ சரசவி
புத்தகசாலையின் ஒரு கிளைக்குள் பிரவேசிதபோது அங்கே ஆங்கிலத்தில்
வெளியாகிய நூல்கள் மட்டுமே விற்கப்படும் என அறிந்தேன். வெறுமனே
நிறுவனத்தின் பேசும் கிள்ளைகளாக காணப்படும் ஊழியர்களுக்கு ஏனென்ற
காரணம் தெரியவில்லை. ஒருவகையில் இதற்கான காரணம்
தேவையில்லை. இந்நிறுவனம், சுதந்திரம் தொட்டு இயற்றப்பட்டு வரும்
ஒழுங்கற்ற மொழிக்கொள்கைகள் மட்டும் காலனித்துவ உற்பத்தியான
ஆங்கிலத்தில் இருக்கும் எதற்கும் விருப்புத்தெரிவிக்கும் தேசிய
விருப்பத்திற்கும் ஏதுவாக தன்னை தகவமைத்திருக்கின்றது. ஆங்கிலம் ஒரு
உலகளாவியரீதியில் பரவியுள்ள களையாகியிருப்பதோடு ஏனைய
மொழிகளின் புலத்தை கைப்பற்றியிருப்பதோடு (அரசாட்சி, தொழிநுட்பம்,
புத்தக வெளியீடு போன்றன) பல அறிஞர்களால் ‘கொலைகார மொழி’ என
அடையாளப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான காரணங்களால் தான் நாம் தற்போது இலங்கையில் அறிஞர்கள்
சுட்டிக்காட்டுவதைப் போல ‘குறைப்பு பன்மொழிசார்ந்த சூழலை’
எதிர்கொள்கின்றோம். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை மட்டுமே
ஊக்கப்படுத்துவதோடு ஏனைய மொழிகளை புறந்தள்ளுவதைக்
காண்கின்றோம். இதன் உச்சநிலையை ஆங்கில மொழிமூல ஆரம்ப மற்றும்
தனியார் பாடசாலைகளில் காணலாம். இருப்பினும் நாம் ஊக்கப்படுத்த
வேண்டியது ‘பழக்கமாகும் பன்மொழிசார்ந்த சூழலையாகும்’‍‍: நாம்
ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் மொழிகளில் திறமைகளை
அதிகப்படுத்தும் அதே வேளையில் ஏனைய மொழிகளை கற்றலாகும். நான் வெறுங்கையோடு அந்த புத்தகசாலையிலிருந்து வெளியாகியதை நான்
பயணித்த‌ ஆட்டோ சாரதியிடம் கூறியபோது இலங்கையில் சிங்கள மொழி
பேசப்படுவது அண்மைய எதிர்காலத்தில் இல்லாமலாகி விடுமோ என அச்சம்
தெரிவித்தார். மேலும் நாம் எமது பயணத்தில் ஆங்கில மொழியின்
உயர்தரத்தையும் மொழிசார்ந்த ஏற்றத்தாழ்வுகளையும் பற்றி பேசினோம்.
சிங்களம், தமிழ் (அவற்றை விட மிகக்குறைவாக பேசப்படும் மலாய் போன்ற
மொழிகள்) தொடர்ந்தும் பேசப்படவும் அவற்றுக்கு சிறந்த வாய்ப்புகளை
ஆங்கிலத்தால் உருவாக்கவும் முடியும்.

இவ்வருடத்தில் பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான பாதீட்டு
விவாதங்களிலும் ஆங்கிலம் தொடர்பான அதிகமான கருத்துகள்
பதியப்பட்டன. கல்வியமைச்சர் ‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ என்ற
வாக்குறுதியை உலக வங்கியின் கடன் உதவித்திட்டத்தில்
சாத்தியமாக்குவதாக வாக்குறுதியளித்தார். அண்மைய தசாப்தங்களில்
இலங்கையில் ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் மொழிமூல கல்வி
ஆகியன ஆரோக்கிய‌மற்ற வகையில் உலகவங்கியால்
கடனளிக்கப்பட்டிருக்கின்றது (IRQUE, HETC, AHEAD); அதேபோன்ற
கடனுதவித்திட்டங்கள் (மிக அண்மையில் GEMP போன்றன) தற்போது
பாடசாலைக் கல்விக்காகவும் வழங்கப்படுகின்றன. கடனுதவித்திட்டங்கள்
அரச கொள்கைகளை ஆக்கிரமிக்கும் போது விளைவுகளாக
வெளியாகுவதெல்லாம் கடன் உடன்படிக்கைகளின் மருகிய வார்த்தைகளே.
மேலும் கல்வி அமைச்சரின் கருத்துப்படி ஆங்கில மொழிமூல
ஆசிரியர்களுக்கு செயற்பாடு சார்ந்த பயிற்சியகளுக்காகவும்,
பாடசாலைகளிலிருந்து விலகிய மாணவர்களுக்கும், தொழில்வள
பயிற்சிநெறிகளுக்கும், தகவல் தொழிநுட்ப மற்றும் ஆங்கிலக்கல்வி
பயிற்சிக்குமாக நிதி ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும்
இவற்றை விட தூரநோக்குடைய கொள்கைக்களுக்காக எவ்வித
ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை: ஆசிரியர்களுக்கான உயர் சம்பள
கொடுப்பனவு, ஆசிரிய படையணியை விரிவுபடுத்தல் மற்றும் நீண்டகால
கொள்கைகள் போன்றன.

அனைவர்க்குமான ஆங்கிலம் என்பது பழைய ஏமாற்றாகும். கல்வி அமைப்பு
சிங்கள மொழிமூலமாக மாற்றப்பட்ட (பின்னர் தமிழிலும்) 1950களின்
பிற்பாடுகளில் சிலோன்/ இலங்கையில் அனைவர்க்கும் ஆங்கில்ம்
கற்பிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. உயர்கல்வி கூட தூய
விஞ்ஞான துறைகளை (உதாரணமாக மருத்துவ கற்கை, பொறியியல் துறை
மற்றும் ஏனைய தூய விஞ்ஞானங்கள்) தவிர ஏனைய கற்கைகள்
சிங்களத்திலும் (பின்னர் தமிழிலும்) மாற்றப்பட்டன. 1960களில் அரசாங்க
நிர்வாக விடயங்களுக்கும் ஏற்கனவே ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்ட
பாடங்களை கற்பிக்கவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில்
அருஞ்சொல்திரட்டுகள் உருவாக்கப்பட்டன. தமிழ் மற்றும் சிங்கள
மொழிகளில் மொழிபெயர்ப்பு தொழில்களுக்கு கேள்வி அதிகமாகவும் தொழில்
விருத்தியடையவும் எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிகழவில்லை. இன்னும்
நான் இடமின்மை காரணமாக இங்கு குறிப்பிட இயலாத பல காரணங்களால்
உள்நாட்டில் இடம்பெறும் ஆங்கில மொழிமூல அறிவார்ந்த நடவடிக்கைகளும்
வெளியீடுகளும் அதிகம் வரவேற்கப்படுவதோடு தமிழும் சிங்களமும்
தேங்கிப்போய் இருக்கின்றன.

பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பல பில்லியன் ரூபாய்கள்
செலவளிக்கப்பட்டாலும் இலங்கையில் ஆங்கிலக்கல்வி குறிப்பிட்டளவு
தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் நுழையும்
கிட்டத்தட்ட 50,000 மாணவர்களில் மிகவும் சிறிய பகுதியினரே ஆங்கில
மொழிமூலத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இளங்கலை
மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் போது முதல் சில
வாரங்களுக்கு செறிவான மொழிப்பயிற்சி வழங்கப்படுவதோடு அதன் பின்னர்
வாரங்களுக்கு சில மணித்தியாலங்களே அவை தொடரப்படுகின்றன.
ஆங்கிலத்தில் குறைந்த அல்லது அறவே புலமைத்துவம் இல்லாத
மாணவர்களுக்கு திடீரென ஆங்கில மொழிமூல பாடங்கள் கற்பிக்கப்படுவது
அவர்களுக்கு மிகவும் சித்திரவதையான விடயமாகும். சிந்தித்துப் பாருங்கள்‍-
அவர்கள் புது மொழியொன்றையும் கற்க வேண்டும், அம்மொழியில்
வழங்கப்படும் தேவையான பாட அலகுகளையும் கற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இதனால் அதிக ஆங்கில புலமை உள்ள
மாணவர்கள் சிறப்பாக செயற்பட வாய்ப்பாக அமைவதோடு அவர்களின்
வெளிப்படுத்தும் திறனும் அதிகமாக இருக்கும் வேளை ஏனைய மாணவர்கள்
பட்டப்படிப்பை முடிப்பதற்கே கஷ்டப்படும் சூழ்நிலையும் இதனால்
தொழில்வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளும் உருவாகின்றன.

பல மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்கும் வளங்கள் அவர்கள் கற்ற‌
பாடசாலைகளிலேயே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடயம் நாம்
புள்ளிவிபரங்களை (மக்கள்தொகை கணக்கு மற்றும் புள்ளிவிபரவியல், 2020)
ஆராயும் போது அதிர்ச்சியளிப்பதாயில்லை: 2020 வரை வெறும் 1%மான அரச
பாடசாலை ஆசிரியர்களே ஆங்கிலமொழிமூலக் கல்வியை பெற்றவர்களாய்
இருக்கின்றார்கள்; வெறும் 2.4%மான அரச பாடசாலைகளில் கல்வி பயிலும்
மாணவர்களே இருமொழிமூல (தமிழ்/ சிங்களத்துடன் ஆங்கில மொழி)
கல்வியை பெறுபவர்களாய் இருக்கின்றார்கள். மூன்றாம் நிலைக் கல்வியை
கற்காத ஒருவர் ஆங்கில மொழிமூல ஆசிரியராகவோ ஆங்கிலம் கற்பிக்கும்
ஆசிரியராகவோ இருக்கலாம். மாகாண அளவில் ஆசிரியர் படையணியில்
உள்வாங்கப்படும் ஒருவர் இருவருட உயர்கல்வி டிப்லோமாவை
முடித்திருப்பதே போதுமானது; தனியார் பாடசாலைகளில் இவ்வாறான தகுதி
சார் சட்டதிட்டங்கள் காணப்படவில்லை என்பதோடு வெறுமனே
ஆங்கிலத்தில் “சிறப்புப்புலமை” இருப்பதே உள்வாங்கப்பட போதுமான
தகுதியாகும்.

உயர்கல்வி அமைப்பு மொத்தமாக ஆங்கில மொழிமூலத்துக்கு
மாற்றப்படுவதற்கான அர்த்தம் அறிவு உற்பத்தி ஆங்கிலத்தில்
நடைபெறுகின்றது என்பதோடு நாம அனைவரும் உலகளாவிய
தொழிலாளர்களாக மாறுகின்றோம் என்பதாகும். இருப்பினும்
இலங்கையர்களை பொருத்தவரை மொழிப்பாவனை என்பது தொழிலின்
தன்மை, தொழில் செய்யும் பிரதேசம், வாடிக்கையாளார் வட்டம் போன்ற
காரணிகளில் தங்கியிருப்பதோடு பெரும்பாலான விடயங்களில்
இருமொழிமூலத்தில் இயங்குவது அவசியமான விடயமாகின்றது.
இருப்பினும் கூட, பல பல்கலைக்கழக கற்கைநெறிகள் எவ்வித வஆள்ங்கள் குறித்தான திட்டமிடல்களுமின்றி ஆங்கில மொழிமூலத்துக்கு
மாற்றப்படுவதை காண்கின்றோம். உதாரணமாக சட்டக்கற்கை தற்போது
மும்மொழிகளிலும் நடைபெறுகின்ற போதும் ஆங்கில மொழிமூலத்தில்
மட்டும் நடத்தப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதோடு
சட்டத்தொழிலில் தமிழ் அல்லது சிங்களம் தெரிந்திருப்பது தொழில்சார்
தேவையாக‌ காணப்ப‌டுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். எமது நாட்டில்
இருமொழிமூல பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர்கள் தேவைப்படும்
நிலையில் பட்டக்கற்கைகள் ஆங்கில மொழியை மட்டுமே தேவையாக
கொண்டியங்குகின்றன.

என்னுடைய பழைய மாணவர் ஒருவர் கட்டுரையொன்றில் எழுதிய
விடயமொன்றை நான் எமது அரசாங்கத்துக்கும் (தனியார் மற்றும் அரச)
பல்கலைக்கழகங்களுக்கும் கூற விழைகின்றேன்: ஆங்கிலம் கற்பிப்பது
அப்பம் சுடும் வேலையல்ல. இது எவ்வாறு விளக்கக்காட்சியை
மேற்கொள்வது அல்லது ஒரு வளைதளத்தை உருவாக்குவது என படிப்பதற்கு
நிகரான செயலல்ல. ஒரு மொழியை கற்பதென்பது பல‌ மணித்தியாலங்கள்,
நாட்கள், வருடங்கள் என செலவளித்தும் அந்த மொழியில் செயற்பட்டும்
அடைய வேண்டிய விடயமாகும். மணித்தியாலங்கள் எமது
பல்கலைக்கழகங்கள் வழங்கத் தயங்கும் விடயங்களில் ஒன்றாகும்.
ஆங்கிலத்துறைகள் தமது தொழிலை சரியாக செய்வதில்லை என
தரம்தாழ்த்துவதிலும் அவர்களின் கற்பித்தல்களுக்கு வாரத்துக்கு 2 அல்லது 3
மணித்தியாலங்களை தாண்டி வழங்காமல் இருப்பதிலும் பல்கலைக்கழகங்கள்
மிகவும் கொடூரமாக நடந்துகொள்கின்றன. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்
மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறை மாணவர்களுக்காக வாரத்தில் 10
மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென போராடிய எனது நண்பி
மதுபாஷினி ரத்நாயக்கவின் செயல் தனித்தன்மை வாய்ந்த்ததும்
முக்கியமானதுமாகும்; இருப்பினும் எம்மில் பலர் இதனை ஒரு
முன்னுதாரணமாக கொள்ளக்க்கூடாதென கூறுகின்றனர்.

வழங்கப்படும் குறைந்தளவு மணித்தியலாலங்கள் மற்றும் குறைவான
வளங்களை வைத்தும் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் ஆங்கில மொழிமூலத்தில் கற்ற பட்டதாரிகள் சிறப்பாக
செயற்படுவதோடு ஆங்கில மொழிமூலத்தில் தொழில்புரியும்
தொழிற்பண்பட்டோர் மற்றும் கல்வியியலாளர்களை நாம் கொண்டிருப்பதாக
வாதாடலாம். எந்த ஆங்கில மொழிமூல பதிப்பாசிரியர், மெய்ப்புநோக்கர்,
எழுத்தாளர் அல்லது புனைப்பெயரில் எழுதுபவ‌ரோ இதனை பொய்யென
நிறுவலாம். நாம் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் (விட‌யங்களை
விளங்கிக்கொள்ளவும்) இயலுமென்றாலும் மேம்பட்ட‌ எழுத்து மற்றும்
வாசிப்பு திறன்கள் இலங்கையின் தொழில்பண்பட்டோர், கல்வியியலாளர்கள்
போன்ற சமூகங்களுக்கிடையே அருகியே வருகின்றன (இவ்வாறான தேசிய
மொழிகளில் எழுத்து சார்ந்த திறன்களை பகிரும் தமிழ் மற்றும்
சிங்களத்துறைகளிலும் கூட சிக்கலாகி வரும் நிலையையே நாம்
காண்கின்றோம்).

இது ஆங்கிலத்துக்கு எதிரான வாதமல்ல. உண்மையில் இது ஆங்கிலத்தை
மாற்றீடாக அன்றி ஏனைய மொழிகளுடன் ஒரு இணைப்பாக
திட்டமிடுவதற்கான அரசாங்கங்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்களுக்கான
அழைப்பாகும்.

எந்த மொழிக்கொள்கையும் திரைசேரி நிதிகளையும் மேலும் சில
நடவடிக்கைகளையும் ஈடுபடுத்துவதில் தங்கியிருக்கின்றது:

● மொழிப்பாட ஆசிரியர்களை அதிகரித்தலும் அவர்களுக்கான சிறப்பான
பயிற்சியும். பாரிய ஆசிரியர் படையணியை அரசாங்கம் உள்வாங்கும்
பொருட்டு செறிவான பயிற்சியை மேற்கொள்ளும் அதே வேளை,
நீண்டகால பயிற்சிநெறிகளை உள்வாங்கப்படும் ஆசிரியர்களுக்காக
ஒழுங்குபடுத்தலாம். ‘பழக்கமாகும் பன்மொழிசார்ந்த சூழலை’ நோக்கி
நாம் நகர வேண்டுமாயின் இந்த நடைமுறையை தமிழ் மற்றும் சிங்கள
மொழிகளுக்கும் உபயோகிக்கலாம்.

● ஆட்சேர்ப்புக்கான அடிப்படையாக போதுமான சம்பளக்கொடுப்பனவை
அறிமுகப்படுத்தலாம். அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள்
மாதமொன்றுக்கு சராசரியாக 50,000 ரூபாவை சம்பளமாகப் பெறுகின்றனர். புள்ளிவிபரங்களின் படி தனியார் பாடசாலை
ஆசிரியர்கள் ஆண்டொன்றுக்கு 340,000 ரூபாவை சம்பளமாகப்
பெறுகின்றனர். அரச பாடசாலை ஆசிரியர்கள் அதிக சம்பளத்தை
பெறும் நிலைக்கு கொண்டுவர வேண்டும்; தனியார் பாடசாலை
ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விதிமுறைகளை கொண்டுவர
வேண்டும்.

● உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழி வகுப்பறைகளுக்கு அதிக
மணித்தியாலங்கள் ஒதுக்க வேண்டும். இதற்கு அதிகமான ஆங்கில
மொழி விரிவுரையாளர்கள் தேவைப்படுவார்கள்.

● தேசிய அளவில் மொழிக்கல்விக்கான நிபுணர்களை கொண்டு
வகுக்கப்பட்ட நீண்டகால மொழிக்கல்வி கொள்கைகள்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் (அவை எந்த கடன் வழங்கும்
நிறுவனங்களுடனும் தொடர்புபடுத்தப்பட கூடாது). மொழிக்கல்வி
என்பது உலகளவில் வளார்ச்சியடைந்துவரும் ஆய்வுத்துறையாக மாறி
இருப்பதோடு ஏனைய நாடுகளில் இருந்தும் எமது நிபுணர்களிலிருந்தும்
எமக்கான உதாரணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

● மிக முக்கியமான விடயம், ஆங்கிலத்தை விட பெறுமதியான
விடயங்களை கற்பதில் எமக்கான செயலூக்கம் தொடர்பான பாரிய
மாற்றமாகும். இலங்கை சிறப்பான பன்மொழிக் கொள்கையொன்றை
வகுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. ஒவ்வொரு
வருடமும் டிசம்பர் மாதத்தில் எமது அரசாங்கங்கள் வாரி வழங்கும்
வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில் தேவையான
நிதிகளை ஒதுக்கவும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவும்
முன்வர வேண்டும். சிறப்பான கொள்கைகளை எமது அரசாங்கங்களிடம்
மாத்திரமன்றி பாடசாலைகளிலும் எமது தொழில் இடங்களிலும் நாம்
கோரலாம்.