ஹர்ஷன ரம்புக்வெல்ல
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சில விடயங்களே எதிர்பார்ப்பை
ஊட்டுவனவாக இருக்கின்றன. கடந்துபோன ஆறு மாதங்களில் நாம்
நினைத்தும் பார்த்திராத ஒரு இருத்தலியல் நெருக்கடியை இப்போது நாம்
சந்திக்கின்றோம். முரண்நகையாக இலங்கை தனது 75ஆவது சுதந்திர
தினத்தில் காலடியெடுத்து வைக்க இன்னும் ஒரு வருடமே இருக்கின்றது.
ஏழு தசாப்தங்களை அண்டும் எமது பின்காலனிய தேச உருவாக்கத்திலும்
நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற எதிர்காலம் ஒரு நாடாக நாம்
பெருமைகொள்ளத்தக்க விடயமாக காணப்படவில்லை. இக்கால
இடைவெளியில் தேச உருவாக்கமென்ற பேரில் பெருமளவு ரத்தம்
சிந்தப்பட்டு விட்டது; கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை இனதேசியவாத
முரண்பாடுகளே வடிவமைத்திருக்கின்றன; அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்த
இரு பெரும் இளைஞர் கிளர்ச்சிகள் நாட்டில் பிரிவினையையும்
பகைமையையும் வரலாறுகளாக மாற்றியிருக்கின்றன. எமது இன்றைய
இக்கட்டான சூழ்நிலை தனிப்பட இவ்வாறான விரோத வரலாறுகளால்
கட்டமைக்கப்படாவிடினும் இவை வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதன் பின்னணியிலேயே எனது சிந்தனைகளை எவ்வாறு இலங்கையில்
யாரும் எதிர்பார்த்திராதளவு ஒருங்கிணைவொன்று ‘அரகலய’ என்ற பேரில்
உருவாகியிருக்கின்றதென பிரதிபலிக்கின்றேன். இந்நிலை நாட்டில்
ஏற்பட்டுள்ள தீவிர அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால்
நிகழ்ந்தனாலும் இந்நிலையில் ஐயப்பாடுகள் காணப்படுவதாலும் இதனை
நான் ஊதிப்பெருப்பிக்க விரும்பாததுடன், இந்நிலை எமக்கு, ஒரு சமூகமாக,
முக்கியமாக, ஒரு சமூகமாக நாங்கள் மீள்கட்டுமானம் மற்றும்
உருவாக்கத்தை நோக்கி வலிமிகுந்த செயன்முறைக்கு உட்பட்டிருக்கையில்
அதனுள் எமது வகிபாகத்தை குறித்து சிந்திக்கும் கல்வியியலாளர்களாக சில
எதிர்பார்ப்புகளை தருகின்றது (இருப்பினும் எனது ஒரே எதிர்பார்ப்பு, இந்த மீளட்டுமானமும் உருவாக்கமும் காலாகாலமாக உருவாகிவரும்
அரதப்பழசான நவதாராளவாத திட்டமாக இல்லாதிருப்பதே).
‘அரகலய’வில் ஒருமைப்பாடு என்பது என்ன என்பதை விளங்கப்படுத்தும்
முன்னர் நான் ஒருமைப்பாடு என்ற கருதுகோளை பற்றி சிறிது
விளிக்கின்றேன். ஒருமைப்பாடு என்ற சில பொழுதுகளில் புவியரசியலில்
பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமாக தற்போதைய காலகட்டங்களில்,
குறிப்பாக இலங்கையில் மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலும் பொருளாதார
நெருக்கடி மற்றும் ஏனைய குழப்பங்கள் நேரும் வேளையில் தேசங்கள்
தமக்கிடையே ஒருமைப்பாட்டை அதிகம் பேசிக்கொள்கின்றன. இருப்பினும்,
இவ்வாறான ஒருமைப்பாடு எப்போதுமே சில பின்னோக்கங்களுடனேயே
பேசப்பட்டு வருகின்றன. இது ஒரு வகையான ‘செங்குத்தான’
ஒருமைப்பாடாக வெளிப்படுவதோடு, பலம்வாய்ந்த அரசுகள்
ஒத்தநிலையிலுள்ள பலமற்ற அரசுகளுக்கு கைகொடுக்கின்றன.
இதைப்போலவே இந்தியாவும் இலங்கையை நோக்கி ‘அயலாருக்கு
முதலிடம்’ என்ற பேரில் கைகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ள போது இதனை
ஒரு அதிகாரப்படிநிலையான செயற்பாடாகவும் இதன் பின்னணியில் பல
நோக்கங்கள் இருப்பதாகவுமே விளங்க வேண்டி இருக்கின்றது. யதார்த்தத்தில்,
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பின்னணியாக பூகோள அரசியல்
நோக்கங்களும் நன்மைகளும் காணப்படுவதை ஏற்க வேண்டி இருந்தாலும்,
இலங்கை முகங்கொடுத்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான
‘பலமான’ நாடுகளின் உதவின்றி இலங்கையால் இந்த தேசிய
நெருக்கடியிலிருந்து மீள முடியாது என்பதுவும் கசப்பான உண்மையாகும்.
சில அறிஞர்களின் கருத்துப்படி, ஒருமைப்பாடானது தன்னை நிலைநிறுத்தும்
இன்னொரு முறை ‘மயக்கக்கூடிய’ ஒருமைப்பாடாகும். இது, அதன்
பெயரளவிலும் உருவகமாகவும் குறிப்பது யாதெனில், ஒரு வகையான
தூரநிலையிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஒருமைப்பாடாகும்; அதாவது,
கல்வியியலாளர்களும் அறிஞர்களும் தாம் தலையிடும் விடயத்தின் பாரதூரம்
அறியாமல் போராட்டங்களுக்கு, அவை பெறவேண்டிய ஆதரவென எண்ணி
ஒருமைப்பாட்டை வழங்குவதாகும். இது பொதுவாக ‘முதலாம் உலக’ அறிஞர்கள், ‘மூன்றாம் உலக’ போராட்டங்களுக்கு, அவை தமது
கருத்தியலோடு ஒன்றுவதாக எண்ணி வழங்கும் ஒருமைப்பாடாகும்.
இதற்கான சிறந்த உதாரணம், கம்போடியா நாட்டின் கமர் ரூஜ் விடுதலை
இயக்கத்துக்கு தாராளவாத, இடதுசாரி அறிவுஜீவிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு
இயக்கமென கூறி ஆதரவு வழங்கிய நிலையில் பின்னர் அவ்வியக்கம்
கட்டவிழ்த்துவிட்ட பயங்கரங்களை உலகமே கண்டுகொண்டது. இதே நிலை,
இலங்கையின் பின்காலனிய வரலாற்றிலும் பல இடங்களில்
பிரதிபலித்திருப்பதை காணலாம்; நாட்டில் உருவாகிய பல மக்கள்
இயக்கங்களுக்கு, சூழ்நிலையின் தீவிரம் மற்றும் அரசியலை அறியாமல்
‘பெருநகர’ அறிவுஜீவிகள் தமது தொலைதூர ஒருமைப்பாட்டை வழங்கியதை
நாம் கண்டிருக்கின்றோம்.
‘செங்குத்தான’ மற்றும் ‘மயக்கக்கூடிய’ ஒருமைப்பாடுகளை தவிர்த்து
அறிஞர்கள் ‘மருள்நீக்கும் ஒருமைப்பாடு’ எனும் இன்னொரு வகையான
ஒருமைப்பாட்டை குறித்தும் பேசுகின்றார்கள். இதன் மூலம் அவர்கள் கூறும்
ஒருமைப்பாடானது, ஒரு பொதுவான இலக்கை அடைவதற்காக
வித்தியாசமான அரசியல் நிகழ்ச்சிநிரல்களோடு காணப்படும் பல்வகையான
குழுக்கள் ஒன்றுசேரும் நிலையை ஆகும். அத்தகைய குழுக்கள் தமது
வேற்றுமைகள் குறித்த விமர்சனத்துடன் கூடிய தெளிவோடு இருக்கும்
நிலையில் முன்னரை போலன்றி அனைவரையும் ஒரே இடத்தில் செயற்பட
வைக்கக்கூடிய பொதுவான எதிரியை எதிர்கொள்ளும் நிலையில் இவ்வாறான
ஒருமைப்பாடு உருவாகின்றது. மேலும் இவ்வாறான சூழ்நிலைகளுக்கு
இட்டுச்செல்லுவது மக்களுக்கு ஏற்படும் கோபமாக இருப்பதோடு கோபம்
வெளிப்படுத்தப்படும் வழிகள் வித்தியாசமாக காணப்படும். நான் ‘அரகலய’வை
மருள்நீக்கும் ஒருமைப்பாட்டின் வழி வாசிக்க விரும்புகின்றேன்.
போராட்டத்தின் ‘அப்பாவித்தனத்தை’ ‘கொன்ற’ நிகழ்வான மே 9 நிகழ்வுக்கு
முன்னர், ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டம் உச்சநிலையில் இருந்தபோது
இதனில் இணைந்த அனைத்து தரப்பினரும் ஒரே இலக்கை நோக்கி ஒரு
வகையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். அந்த இலக்கான
ராஜபக்ஷாக்களை விரட்டுவதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊழலெனக் கருதிய
அமைப்பை இல்லாமலாக்க முயன்றதில் மருள்நீக்கிய ஒருமைப்பாடும் கோபமும் காணப்பட்டது. பல மத்திய தர வர்க்க மக்களுக்கு இப்போராட்டம்
அன்றாட வாழ்க்கையின் தேவைகளான எரிவாயு, மின்சக்தி மற்றும்
எரிபொருள் போன்றவற்றின் தட்டுப்பாடு குறித்தான ஏமாற்றத்தை
வெளிப்படுத்தவும் தமது எதிர்காலத்தை சூரையாடிய ஆளும்வர்க்கத்துக்கு
எதிரான கூட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தவுமான வழியாக காணப்பட்டது.
நாட்டில் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றைக் கொண்ட அனைத்து
பல்கலைக்கழக மாணவர் அமைப்பு (), முன்னணி சோஷலிசக் கட்சி, பல
தொழிற்சங்கங்கள் அல்லது ()யின் இளைஞர் படையணிக்கு
இப்போராட்டமானது சுரண்டுகின்ற, நீதமற்ற அமைப்பென அவர்கள்
கருதிவந்த அமைப்புக்கெதிராக அனைவரும் திரண்டமை ஒரு
உச்சநிலையையும் அவர்களின் நீண்ட போராட்டத்துக்கான
நியாயப்பாட்டையும் வழங்குவதாய் இருந்தது. உண்மையில்
பொதுப்படையான ஒரு கருதுகோளின் படி முக்கியமாக அரசியல்
கட்சிகளுடன் தொடர்புடைய குழுக்களிலிருந்து நடைமுறைக்கேற்ற அரசியல்
கணிப்பீடுகள் வெளிவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளையில், இப்போராட்டத்தில் வரலாற்றுரீதியாக இலங்கையில்
இனரீதியாகவும், மதரீதியாகவும் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மையினர், தாம்
ஒடுக்கப்பட்ட விடயத்தின் வழி வெளிப்படுத்தப்படும் கோபத்திற்கான களம்
அமைக்கப்படாதிருக்கும் நிலையையும் நாம் காண்கின்றோம். இருப்பினும்
அச்சிறுபான்மையினர் தமது கோபத்தை ஒரு பொது இலக்கின் வழி, அதாவது
ராஜபக்ஷ அரசாங்கத்தை ஒழிப்பதும் ஊழல்மிகு அரசாங்கத்தை
அகற்றுவதற்குமான அறைகூவலோடு சேர்த்து வெளிப்படுத்துவதற்கான
தளம் உருவாகியுள்ளது.
இருப்பினும், அதேநேரத்தில், ‘கோட்டா கோ கம’ மீதான மே 9 தாக்குதலின்
பின்னர் இம்மருள்நீக்கும் ஒருமைப்பாட்டில் வலுவற்றதன்மையொன்று
காணப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மே 9ல் ‘கோட்டா கோ
கம’ தாக்கப்பட்டபோது ஆரம்பத்தில் சுகாதார ஊழியர்களும் அலுவலக
ஊழியர்களும் தமது வேலைத்தளங்களை விட்டும் ‘கோட்டா கோ கம’விற்கு
விரைந்தபோது அதில் ஒரு ஒருங்கிசைவான, எதிர்பாராத ஒருமைப்பாடொன்று உருவாகியதை காணக்கிடைத்தது. இருப்பினும்
மாலையாகும் போது இத்தாக்குதலிலுக்கு பொறுப்பென சந்தேகப்பட்ட
அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரின் சொத்துகள் மீதான தொடர்
தாக்குதல்களை அமைதிபோராட்டமென அறியப்பட்ட ‘அரகல’
செயற்பாட்டாளர்கள் செய்தபோது அதிலொரு நயவஞ்சகத்தன்மை
வெளிப்பட்டது. இப்பதில் தாக்குதல்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள்
பக்கமான நியாயப்பாடுகள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், பின்னர்
வெளிவந்த தகவல்களில் காணப்பட்ட சொத்துகளை சூரையாடியமை,
பலிக்குப்பலி தீர்க்கும் தாக்குதல்கள் போன்ற விடயங்களால் அரகலய
அத்தனை காலமாக நடத்தப்பட்டு வருவதாக நம்பப்பட்ட நெறிமுறைகள்
மற்றும் கொள்கைகள் மீது சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன.
தற்போது நான் இவ்வாக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கையின்
உண்மையான அரசியல் தன்மையின் இன்பதுன்பவியலையும் அரசியல்
எந்திரமயமாக்கல் மற்றும் திரைக்குப்பின்னான பேரம்பேசலகளால் ஏற்பட்ட
ஆட்சிமாற்றத்தின் பின்னரும் அரகலயவில் முன்னை போன்ற உற்சாகம்
இல்லாத நிலை காணப்படுகின்றது.
இது எதனை உணர்த்துகின்றது? மே 9க்கு பிறகு அரகலய தனது
அர்த்தத்தையும் தேவையையும் இழந்துவிட்டதா அல்லது எமது பகுப்பாய்வை
இன்னும் சற்று ஆழமாகக் கொண்டுபோகலாமா? இந்நேரத்தில் நான்
அறிஞர்கள் வழங்கும் இன்னொரு வகையான ஒருமைப்பாட்டை பற்றி கூற
எண்ணுவதோடு அவ்வொருமைப்பாட்டை விளக்கப்படுத்துவதன் ஊடாக
எவ்வாறு அரகலயவின் உயிர்மை வடிவமைக்கப்படவும் இன்னும்
வடிவமைத்துக்கொண்டும் இருப்பதை பொருத்தமாக விளக்கலாம் என்றும்
பார்க்கலாம். இதுவே சில அறிஞர்களால் ‘ஆழமான ஒருமைப்பாடு’ என
கூறப்படுகின்றது. அதாவது, இந்நவதாராளவாத பொருளாதார உலகில்
மக்கள் தாம் அனுபவித்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார
நெருக்கடிகளுக்கு காரணமும் மக்களின் பொது எதிரியுமாகவும் தம்மை
பலமிழக்க வைப்பதாகவும் உணரும் ஆளும் வர்க்கமும் அதனோடு அந்த
ஆளும் வர்க்கத்துக்கும் அரசியலணைவுடன் கூடிய முதலாளித்துவமே என உணரும் சூழ்நிலையாகும். இது ஒரு இலட்சியவாதமான நிலையாகவும்
இலங்கையில் இந்நிலை அரகலய மூலம் பகுதியளவிலாவது
உணரப்படுவதாகவும் நான் எண்ணுகின்றேன். வித்தியாசமான அரசியல்
மற்றும் பொருளாதார படித்தரங்களிலிருந்து வருவோர், வித்தியாசமான
மதக்கொள்கைகளை பின்பற்றுவோர் மற்றும் வித்தியாசமான அரசியல்
நிலைப்பாடுகளை எடுப்போர் ஒரே தளாத்தில் சட்டென கூடிய நிலையை நாம்
அரகலயவில் கண்டோம். அவர்கள் என்றும் முடியாத எரிபொருள்
வரிசைகளில் நின்றும், எங்கோ விற்பனையாகும் எரிவாயுவை தேடி ஓடியும்
அவர்களில் பெரும்பாலானோர் பசியால் வாடிய நிலையிலும் ஒரே தளத்தில்
தம்மை இணைத்துக்கொண்டனர். முன்னர் அவர்களை வேற்றுமையாக்கி
வைத்த எந்த ‘யதார்த்தமான’ விடயங்களும் தற்போது பலனின்றி
சென்றுள்ளதோடு அத்தனை மக்களுக்கும் முன்னிலையைல் இருக்கும் ஒரே
தடை இருத்தலியலுக்கான கேள்வியே. இந்த அரகலயவின் மூலம் ஆழமான
ஒருமைப்பாட்டின் துகள்களை நம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு
கல்வியியலாளராக நான் எண்ணுவதெல்லாம் இந்நிலையை சரிவர
அடையாளங்கண்டு, அதனை வளப்படுத்தி, நிலைநிறுத்துவதன் மூலம்
எம்மால் குறைந்தது ஒரு வளமான எதிர்காலத்தை ‘கற்பனையாவது’ காண
முடியும். இதுவெல்லாமே இலட்சியவாத சிந்தனைகளாக காணப்பட்டாலும்
நாம் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான சிந்தனைகள்
அரசியல்ரீதியிலும் கல்வியியல்சார்ந்த அடிப்படையிலும் முக்கியமானதாகக்
கொள்ள வேண்டி இருக்கின்றது.