அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம்

சிவமோகன் சுமதி

உலகளாவிய ரீதியிலான கோவிட் நோய்த்தொற்று நிலைமைக்கு மத்தியில் அரை ஆண்டு நிறைவை எமது “குப்பி டாக்” எட்டுகின்றது. கடந்த சில மாதங்களில் கோவிட் நெருக்கடியில் எமது நாடு சிக்குண்டதையும் எமது பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதையும் கண்கூடாகப் பார்த்தோம். இவற்றுக்கு மத்தியில் ஏராளமான ஆர்ப்பாட்டங்களும் பதில்க் கிளர்ச்சிகளும். இதனுடன் தொடர்புடைய எழுத்தாளர்கள் பலரும் ஏறக்குறைய கடந்த ஆண்டு பூராகவும் இந்த நோய்த்தொற்றினால் புதிதாகத் தோன்றிய மற்றும் மேலும் தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகத் தர்க்க ரீதியான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இவற்றுள் கல்வி மீது காலப் போக்கில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தகூடிய பிரச்சினைகள் பிரதானமானவை. இங்கு தற்சமயம் உள்ள நிகழ்நிலைக் கற்றல் கற்பித்தல் முறைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுதல் போன்றவை பற்றிக் கலந்துரையாடப்படுகின்றது. இவ்வாறான தற்காலிகச் சிக்கல்கள் மட்டுமல்லாது குடிமை மற்றும் பொது மக்கள் கலாசாரத்தின் ஆக்கவளமுடைய சக்தி என்ற வகையில் எமது கல்வி முறையின் தொழிற்பாடு பற்றியும் கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன. எமது கல்வி முறையை, குறிப்பாக உயர் கல்வியைப் பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகளின் பால் கவனம் செலுத்துவதனூடாக ஒரு தத்துவார்த்த ரீதியில் பாகுபடுத்தப்பட்டு சுருக்கப்பட்ட கலந்துரையாடலை இக் கட்டுரையில் முன்வைக்கின்றேன்.

வெளிப்படும் ஜனநாயகத்தின் பணி: இராணுவமயமாக்கலின் நீக்கம்

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கல்வி மீது அடக்குமுறை, வெளி நபர்களால் உண்டாக்கப்படும் கட்டுப்பாட்டொழுக்கம், சர்வாதிகாரம், கண்காணிப்பு போன்றவற்றைத் திணிக்க எத்தனித்துள்ளன. இவர்களது இவ்வெண்ணங்கள் கொத்தலாவல சட்டத்திற்கெதிரான போராட்டங்களூடாக வெளிப்படுத்தப்பட்டன. இவ்வாறான சக்திகள் பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிலையங்களிலும் ஏற்கனவே நிலவி வந்துள்ளன. கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்வி வட்டாரங்களில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்பார்வை செய்யப்படுகின்றது. பாடத்திட்டத்தை உன்னிப்பாக மேற்பார்வை செய்தல், வேறெங்கோ உருவாக்கப்படும் கொள்கைகள் கல்வியாளர்கள் மீது திணிக்கப்படுதல், சுற்றறிக்கைகள், CCTV கமராக்கள், உடல் சோதனைகள், தடையரண்கள், சோதனைச் சாவடிகள் என இதில் உள்ளடங்குபவை பல. பழையதும் புதியதும் கலந்த இந் நடவடிக்கைகள் தனியார்மயமாக்கல் மூலம் எமது பல்கலைக்கழகங்கள் மெல்ல ஆக்கிரமிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. நிதி ஒதுக்கீடு தொடர்பான அரச கொள்கைகளும், செயற்குறிப்புகளும் கூட இதனை வெளிப்படுத்துகின்றன.

கல்வி வட்டாரங்கள் எப்போதும் ஒரு படிநிலை முறையுடன் காணப்படுவதோடு கல்விச் சீர்திருத்தங்கள் இதனைச் சரி செய்ய எடுக்கும் முயற்சிகளும் அற்பசொற்பமாகக் காணப்படுகின்றன. கல்வியில் கீழ் நிலையிலிருந்து மேல் நோக்கி இடம்பெறக்கூடிய மாற்றுத் திட்டங்களைப் புறக்கணிப்பதன் மூலம் இவை வர்க்கம், இனம், பால், மற்றும் ஏனைய சமூகப் பிரிவினைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளன. பாடத்திட்டங்களை ஒத்திசைவுப்படுத்தி அதனை வெறும் தேர்ச்சிகளினதும் ஆற்றல்களினதும் திரட்டாக மாற்ற முயலும் தற்போதைய செயற்திட்டத்தில் பாலியல் வன்முறைகள், சிறுபான்மை மற்றும் பெண்கள் புறந்தள்ளப்படுதல் போன்ற பிரச்சினைகள் மேலும் மறைக்கப்பட்டுவிடுகின்றன.

கல்வியை இராணுவமயப்படுத்தல் எனும் விடயத்தை நாம் தேசம், வரலாறு, தற்போதைய சூழ் நிலை போன்றவற்றின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். இராணுவமயமாக்கல் என்பது புதிதாக உருவானதொன்றல்ல. பல்லாண்டு காலமான இன வேறுபாடுகள், யுத்தம் மற்றும் அதன் பின்விளைவுகளால் இராணுவ நிறுவனங்கள் தேசத்தின் ஆட்சி முறையின் மையமாகத் தாபிக்கப்பட்டுள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இராணுவமானது சாதாரண மக்களின் நிலங்களை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாது நிர்வாகம், பொருளாதாரம், ஆட்சியின் உயர் நிலைகள் போன்ற அனைத்திலும் தடம் பதித்தது. யுத்தத்திற்குப் பிற்பட்ட ஆரம்ப வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் குடிமக்கள் நிறுவனங்கள் இராணுவத்தால் மேற்பார்வை செய்யப்பட்டன. முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆளுநர்களாகப் பதவியேற்றனர். இராணுவமானது பொருளாதாரத்தில் ஈட்டுபட்டதோடு முதலாளிகளாகவும் உருமாற ஆரம்பித்தது. குடிமக்கள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இராணுவத்தின் ஈடுபாடு இயல்பாக்கப்பட்டமை பல்கலைக்கழக வட்டாரங்களின் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பைத் “தேசிய பாதுகாப்பு” என்ற போர்வையின் கீழ் கண்டனமின்றி இடம்பெற வழிவகுத்தது. இதற்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை உதாரணமாக முன்வைக்கலாம். http://www.sundayobserver.lk/2019/09/15/opinion/removal-vice-chancellor-university-jaffna-and-politicization-higher-education.

வடக்கிலும் கிழக்கிலுமுள்ள இராணுவங்கள் உண்மையில் நவ தாராளவாத நிறுவனங்களாக இருக்கவில்லை. இருப்பினும் இவை கல்வியில் திட்டமிட்ட கருத்தியல் நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல், இராணுவமயமாக்கல், கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவற்றைத் தோற்றுவிப்பதோடு மேற்பார்வையும் செய்கின்றன. கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டொழுக்க முறைகள் அபத்தமானவையாக இருப்பினும் அவை தொடர்பாக நாம் வியப்படைவதில்லை. கொத்தலாவல பல்கலைக்கழகமானது அப்பட்டமான அடக்குமுறையைப் பிரதிபலிக்கின்றது எனத் தோன்றலாம். எனினும் கொத்தலாவல சட்டமோ, இராணுவமயமாக்கல் என்ற விடயம் இனங்காணப்பட்டு பெயரிடப்படுவதோ இடம்பெறுவதற்கு முன்னரே எமது வாழ்க்கை முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை நாம் இராணுவம் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்.

தனியார்மயமாக்கலின் பின்னுள்ள கருத்தியலும் இராணுவமயமாக்கலும்

இராணுவமயமாக்கலினுள் தனியார்மயமாக்கல் என்பது லாவகமாகப் புகுத்தப்பட்டுள்ளமையைக் கொத்தலாவல சட்டமானது தெளிவாக வெளிப்படுத்துகின்றது. வேலைக்கமர்த்தக்கூடிய தன்மை, உயர் கல்வியில் மென் திறன்கள், செயற்றிறன், கேள்வி ஆகிய ஜனரஞ்சகவாதிகளின் சொல்லாண்மைகளையே இந்தச் சிக்கலான மேலாதிக்க முறை மையமாகக் கொண்டுள்ளது. இத் துறையின் விமர்சன சிந்தனையாளர்கள் பலரும் கூட எமது கல்விமுறையின் இன்றியமையாத கூறுகளைக் கதைக் குறிப்புக்களாக்கும் போக்கில் சிக்கியுள்ளனர்.

தற்போதைய ஆய்வுகளும் கூட ஜனரஞ்சகவாதச் சொல்லாண்மைகளால் வடிவமைக்கப்படுகின்றன. கலைப் பிரிவுக் கல்வியில் சீர்திருத்தங்களைக் கட்டியெழுப்பப் பயன்படுத்திய வலுவற்ற மூலக்கூற்றுக்களை கலைக் கல்வி மீதான தணிக்கை அலுவலக அறிக்கை பறைசாற்றுகின்றது (https://island.lk/myth-of-unemployable-arts-graduates/). “குப்பி டாக்” எழுத்தாளர்கள் பெரிதும் எதிர்க்க முயலும் வேலைக்கமர்த்தக்கூடிய தன்மை எனும் கோட்பாட்டைப் பல இடங்களிலும் காணலாம். கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டுமென்பதைக் கல்வியாளர்களன்றி உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் தீர்மானிப்பது எம்மை மேலும் குழப்பத்திலாழ்த்துகின்றது.

வெளிப்பாடுகள்: மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம்

ஜனநாயக ரீதியானோர் என்ற வகையில் எமது நிலைப்பாடானது முரண்பாடுகள் மிக்க இந்த நிச்சயமற்ற நிலையில் தங்கியுள்ளது. இது எமது குறிக்கோளைப் பிரதிபலிக்கும் ஒரு வினைத்திறனான கூற்றாகும். இந்த நோய்த் தொற்று நிலைமையில் தாபிக்கப்பட்ட அவசர வழக்கங்கள் மத்தியில் ஜனநாயகத்தைக் கோரிப் புதுப்பிக்கப்பட்ட குரல்கள் எழுவதை இது தூண்டுகின்றது. மேலாதிக்கமுறையை விலக்கக் கோரிய கிராம்ஷியைப் (Gramsci) பொறுத்தவரையில் கல்வியை ஜனநாயகப்படுத்துவது ஒரு அரசியல் தேவையாகும். கல்விச் சீர்திருத்தங்கள் பலவற்றினதும் மேலோட்டமான தன்மைக்கான காரணம் கல்வி மீதான தத்துவ மற்றும் அரசியல் ரீதியான ஆராய்ச்சிகளின் பற்றாக்குறையாகும். இன்று எமது ஆரம்ப ஸ்தானமாக இருப்பது இலவசக் கல்வியே என நான் இங்கு வாதாடுகின்றேன். சமூகவியல் மற்றும் அரசியல் பரிசீலனைகள், நவதாராளவாதச் சீர்திருத்தங்களை எதிர்கொள்ளல், பாடத்திட்டம் மற்றும் கல்விமுறை தொடர்பான சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு இது அடிப்படையாக அமைகின்றது. மேலாதிக்கத்திற்கெதிரான இப் போராட்டத்தின் உந்துசக்தியாகவிருப்பது இலவசக் கல்வியாகும்.

கொத்தலாவல சட்டத்திற்கெதிரான FUTAவின் நடவடிக்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6% இற்கான போராட்டம் மற்றும் மில்லியன் கையெழுத்துப் போராட்டம் போன்றவற்றை நினைவுபடுத்துகின்றன. இன்று கல்வி தொடர்பான கேள்விகளோடு ஆசிரியர்களின் சக்திவாய்ந்த கூட்டம் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இவ்வாறான போராட்டங்களை நீண்ட காலம் தொடரமுடியாதிருக்கலாம். போராடுவோர் அகத்தே பிளவுபட்டுக் காணப்படலாம். இருப்பினும் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான களமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இப் போராட்டமானது கல்வி தொடர்பான கலந்துரையாடல்களின் எல்லைகளை விரிவுபடுத்தித் தனியார்மயமாக்கல் முதற்கொண்டு அதிகாரப் படிநிலைகள் வரை பல்வேறுபட்ட குரல்களையும் உள்ளடக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. இங்கு உடைமை, ஓரங்கட்டப்படல், பாடத்திட்டமும் அதனைப் பெறக்கூடிய தன்மையும், மொழிகள், பால் நிலை, பாலியல் வன்முறை, பகிடிவதை போன்றவை பற்றிய கலந்துரையாடல்களுக்குக் களமமைக்கப்பட வேண்டும். அதாவது இலவசக் கல்வி மற்றும் அதனால் உண்டாகும் முன்னோக்கிய நகர்வுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

(எழுத்தாளர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலப் பிரிவில் கடமையாற்றுகின்றார்).

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்