இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம்

கெளஷல்யா ஹேரத்

இலங்கையில் உயர் கல்வி மீதான அண்மைக்கால சமூக-அரசியல் வாதங்கள் சந்தைக்கான மனித மூலதனத்தை வழங்கும் புதிய-தாராளவாத நிறுவனங்களாக எமது பல்கலைக்கழங்கள் நோக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. (உலக) பொருளாதாரத்துக்குப் பங்களிக்ககூடிய, பொருத்தமான ஆற்றல்கள், அறிவு, மற்றும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதை அரசு கட்டாயப்படுத்துகின்றது. இதன் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவுக் கல்வியானது ஓரங்கட்டப்பட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் தொடர்பான STEM கற்கை நெறிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எமது பல்கலைக்கழகங்களும் உயர் கல்விக்கான இவ்வாறானதோர் அணுகுமுறையை எதிர்க் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுள்ளமை வியப்புக்குரியதாகும். தர்க்க ரீதியான கல்விக்கான, ஆர்வமாகச் சிந்திக்ககூடிய, சூழ்நிலைக்கேற்ற அறிவை வழங்கும் நிலையங்களாகப் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கும் வண்ணம் எமது உயர் கல்வியின் நோக்கை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு இன்னும் இருக்கின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

காலனித்துவ அறிவுமுறைகள்

பல்கலைகழகங்களில் காலனித்துவத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் உலகின் வட மற்றும் தென் பிராந்தியங்கள் இரண்டிலும் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் உலகின் தென்பிராந்திய நாடுகளில் இன்றுவரை நிலைத்திருக்கும் கல்வி நிலையங்கள் யாவும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கீழான கலாசாரக் குடியேற்றங்களின் தொடர்களாகவே காணப்படுகின்றன. எட்வார்ட் ஸெட் அவரது ஓரியென்டலிஸம் (கீழை நாட்டு மரபு) என்ற நூலில் எம்மைப் பற்றியும் எமது வராலாறு பற்றியுமான எமது புரிந்துணர்வானது மேலைத்தேயக் கண்ணோட்டத்தினூடாக உருவாக்கப்பட்டவை எனக் குறிப்பிடுகின்றார். அபிவிருத்திக்குப் பிந்திய தத்துவ அறிஞர்களான ஆன்ட்ரே கண்டர் பிராங்க் மற்றும் அர்டூரோ எஸ்கொபார் ஆகியோர் மூன்றாம் உலக நாடுகளின் குன்றிய வளர்ச்சியைத் தோற்றுவித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்நாடுகளையும் அறிவையும் வேறு கோணங்களில் நோக்கும் தகவைப் புறந்தள்ளியுள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இன்று பல பட்டக் கற்கைநெறிகள் பெருநிறுவனத் தொழிலுக்குப் பட்டதாரிகளைப் பழக்கப்படுத்தும் நோக்கில் செய்முறைகளையும் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன. இவை மாணவர்களுக்கு நேரடியான அனுபவங்களைப் பெறும் சந்தர்ப்பத்தை அளிக்கும் அதேசமயம் பெருநிறுவனத்தார் மற்றும் தொழிலதிபர்கள் பட்டதாரிகளிடமிருந்து எதிர்பார்க்கும் தகைமைகள் மற்றும் பாடத்திட்டங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கக் கூடாது. பெருநிறுவனங்கள் அறிவு மற்றும் ஆற்றல்கள் மட்டுமல்லாது புதிய-தாராளவாத வேலைத்தளங்களுக்கேற்ற “மென் திறன்களையும்” எதிர்பார்க்கின்றன. கலாசாரக் காலனித்துவத்தைச் செயற்படுத்தி வந்த பல்கைலைக்கழகங்கள் தற்போது பெருநிறுவனத் துறையினால் காலனித்துவப்படுத்தப்பட்டு அதற்கேற்ற வேலையாட்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றன.

உணர்வுபூர்வமான தர்க்கரீதியான சிந்தனையைத் தூண்டுதல்

குறித்த அறிவையும் உணர்வுகளையும் கொண்ட நபர்கள் ஒன்றுகூடிக் கலந்துரையாடும், அறிவைக் கட்டியெழுப்பும் இடங்களாகப் பல்கலைக்கழகங்கள் காணப்பட வேண்டும். எனினும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இது நடைபெறுவதில்லை. உயர் கல்வி நிலையங்களை வந்தடையும் மாணவர்கள் குறித்த கற்கைநெறி தொடர்பான அறிவு சிறிதளவும் இல்லாமலே வருகிறார்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் பட்டப்படிப்பின் ஒரே குறிக்கோளாக இருப்பது மாணவர்களுக்கு அறிவை மட்டும் வழங்குவதாகும். அனுபவம் ரீதியான அறிவு மேம்பாட்டைத் தேவையற்றது எனப் புறக்கணிப்பது அடக்குமுறையான, கூறப்போனால் ஒரு வன்முறையான போக்கைப் பின்பற்றுகின்றமை எனக் கருதலாம்.

சமூகத்தின் பிரச்சினைகளை ஆராயவும், புரிந்துகொள்ளவும் எமது மாணவர்களைத் தூண்ட வேண்டுமானால் அவர்களின் வரலாறுகள், அனுபவங்கள், மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமானவையாகக் கல்வி முறைகளை மாற்ற வேண்டும். தற்போது எமது பல்கலைக்கழகங்களில் உள்நாட்டுச் சூழ்நிலைக்குப் பொருந்தாத மேற்கத்தியக் கோட்பாடுகளும் தத்துவங்களுமே கற்பிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கான யதார்த்தமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உள்நாட்டு நிலவரங்களையும் சமூகத்தையும் கீழிருந்து மேலாக அணுகும் கல்வி முறைகள் அவசியமானவை. உள்நாட்டு அறிவினைப் புரிந்துகொள்ளவும் அது சார்ந்த தத்துவங்களைக் கட்டியெழுப்பவும் எமது பல்கலைக்கழகங்கள் முயற்சிக்க வேண்டும். தேசியவாதம் போன்ற தீவிரங்களை அடையாமல் காலனித்துவத்தை நீக்கி அறிவு உற்பத்தியைப் பூர்விகமாக்குவது சிக்கலான விடயமாதலால் கலந்துரையாடல்களும் சிந்தனையும் இங்கு அவசியமாகின்றன.

தற்போது எமது பல்கலைக்கழகங்களில் நிலவும் பரீட்சை முறையானது கூட்டு முயற்சிகளையன்றித் தனிநபர் சாதனைகளுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றது. அறிவுற்பத்திக்காகக் கூட்டு அணுகுமுறைகளை நோக்கித் திரும்புவதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை உணர்வுபூர்வமான தர்க்க ரீதியான சிந்தனையாளர்களாக மாற்றலாம். சில உத்தியோகபூர்வமற்ற அமைப்புமுறைகளும், கூட்டு முயற்சிகளும் மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போதும் எமது விரிவுரை மண்டபங்களுக்குள் இவற்றை எவ்வாறு உள்ளடக்கலாம் எனச் சிந்திக்க வேண்டும். இங்கு சில கூட்டு முயற்சிகள் ஓரங்கட்டுபவையாகவும் வன்முறை சார்ந்தவையாகவும் இருக்கக் கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமூக மற்றும் மனித விஞ்ஞானப் பாடங்கள் இவ்வாறானதொரு முயற்சியை முன்னெடுப்பதில் பாரிய பங்கு வகிக்க வேண்டிய தேவை இருப்பினும் கலைப் பிரிவுக் கல்வியானது புறக்கணிக்கப்படுவதும் குறைத்து மதிப்பிடப்படுவதும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கலைப் பிரிவிற்கும் இயற்கை விஞ்ஞானங்களுக்குமிடையிலான படிநிலை வேறுபாடானது ஆர்வமோ குறிக்கோளோ இல்லாத போதும் STEM கல்வியைத் தேர்ந்தெடுக்கவே இளைஞர்களைத் தூண்டுகின்றது.

வேலைக்காகக் கல்வி?

ஆர்வத்தையும் தொழிலையும் வேறுபடுத்துவது பிரிவினையை உண்டாக்கியாளும் முறையொன்றாகும். பொருளாதாரத்துக்கான ஒருவரின் பங்களிப்பு வேலையைப் பொறுத்தவரையில் சுய ஈடுபாடுகள் மற்றும் ஆர்வங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். ஆர்வங்களைப் பின்தொடர்தல் புதிய-தாராளவாதச் சந்தைக்கான எமது பங்களிப்பு முடிந்ததன் பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும். தொழிலையும் ஆர்வத்தையும் பிரிப்பது, தொழிலையும் விடுமுறையையும் பிரித்தது போன்று காலனித்துவ முறைகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

கலைப்பிரிவுக் கல்வியானது “வேலைக்கமர்த்த முடியாத” பட்டதாரிகளை உருவாக்குவதாக இலங்கையில் தாழ்மைப்படுத்தப்படும் அதேவேளை முதலாளித்துவப் பொருளாதாரத்துக்குப் பொருந்தும் பட்டதாரிகளை உருவாக்க STEM கல்வியும் வெறும் தொழில்நுட்பம் ரீதியான ஒரு போக்கிற்கே மாறிவருகின்றது. எமது உயர் கல்வியானது அதன் மனிதநேய மற்றும் தத்துவ ரீதியான பண்புகளை இழப்பதோடு இவ்வதிகாரப் போராட்டமானது கலை மற்றும் STEM கல்விகளை மேலும் பிரிவினைக்குட்படுத்துகின்றது.

STEM கல்வியில் பல்துறைசார் அணுகுமுறையானது அருகிவருவதோடு பாடத்திட்டங்களும் அதிகளவில் தொழில்நுட்பம் சார் அம்சங்களுக்கே முக்கியத்துவமளிக்கின்றன. இங்கு மாணவர்கள் குறித்த ஆற்றல்களில் தேர்ச்சியடைந்த போதும் பரந்த நோக்கில் தர்க்க ரீதியான அணுகுமுறையைக் கையாள இயலாதவர்களாகின்றார்கள். உதாரணமாக இந்த வருடம் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நகரம் மற்றும் நாடு திட்டமிடலில் (கெளரவ) இளங்கலைப் பட்டப்படிப்பில் இணைவதற்கான தகைமை மாற்றப்பட்டுள்ளது. முன்பு எந்தப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்களும் போதியளவு வெட்டுப் புள்ளியிருப்பின் தெரிவுசெய்யப்பட்டமைக்கு மாறாகத் தற்போது விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் மட்டுமே இதற்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள். பல்துறைசார் கற்கை நெறியொன்றை இயற்கை விஞ்ஞான மாணவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்துகின்றமை விஞ்ஞானம் மற்றும் கலைப் பாடங்களுக்கிடையிலான படிநிலை வேறுபாட்டையும் பட்டப்படிப்பின் பிரிவினையையுமே எடுத்துக்காட்டுகின்றது.

உலகெங்கும் பல்துறைசார் அணுகுமுறைகள் பிரபலமடைத்து வருகையில் எமது உயர் கல்வி நிறுவனங்களோ கற்கை நெறிகள் மீது மேலும் கட்டுப்பாடுகளை விதித்து சமூக மற்றும் மனித விஞ்ஞானங்களை உள்ளடக்காதவாறு பிரிவினைகளை உண்டாக்குகின்றன. மேற்கூறிய மொரட்டுவைப் பல்கலைக்கழக உதாராணமானது பலவற்றுள் ஒன்று. பல்கலைக்கழகங்களில் STEM கற்கை நெறிகளில் உண்டாகும் பாடத்திட்ட மறுசீரமைப்புக்களும் இவ்வாறான ஒரு போக்கையே கொண்டுள்ளன. “வேலைக்கமர்த்தக் கூடிய தன்மையை” இலக்காகக் கொண்டு பட்டப்படிப்புகளைச் சந்தைப்படுத்துவது மனித விஞ்ஞானங்களற்ற, தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்ட STEM கல்வியின் அபிவிருத்திக்கு வழிவகுக்கின்றது.

முடிவாக, உலகப் பொருளாதாரத்திற்கு வேலையாட்களை வழங்கப் பயனுடைமைசார் அணுகுமுறைகளைக் கையாளும் அழுத்தங்களோடு எமது பல்கலைக்கழகங்கள் காலனித்துவப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் காலனித்துவத்தை நீக்கவும், தர்க்க ரீதியாக சிந்திக்கும், ஆர்வமுள்ள பட்டதாரிகளை உருவாக்கவும், பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் எமது மாணவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களுக்குப் பொருத்தமானவையாக மறுசீரமைக்கப்படுவதோடு அறிவுற்பத்திச் செயன்முறையானது பூர்விகமாக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுப்பதில் நிச்சயமாகச் சமூக மற்றும் மனித விஞ்ஞானப் பாடங்களுக்குப் பாரிய பங்களிப்புண்டு.

கெளஷல்யா ஹேரத் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து டன்டீ பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்ட மாணவியாவார்.

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்