இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனித மற்றும் சமூக விஞ்ஞானத்தின் குறை மதிப்பு

ஃபர்ஸானா ஹனிஃபா

இலங்கைப் பல்கலைக்கழக வட்டாரமானது கடந்த 2021 ஆம் ஆண்டு மனித மற்றும் சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகக் கல்வியில் 100 ஆண்டுகளை எட்டியிருந்தது. இந் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு கருத்தரங்கு ஒழுங்குசெய்யப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிலைக்குழுத் தலைவர் இதன் ஒருங்கிணைப்பாளராகக் காணப்பட்டதோடு மனித மற்றும் சமூக விஞ்ஞானத் துறையில் பெயர் பெற்ற பிரமுகர்களும் அதில் கலந்து சிறப்பித்திருந்தனர்.  இவை இத்துறையானது இலங்கையில் இப்போதும் உயிர்ப்புடன் காணப்படுவதைச் சுட்டுகின்றன.

இருப்பினும் பல்கலைக்கழக மானியங்கள் குழு மட்டத்தில் தர உறுதிப்படுத்தல் செயன்முறையில் இத்துறை சார் அறிவும் அது வழங்கக்கூடிய பங்களிப்பும் அங்கீகரிக்கப்படுவதில்லை. தர உறுதிப்படுத்தல் கட்டமைப்பின் மட்ட விவரிப்புகளை மேலோட்டமாக நோக்கும்போதே அதன் உருவாக்கத்தில் மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டங்களின் அற்ப சொற்ப உள்ளீட்டைக் காணலாம். எமது பல்கலைக்கழகங்களில் இத்துறையை மேம்படுத்துவதற்காக நிலைக் குழு தற்போது நடைமுறைகளை முன்னெடுத்துள்ள விடயம் குறிப்பிடத்தக்கது. எனினும் தற்சமயம் தர உத்தரவாததைப் பொறுத்த வரையில் இத்துறைசார் கல்வி மீது காட்டப்படும் அலட்சியத்தை எடுத்துக்காட்டும் அனுபவத்தை இங்கு கலந்துரையாட விரும்புகின்றேன்.

பல்கலைக்கழக மேம்பாட்டுச் செயற்பாடுகளில் மிகவும் சமீபித்திய சேர்க்கையாக உலக வங்கியால் நிதியுதவி பெறும் AHEAD (அஹெட்) செயற்றிட்டத்தைக் கூறலாம். உயர் கல்வி சார்பாக அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்துக் கொள்கையமைப்புகளுக்கும் “வேலைக்கமர்த்தும் தகவு” என்ற சர்ச்சைக்குரிய விடயம் அடித்தளமாக அமைந்துள்ளது. இவ்வஹெட் (AHEAD) செயற்றிட்டத்தின் உந்துசக்தியும் இதுவே. “இலங்கைத் தர உத்தரவாதக் கட்டமைப்பைப் (SLQF) பயன்படுத்தி பல்கலைக்கழகக் கல்வியின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளுக்குள் வேலைவாய்ப்புத் திறன்களை எவ்வாறு உள்ளடக்குவது” என்பது நாம் சென்ற பட்டறையொன்றின் தலைப்பாகக் காணப்பட்டது. இவ்வாறான பட்டறைகள் எமது பல்கலைக்கழகங்கள் தோறும் காணப்படுவதோடு, SLQF செயன்முறையில் பலகாலம் ஈடுபட்டுள்ள கல்வியாளர்களால் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

எமது பல்கலைக்கழகத்தை முறைப்படுத்தும் செயன்முறையின் ஒரு கூறாக இப்பட்டறை காணப்பட்டது. இம் முறைப்படுத்தலின் கீழ் அடைய எதிர்பார்க்கும் தேர்ச்சி மட்டங்களை ஒரேவிதமான படிவங்களில் பட்டியலிடக் கோரப்படுகின்றோம். பாடத்தைப் பொறுத்த வரையில் எவ்வாறு இத் தேர்ச்சி மட்டங்களை வகுப்பது என்பது பற்றியே இப்பட்டறை அமைந்திருந்தது. 

விளைவு- அடிப்படையிலான கல்வி என்றால் என்ன என்பதை விளக்குவதற்குப் பட்டறையின் முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. நாம் எதிர்பார்க்கும் விளைவானது எமது கல்வி நடவடிக்கைகளின் ஆரம்பத்திலேயே உள்ளடக்கப்பட வேண்டும். அல்லாவிடில் அக் கற்கை நெறியின் விளைபொருள் ஏமாற்றத்தையே அளிக்கும். SLQF இன் படி நாம் கற்பனை செய்யும் இறுதி விளைபொருள் சமூகத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு “நல்ல பிரஜை” ஆகும். அதன் பின்னர் ஒரு கட்டடம் அல்லது ஒரு வாகனத்தின் தயாரிப்பைச் சிந்திதுப் பார்க்குமாறு கேட்கப்பட்டோம். இவ்வாறான தயாரிப்பிற்குத் திட்டங்களும் வரைபடங்களும் அவசியமல்லவா? ஒரு “மனித தயாரிப்பை” உருவாக்கும் போதும் அச் செயன்முறைக்கான திட்டமிடல் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவனாதலால் “மனித தயாரிப்பு” என்பது சிக்கலான ஒரு விடயம் என எம்மிடம் கூறினர். ஒவ்வொரு தனி நபரும் வேறுபட்டவர் என்பதனால் இத் தயாரிப்புச் செயன்முறை மீதான எமது கட்டுப்பாடும் மட்டுப்படுத்தப்பட்டே காணப்படும். எவ்வளவு கடினமாகவிருப்பினும், இத் தயாரிப்புச் செயன்முறையை நாம் முன்கூட்டியே திட்டமிடும் போது, எமது “தயாரிப்புகளில்” சில பரந்த ஒற்றுமைகளையாவது காண முடியும் எனவும் கூறப்பட்டது.

மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கை நெறிகளில், பிரபல பேச்சு வழக்குகளில் “சாதாரணம்” என ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிராகரிக்க எமது மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க முயல்கின்றோம். எனினும் இச்செயற்றிட்டங்களோ விற்பனைப் பண்டங்களையும் சந்தைப்படுத்தலையும் சுட்டும் பதங்களை மாணவர்கள் மீது உபயோகிக்கின்றன. மாணவர்களை நாம் எச்சரிப்பதும் இவ்வாறான நவ தாரளவாத சந்தைப்படுத்தல் கோஷ்டிகளிடம் சிக்காமலிருப்பதற்கே.  எமது மாணவர்களோடு நாம் நல்ல உறவுகளைத் தாபித்துக் கொள்கின்றோம், அவர்களின் திறன்களையும் திறமைகளையும் வளர்க்க எத்தனிக்கின்றோம். மாணவர்களை நாம் இவ்வாறு பார்வையிடாது, வெறுமனே தனித்துவமான வரலாறுகளையும், ஆளுமைகளையும் கொண்ட சிக்கலான தனிநபர்கள் எனக் கருதுவது அவர்களது மனிதத் தன்மையை நீக்குவதாக அமையுமல்லவா? இவ்வாறான மனிதத் தன்மையை நீக்கும், முதலாளித்துவக் கட்டமைப்பின் கூறுகளாக மாணவர்களை நோக்கும் இம் மொழி நடையின் பாவனை இறுதியில் மனிதத்தன்மையற்ற விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

இப் பயிற்சிப் பட்டறை தொடர்பான எனது கருத்து இதுவே. கற்கைநெறிச் சுருக்கங்களையோ, பரந்த தேர்ச்சி மட்டங்களையோ வடிவமைப்பதில் எந்தவொரு பாதகமும் இல்லை. முன்கூட்டிய திட்டமிடல் இருப்பது வினைத்திறனை அதிகரிக்கும் என்பதிலும் ஐயமில்லை. எனினும் மொழி தொடர்பான எந்தவொரு அக்கறையும் காட்டப்படாமை, மனித மற்றும் சமூக விஞ்ஞான ரீதியான கண்ணோட்டம் புறக்கணிக்கப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றது. விளைவு-அடிப்படையான கல்வியை மாணவர்களின் வளர்ச்சிக்குத் அத்தியாவசியமான, அவர்களது ஆகத்திறன் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு செயன்முறையாக அவர்கள் விவரித்திருக்கலாம். முறையான வழிப்படுத்தலும் கட்டமைப்பும் ஆக்கத்திறன் வெளிப்படுவதற்கு அடிப்படையானவை. இவ்வாறானதோர் மொழிநடை கையாளப்படாமை, தர உத்தரவாதத்தின் குறிக்கோளை வகுப்பதில் கற்பனைத்திறனின் பற்றாக்குறையையும், மனித, சமூக விஞ்ஞானம் தொடர்பான அலட்சியத்தையும் சுட்டுகின்றது.  SLQF கட்டமைப்பு மற்றும் இப்பட்டறையின் குறிக்கோளானது முன்பு கூறியவாறு “வேலைவாய்ப்புத் திறன்களை” உள்ளடக்குவதாகும். எனினும் “வேலைவாய்ப்புத் திறன்கள்” என்பதன் வரைவிலக்கணம் எவ்வளவு குறுகியது என்றும் எவ்வளவு தவறானதென்றும் எமது கட்டுரைத்தொடரில் மீண்டும் மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு பொருளொன்றின் உற்பத்திச் செயன்முறையை மாணவர்களின் கல்விக்கு ஒப்பிட்டமை கலந்துகொண்டோரில் பாதிப்பேருக்குக் கசப்பாயிருந்திருக்கும். தற்போதைய போக்கிற்கேற்ப சிறப்பாகச் செயற்பட எதிர்பார்க்கும் மற்றைய பாதி, இவ் வியாபார மொழிநடையைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தமை பிரச்சனைக்குரியது. இவ்விரு தரப்புகளையும் சார்ந்த இளம் மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியாளர்கள் அவர்களது ஒழுக்காற்றுப் பயிற்சியை மதிக்கும் மற்றும் அணுகும் முறைகளை இப் பட்டறையானது நிரந்தரமாகப் பாதித்துள்ளது.

மனித மற்றும் சமூக விஞ்ஞான அறிவு தொடர்பாக இப் பட்டறையை நடாத்திய பயிற்சியாளரின் மதிப்பீட்டை அடுத்து நோக்குவோம். இங்கு அவர் எமக்குத் தேர்ச்சி மட்டங்களை வகுக்கும் முறையைக் கற்பித்ததை உதாரணமாகக் கொள்கின்றேன். கற்றலின் வெவ்வேறு மட்டங்களுக்கு ஏற்புடைய செயப்படு பொருட்களைப் பயன்படுத்துமாறும், அவற்றுக்குப் பொருத்தமான உள்ளடக்கத்தைப் பின்பு சேர்க்குமாறும் நாம் வழிகாட்டப்பட்டோம். இதனை விளக்குவதற்காக மனித மற்றும் சமூக விஞ்ஞானத் துறையிலுள்ள எமக்குப் பரிட்சயமான ஒரு விடயம் என அவர் கருதியதை உதாரணமாக முன்வைத்தார். சுகாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சமூகக் காரணிகள் அவ்வுதாரணமாக இருந்தது. இவ்விடயத்தைப் பொருளியல், சமூகவியல், உளவியல் மற்றும் வேறு பல துறை சார்ந்தோரும் அறிவர் எனவும் எம்மிடம் கூறப்பட்டது.

சுகாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சமூகக் காரணிகள் என்ற பாடத்திற்கு எவ்வாறு எதிர்பார்க்கப்படும் தேர்ச்சி மட்டங்களை வகுப்பது என்பது பற்றிய கலந்துரையாடலைப் பின்வருமாறு விவரிக்கின்றேன்.

“குறிப்பிடுக” என்ற செயப்படுபொருளைக் கொண்டு தேர்ச்சி மட்டத்தை வகுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதாவது “சுகாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும்  பொதுவான சமூகக் காரணிகளைக் குறிப்பிடுக” என்பது முதலாவது தேர்ச்சி மட்டமாகும். ஏனெனில் இங்கு “ஒரு நபர் எவ்வாறான காரணிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என அறிய முன்பே இவற்றை மாணவர்கள் தெரிந்திருப்பது அவசியம்” எனவும் கூறப்பட்டது.

இரண்டாவது தேர்ச்சி மட்டம் மேலும் குழப்பமாகவிருந்தது. இங்கு “விளக்குக” என்ற செயப்படுபொருளைப் பயன்படுத்துமாறும், இதற்கு மாணவர்களின் அறிவாற்றல் முன்பை விடச் சற்று அதிகமாகத் தேவைப்படும் எனவும் கூறப்பட்டது. அடுத்து இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் விளக்க வேண்டியது எதனை என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. “அதீதமாகப் புகைபிடிக்கும் ஒருவரின் சுகாதாரத்தைப் பாதிக்கும் சமூகக் காரணிகள் எவை? சில சமயம் அது நண்பர் அல்லது சமுதாயக் குழுக்களால் ஏற்படும் அழுத்தமாக இருக்கலாம் அல்லது அவரது தொழிலாக இருக்கலாம்- சில தொழில்களில் இலவச சிகரெட்டுகள் வழங்கப்படுவதுண்டு.”

அடுத்து சமூகக் காரணிகளைக் கண்டறிவதற்காக ஒரு சுகாதாரப் பிரச்சினையை ஆராயுமாறும் அக்காரணிகளை மாற்றியமைப்பதற்கான யுத்திகளை வடிவமைக்குமாறும் மாணவர்களைப் பணிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. சுகாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சமூகக் காரணிகள் என்றால் என்னவென்றே அப் பயிற்றுவிப்பாளர் அறிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள எம்மில் சிலருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.  அவை மக்கள் வாழும் சமமற்ற சமூகச் சூழ்நிலைகளைப் பாதிக்கும் பாரிய சமூகக் காரணிகளேயன்றி அப்பயிற்றுனர் கருதுவது போன்று தனி ஒரு மனிதனின் சமூக வாழ்க்கைக்கோ, புழங்கும் வட்டாரத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்டவையன்று.

வலைத்தளத்தில் எளிதில் பெறக்கூடிய, சற்று விமர்சிக்கவும் படும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு:

சுகாதாரத்தின் மீது செவாக்குச் செலுத்தும் காரணிகள் என்பது மக்கள் பிறக்கும், வளரும், பணிபுரியும், வாழும், வயோதிபத்தை அடையும் சூழ்நிலைகளும், தினசரி வாழ்க்கையை வடிவமைக்கும் சக்திகளும் அமைப்புமுறைகளுமாகும். இவற்றுள் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அமைப்புகள், அபிவிருத்தித் திட்டங்கள், சமூக விதிமுறைகள், சமூகக் கொள்கைகள் மற்றும் அரசியல் அமைப்புகள் போன்றவை அடங்கும்.

சுகாதாரத்தின் மீது செவாக்குச் செலுத்தும் காரணிகளை உதாரணமாகக் கொள்ள முன் அவர் அதனைப் பற்றி அறிந்து கொள்ள எதுவித முயற்சியும் செய்திருக்கவில்லை.

இச் சம்பவத்தை இங்கு கலந்துரையாடியது அப் பயிற்றுனரை அவமதிப்பதற்காகவல்ல. மாறாக எமது பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களையும், கல்விக் கொள்கைத் திட்டங்களையும் பாதிக்கும் மேலும் பாரதூரமானதோர் பிரச்சினையைச் சுட்டிக்காட்டுவதே எனது நோக்கமாகும். சுகாதாரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சமூகக் காரணிகளை உதாரணமாகக் கொள்ள முன்னர் அவர் அதனைப் புரிந்து கொள்ள எத்தனிக்காமை, மனித மற்றும் சமூக விஞ்ஞானம் சார் அறிவுக்கு நிபுணத்துவம் தேவையில்லை என்ற ஒரு மனப்பாங்கினால் உண்டாகியிருக்கலாம். பல்வேறு வடிவங்களிலுமான சமத்துவமின்மை, ஓரங்கட்டல், அவற்றின் வரலாறுகள், நிலவுகைகள், தாக்கங்கள் என்பனவற்றை அவர்களின் சுய சூழ்நிலைகளுக்கேற்ப மாணவர்களுக்கு எடுத்துக்காட்ட நாம் வருடங்களாகச் சிந்திய வியர்வை அப் பயிற்றுனரின் மனப்பாங்கினால் தகர்க்கப்படுகின்றது.

இச் சம்பவமானது மனித மற்றும் சமூக விஞ்ஞானத் துறைசார் ஆசிரியர்களதும், ஆய்வாளர்களதும் தினசரி அனுபவத்தின் பிரதிபலிப்பாக முன்வைக்கப்படுகின்றது- அதாவது எமது அறிவு ரீதியான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது.  கலைப் பட்டதாரிகள் மீதான தாழ்ந்த மதிப்பு தற்போது பல்கலைக்கழகங்களில் பரந்து காணப்படும் “வேலைக்கமர்த்தும் தகவு” என்ற கொள்கையாக மாறியுள்ளது. மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியாளர்களும் இக் கொள்கைக்கு விலக்கானவர்களல்ல. இவ்வாறான கொள்கைகள் இத்துறையின் கண்ணோட்டங்களைத் தாழ்வு படுத்துவதோடு அதன் முழுமையையும் பலவீனப்படுத்துகின்றன.