இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி

அருணி சமரகோன்

அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச்
சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்
சமூகவியல் விஞ்ஞானத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவர்கள் பெண்ணியம் தொடர்பான முன்கூட்டிய அறிவைக் கொண்டிருக்கவில்லை
போலும். நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம், இயற்கை விஞ்ஞானத்தைச் சேர்ந்த பலர்
பெண்ணியத்தை ஆண்களுக்கெதிரான ஒரு அரசியல் தத்துவமாகக் கருதியமையாகும். அச் சமயம்
அவர்களது முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவ்வறிஞர்கள் இவ்வாறு ஏன்
கருதியிருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்கத் தூண்டியது அக்கலந்துரையாடல்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியம் கற்பித்தல் பற்றிய எனது முன்னைய குப்பி
கட்டுரையில், வகுப்பறைகளில் பெண்ணியத்தைக் கற்றல்-கற்பித்தல் மற்றும் நாளாந்த வாழ்வில்
அதனைப் பின்பற்றுவதிலுள்ள பிரச்சினைகளைக் கலந்துரையாடியிருந்தேன். இப் பகுதியை அக்
கட்டுரையின் தொடர் விவாதமாக முன்னெடுக்க விரும்புகின்றேன்.
எனது கடந்த கட்டுரையில் பெண்ணியத்தின் அடிப்படைக் கருத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
இங்கு அதனைச் சற்று திசை திருப்பி, பெண்ணியமானது ஆண்களுக்கெதிரானதல்ல என்பதை
விளக்க முனைகின்றேன். பெல் ஹுக்ஸ் (bell hooks) என்ற அமெரிக்க எழுத்தாளர் தனது
பெயரின் முதலெழுத்துகளை வழமையான ஆங்கில இலக்கணத்திற்கேற்ப பேரெழுத்துகளாக
உபயோகிப்பதில்லை. இவர் இதனை முதலாளித்துவ அமைப்புகளில் அநீதி மற்றும்
பாரபட்சத்துக்கெதிரானதும், நீதி மற்றும் சமத்துவத்துக்குச் சார்பானதுமான அடையாளமாகக்
கொள்கின்றார். “அனைவருக்குமான பெண்ணியம்: உணர்வுபூர்வமான அரசியல் (2000)”
(Feminism for Everybody: Passionate Politics) என்ற அவரது நூலில் பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளார் ஹுக். “பெண்ணியம் என்பது பாலினவாதம், அதனடிப்படையிலான
சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளியிடும் இயக்கமாகும்.
இது பெண்ணியத்துகான பொது வரைவிலக்கணமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் என
அப்போது நம்பியிருந்தேன். இவ் வரைவிலக்கணத்தை நான் விரும்பியதன் காரணம், அது
ஆண்களை எதிரிகளாகச் சித்தரிக்காமையாகும்” (பக்கம்01). ஹுக்ஸின் இக்கருத்தை, சோசலிச
பெண்ணியவாதியான ஷீலா ரோபொதம் (Sheila Rowbotham) எழுதிய “பெண்கள், எதிர்ப்பு,
புரட்சி” (Women, Resistance, and Revolution) (1972) என்ற நூல் மேலும் வலியுறுத்துகின்றது.
பெண்ணியமானது இருபாலாரையும் ஊக்குவிக்கும், ஒரு புதிய ஆணையும் பெண்ணையும்
உருவாக்கக்கூடிய அரசியல் திட்டமென ரோபொதம் கருதுகின்றார். பெண்களைப்
“பாதிக்கப்படுபவர்களாகவும்” ஆண்களை “எதிரிகளாகவும்” சித்தரிக்கும் இருமமான அரசியல்
கருத்துக்கு ஹுக்ஸ், ரோபொதம் ஆகிய இருவரும் இணங்காமை குறிப்பிடத்தக்கது.
“புதிய ஆண்”
புதிய ஆண் என்ற அரசியல் எண்ணப்போக்கை உருவாக்கியவர் ரோபொதம் ஆவார்.
பிரான்ஸியப் புரட்சியின் பின்னரான அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைத் தர்க்க

ரீதியாக ஆராய்ந்த அவர், இவ்வரசியலானது, புரட்சியின் போதான பெண்கள் குரல்களை
எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்ற கேள்வியை எழுப்பினார். பிரான்ஸியப்
புரட்சியின் முடிவில், புரட்சி அரசியலானது ஆணாதிக்க அரசியலாக மாறுகையில், பெண்கள்
மீண்டும் இரண்டாம் நிலையில் அடிபணியும் பாலினத்தவர்களாக்கப்பட்டனர் என்பது அவரது
கருத்தாகும். எனவே அவர் “புதிய ஆண்” என்ற எண்ணக்கருவை முன்வைக்கின்றார். இங்கு “புதிய
ஆண்” என்பவர், மக்கள் சுரண்டப்படுவதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக சமூக வர்க்கம்
மற்றும் பாலினம் சார் அடக்குமுறைகளை இனங்காணும் ஒரு நபராவார். அதோடு அவர் வர்க்கப்
பாகுபாடு மற்றும் பாலினவாதத்தை ஒருங்கே ஒழிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்தவராகவும்
விளங்குகின்றார். இங்கு நான் ஹுக்ஸ் மற்றும் ரோபொதம் ஆகியோரின் பரிந்துரைகளைக்
கொண்டு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியம் கற்பிப்பதற்கும் “புதிய ஆண்கள்”
அவசியம் என்பதை முன்மொழிகின்றேன்.
இலங்கையில் எங்காவது இப் புதிய ஆணைக் காணக்கூடியதாகவுள்ளதா? உதாரணமாக
அண்மையில் இடம்பெற்ற கோடா கோ ஹோம் (Gota-Go-Home-2022) போராட்டத்தை
எடுத்துக்கொள்வோம். போராட்டத்தின் ஆரம்பத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தின்
பிரதிநிதிகளாக ஆண்கள் பெண்கள் என இரு பாலாரையும் காணக்கூடியதாகவிருந்தது.
குழந்தையை ஒரு கையிலும், போராட்ட வாசகங்கள் கொண்ட அட்டையை மறு கையிலும் ஏந்திய
ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டமை இதற்கோர்
எடுத்துக்காட்டாகும். பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண் மாணவர்கள் அட்டைகளை
ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தின் முன்னணியில் காணப்பட்டனர்.
இப் போரட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது, எனக்கு பிரான்ஸியப் புரட்சியை
நினைவூட்டியது.
“மேலும் இரத்தம் சிந்தப்படுவதை நிறுத்த வேர்ஸேல்ஸை நோக்கிப் பெண்கள் அணிவகுத்துச்
செல்வதற்கான யோசனை 1871 ஏப்ரலில் பரவி வந்தது. கடிகாரம் செய்பவர் ஒருவரின் மகளான
பியட்ரிஸ் எக்ஸ்கொஃபோன் (Beatrice Excoffon) என்ற பெண் அக்காலப்பகுதியில்
அச்சுப்பொறிகளுக்கு அக்குக்கோர்ப்பவரொருவருடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் தனது
தாயிடம் விடைபெற்று, பிள்ளைகளை முத்தமிட்டு, பிளேஸ் டி லா கொன்கோர்ட் (Place de la
Concorde) என்ற சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றார். அங்கு
எவரும் அவ்வூர்வலத்தின் குறிக்கோளையோ, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையோ
சரியாக அறிந்திருக்கவில்லை. எனினும் இங்கு பொருளாதாரம் ரீதியாக மட்டுமன்றி அரசியல்
ரீதியான செயல்நோக்கங்கள் அம்மக்களிடையே காணப்பட்டன” (ரோபொதம், 1947, பக்கம்.104).
இதனைப் போன்றே இலங்கையின் வீதிகளில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்திலும்
அரசியல் மற்றும் பொருளாதார செயல்நோக்கங்கள் காணப்பட்டன. இங்கு ஒரு குறிப்பிட்ட
திட்டம் இல்லாவிடினும், சர்வாதிகார ஆட்சியை ஒழித்தல், ஜனநாயகத்தை நிலைநாட்டல் ஆகிய
பொதுக் குறிகோள்கள் மக்களின் கோஷங்களில் புலப்பட்டன. இங்கு எனது அடிப்படைக்
கேள்வியாகவிருப்பது, இவ்வாறு வீதிகளில் கோஷமிட்ட பெண்கள் தற்போது எங்கே என்பதாகும்.
போராட்டத்தின் முடிவில் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுக்கிடையான பேச்சுவார்த்தையில்
இவர்களில் எத்தனை பேர் கலந்துகொண்டனர்? இவர்களில் எத்தனை பேருக்குத் தமது அரசியல்
நோக்கங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அமைந்தது? ஆணாதிக்க அரசியலைச் சார்ந்த
“பழைய ஆண்களால்” இப் புரட்சிகரமான பெண்கள் அவர்களது தனிப்பட்ட மூலைகளுக்குத்

தள்ளப்பட்டனர் என்பது எனது வாதமாகும். இப் “பழைய ஆண்களின்” அரசியல் புரட்சிக்கான
அமைப்புகள், பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் அதே சமயம், பாலினம் ரீதியான
ஆணாதிக்கத்தைப் பேணுவதில் சிரத்தையாகவிருந்தன. ஆகவே பெண்ணியத்தை அனைவருக்கும்
பொதுவான ஒரு அரசியல் எண்ணக்கருவாகப் பிரயோகிக்க வேண்டுமெனில், முதலில் “புதிய
ஆண்கள்” உருவாக்கப்படல் அவசியம்.
“புதிய பெண்”
கல்வியியலாளர்கள் மத்தியிலான பெண்ணியம் சார் கலந்துரையாடல்களின்
குறிக்கோளாகவிருப்பது, பெண்களின் அரசியல் அறிவை மேம்படுத்தி, அவர்களைப் “புதிய
பெண்களாக” மாற ஊக்குவிப்பதாகும். ஹுக்ஸ் மற்றும் ரோபொதம் ஆகியோர் ஆணாதிக்க
அரசியலை எதிர்க்கும் ஒருவராகவே இப் “புதிய பெண்ணிற்கு” அர்த்தம் கற்பிக்கின்றனர். இன்று
சகல துறைகளிலும் இப் புதிய பெண்ணைக் காணக்கூடியதாகவுள்ளது. இப் பெண்கள் தமது
அடையாளங்களைத் தத்தமது துறைகளில் நிலைநாட்டப் போராடுகின்றனர். உதாரணமாகத்
தற்சமயம் ஈரானில் இடம்பெற்று வரும் போரட்டத்தின் கருப்பொருளாகவிருப்பது, பெண்களைச்
சக மனிதர்களாக அடையாளப்படுத்துவதாகும். அப் பெண்கள் அவர்களது முக்காடுகளைக்
கழற்றியெறிந்தமை, அவர்களையும் மனிதர்களாக அங்கீகரிப்பதற்கான ஓர் வேண்டுகோள் என
நான் கருதுகின்றேன். இருப்பினும் இப் புதிய பெண்ணை உருவாக்குவது சிக்கலானதும்,
சர்ச்சைக்குரியதுமான அரசியல் செயன்முறையாகும். ஆகவே பல்கலைக்கழகங்களின் கற்றல்-
கற்பித்தல் நடவடிக்கைகளூடாக இப் புதிய ஆணையும் பெண்ணையும் எவ்வாறு உருவாக்கலாம்?
பெண்ணியம் கற்பித்தலின் தேர்ச்சி மட்டங்கள்
பெண்ணியம் சார் கற்பித்தலின் முக்கிய தேர்ச்சி மட்டமாகவிருப்பது சமூகத்தின் யதார்த்தங்களைத்
தர்க்க ரீதியாக ஆராய்வதாகும். சமூகத்தின் வரைமுறைகள், ஆதிக்கப் படிநிலைகள், மனித
உடலை ஒரு பொருளாகப் பார்வையிடுதல் போன்றவை எமது சமூகத்தின் யதார்த்தங்களாகக்
காணப்படுகின்றன. பெண்ணியக்கல்வியானது, இந்த யதார்த்தத்தைத் தர்க்கித்து, எதிர்க்கேள்வி
கேட்பதற்கு இருபாலாரையும் ஊக்குவிக்க வேண்டும்.
பெண்ணியமானது, அவ்வாறெனின், சமூக மாற்றத்துகான இயக்கமாக அமைகின்றது. பழைய
கல்வி முறைகள் எழுத்தாக்கங்களையும், கோட்பாடுகளையும் ஆராய்வதை முதன்மையாகக்
கொண்டிருந்தன. அங்கு செயல்முறை ரீதியான கல்விக்கு இடமளிக்கப்படவில்லை. செயல்முறை
ரீதியான கற்றல்-கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தியது பெண்ணியம் எனலாம். “புதிய
நூற்றாண்டுக்கான கேள்விகள்: பெண்கள் கல்வி மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் (2007)
(Questions for a New Century: Women’s Studies and Integrative Learning) என்ற தனது நூலில்,
ஏமி கே லெவின் (Amy K Levin) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “பெண்ணியக் கற்கை நெறிகள்
அறிவு மற்றும் ஆற்றல் ரீதியான தேர்ச்சிகளை அடைய முயற்சிப்பதோடு, செயல்முறையானது
இந் நெறியின் தேவையாகக் காணப்படுகின்றது” (பக்கம்.18). பெண்ணியத்தின் செயல்முறையின்
ஒரு பகுதியாக அறிவையும், சுய அனுபவத்தையும் தொடர்புபடுத்துவது அமைகின்றது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் செயல்முறை ரீதியான கல்வியானது இன்னும் முற்றுமுழுதாக
அங்கீகரிக்கப்படவில்லை. எனது அனுபவத்தில். விரிவுரையாளர்கள் பலர் கல்விக்கும்,
செயல்முறைக்குமிடையே ஒரு படிநிலைப் பாகுபாட்டைக் கொண்டுள்ளனர். பிரபல

கல்வியியலாளர்களின் கோட்பாட்டு ரீதியான வாதங்களைப் பொது மக்கள் கிரகிக்கக்
கடினப்படும் கல்வி ரீதியான மொழிநடையில் அவர்கள் முன்வைக்கின்றார்கள். செயல்முறை
ரீதியான கல்வியில் இக்கோட்பாடுகள் எளிமையான மொழிநடையில் முன்வைக்கப்படுவதோடு,
நாளாந்த வாழ்க்கை அனுபவங்களும் அவற்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. இது பொது
மக்களை உள்வாங்கி அவர்களின் ஈடுபாட்டினை மேம்படுத்துவதாக அமைகின்றது.
முடிவாக, பெண்ணியத்தின் குறிக்கோளானது, புதிய ஆணையும், பெண்ணையும்
உருவாக்குவதேயன்றி, ஆண்களை எதிர்ப்பதன்று. இலங்கையின் உயர் கல்வி நிறுவனங்களில்
பெண்ணியம் கற்பிப்பதன் மூலம், “புதிய ஆண்” என்ற எண்ணக்கருவானது மேம்படுத்தப்பட்டு,
விரிவாக்கப்பட வேண்டும். கல்வியின் அடிப்படை நோக்கமான சமூக மாற்றத்துக்குத் தேவையான
சென்முறை சார் கல்வியில் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குப்பி
அங்கத்தவர்கள் கல்வியை அணுகுவதற்காக முன்வைக்கும் புதிய வழிமுறைகளில், பெண்ணியமும்
அடங்குவது குறிப்பிடத்தக்கது.