இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்

ஹஸினி லேகம்வாசம்

இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானது. இதனடிப்படையில் பட்டதாரி சுயவிவரம், பாடநெறியின் தேர்ச்சி மட்டங்கள், பாடத்திட்டத்தின் தேர்ச்சி மட்டங்கள் போன்றவற்றிற்கேற்ப ஒழுங்கு செய்யப்பட்ட நுணுக்கமான கற்பித்தல் திட்டத்தை ஒவ்வொரு வகுப்பறைப் பாடத்திற்கும் தயாரிக்குமாறு ஆசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

அரச பல்கலைக்கழகங்களில் இவ்வாறான படிவங்களூடாக கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டும், பாகுபடுத்தப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இக் கட்டுரையில் இவற்றால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மற்றும் இவை சுட்டி நிற்கும் போக்குகள் பற்றிக் கலந்துரையாடப்படுகின்றது.

படிவங்களும் அதன் சிக்கல்களும்

“தர உத்தரவாதத்தை” உறுதி செய்யும் பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் கற்கை நெறிகளுக்கு இலக்கங்களையும் தர வரிசைகளையும் கொடுத்து அவற்றை ஒன்றுடனொன்று ஒப்பிட எத்தனிக்கின்றன. பல்வேறுபட்ட பாட உள்ளடக்கங்கள் மற்றும் செயன்முறைகளைக் கொண்ட கற்கை நெறிகளை மேலோட்டமான பொது அளவுகோல்களைக் கொண்டு ஒப்பிடுவது உலகளாவிய ரீதியில் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாகும். இவ் விமர்சனத்துக்கான காரணங்களிலொன்று “தரம்” என்பது அளவீடுகள் மற்றும் தணிக்கைகளால் அளவிடப்படக்கூடியது என்ற தவறான கருத்தாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வகுப்பறைப் பாடத்தினையும் கூறுபடுத்துவது அப்பாடங்கள் கொண்டிருக்கக்கூடிய ஆக்கபூர்வமான தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதிக்கின்றது. பாடவிதானத்தின் ஒவ்வொரு தலைப்பும் நுணுக்கமாகத் திட்டமிடப்படும் போது கற்றல் பெறுபேறுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றன. இங்கு கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளின் போது அதன் பெறுபேறுகள் ஒருங்கே இயற்கையாகப் பரிணமிப்பது முடக்கப்படுகின்றது. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கற்றல் செயற்பாடுகளால் குறிப்பாகக் கலைப் பீடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன்போது உண்மையில் எம்மில் எத்தனை பேர் எமது வகுப்பறைகளில் ஜனநாயகமாக நடந்து கொள்கின்றோம் என்ற கேள்வியும் எழுகின்றது. எனினும் ஜனநாயகாமான ஒரு வகுப்பறைச் சூழலை மெய்யாக நாடும் ஒரு ஆசானை இவ்வாறான படிவங்களும் அவற்றின் வரையறைகளும் முடக்கித் திணறச் செய்கின்றன.

எம்மில் பெரும்பான்மையானோர் எமது வகுப்பறைகளில் கட்டுப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதை ஒப்புக்கொள்கின்றோம். இருப்பினும் இவ்வாறான படிவங்கள் மூலம் மாணவர்கள் மீதான கட்டுப்பாட்டினை நிறுவனமயமாக்கி அதனை மேலும் தீவிரமாக்குவதை அது நியாயப்படுத்தாது. பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளும் விடயத்தையன்றி, சுதந்திரமான கருத்தியலையல்லவா நாம் பின்பற்ற முன்வர வேண்டும்? ஆசிரியர்களின் போதனைகளுக்கு அப்பால் சிந்திக்கும் மாணவர்களுக்கும், அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான, ஜனநாயகமான கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை விரும்பும் ஆசிரியர்களுக்கும் ஏற்ற ஒரு வகுப்பறைச் சூழல் வழங்கப்பட வேண்டும்.

அடக்குமுறையான சட்டதிட்டங்களுக்கு அடிபணியும் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் பெருநிறுவனமயம் சார்பான ஒரு போக்கைச் சுட்டி நிற்கின்றன. பொதுசன நிறுவனமொன்றைக் காலப்போக்கில் தனியார்மயமாக்கும் நோக்குடன் வியாபார நிறுவனங்களைப் போன்று மீள்கட்டமைத்தலே பெருநிறுவனமயமாக்கம் எனலாம். அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் இந்த மீள்கட்டமைப்பானது “மாணவர் மையமான கற்றல்” மற்றும் “கலந்துரையடல்கள் மிக்க வகுப்பறை” போன்ற அணுகுமுறைகளின் பெயரில் முன்னெடுக்கப்படுகின்றது. பாவ்லோ பிரையரி போன்றோரின் ஜனநாயகக் கற்றல் முறைகளிலிருந்து இவ்வணுகுமுறைகள் பெறப்பட்டபோதும் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விடுதலையான அரசியல் போக்குகளோ இங்கு செயன்முறைப்படுத்தப்படாமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படினும், நுணுக்கமான படிவங்களையும் கட்டமைப்பையும் பின்பற்றும் முறையானது ஆசிரியர்களை மையமாகக் கொண்ட கல்வியை நோக்கிய திருப்பத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. கற்றலின் பெறுபேறுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதால் அதில் மாணவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்புகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன.

இவற்றின் விளைவாக “அதிக அறிவையும் சிறிதளவு புரிந்துணர்வையும்” கொண்ட மாணவனின் உருவாக்கத்தைச் சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னரே கன்னங்கர அறிக்கை கணித்திருந்தது.” இவ்வாறான மாணவர்கள் புத்தகங்களை வாசிக்காது வெறும் உரைகளைக் கற்கின்றனர். அவர்களால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒரு முறையில் கட்டுரைகளை முன்வைக்க முடியுமேயொழிய உண்மையில் எழுத்தாக்கங்களை உருவாக்க முடிவதில்லை. அவர்களால் கேள்விகளுக்குப் பதிலழிக்க முடியுமேயொழிய பதில்களை எதிர்க்கேள்வி கேட்க முடிவதில்லை…. அவர்களின் கற்பனைகள் மங்கியுள்ளன, அவர்களின் தனித்துவமும் சிந்திக்கும் ஆற்றலும் முடக்கப்பட்டு, அவர்களது உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.”

மாற்று வழிகள்

தற்சமயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இப் படிவம்-ரீதியான முறையாலன்றி வேறு எவ்வாறு எமது கல்வியின் தரத்தை உறுதி செய்யலாம் என்பது பலர் கேட்கும் ஒரு சரியான கேள்வியாகும். “ஜனநாயகம்” என்ற வெட்டிப் பேச்சின் கீழ் விவாதங்கள், கலந்துரையாடல்கள், ஆக்கச் சுதந்திரத்திற்கான கோரிக்கைகள் என்ற சாக்கில் பலர் தமது கடமைகளைச் செய்யத் தவறுகிறார்கள் என்பது பொதுவான ஒரு கருத்தாகும். எனினும் எனது பார்வையில் இது ஒரு நியாயமற்ற கூற்றே. கடமைகளிலிருந்து தவறுவதற்கு உள்ளக ஜனநாயகத்தைச் சுட்டும் போது இவ்வாறான செயற்பாடுகளுக்கு அதிகம் காரணமாகவிருக்கும் ஜனநாயகத்துக்கெதிரான செயற்பாடுகள் கணக்கெடுக்கப்படுவதில்லை.

இங்கு விவாதங்களுக்கோ, ஏன் கலந்துரையாடல்களுக்கும் கூட முட்டுக்கட்டையாக இருப்பது பல்கலைக்கழகங்களுள் ஊறியிருக்கும் அதிகாரப் படிநிலைகளாகும். குறிப்பாக இப் படிநிலையில் உயர் அதிகாரங்களில் இருப்போரை அவர்களது செயல்களுக்குப் பொறுப்புக் கூறுச் சொல்லும் போது ஏற்படும் எதிர்ப்புக்களை உதாரணமாக முன்வைக்கலாம். இப் படிநிலைகளின் காரணமாகவே மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாட உள்ளடக்கம் தொடர்பாகவோ கற்பித்தல் முறைகள் பற்றியோ எதிர்க் கேள்வி கேட்க முடியாதுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படி நிலைகளால் மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், இளையவர்கள் வயது கூடியோருக்கும், பெண்கள் ஆண்களுக்கும், சிறுபான்மை பெரும்பான்மைக்கும், தனித்துவம் பாரம்பரியத்துக்கும் அடிபணிய வேண்டியுள்ளது. இது கருத்து வேறுபாடுகள், எதிர்க் கேள்விகள், மற்றும் மாற்றுச் சிந்தனைகளை முடங்கச் செய்கின்றது. ஆகவே பல்கலைக்கழகங்களில் பிரச்சினையாகவிருப்பது ஜனநாயகத்துக்கான பற்றாக்குறையே ஒழிய அதிகமான ஜனநாயகமல்ல.

பல்கலைக்கழகச் சூழலை ஜனநாயகமயமாக்குவதற்கு உண்மையான, அர்ப்பணிப்பான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே திறந்த கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும்; இளையோருக்கும் சிரேஷ்ட நபர்களுக்குமிடையிலான அதிகார-ரீதியான உறவுமுறை மாற வேண்டும்; பாரபட்சம் காட்டிப் பாகுபாடுடன் நடாத்தும் தன்மை இல்லாதொழிக்கப்பட வேண்டும்; ஆடை அணியும் முறைகள் போன்ற பால் சார் கருத்துக்களும், சீண்டல்களும் எதிர்க்கப்பட வேண்டும்; அதிகாரபூர்வ தொடர்பாடல்களில் பெரும்பான்மையினரின் மொழியை மட்டும் பயன்படுத்துவதை எதிர்க் கேள்வி கேட்க வேண்டும். இவையே மாற்றத்தின் ஆரம்பப் புள்ளிகளாக அமைகின்றன. இவை மூலம் சுதந்திரமான சிந்தனையையும் செயன்முறையையும் அடக்கும் இவ் வதிகாரப் படிநிலைகளை மாற்ற முடியும். பொறுப்புக் கூறும் தன்மை பற்றாக்குறையாகக் காணப்படும் எமது பல்கலைக்கழகச் சூழல்களில் பரஸ்பர பொறுப்புக் கூறல் ஊடாக கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே அப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி என்பது எனது கருத்தாகும்.