இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி

ஃபர்ஸானா ஹனிஃபா

Image: கொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

 அண்மையில் தேசிய தணிக்கைக் காரியாலயத்தினால் உயர் கல்வி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கலைப்பிரிவுக் கல்வியையும் பட்டதாரிகளின் வேலையின்மையையும் தொடுக்க முற்பட்டது. எமது இன்றைய பகுதி இவ்வறிக்கை தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிலர் முன்வைத்த மறுமொழியினை அடிப்படையாகக் கொண்டதாகும். கல்வி ரீதியான கொள்கைகள் பெரும்பாலும் பற்றாக்குறையான ஆய்வுகள், தவறான முன்னுரிமைகள், குறைபாடுள்ள பகுப்பாய்வுகளால் உந்தப்படுவதால் இவ்வறிக்கையின் சில கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இலங்கையின் கலைப்பிரிவுக் கல்வியைப் பொறுத்தவரையில் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் பல. அரச பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பற்றிய தவறான கருத்துக்களும் அவர்களின் ஆற்றல்களுக்கும் பட்டப்படிப்பின் தரம் மற்றும் பல்கலைகழகங்கள் இயங்கும் தன்மைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லாதிருப்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

கலைப்பிரிவுக் கல்வியின் புறக்கணிப்பு

அவ்வறிக்கையானது சமுதாயத்தை வளப்படுத்த ஆக்கபூர்வமான கலைப்பிரிவுக் கல்வி தேவை என ஒப்புக்கொள்கிறது. இருப்பினும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), மற்றும் கணிதத்தை (Mathematics) உள்ளடக்கும் STEM கல்விக்காகவன்றி கலைப்பிரிவில் வளங்களைச் செலவிடும் நிலையில் நாம் இல்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.  துடிப்பான கலைகள் உண்மையில் விருத்தியடைந்த ஒரு சமுதாயத்தின் குணாம்சமாகும். பொருளாதார அபிவிருத்திக்கான எமது முயற்சியில் கலைப்பிரிவை நாம் புறக்கணித்திருப்பது கவலைக்குரியது. கலைப்பிரிவுக் கல்விக்கான போதுமற்ற அரசாங்க ஆதரவும், தூரநோக்கற்ற தன்மையும் எமது கல்விக் கொள்கைகளைப் பிரதிபலிக்கின்றன.

கலைப்பீடங்களில் சமூகவியல், உளவியல், பொருளியல், புவியியல் போன்ற சமூக விஞ்ஞானப் பட்டங்களும்; கல்வி, தொல்பொருளியல், நூலக விஞ்ஞானம் போன்ற பிரயோக அல்லது தொழில்சார் பட்டங்களும்; வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற மனித வாழ்வியல் பாடங்கள்சார் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஏழ்மை, கல்விப்பிரச்சினை போன்ற சமூகப் பிரச்சினைகளையோ, நீர்த்தட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பம்சார் பிரச்சினைகளையோ முழுமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல்களையும் கண்ணோட்டத்தையும் மேற்குறிப்பிட்ட பாடநெறிகள் வழங்குகின்றன. கலைப்பிரிவுக் கல்வியால் விருத்திசெய்யப்படும் ஆற்றல்கள் பல்வேறு சமூக நெருக்கடிகளுக்குமான தத்துவ மற்றும் கருத்தியல் ரீதியான அடிப்படைகளையும், அவற்றுக்காக முன்வைக்கப்படும் தீர்வுகளின் சமூக, கலாசார, மனிதப் பின்விளைவுகளையும் கிரகிக்க வழிசெய்கின்றன. இதன் காரணமாகவே மதிப்பாய்வுகளின் போது பல்துறைசார் அணுகுமுறைகள் பெரும்பாலும் நாடப்படுகின்றன.

தரமான கலைப்பிரிவுக் கல்வியானது சமூகத்துக்கு வழங்கக்கூடிய பங்களிப்பை இனங்காண்பது அவசியமாகும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் இன்று அல்லலுறுவதற்கான காரணங்களிலொன்று சமூக விஞ்ஞானம் மற்றும் மனித வாழ்வியல் கல்விகளால் உருவாகக்கூடிய கண்ணோட்டங்களைப் புறக்கணிப்பதாகும். இவ்வாறான கல்வியை அறவே பெற்றுக்கொள்ளாத, அல்லது சிறிதளவே கற்றுக்கொண்டவர்களால் பாரதூரமான சமூகப் பின்விளைவுகளை உருவாக்கக்கூடிய துறைகளின் கொள்கைகள் அமைக்கப்படுகின்றமை நல்லதோர் எதிர்காலத்தைச் சுட்டுவதாக இல்லை.

எவரும் கைவிடப்படவில்லை?

சமூகப் படிநிலைகளில் உயர்வடைவதை நோக்கமாகக் கொண்ட எமது இலவசக் கல்விமுறை, அலட்சியத்தின் காரணமாக அதன் குறிக்கோள்களிலிருந்து தவறிவருகிறது. வறிய சமூகங்களின் மாணவர்கள் வளங்கள் பெரிதளவற்ற பாடசாலைகளில் கல்விகற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றமை உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் நிச்சயம் வலியுறுத்தப்பட வேண்டும்.

அத்தணிக்கை அறிக்கையானது இரண்டாம்நிலைக் கல்வியிலுள்ள பல சிக்கல்களைச் சுட்டுவதோடு வளங்கள் குறைந்த பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் ஒப்பீட்டளவில் “இலகுவான” கலைப்பிரிவுக் கல்வியை உயர்தரப் பரீட்சைக்காகவும் பின்னர் பல்கலைக்கழகத்திலும் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளதெனத் தெரிவிக்கிறது. எனவே கலைப்பீடங்கள் இவ்வாறான குறை தயார் நிலையிலுள்ள மாணவர்களுக்கான இடமாகவே இருக்கின்றன என அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பிரச்சினையாகவிருப்பது எமது கல்விமுறையேயன்றி மாணவர்களின் ஆற்றல் குறைபாடல்ல என்பது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறத் தகுதியற்றவர்கள் என அவ்வறிக்கை குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

நலிவான இரண்டாம்நிலைக் கல்வியைப் பெறும் மாணவர்கள் இயல்பாகவே கலைப் பீடங்களை வந்தடைவது உண்மையெனின் அம் மாணவர்களை வலுப்படுத்தக்கூடிய ஆதரவை இப் பாடநெறிகள் வழங்க வேண்டும். ஆனால் கலைப்பிரிவுப் பாடநெறிகள் இவற்றைக் கையாளும் வகையில் தற்போது இல்லை. ஆங்கில மொழிக் கல்விக்கான ஆதரவு இருப்பினும் ஏனைய அறிவாற்றல்களை மேம்படுத்துவதற்கான யுக்திகள் சிறிதளவிலேயே காணப்படுகின்றன. இன்று பல்கலைக்கழகங்களுள் நுழையும் மாணவர்கள் பெரும்பாலும் வளங்கள் போதியளவற்ற கல்விமுறை மற்றும் பரீட்சை நோக்கில் மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் தனியார் வகுப்புக் கலாசாரத்தின் வெளியீடுகளாகவே காணப்படுகிறார்கள்.

பட்டப்படிப்புக்கான தகைமைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் தேர்ச்சிகளுக்குமான பொருத்தமின்மையை எமது கல்விக் கொள்கைகள் நிவர்த்திக்க முன்வர வேண்டும். இங்கு ஆங்கில மொழிப் பயிற்சிகளோ, தகவல் தொழில் நுட்பம்சார் திறன்களின் விருத்தியோ, கலைப்பிரிவுக் கல்வியைத் தகர்ப்பதோ தீர்வுகளாக அமையமாட்டா. மாறாக எமது கல்விமுறைக்கு அத்தியாவசிமான வளங்களை அளிப்பதும், பட்டப்படிப்புக்கு முன் மாணவர்களை உரிய முறையில் தயார்படுத்துவதுமே பொருத்தமாகவிருக்கும்.

உள் நோக்கின்மை

கல்வியில் “பின்தங்கிய” மாணவர்களை உள்வாங்கும் கலைப்பிரிவுப் பாடநெறிகளும் சமுதாயத்தில் பெறுமதி குறைந்தவையாகவும் “பின்தங்கியவையாகவும்” அவ்வறிக்கையில் சுட்டப்படுகின்றன. கலைப் பாடநெறிகள் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானவையல்ல. உள்ளக மற்றும் வெளியக பட்டப்படிப்புக் கற்கைநெறிகள், பல்வகைப்பட்ட பாடச் சேர்க்கைகளுடனான மற்றும் நிபுணத்துவம் பெறக்கூடிய மூன்று வருட கால கற்கைநெறிகள், மதிப்பாய்வுக் கூறுடன் கூடிய நான்கு வருட கெளரவப் பட்டக் கற்கைநெறிகள் எனப்பலவும் கலைப்பீடங்களில் கிடைக்கப்பெறுகின்றன. கலைப்பிரிவுக் கல்வியில் உள்ளடக்கப்படும் பாடங்கள் பரந்துபட்டவையாகக் காணப்படுவதோடு குறித்த ஒரு பாடத்துக்கான விடய உள்ளடக்கமும் பல்கலைக்கழகத்துக்குப் பல்கலைக்கழகம் வேறுபடுகின்றது. அந்தவகையில் கலைப்பீட மாணவர்கள் விரிவான மற்றும் பெரிதும் வேறுபட்ட ஆற்றல்களைக் கொண்டிருப்பதில் எவ்வித வியப்புமில்லை. எனவே கலைப்பட்டதாரிகளின் ஆற்றல்களையும் தகைமைகளையும் ஒன்றுபடுத்தி முழுமையாக ஆராய்வது பயனற்றது. கலைப்பாடநெறிகளை உரிய முறையில் பகுபடுத்தி ஆராய்வது அதன் வலுவான கூறுகளையும், மேம்படுத்தப்பட வேண்டிய பலவீனமான கூறுகளையும் இனங்காண உதவும்.

கல்விரீதியான பாடநெறிகளும், தொழில் ரீதியான பாடநெறிகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரானவை என அவ்வறிக்கையில் அனுமானிக்கப்பட்டுள்ளது. இது இரு பாடநெறிகளைப் பொறுத்தவரையிலும் தவறான கருத்தாகும். தர்க்கரீதியான சிந்தனை, பாடநெறியுடனான கணிசமான ஈடுபாடு, சுதந்திரமான கற்றல், நல்ல எழுத்தாற்றல், பேச்சு மற்றும் விவாதத் திறன்களை மையமாகக் கொண்ட வலுவான கற்கை நெறியானது சுத்தந்திரமாகச் சிந்திக்கக்கூடிய, தம்மை வெளிப்படுத்தக்கூடிய, தமது வேலைத்தளங்களிலோ ஏனைய சந்தர்ப்பங்களிலோ அர்த்தபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பட்டதாரிகளை உருவாக்ககூடியது. இவ்வாறான வினைத்திறனான கற்கைத் திட்டத்தால் ஒருங்கே ஆங்கிலம், “மென் திறன்கள்”, மற்றும் தகவல் தொழில் நுட்பத்திறன்கள் ஆகியவற்றை விருத்தி செய்ய முடியும். எமது பல்கலைக்கழகங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் உலக வங்கிக் கடன் நிதியுதவியுடனான AHEAD நிகழ்ச்சித்திட்டமானது மேற்கூறிய கூறுகளை உள்வாங்கியுள்ளது.

தற்சமயம் கலைபீடங்கள் ஏனைய பீடங்களைக் காட்டிலும் அதிகளவான, பல்வேறுபட்ட மாணவர்களை உள்ளடக்குகின்றமையால் அவை எதிர்கொள்ளும் வேறுபட்ட சவால்களுக்கு மேலதிக ஆதரவு தேவைப்படுகின்றது. அதிகரித்த மாணவர்-விரிவுரையாளர் விகிதம், பல்வேறு மொழிகளிலுமான பலவிதக் கற்கை நெறிகள், தனியொரு மாணவனுக்கு ஏனைய பட்டப்படிப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான நிதியுதவி போன்றன கலைப்பீடங்களுக்கே தனித்துவமான சில சிக்கல்களை உருவாக்குகின்றன. ஒரு கலைப்பட்டதாரி பெறவேண்டிய தரமான கல்வியை எமது பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டுமெனில் இப்பிரச்சினைகள் முறையாக ஆராயப்பட வேண்டும். கலைப்பீடங்கள் சமுதாயத்துக்கு வழங்கக்கூடிய தனித்துவமான பங்களிப்பு எமது அரசினால் புறக்கணிக்கப்படாது சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வேலையின்மை தொடர்பான மீள்பரிசீலனை

பெரும்பாலான பல்கலைக்கழகப் பட்டதாரிகளைப் பொறுத்தவரையில் “வேலை” என்பது அரசாங்கத் துறையில் பணிபுரிவதாகும். ஆகவே பட்டதாரிகள் “வேலையின்மை” எனக் குறிப்பிடும்போது வேறு வருமானமீட்டக்கூடிய நடவடிக்கைகளையோ, தனியார்துறை சார் உத்தியோகங்களையோ சிலசமயம் உள்ளடக்குவதில்லை. தொழில் என்றால் அது அரசாங்கத் தொழில் தான் என வரையறை செய்வது எமது புரவாண்மை மற்றும் உரிமை பாராட்டும் கலாசாரத்தையே பிரதிபலிக்கிறது. தனியார் துறைசார் தொழில்கள் ஆக்கபூர்வமான தன்மை, தொழில் திருப்தி மற்றும் அதிக சம்பளம் போன்றவற்றைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்ட கண்ணோட்டமானது அரசதுறையில் உள்ள வேலைச் சூழல், தொழில் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் தனியார் துறையிலும் பார்க்க மிகையாகக் காணப்படுவதை வலியுறுத்துகின்றது. அத்தணிக்கை அறிக்கையானது இவ்வாறான பிரச்சினைகளை இனங்கண்டுள்ளது. தனியார் துறை உத்தியோகங்களிலுள்ள நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வைப் பட்டதாரிகள் மத்தியில் பரப்புவதும், தனியார்துறையின் வேலைச் சூழ்நிலைகளின்பால் அரசாங்கம் கவனம் செலுத்துவதும் அறிக்கையால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான வேலையற்ற கலைப்பிரிவுப் பட்டதாரிகள் பெண்களாகக் காணப்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் அவர்களின் வேலையின்மை அல்லது வேலை செய்வதில் ஈடுபாடின்மைக்கான காரணங்களை அது ஆராயவில்லை. 2017 தொழிலாளர் கேள்வி மதிப்பாய்வானது இது தொடர்பான மேலதிக விளக்கத்தை அளித்துள்ளது. இம்மதிப்பாய்வின் படி பெண்களின் “குடும்பப் பொறுப்புகள்”, “பாதுகாப்புச் சிக்கல்கள்”, மற்றும் “மகப்பேறு விடுமுறை” போன்றவை தொடர்பாக முதலாளிகளிடம் எதிர்மறையான ஒரு போக்கு நிலவிவருகின்றது.

பெண் தொழிலாளர்களின் சம்பளமற்ற பராமரிப்புப் பொறுப்புக்களை உள்ளடக்குவதில் முதலாளிகளுக்குள்ள தயக்கமும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பான அச்சமும் வேறு ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துக்காட்டுகின்றன. இப்பிரச்சினையானது பல்கலைக்கழகக் கல்விக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பெண்களின் சம்பளமற்ற பராமரிப்புப் பொருளாதாரம் மற்றும் கருத்தில் கொள்ளப்படாத அவர்களது வீட்டு வேலைகள் பற்றிய கலந்துரையாடல்கள் இங்கு பொருந்துகின்றன. பல பெண்கள் முறையான தொழில்களை விடுத்து முறைசாராத் தொழில்களை நாடுகின்றமைக்கான காரணங்களிலொன்று இவ்வீட்டுப் பராமரிப்புப் பொறுப்பாகும். இவற்றுக்கு மேலதிகமாக வேலைத் தளங்களிலும், வேலை முடித்து தாமதமாக வீடு திரும்பும் போதும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொழிலாளர் சக்தியில் பெண்களின் குறைவான பங்கெடுப்புக்கான காரணங்களாக உள்ளன. எனவே வேலையின்மை பற்றிய ஒரு முழுமையான கிரகிப்பைப் பெற இவ்வாறான காரணிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகள் எப்போதும் தீவிரமான பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டமைவதில்லை. அதோடு அவை பெரும்பாலும் கல்வித்துறையிலுள்ள நெருக்கடிகளை நிவர்த்திப்பதை விடுத்து அவற்றை மேலும் கடுமையாக்குகின்றன. ஆகவே தீர்க்கமான ஆலோசனை மற்றும் முழுமையான சிந்தனையின் பின்னரே கொள்கைத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஃபர்ஸானா ஹனிஃபா கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றுபவராவார்).

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்