இலவசக் கல்விக்குச் சார்பாக…..

ஷாமலா குமார்

எமது நாடானது கட்டியெழுப்பப்பட்டு, தற்போது நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு அதன் சட்டம், பொருளாதாரம், மற்றும் பொது நிறுவனங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் திறவுகோலாக இருப்பது கல்வி. கல்வியும் ஜனநாயகமும் ஒன்றிலிருந்தொன்று உருவாவதோடு அவை இரண்டும் ஒன்றையொன்று மேம்படுத்துகின்றன. ஜனநாயகத்துடன் கூடிய கட்டமைப்புக்கள் கல்விக்குக் களமமைக்கின்றன. இதனூடாக எமது பொதுவானதும், வேறுபடுவதுமான யதார்த்தங்களை எம்மால் விளங்கிக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. உண்மைகளைத் தேடுவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் எம்மைத் தூண்டுவதனூடாகக் கல்வியானது எமது சுகாதாரம், உணவு, தொழில்நுட்பம், வாழ்க்கைமுறைகள், நல்வாழ்வு என எமது நாளாந்த நடைமுறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. இவ்வாறான ஒரு அணுகுமுறையானது இயல்பாகவே எமது நிறுவனங்கள், கட்டமைப்புக்கள், நடைமுறைகளை விமர்சிப்பதோடு, இந்த நோய்த்தொற்று நிலைமை சார்ந்தோ சாராமலோ அனைவருக்கும் முடிந்தளவு சம பிரதிநிதித்துவத்தை வழங்குகின்றது. இவ்வாறு திடமான ஒரு கல்வி முறையினின்றும் எழும் தீர்வுகளும் பதில்களும் ஜனநாயகத்துடன் கூடியதாக அமைகின்றன. இதனால் கல்வியோ ஜனநாயகமோ தனித்து இயங்க முடியாதென்பது தெளிவாகின்றது. 

இங்கு கல்வி என நான் குறிப்பிடுவது இலவசக் கல்வியையாகும். கட்டணம் அறவிடும் கல்வி முறைகள் அனைத்தும் வெறும் அடக்குமுறையான செயற்பாடுகளே. கட்டணம் அறவிடும் கல்வி முறையானது மக்கள் பணத்தால் தக்கவைக்கப்படும் ஒரு வேடதாரி எனக் குறிப்பிட்டால் மிகையாகாது. இன்றைய “கல்வியானது” வேலை ஒன்றைப் பெறுவதற்கான தகைமைப் பயிற்சியையோ, இராணுவ முறைப்படியான கட்டுப்பாட்டொழுக்கத்தையோ சுட்டி நிற்கின்றது. இன்னும் சில சமயங்களில் எம்மில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து எம்மைக் கவர்ச்சிகரமாகவோ, வேலைக்கமர்த்தக் கூடிய தகைமை இருப்பது போன்றோ காட்டுவதற்காக ஒரு ஆடையை வாங்குவது போல் ஆற்றல்களையும் வாங்கக்கூடிய சந்தையாகக் கல்வி காணப்படுகின்றது. அரசியல்வாதிகள், பெருநிறுவனங்கள், உலக வங்கி போன்றவற்றைப் பொறுத்த வரையில் கல்வியானது உலகப் பொருளாதாரத்துக்குப் பணியாட்களை உருவாக்கும் ஒரு கருவி மட்டுமேயாகும். அதாவது நாடுகளின் திறைசேரிகளை நிரப்புவதற்காகப் பொது மக்களின் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் அச்சங்களையும் நாணயமாக்கும் பயனுள்ள ஒரு யுத்தியாகக் கல்வியை அவர்கள் பார்வையிடுகின்றனர். சுருக்கமாகக் கூறப்போனால் கல்வியானது பணம் படைத்தவர்களுக்கான தனிச் சலுகையாகவும், அதிகாரம் மிக்கோரது மூலதனமாகவும் மாறிவிட்டது. கல்வியும் ஜனநாயகமும் இவ்வாறு தொடர்பிழந்து காணப்படுவது கவலைக்குரியது.

கல்வி”

காலப்போக்கில் கல்வியானது மெல்லத் தேய்வுற்றுத் தற்போது பொது மக்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கட்டணம் அறவிடும் கல்விமுறையை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. உதாரணமாகக் கல்வியின் கிடைப்பனவு சமத்துவமற்றுக் காணப்படுவது இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவுள்ளது. கோவிட் நோய்த்தொற்று நிலையால் நாடு பாதிப்புற்றிருக்கையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளடக்கப்படாத போதும் நிகழ்நிலைக் கல்வியானது முன்னேற்றத்தை நோக்கிய ஒரு படியாகவே அங்கீகரிக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கல்வி என்ற பெயரில் கட்டணம் அறவிடும் கற்கை நெறிகளுக்கு வழிகோலும் கருவியாகக் கொத்தலாவல சட்டம் காணப்படுகின்றது. கட்டணங்களும் நுழைவுக்கான தகைமைகளும், அவற்றைச் செலுத்த முடியாத அல்லது சந்திக்க முடியாத மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் கல்விக்கான வாய்ப்பினை மேலும் சிக்கலாக்குகின்றன. இது போன்றே சில பல்கலைக்கழகங்களிலும் கட்டணம் அறவிடும் கற்கை நெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கட்டணம் அறவிடும் அரச கல்வியானது நிறுவனமயமாக்கப்படுகின்றது.

வேறு பல முறைகளிலும் கல்வியானது இலவசமற்றதாகவே காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியங்களைத் தடை செய்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெறும் கல்விச் சீர்திருத்தங்களுக்கெதிரான போராட்டங்கள் கூட பொலீசாரால் முடக்கப்படுகின்றன. நிகழ்நிலைக் கல்வியை எதிர்க் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பங்களோ ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கிடைப்பது அரிது. பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதை மற்றும் பாலியல் வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆகவே எமது நாடானது உண்மைக் கல்வியிலிருந்து, கல்வியெனும் வேடத்தை நோக்கி நகர்வதுடன் ஜனநாயகத்திலிருந்தும் விலகிச் செல்கின்றது.

மீண்டும் உண்மைக் கல்வியை நோக்கி…..

உண்மைக் கல்வியிலிருந்து கல்வி நிறுவனங்களை மேலும் அப்பால் கொண்டு செல்லும் சீர்திருத்தங்களுக்கு உலகத்தின் போக்குகளைக் காரணம் காட்டுகின்றார்கள். எமது இலவசக் கல்வி முறையின் ஆரம்பத்தை நோக்குவோம். அது எமது நாட்டின் தேவைகளை ஆராய்ந்து அதற்கேற்ப அமுல்படுத்தப்பட்ட ஒரு முரண்பாடான, எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை மையமாகக் கொண்ட புரட்சிக் கோட்பாடேயன்றி வெளியுலக நடைமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதொன்றல்ல. இது உலக நடைமுறைகளுக்கு மாறாக, நாட்டு மக்களுக்காக, ஜனநாயக ரீதியில் கொண்டுவரப்பட்டதோர் கொள்கையாகும்.

வேறு கல்வி முறைகள் கொண்டிராத பல வாய்ப்புக்கள் எமது கல்வி முறையில் உண்டு. எனினும் உலக வங்கியின் கோட்பாடு மற்றும் துடிப்பான கல்வி முறையை அச்சுறுத்தலாகக் கருதும் ஆட்சியாளர்களால் நாம் முடக்கப்படுகின்றோம். கட்டணம் அறவிடும் கல்வி முறையால் பலன் பெறக் காத்திருக்கும் தனியார் துறை மறுபுறம். உலகத்தின் போக்குகள், உலக வங்கி, அரசியல்வாதிகள், மற்றும் வியாபாரிகளை ஒரு கணம் மறப்போமேயானால் இலவசக் கல்வியின் தாற்பரியம் புலப்படும்.

எமது பாடசாலை மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களும் உட்கட்டமைப்புகளும் தீர்க்கமானவை. கோட்பாட்டளவில் கட்டுப்படியாகும் தன்மை மீது தங்காமல் எந்தவொரு மாணவனாலும் மூன்றாம் நிலைக் கல்வியைப் பெற முடியும். எமது பல்கலைக்கழகங்களும் ஈட்டும் வருமானத்திலோ, நன்கொடை நிதியிலோ பாரியளவு தங்கியிருப்பதில்லை. அத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, தர்க்க ரீதியான, ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கங்களை எதிர்க் கேள்வி கேட்கும் ஒரு ஜனநாயக முறைக்கேற்ற கற்கை நெறிகளை உருவாக்குவதற்குக் கணிசமானளவு சுதந்திரம் அவற்றுக்குண்டு.

இக் கல்வி முறையானது பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை முறையும் வெறுமையாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுவோரைத் தீர்மானிப்பதில் தனியார் வகுப்புக்கள் பாரிய செல்வாக்குடையவையாக உள்ளன. இந்த நோய் நிலைமைக்குப் பின் வரும் காலங்களில் இச் செல்வாக்கானாது மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆசிரியர் பயிற்சித் திட்டமானது மாற்றியமைக்கப்பட்டு, முறையாக்கப்பட்டு, புதுப்பிக்கப்படல் வேண்டும். ஆசிரியர்களின் சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதை ஒழிக்கப்பட்டு, சுதந்திரமாக கருத்து வெளியிடக்கூடிய, ஆடை அணியக்கூடிய, சிந்திக்க மற்றும் விரும்பியவாறு வழிபடக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு அவை பெண்கள், சிறுபான்மையினர், வலது குறைந்தோர், மற்றும் LGBTIQ சமூகத்தைச் சார்ந்தோரை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் வேண்டும். ஒருவரது குடும்ப வருமானமோ, இனமோ, வர்க்கமோ இங்கு எவ்வித செல்வாக்குமற்றிருக்க வேண்டும். இறுதியாக எமது பாடத்திட்டங்கள் ஜனநாயகத்திற்குத் தகுதி வாய்ந்ததாக, உண்மையில் இலவசமாக அமைய வேண்டும். இவை கடினமானவையாக இருப்பினும் கட்டாயமானவை.

முடிவுகள் 

கல்வியும் ஜனநாயகமும் ஒன்றிலொன்று தங்கியிருப்பவை. இன்றைய கல்வி நிலையானது எமது ஜனநாயகத்தை எதிர்க் கேள்வி கேட்கத் தூண்டியுள்ளது. ஜனநாயகத்திற்கெதிராகப் பிரசாரம் செய்வோர் தேர்தல்களில் வெற்றி பெற இது வழிவகுத்துள்ளது. கல்வியை வலுப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது போலவே ஜனநாயகமயமாக்கலை நோக்கிய எந்தவொரு முயற்சியும் கல்வியின் மறுசீரமைப்பை மையமாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் காண விரும்பும் ஓர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு எமது சர்வாதிகார அரசாங்கங்கள் திராணியற்றுக் காணப்படுகின்றன. ஆகவே ஜனநாயகத்தை உன்னிப்பாக நோக்க வேண்டியது எமது கடமையாகின்றது.

(எழுத்தாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்)

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்