எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

ஹர்ஷன ரம்புக்வெல்ல (திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆசிரியர்)

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது. இந்த சொல்லானது, பயன்பாட்டு
உபகரணங்களுக்கான அணுகல், இணையத்திற்கான அணுகல், இணையத்தின்
வேகம் மற்றும் தரம் மற்றும் ‘எண்ணிம கல்வியறிவு’ என வழங்கப்படும்
விடயத்தில் காணப்படும் சமமற்ற நிலைகள் அல்லது தகவல் தொடர்பாடல்
தொழிநுட்ப உபகரணங்களை உபயோகிப்பதில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்
ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே மேலே குறிப்பிட்ட எண்ணிம
இடைவெளி எனும் பதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள‌ ஏற்றத்தாழ்வுகளாகும்.
பெருந்தொற்று நோய்க்காலத்தில் பாடசாலைகள் மற்றும்
பல்கலைக்கழகங்கள் ஆகியவை பௌதீக அளவில் மூடப்பட்டமை
இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளை இலங்கையில் வெளிக்காட்டியதோடு இவை
ஏற்கனவே எமது கல்வி அமைப்பில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும்
வெளிப்படுத்தின. கிராமியப்புற மாணவர்கள், ஏழை நகர்ப்புற பின்னணியில்
வரும் மாணவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மாணவர்கள் நிகழ்நிலை
கற்றல் என்ற பாரிய விலகலை எதிர்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டனர்.
இவ்வாறான கவலைக்குரிய நிலையை வைத்து நேர்மறையான சுழற்சியை
உருவாக்க கொள்கைவகுப்பாளர்களும் அரசியல்வாதிகளும் பெரும்
பிரயத்தனம் எடுத்தனர். இருப்பினும், இணைய சேவையை பெறும் பொருட்டு
மரங்களிலும் மலைகளிலும் ஏறி நின்ற மாணவர்கள், தொழில்நுட்பத்தால் குழம்பிப்போன ஆசிரியர்கள் என எமது கல்வி அமைப்பின் கவலைக்கிடமான
ஏற்றத்தாழ்வுகள் வெட்டவெளிச்சமாகின. தொழில்நிட்பம் எவ்வாறு மரபார்ந்த
கல்வி அமைப்பில் ‘சலனங்களை’ ஏற்படுத்தும், கற்பித்தல் முறைகளை
எவ்வாறு ‘ஜனநாயகமயப்படுத்தும்’ போன்ற கதையாடல்களுக்கு முரணாக
இலங்கையின் அனுபவம் அமைந்திருந்தது. தொழில்நுட்பத்தின்
இயலுமையான கல்வியின் மரபார்ந்த அமைப்பில் ‘சலனங்களை’ ஏற்படுத்தல்
என்பது இன்னமும் சமூக, வகுப்பு மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளால்
மிகையாக செல்வாக்கு செலுத்தப்படுகின்றமையால் கற்பித்தல் பரப்பில்
தொழில்நுட்பத்தால் மேற்கொள்ளப்படும் புத்தாக்கம் என்ற கருத்தாடல்
கவனமாக ஆராயப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

இந்த ஆக்கத்தில் நான் இலங்கையின் உயர்கல்வி அமைப்பில் ‘சேட்பாட்’
என்று அறியப்படும் உருவாக்கும் திறனுடைய செயற்கை நுண்ணறிவின்
தாக்கங்கள் குறித்து எழுத விழைகின்றேன். இலங்கையின் உயர்கல்வி
முகங்கொடுக்கும் பன்முக சிக்கல்களான அரச‌ பல்கலைக்கழகங்களுக்கு
ஒதுக்கப்படும் குறுகிய வளங்கள் மற்றும் நிதியீட்டம், தரம்வாய்ந்த
ஊழியர்களை ஈர்ப்பதிலும் நிலைக்க வைப்பதிலும் காணப்படும் சிக்கல்கள்,
செயலிழக்கும் நிர்வாகம் போன்ற இன்னோரன்ன சிக்கல்கள் குறித்து
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மிகக்குறைந்த‌ அறிதலே
காணப்படுகின்றது. இருப்பினும், உலகளவிலும் செயற்கை நுண்ணறிவு கல்வி
அமைப்புகளில் தவிர்க்க முடியாததாகி வருவதோடு இலங்கையும் அதற்வு
விதிவிலக்கல்ல. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று
வெற்றுக்கண்களுக்கு இத்தொழில்நுட்பம் கல்வி அமைப்பில் முற்போக்கான‌
‘சலனங்களை’ ஏற்படுத்துவதாக தோன்றினாலும் உண்மையான நிலை
அவ்வாறில்லை. உண்மையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
(தற்போது கூறுவது போல) தகவலுக்கான இலவச அணுகல், இணையத்தின்
பரந்தளவிலான உபயோகம், பாவனைக்கான இலகுத்தன்மை- மிக்ககுறைந்த
அளவு தகவல் தொழில்நுட்ப அறிவோடும் இதனை எதிர்கொள்ளலாம்-
போன்ற விடயங்கள் எண்ணிம இடைவெளியை வெளிப்பார்வைக்கு
குறைக்கலாம். ஆனால் நான் கீழே எழுதுவதைப் போல செயற்கை
நுண்ணறித் தொழில்நுட்பம் ஏற்கனவே எம்மிடமிருக்கும் சமமின்மைகளை மேலும் பெருப்பிக்கும் வாய்ப்புள்ளதோடு ஏற்கனவே ஒடுக்கப்பட்டிருக்கும்
மக்களுக்கும் மேலும் புதிய சவால்களை ஏற்படுத்தலாம்.

கல்வியில் நியாயப்பாடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும்

இலங்கையின் உயர்கல்வியைப் பொருத்தவரையில் செயற்கை நுண்ணறிவுத்
தொழில்நுட்பம் நியாயப்பாடு தொடர்பான விடயத்தில் குறுக்கீடு நிகழ்த்தும்
முக்கிய விடயம் ஆங்கிலம் மொழிமூலக் கல்வியிலாகும். ஏற்கனவே
இலங்கையிலுள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியோடு
இணைந்திருக்கும் சமுதாய மூலதனம் மற்றும் ஆங்கிலத்துக்கும்
‘பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்குமாக’ ஏற்படுத்தப்படும் பிழையான மற்றும்
பொருத்தமற்ற தொடர்புபடுத்தலால் தமது கற்கை நெறிகளை ஆங்கில
மொழிமூலத்துக்கு மாற்றியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்த
பிழையான மற்றும் பொருத்தமற்ற ‘ஆங்கிலம் மற்றும் பட்டதாரிகளின்
வேலைவாய்ப்பு’ என்ற தொடர்புபடுத்தலில் விளைவாக அரச
பல்கலைக்கழகங்களும் மரபுரீதியாக உள்நாட்டு மொழிமூலங்களில்
கற்பிக்கப்பட்டு வந்த சமூக விஞ்ஞானங்கள் உட்பட ஏனைய
கற்கைநெறிகளையும் ஆங்கில மொழிமூலத்துக்கு மாற்றிவருகின்றன. அரச
பல்கலைக்கழகங்களின் அனைத்து துறைகளிலும் மாணவர்களிலும்
ஆங்கிலத்தின் படித்தரம், முக்கியமாக மானுட மற்றும் சமூக விஞ்ஞானங்கள்
பயிலப்படும் பீடங்களில் மிகவும் மோசமாக இருப்பதோடு இந்நிலை பாரிய
நெருக்கடியை நோக்கியே இட்டுச்செல்லும். இந்நிலையில், உருவாக்க
இயல்புள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற விடயங்கள்,
அதுவும் பீடங்கள் மற்றும் மாணவர்களின் பாடத்திட்ட உள்ளடக்கங்களை
இலகுவாக அணுகவும் மாணவர்களின் செயற்றிட்ட உருவாக்கத்தில்
இலகுத்தன்மையை ஏற்படுத்தவும் கூடிய தொழில்நுட்பங்கள் மாணவர்களின்
கவனயீர்ப்பை நிச்சயம் பெறும். இருப்பினும், இதன் பயன்பாட்டிலும் ஆங்கில
அறிவு இன்றியமையாதது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் நாம்
உட்புகுத்தும் தரவுகளின் தரம் மற்றும் தெளிவு அதன் தரவு வெளியீட்டில்
தாக்கம் செய்யும் நிலையில், ஆங்கில இயலுமை செம்மையாகவுள்ள
மாணவர்களே அதிக அனுகூலங்களை பெறுவார்கள். இவர்கள் உதன் உள்ளடக்கத்தை செம்மையாக வாசித்து தமக்கேற்ற தரவுகளாக
மாற்றக்கூடியவர்களாக இருக்கும் நிலையில் மொழிச்செம்மை இல்லாத
மாணவர்கள் உள்ளடக்கத்தை அவ்வாறே பாவிக்க முற்படுவார்கள்.

ஆங்கிலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் நியாயப்பாடு ஆகிய
விடயங்களில் இவ்வாறான வெளிப்படையான தொடர்புகள் இருப்பினும்,
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பரவலாக்கப்படுமாயின் மேலும் பல
சிக்கல்களும் உயர்கல்விப் புலத்தில் ஏற்பட வாய்ப்புகளுண்டு. செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (LLM) என அறியப்படும் பரந்த மொழி மாதிரிகள்
அடிப்படையிலேயே இயங்குகின்றது. இவை தரவுகள் காணப்படும் பாரிய
தளங்களாக இருப்பதோடு (மொழியியலாளர்கள் இதனை ‘கார்போரா’ என
அழைக்கின்றனர்) இதன் மூலமே செயற்கை நுண்ணறிவு தனக்கான
உள்ளடக்கத்தை தொகுக்கின்றது. வெளிப்பார்வைக்கு ‘புதிய’ மற்றும் ‘அசலான’
உள்ளடக்கங்களை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உருவாக்குகின்றது
என்பதில் எமது கவனத்தை குவிப்போம். செயற்கை நுண்ணறிவுத்
தொழில்நுட்பத்தில் நாம் ஒரு சொல்லையோ, வசனத்தையோ,
சொற்றொடரையோ உள்ளிடும் போது, அது, தன்னில் காணப்படும் பாரிய
தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்ட அவ்வுரு எத்தனை வாக்கியங்கள் அல்லது
சொற்களைத் தொடர்ந்து வருகின்றதென்ற நிகழ்தகவின் அடிப்படையிலேயே
தரவுத்தொகுப்பு இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்தகவும் கூட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
அணுகக்கூடிய தரவுகளில் இருந்தே பெறப்படுகின்றது. இந்நிகழ்தகவு
மில்லியன் கணக்கான தரவுகளில் இருந்து பெறபப்டுவதால் ‘புதிய’ தரவாக
தோற்றமளித்தாலும் உண்மையில் இச்செயன்முறை செயற்கை நுண்ணறிவு
அணுகக்கூடிய தரவுத்தளங்களிலிருந்து பெற்று போலியான தோற்றத்தை
வழங்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த போலித்தோற்ற மயக்கமானது
ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு அணுகும் தரவுத்தளங்களிலுள்ள
தரவுச்சார்பு மற்றும் முற்சாருமைகளை மேலும் பெருக்கக்கூடியதாக
மாறிவிடுகின்றது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அணுகக்கூடிய தரவுகள் பெரும்பாலும் இணையத்தில் காணப்படும் ஆங்கில
மொழிமூலமானவையாக இருப்பதால் அவை பெரும்பாலும் ஆங்கில,
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மைய கருத்தாக்கங்களையும்
தற்சார்புகளையும் கொண்டு மீள உருவாக்கப்படுவதால் முடிவுத்தரவுகளும்
அவ்வாறான தற்சார்புகளை கொண்டதாகவே அமைகின்றன. பன்மொழிமூல
உள்ளடக்கங்கள் என வரும்போது ஆங்கிலத்தைக் காட்டிலும் ஒப்பீட்டுரீதியில்
ஒடுக்கப்பட்டுள்ள மொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்
மிகக்குறைவான உள்ளடக்கங்களே காணபப்டுவதால் (இருப்பினும்
ஒப்பீட்டளவில் தமிழில் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன) தமிழ், சிங்கள
மொழிமூல மாணவர்கள் பிரதிகூலங்களை சந்திக்கின்றனர். இதனால்,
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது உள்நாட்டு மொழிகளில்
பெறப்படக்கூடிய உள்ளடக்கங்களை விடுத்து பாடத்திட்டத்தை
வழங்குவதாலும் மாணவர்கள் மேற்கொள்ளும் செயற்றிட்டங்களிலும்
இந்நிலை தொடர்வதாலும் நமக்கேயுரிய தனித்தன்மைகள் பாடத்திட்டத்தில்
இருட்டடிப்பு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இந்நிலை ஏற்கனவே மானுட மற்றும் சமூக விஞ்ஞானப் புலத்தில்
காணப்படுவதோடு அறிவு உற்பத்தி என்பது மிகையாக ஆங்கில‌-ஐரோப்பிய
மையமானதாக காணப்படுவதால் கீழைத்தேய ஆய்வாளர்கள் “முதலாம்
உலக” அறிவுற்பத்தியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இருப்பினும் பெரும்பாலான பீடங்கள் அவற்றை தமது சூழ்நிலை மற்றும்
உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப தகவமைக்கின்றனர். உதாரணமாக, ஒரு
சமூக விஞ்ஞான ஆய்வாளர் பியரி போர்தோ அவர்களின் ஆய்வுகளை
வாசிக்கும் போது அவற்றை இஅல்ங்கையின் சூழலுக்கேற்ப தகவமைக்க
வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதாக உணர்ந்துகொள்வார், குறைந்தபட்சம்
அதுவே ஒருவரால் எதிர்பார்க்கக்கூடுமானது! இதுவே செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுமாயின் ஆய்வும்
மேற்கை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு அதனை சூழவுள்ள அனுபவ
உலகும் கூட இலங்கையின் சூழலுக்கு எவ்வித பொருத்தமுமற்றதாக
இருக்கும். இதனை பலர் மிகத்தீவிரமான உதாரணமாகக் கருதினாலும் நாம்
எதிர்கொள்ளும் நவதாராளவாத கல்விச்சூழலில் இதுவே யதார்த்தமாக

காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஒரு ஆசிரியர்
சேவை வழங்குனராகவும் மாணவர் சேவை பெறுனராகவும் மாறுவதோடு
இவர்கள் இருவரும் இறுதி உற்பத்தியில் (தகுதி) மட்டுமே கவனத்தை
குவிப்பதோடு செயன்முறை (கற்றல் எனும் செயற்பாடு) என்பதில் கவனம்
செலுத்தப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவில் உருவாகிய உள்ளடக்கம்
சிறப்பான அறிவுசார் வெளிப்பாடு என்ற தோற்றப்போலியோடு, அதாவது
செம்மையாக்கம், சரியான மரபியல்பான வசனங்கள், ஆய்வொன்றை ஒத்த
சட்டகம், என காணப்படும் அதே வேளை சூழ்நிலைக்குப் பொருத்தமான
அசலான ஆய்வாக அமையாதிருக்கும் போதும் மாணவரதும் ஆசிரியரதும்
கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கும். பின்வரும் சூழ்நிலையையும் கூட
ஒருவர் கற்பனை செய்யலாம், தமிழில் அல்லது சிங்களத்தில்
மேற்கொள்ளப்படும் உள்ளீடு நிகழ்நிலை மொழிபெயர்ப்புக் கருவிகளால்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு செயற்கை நுண்ணறிவுத்
தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்யப்பட்டு விளைவுகளாக வரும் தரவுகள்
மீண்டும் நிகழ்நிலை மொழிபெயர்ப்புக் கருவிகளால் தமிழ் அல்லது சிங்கள
மொழிமூலத்துக்கு மாற்றப்படும் நிலையில் அவ்வாறான தரவுகள், அறஞ்சார்
நெறிநிலைகள் ஒருபுறமிருக்க, எத்தகைய வழிபொருளை கொண்டுவரும்
தரவுகளாக பிறப்பிக்கப்படுமென்று சிந்தித்துப் பார்க்கலாம். இது, அண்மைய
எதிர்காலத்தில் நடைபெறாதென நாம் நினைத்திருந்தாலும் இலங்கை
பல்கலைக்கழகங்களில் இந்நிலை தொடரும் நிலையே காணப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு, சந்தை மற்றும் அறிவுசார் ஏற்றத்தாழ்வுகள்.

முடிவுரையாக, நான் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உலகளாவிய
மூலதனத்தில் ஒன்றரக் கலந்திருக்கின்றது, கல்வியின் பண்டமாக்கற்
செயற்பாடு, உலகளாவிய அறிவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சார்ந்த
ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் பேசவிளைகின்றேன். செயற்கை நுண்ணறிவு
என்பது ‘சலனத்தை’ ஏற்படுத்தும் போலித்தோற்றத்தில் செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பம் காணப்பட்டாலும் அதனை இயக்குவதும் அதன்
புத்தாக்க தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் உலகிலுள்ள சில முக்கியமான
பலமான தொழில்நுட்ப நிறுவனங்களாகும். செயற்கை நுண்ணறிவின்
வருகையால் பல தொழில்வாண்மையுள்ள தொழில்கள் சவால்களுக்குட்படிருப்பதோடு, அவற்றில் ஏலவே செயற்கை நுண்ணறிவால்
பாதிக்கப்படாதென கணிக்கப்பட்ட தொழில்களான தானியக்க தொழில்கள்
கூட தற்போது சவாலுக்குட்பட்டிருக்கின்றன. மேலும், நான் ஏற்கனவே
குறிப்பிட்டது போல பண்டமாக்கப்பட்டுள்ள கல்வியை மாணவர்கள்
தகுதிகளாகவும் தரங்களாகவும் ‘கொள்வனவு’ செய்யும் நிலையை செயற்கை
நுண்ணறிவு மேலும் வலுவூட்டியிருக்கின்றது. இலங்கை அரசானது மாணவ
கடன்கள் எனவும் கல்வித்துறையிலிருந்து நிதியீட்டத்தை மீட்டுவது குறித்தும்
கவனம் செலுத்தும் நிலையில் இதனை ஊக்குவிக்கும் அமைப்பாக
உயர்கல்வி நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்ப
யுக்திகளும் மாறியிருக்கின்றன. இதன் வேளிப்பாடாகவே
விமசனங்களுக்குட்படும் தேசிய கல்விக் கொள்கை வரைவில் (NEPF)
டிஜிட்டல்மயமாக்கம் தொடர்பான அழுத்தமான பதிவுகளை காண வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இலங்கையை மேலும்
ஏற்றத்தாழ்வுகளும் சமமின்மைகளும் காணப்படும் இறுகிய அறிவுசார்
பொருளாதாரமாக மாற்ற முடியுமென்பதுவும் (இது வரையறுக்கப்பட்டதன்று)
இதனுள் முரண்நகையாக இலங்கை போன்ற நாடுகளின் மூலம் செயற்கை
நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை செம்மையாக்கல் மற்றும் பயிற்சி
வழங்குவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு ‘முதிர்ச்சியான’ நிலைக்கும் ‘சுய
நீட்சியை’ மேற்கொள்ளும் நிலைக்கும் உயரும் போது பலர் வேலைவாய்ப்பை
இழக்க நேரிடும். செயற்கை நுண்ணறிவுக்கான குறிமுறையேற்றத்தை
தாண்டி இவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உதாரணமாக, அண்மையில்
வெளிவந்த செய்தியொன்று ChatGPT செயலிக்குப் பின்னிருக்கும் OpenAI
நிறுவனம் எவ்வாறு மணித்தியாலத்துக்கு 2 டாலர்களை விடவும் குறைவான
ஊழியத்தை கென்யாவிலிருந்து பெற்று ‘நச்சு’ (இனவாதம், வெறுப்புப்பேச்சு,
பாலியல் வன்முறை போன்றன) விடயங்களை கண்டுபிடிக்கும் செயலியை
உருவாக்கியிருக்கின்றனர் விவரிக்கின்றது. இந்நிகழ்வு கென்ய தகவல்
தொழில்நுட்ப தொழிலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில்
இந்நிலையானது இவ்வாறான ‘நச்சு’ விடயங்களுக்கு வரலாற்றுரீதியாக
பலிக்கடாக்களாக பெரும்பாலும் கீழைத்தேய நாட்டவர்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் டிஜிட்டல் கழிவுகளை சுத்தமாக்கும்
நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இன்றளவில் உயர்கல்விப் புலத்தில் செயற்கை நுண்ணறிவானது எவ்வாறு
பொருத்தமானதென கூறப்படுகின்றதென்றால், பல்கலைக்கழக ஆசிரியர்களை
அவர்களது நேரம்போக்கும் செயற்பாடுகளான வினாத்தாள்களுக்கு புள்ளி
வழங்குதல், நெறி உருவாக்கச் செயற்பாடு மற்றும் பாடத்திட்ட
உள்ளடக்கங்களை விருத்திசெய்தல் போன்ற செயற்பாடுகளிலிருந்து
விடுதலை அளித்து மாணவ ஆசிரிய இடையீட்டை அதிகரிப்பதாக
காட்டப்படுகின்றது. இருப்பினும், இவ்வாறான தொழில்நுட்பங்கள்
கல்விப்புலத்தை ஊடுறுவும் வர்த்தக எல்லைகள் வித்தியாசமான
யதார்த்தத்தை வலியுறுத்துகின்றன. இலங்கை போன்ற கல்விச்சந்தையில்
வலிதற்ற கண்கானிப்பும் ஒழுங்குமுறை விதிகளும் இல்லாத, பெருந்தொற்று
நோய்க்காலத்துக்கு பின்னர் தரமற்ற, வெறும் கட்டளைகளை மட்டும் வைத்து
இயங்கும் நிகழ்நிலை பாடநெறிகள் மலிந்துகிடக்கும் நாடொன்றில் மனித
ஊழியத்துக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை பதிலீடாக்கும் இலாப
நோக்கிலான கல்வி முதலீட்டாளர்கள் இருப்பது வெளிப்படை. கீழைத்தேய
நாடுகள் இவ்வாறான செயற்கை தொழில்நுட்பங்களில் அதிகம்
தங்கியிருக்கும் வேளையில் இவை பயன்படுத்தும் பாரிய மொழி மாதிரிகள்
(LLM) மூலம் உருவாக்கப்படும் போலியான ‘உலகளாவிய நனவிலி நிலை’
உருவாவதும் தவிர்க்க முடியாதது. தற்போதைய சூழ்நிலையில்
இலங்கையின் கல்விப்புலத்தில் இது தூர தரிசனமே. இருப்பினும்
தற்போதைய எமது அமைப்புகளின் செயன்முறையை வலுவாக மாற்றும்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை குறைக்கும் செயற்றிட்டங்கள் எமக்கு
எதை கற்பிக்கின்றதென்றால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால்
மிக நுட்பமாக உலக மூலதனம் என்பது பெருப்பிக்கப்பட்டு வருகின்றது
என்பதுவே.