அகிலன் கதிர்காமர்
பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கும் அறிவு உற்பத்திக்குமான திறந்த
தளங்களாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவை சுதந்திரம் மற்றும்
ஜனநாயகத்தின் அரண்களாக தொழிற்பட வேண்டியவையாக
கொள்ளப்படுகின்றன. இருப்பினும் யதார்த்தத்தில் பல்கலைக்கழகங்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தமக்குள்ளேயும் இடையேயும்
அதிகாரப்படிநிலைகளை கொண்டியங்கும் அமைப்புகளாக காணப்படுகின்றன.
இவ்வியங்கியல் கண்டிக்கத்தக்க செயல்களான பாலியல் துஷ்பிரயோகம்
மற்றும் பகிடிவதை போன்ற வன்முறைகளை வெளிப்படுத்துவதோடு
இவ்வாறான ஒடுக்கும் கலாசாரங்களை கண்டும் காணாததுபோலிருக்கும்
பல்கலைக்கழக நிர்வாகங்களையும், சமூகத்தையும், மாணவ
அமைப்புகளையும் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இவ்வாறான
ஒடுக்குமுறைகள் எதிர்க்கப்பட்டும் வருவதோடு இளந்தலைமுறை
ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகங்களுக்குள்ளே
முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டும்
வருகின்றனர். இந்தவகையில் பார்க்கும் போது, பல்கலைக்கழகங்கள்
அரசினதும் சமூகத்தினதும் அரசியல் மற்றும் சமூக நடைமுறைகளை
ஒடுக்குமுறை மற்றும் எதேச்சதிகார வழிகளில் அதன் மாறாத
தன்மையிலும், ஜனநாயகப்படுத்தல் மற்றும் எதிர்த்தலை அதன் புரட்சிகர
வடிவிலும் பிரதிபலிக்கும் தளங்களாக இருக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களும் மாணவ இயக்கமும் கடந்த மாதங்களாக
நடந்து வரும் அமைப்பு மாற்றத்தை கோரும் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில்
இருக்கின்றார்கள். அரசையும் கடந்த அரசாங்கங்களையும் கூட
கூண்டிலேற்றும் இப்ரந்த போராட்டத்தின் இயக்கத்தை பல்கலைக்கழக
ஆசிரியர்களும் அவர்கள் இணைந்த்துள்ள தொழிற்சங்கமும் பலமாக
ஆதரித்து வருகின்றன. மாணவத் தலைவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் PTA கீழ் கைது செய்தும் அச்சட்டத்தை புணர்வாழ்வுக்கான
மசோத உட்பட இன்னோரன்ன சீர்திருத்த முன்மொழிவுகளின் அறிமுகத்தால்
உருவாகியுள்ள ஒடுக்குமுறையின் அலைகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக
சமூகத்திற்கு பாரிய சோதனைகள் எழுந்துள்ளது. எமது நாட்டில் ஏற்பட்டுள்ள
எதிர்ப்பதற்கு கடினமான நெருக்கடியான காலமொன்றில் பல்கலைக்கழக
சமூகங்களின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்பு பற்றியதே இந்த
ஆக்கமாகும்.
அரச எந்திரங்கள்
அரசின் விவகாரங்களில் பல்கலைக்கழகங்கள் ஏன் கரிசனையாக இருக்க
வேண்டுமென்ற கேள்வி எழுவது வழமையானது. பல்கலைக்கழகங்கள் தமது
கற்றல் கற்பித்தலூடாக மாணவர்களை ஊழிய சந்தைக்கு தயார்படுத்த
வேண்டிய பணியை செய்ய வேண்டுமேயொழிய ஆசிரியர்களும்
மாணவர்களும் அரசை எதிர்த்தோ மாற்றத்தை வேண்டியோ போராட
வேண்டிய அவசியமில்லையென விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும்,
யதார்த்தத்தில் அரசிற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மறுக்கவொண்ணாத
உறவொன்று காணப்படுகின்றது.
மார்க்சிய தத்துவவாதியான லூயீ ஆல்துஸர் அவர்கள், பாடசாலைகள்
மற்றும் அறிவுக்கூடங்களை கருத்தியல்வாத அரச யந்திரங்களாக
பரந்தளவில் வரையறுத்திருக்கின்றார். அதாவது, பல்கலைக்கழகங்கள் அரசின்
செயற்பாடுகளையும் நோக்கங்களையும் கருத்தியல்ரீதியாக எடுத்துச்செல்லும்
அமைப்புகளாகவும், அரசின் கூட்டணியோடு சமூகத்தில் ஒழுங்குமுறையை
பேணும் அமைப்பாகவும், கல்வி மற்றும் மாணவர்கள், பட்டதாரிகள் உட்பட
சமூகத்தில் “கற்றோரின்” பங்கு என்னவென்பதை வரையறுக்கும்
அமைப்பாகவும் இயங்க வேண்டும் எனக் கொள்ளலாம். இருப்பினும்,
ஆல்துஸரின் கருத்துப்படி அரசு- சமூக உறவுமுறையின் மீள் உற்பத்திக்கான
இச்செயன்முறை மறுப்பிற்கான வடிவத்தையும் பெறலாம்:
பல்கலைக்கழகங்கள் அரசின் வலியுறுத்தல்களையும் கொளகைகளையும்
தொடர்ந்தும் ஆலோசித்தும், கேள்விக்குட்படுத்தியும், விவாதத்துக்குட்படுத்தியும், எதிர்த்துப் போராடியும் கருத்தியல்ரீதியான
போராட்டத்தில் ஈடுபட்டே வருகின்றன. இத்தகைய கருத்தியல்ரீதியான
போராட்டங்கள் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இட்டுச்செல்லும்.
தற்போதிருக்கும் கேள்வி என்னவென்றால் இவ்வாறான கருத்தியல்ரீதியான
போராட்டங்கள் வன்முறையான மோதல்களை எதிர்கொண்டால்
என்னவாகும்? இன்னொரு வகையில் சொல்வதாயின், ஆல்துஸரின்
வார்த்தைகளில் அரசின் ஒடுக்குமுறையான யந்திரங்களான பொலிசார்,
இராணுவத்தினர் மற்றும் குற்றவியல் நீதி முறை ஆகியன பல்கலைக்கழக
அமைப்புகளின் மீது ஏவப்பட்டால் பல்கலைக்கழகங்களின் முற்போக்கான
சமூகத்தினர் எவ்வாறு துலங்கலாம்?
அறிவுசார் பொறுப்பாண்மை
கடந்து போன நான்கு ஆண்டுகளும் கொந்தளிப்பாக இருந்தன. அரச
அதிகாரத்தின் மிக வெளிப்படையான பயன்பாடு மற்றும் அரசின்
அதிகாரத்தை கைப்பற்றல் மற்றும் தக்கவைத்தலுக்கான அப்பட்டமான
செயற்பாடுகள் அரசின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டின. 2018
ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் சதியின் விளைவால் சட்டத்துக்கு
முரணாக பிரதமர் நியமிக்கப்பட்டமையும் அதனை தொடர்ந்து உருவான
எதிர்ப்புகளும், 2019 ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களும் அதன்
பிற்பாடு செரிவாக்கப்பட்ட ராணுவமும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட
பாரிய சிக்கல்களும், பெருந்தொற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியும் , கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி (KNDU) மசோதாவுக்கு
எதிராக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டமும் அதன் விளைவாக
ஆளும் அரசாங்கம் தம் மக்கள் ஆதரவையும் சட்டபூர்வத்தன்மையையும்
இழந்தமையும், இவ்வருடம் இடம்பெற்ற போராட்ட அலைகளின் விளைவாக
பிரதமரும் பின்னர் அந்நாள் ஜனாதிபதியும் பதவிவிலகியமை, எவ்வித
சட்டபூர்வத்தன்மையுமின்றி புதிய ஜனாதிபதி நியமனம் பெற்றமை ஆகிய
சில நிகழ்வுகள் இக்கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தன. அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களில் பல்கலைக்கழக
வட்டாரங்களும் குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இதன் போதான
பல்கலைக்கழக வட்டாரங்களின் செயற்பாடுகளும் தவிர்த்தல்களும் அவர்கள்
இம்மாற்றங்களில் பங்காளிகளாக மாறுகின்றனர். ஏகாதிபத்தியமும் அரச
நிறுவனங்களின் அரசியல்மயப்படுதலும் அறிவுசார் கலாசாரத்தில் தாக்கம்
செலுத்துவதையும் அறிவுசார் சுயாதீனத்தன்மை வீழ்ந்து வருவதையும் நாம்
காண்கின்றோம். அரசின் பாதுகாப்பு சார்ந்த “பயங்கரவாத”
கலந்துரையாடலுக்கு பலியாகியுள்ள பல்கலைக்கழக வட்டாரங்களால்
முஸ்லிம் மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.
இருப்பினும் போராட்டத்தின் பின்னைய காலங்களில் கலந்துகொண்டாலும்
பல்கலைக்கழக ஆசீரியர்களால் KNDU போராட்டம் மேலும் முன்ன்ணிக்கு
கொண்டுவரப்பட்டதை மறுக்கவியலாது. இந்தவகையில் பார்க்கும் போது,
தற்போது மாணவ தலைவர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராக
பல்கலைக்கழக வட்டாரங்கள் வாய்திறவாமல் இருப்பதானது அவர்களின்
அறிவுசார் பொறுப்பாண்மை துறப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.
எதிர்க்கும் வழி
தற்கால அரசுகள் சமூகத்தை விட மேலாதிக்கதை நோக்கியே
செயற்படுவதோடு அதனை பலவந்தம் மற்றும் இணக்கமான வழிகளிலும்
கருத்தியல்ரீதியான கைப்பற்றலை போலவே கொடுமையான
அடக்குமுறையான வழிமுறைகளிலும் அடைய எத்தனிக்கின்றன.
இருப்பினும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை இலங்கை அரசின்
இவ்வாறான இயலுமைகளில் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. தற்போதைய
ஆட்சியாளார்கள் தமம்து நவதாராளவாத அரசாங்கங்கள் மற்றும் அவையால்
நெருக்கடி காரணமாக கடைபிடிக்கப்படும் சிக்கனமான கொள்கைகள்
காரணமாக தமது சமூகத்தளத்தை விரிவுபடுத்தவும் கருத்தியல்ரீதியாக
எதிர்கொள்ளவும் அரச வளங்களை பயன்படுத்த முடியாமல் இருப்பதோடு,
அதைவிட சிக்கலான விடயமாக அரசே தமது சமூகத்துடன்
கருத்தியல்ரீதியாக ஈடுபட முடியாதவாரான சூழல் உருவாகியுள்ளது.
இன்னொரு வகையில் சொல்வதாயின், அரசுக்கு அடக்குமுறையை அதிகரிப்பதை தவிர்ந்த ஏனைய வழிமுறைகள் கைவசம் இல்லையென்ற
சூழல் உருவாகியுள்ளது. இதையே நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக
கோட்ட கோ கம (GGG) போராட்ட தளத்தின் மீது ஜூலை 9இலும் அதை
தொடர்ந்த்தான ஜனநாயகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள்
மூலமாகவும் கண்டு வருகின்றோம்.
கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட போராட்ட இயக்கத்தில்
துடிப்புடன் இருந்த இளைஞர்களை கைதுசெய்தமையும் மூன்று மாணவத்
தலைவர்களை PTA சட்டத்துக்கு கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தமையும்
இதன் முதற்கட்ட செயற்பாடுகளாகும். அதன் பின்னர், போராட்டங்களை
ஒடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கான அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டு பின்னர் அவை பலத்த எதிர்ப்பின் விளைவாக வாபஸ்
வாங்கப்பட்டமை, போராட்டங்கள் நடத்தப்பட முன்னர் அறிவித்தல்
மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கொண்டுவரப்பட்ட அறிவுறுத்தல்கள்,
அனைத்து குற்றங்களுக்கும் கீழ் கைதானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான
மசோதா சமர்ப்பிக்கப்பட போன்றன பொதுமக்களுக்கிடையே பயத்தை
உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும். நாட்டில்
பரந்தளவில் வேரூன்றியுள்ள அரசியல், பொருளாதார, சமூக
நெருக்கடிகளுக்கு எவ்வித வினைத்திறனான தீர்வுகளையும் வழங்க முடியாத
நிலையில் இருக்கும் அரசாங்கம், தனது அதிகாரத்தை தக்கவைக்க ஒரே
கருவியாக நாட்டின் இராணுவத்தை சொந்த மக்களின் மீதே ஏவி விடும்
நிலையானது நாட்டில் ஏற்பட்ட நீண்ட சிவில் யுத்தத்தை
நினைவுறுத்துகின்றது.
விக்ரனசிங்க- ராஜபக்ஷ அரசாங்கத்தின் மாணவ இயக்கங்களை
தகர்ப்பதற்கான கூட்டு முயற்சிகள் பல்கலைக்கழக வட்டாரங்களை
அரசிர்கெதிரான எதிர்ப்புக்கான வழியில் கொண்டு நிறுத்தியுள்ளது. கடந்த
காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் பல்கலைக்கழக
அமைப்பின் ஜனநாயகத் தளங்கள் மீது பாதிப்பு செலுத்துவதோடு மாணவ
அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை இலவசக்கல்வி மீதான தாக்குதலாக
காணப்படுகின்றது. உண்மையில், கடந்த தசாப்தங்களில் மாணவ இயக்கங்களின் தொடர்ச்சியான உறுதியான போராட்டமே இலவசக்கல்வி
தக்கவைக்கப்படுவதற்கான காரணம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தற்போதைய சிக்கலான நிலையில் மிக முக்கியமான கேள்வி, இவ்வாறான
முரன்பாடுகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எடுக்கும்
நிலைப்பாடு என்ன: அவர்கள் மௌனிகளாக அரசின் ஒடுக்குமுறைக்கு
ஆதரவாக இருப்பார்களா அல்லது தம்மை போராட்ட இயக்கங்களின்
பங்காளிகளாக மாற்றுவார்களா?