“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?”

ஹஸினி லேகம்வாசம்

கலைப்பிரிவைச் சார்ந்தோர் தற்போது மேற்கூறிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. கேள்விக்கான விடைகளோ எதுவித தெளிவையும் தருவதாக இல்லை. ஆகவே முதலாவதாக இந்தக் கேள்வியையும் அதனை உருவாக்கியுள்ள தவறான கருத்துகள் மூன்றையும் நோக்குவோம்: முதலாவது, ஒருவர் இறுதியில் என்ன தொழிலில் ஈடுபடுகிறாரோ அது அவரது கல்வியின் நேரடிப் பிரதிபலிப்பு என்ற ஊகம். இரண்டாவது, பட்டதாரிகளின் தொழில் விருப்பங்கள் உட்பட தொழிற்சந்தையின் பல உண்மை யதார்த்தங்களை “வேலைக்கமர்த்த முடியாமை” என்ற விவரணம் மறைத்துள்ளது. மூன்றாவது, இக்கேள்வியானது மூன்றாம் நிலைக் கல்வியின் ஆதாயங்களை வெறும் பொருளாதாரப் பலன்களின் அடிப்படையில் மட்டுமே கருத்தில் கொள்வதோடு எமது சிந்தனைகளையும் வியாபார ரீதியாக ஒடுக்க விளைகிறது.

மூன்று தவறான கருத்துக்கள்

 இங்கு முதலாவது பிரச்சினையைக் கருத்தில் கொள்வோம். ஒருவரது கல்வித்தகைமைகளுக்கும் அவர் ஈடுபடும் தொழிலுக்கும் வலுவான தொடர்பு இல்லாதிருப்பது சமூகத்தை மேலோட்டமாக நோக்கும் போதே தெளிவாகப் புலப்படுகின்றது. அண்மைக்காலத்தில் பிரபலமான ஒரு குளியலறைச் சாதன விற்பனைத் தொடரின் பிராந்திய அலுவலக முகாமையாளராகக் கடமையாற்றும் விஞ்ஞானப் பட்டதாரி ஒருவரை என்னால் சந்திக்க முடிந்தது. எத்தனையோ விவசாயத்துறைப் பட்டதாரிகள் சிவில் சேவைகளைச் சென்றடைகிறார்கள். இவற்றுக்கு மேலதிகமாக அரச நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கின் மூலம் பெறப்படும் கேள்விக்குரிய நியமனங்கள் ஆற்றலடிப்படையில் வேலைக்கமர்த்தப்படுதல் என்ற கருத்தை சந்தேகத்துக்குரியதாக்கி விடுகின்றன.

இரண்டாவதாக வேலையொன்றைத் தேடும் அனைத்துக் கலைப் பட்டதாரிகளையும் “வேலைக்கமர்த்தும் தகவில்லை” என்ற பிரிவுக்குள் உள்ளடக்குவது, அவர்களின் வேலையற்ற நிலைக்குக் காரணம் அவர்களது கலைப்பட்டமே என்ற முடிவை உருவாக்கிவிடுகிறது. இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகும். வேலை கோரி நின்ற 40 வயது கலைப்பட்டதாரி ஒருவரை “இவ்வளவு காலமும் என்ன செய்தீர்கள்” என எமது ஜனாதிபதி வினவிய சம்பவம் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜனாதிபதியை அவரது வாகனம் கொண்டு செல்வதற்குள் பதிலளிக்கவோ நேரம் இல்லை. எனினும் 40 வயதுவரை இந்த நபர் உண்மையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடாது இருந்தாரா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமூகம் மற்றும் குடும்பங்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க பட்டதாரிகளும் அரசாங்க வேலைகளையே விரும்புவதோடு முறையான “வேலை” என்றால் அது அரசதுறையில் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தும் அவர்கள் மத்தியில் நிலவுகின்றது. எனினும் அரசாங்க வேலை ஒன்றைப் பெற முன் உள்ள காலப்பகுதியில் உழைப்பதற்கு வேறு தொழில்களில்களிலும் முறைசாராப் பொருளாதாரத்திலும் கூட அவர்கள் ஈடுபடுகிறார்கள். ஆகவே பொதுவாகக் குறிப்பிடப்படுவதுபோல் இவர்கள் வேலைக்கமர்த்தும் தகவற்றவர்களோ, ஆற்றலற்றவர்களோ இல்லை என்பதற்கு இது சான்றாக அமைகிறது.

மூன்றாவதாகக் கல்வியை ஒரு பொருளாதாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருப்பது அதன் மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தியைப் புறக்கணிப்பதோடு, பல்கலைக்கழகங்களின் தர்க்க ரீதியான போக்கையும் பயனற்றது என முத்திரை குத்திவிடுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலை பல்கலைக்கழகங்கள் தர்க்க ரீதியான சிந்தனைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் களமாக அமைவதை மட்டுப்படுத்துகிறது. தர்க்க ரீதியான சிந்தனை என்பது பல்கலைக்கழகங்கள், குறிப்பாகக் கலைப் பீடங்கள் தமது நிலவுகையை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாடு என்ற கருத்து தவறானதாகும். உண்மையில் கல்வியின் குறிக்கோள் பாடம் தொடர்பான ஒரு ஆழமான விளக்கத்தை அளிப்பதோடு நின்றுவிடாது சமூகத்தை ஒரு தர்க்க ரீதியான கண்ணோட்டத்தில் பார்வையிடும் ஆற்றலை மாணவர் மத்தியில் உருவாக்குவதுமாகும். கல்வியானது இக்குறிக்கோளை இழக்கும்போது அது அர்த்தமற்ற வெறுமையான தகவல் பரிமாற்றமாகவே அமைகின்றது. இவ்வாறான ஒரு நிலையை எமது மூன்றாம் நிலைக் கல்வி எட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது “ஆற்றல்கள்” “தேர்ச்சிகள்” போன்றவற்றின் அதீத தேடலுக்கு மத்தியில் சிந்திக்கும் தன்மையற்ற பட்டதாரிகளின் உருவாக்கத்தில் தென்படுகின்றது.

ஆற்றல்களும்” STEM கல்வியும்

குறைபாடுள்ள மேற்கண்ட கேள்வி அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்குவதற்கு ஆற்றல்களின் மேம்பாடு தான் தேவை என்ற குறைபாடுள்ள தீர்வை உருவாக்குவதிலேயே வெற்றி கண்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் “ஆற்றலின்மை” என்ற குறை மட்டும் இல்லாதபட்சத்தில் பல்கலைக்கழகங்கள் வழங்குவதிலும் பார்க்க மேலதிகமான தேர்ச்சிகளைக் கொண்ட பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன போலும்!  இவ்வாறான மாற்றுத்தீர்வுகள் இந்த கோவிட்- 19 நோய்த் தொற்று நிலையிலும் கூட முன்வைக்கப்படுகின்றமை வேடிக்கைக்குரியது. ஏற்கனவே வீழ்ச்சிகண்டு வருவதற்கு மேலாக இந்த நோய்த்தொற்றால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் எமது பொருளாதாரம் தற்சமயம் உள்ள தொழிலாளர்களையே உள்ளடக்கத் திராணியற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆற்றல்கள் எவ்வளவு இருந்தாலும் இன்னும் அதிகமான வேலையாட்களை அதனால் உள்ளடக்க முடியும் என்பது இயலாத விடயமாகும்.

இலங்கையின் 2020 நிதித்திட்டமானது தேசிய அளவில் STEM கல்வியை மேம்படுத்த நிதிகளை ஒதுக்கியுள்ளது. பொருளாதாரத்தினால் இந்த “ஆற்றல்கள்” அனைத்தையும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யாது கல்வியை இவ்வாறு பாரபட்சப்படுத்துவதன் விளைவுகளை அறிய இந்தியாவை நோக்கினாலே போதும். உதாரணமாக பொறியியலுக்கு மட்டுமே சுமார் 3000 பல்கலைக்கழகங்களைக் கொண்ட தமிழ் நாட்டில் 2018 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 150 000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையில்லாத நிலையிலுள்ளார்கள் என ‘த ஹின்டு’ குறிப்பிடுகிறது. முதலாம் உலக நாடுகளுக்கே தகவல் தொழில்நுட்பத் திறன்களின் சந்தையாகவுள்ள இந்தியா போன்ற பாரிய பொருளாதாரத்தினால் கூட அது உருவாக்கிய “ஆற்றல்” கொண்ட பட்டதாரிகளை உள்வாங்க முடியாதுள்ளது. இந்த நிலையில் இலங்கையால் மட்டும் இவ்வாறான ஒரு காரியத்தைச் சாதிக்க முடியும் எனக் கருதுவது பொய்யான ஒரு நம்பிக்கையாகும்.

தவறான கேள்விகளுக்கான தவறான பதில்கள்

உயர் கல்வி உட்பட எமது கல்வி முறையானது சீர்திருத்தப்பட வேண்டும் என்பது பொருள் மயக்கமின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எனினும் இச் சீர்திருத்தமானது சரியான காரணங்களுக்காகவும், இப் பிரச்சினையில் ஈடுபாடு கொண்ட பொருத்தமான பங்குதாரர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலையின்மை என்ற தவறான கருத்துக்கான கேள்விக்கு வேலை வாய்ப்புகளைப் பல்வகைப் படுத்தி அதிகரிப்பதையும் வேலைக்கமர்த்தும் செயன்முறையை மாற்றியமைப்பதையும் விடுத்து, கல்விச் சீர்திருத்தத்தால் மட்டும் பதிலளிக்க முனைவது சிறிதளவு பயனையே அளிக்கும்.

இவ்வாறான வாதங்களுக்கு மத்தியில் எமது வாழ்க்கை முறைகள் வர வர வியாபாரத்துவமான போக்குகளால் அதிகம் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றமையை நாம் கவனிக்கத் தவறுகிறோம். மூன்றாம் உலக நாடு என்ற வகையில் உலகின் பாரிய பொருளாதார ஜாம்பவான்களுக்குப் பங்களிக்கும் ஒரு சிறிய பின் தங்கிய பொருளாதாரத்தையே நாம் கொண்டிருப்பதை உணர வேண்டும். ஆகவே சந்தைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு எமது கல்வி முறையை நாம் மாற்றியமைக்க முயலும் போது யாருடைய சந்தைக்காக அதனை மாற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எம்மால் தனித்து இயங்குவது இயலாத விடயமாகும். இருப்பினும் உலகப் பொருளாதாரத்துக்காக அடியாட்களை உருவாக்குவது தான் எமது குறிக்கோளாக அமைய வேண்டுமா? வெளி நாட்டுக் கேள்விகளுக்காக எமது சொந்தப் பொருளாதாரத்தை முடக்குவது, நாம் முற்றாகத் தங்கியிருக்கும் உலகின் பாரிய பொருளாதாரங்களில் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் எமது பொருளாதரத்தை மேலும் பாதிக்குமல்லவா?

மாற்று விதத்தில் கையாளப்படும் பொருளாதாரமானது “வேலைக்கமர்த்த முடியாத கலைப்பட்டதாரி” மீது ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தை உருவாக்கும். இவ்வாறான ஒரு மாற்று வழி உருவாக வேண்டுமெனின் எமது சிந்தனைப் போக்கானது வியாபார நோக்கிலிருந்து வெளிவருவதோடு உடனடிப் பொருளாதார மதிப்பற்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே நாம் அனைவரும் ஒரு கணம் நிற்போம். சிந்திப்போம்.

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்