கலைப்பீடங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும்- ஒரு மறுமொழி
பர்ஸானா ஹனீபா

ஃபர்ஸானா ஹனிஃபா

சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னர் நான் குப்பி அமர்வில் எழுதிய ஆக்கம்
எவ்வாறு தற்போதைய நிலையில் கல்வித் தகுதி குறித்த சட்டகம் உட்பட தர
உறுதிப்பாட்டு நியமங்கள் என்பன மானிட மற்றும் சமூகவியல் துறை சார்ந்த
அறிவில் (H மற்றும் SS) குறைந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன என
எழுதினேன் (தி ஐலன்ட், 1 பெப்ரவரி, 2022). இதற்கு மறுமொழி பகர்ந்த
ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேரா. சுசிரித்
மென்டிஸ், (H மற்றும் SS) மூலம் பெறப்படும் அறிவு மிக
முக்கியமானதெனவும் இலங்கை பல்கலைக்கழக அமைப்பு மானுட மற்றும்
சமூகவியல் துறைகளில் தரம்வாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்கவில்லை
எனவும் விவாதித்திருந்தார் (தி ஐலன்ட், 16 பெப்ரவரி, 2022). இதனால்
இக்கல்வியியலாளர்களால் தற்போது நவதாராளவாத போக்கில்
உருவாக்கப்படும் கல்விக்கொள்கைகளை சரியாக ஆராயவோ விமர்சிக்கவோ
முடியாமலிருப்பதாகவும் மேலும் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து எழுதிய
அவர், மானுட மற்றும் சமூகவியல் பீடங்கள் அவை செய்ய வேண்டிய
பணிகளை, அதாவது பல்கலைக்கழகங்களுக்கு “ஆன்மாவும்
உயிருமாயிருக்கும்” பணியை ஆற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பீடங்கள் நெருக்கடிக்குள் இருக்கின்றன என்ற பேரா. மென்டிஸ் அவர்களின்
கருத்து உண்மையானதும் இந்த இடையீடு வரவேற்கத்தக்கதுமாகும்.
பேராசிரியர் குறிப்பிட்டதை போல கலை சார்ந்த கற்கைகள் மீதான
சீர்திருத்தப்பணி என்பது விமர்சன ரீதியில் அணுகப்பட வேண்டியதென்பதை
நான் ஒப்புக்கொள்கின்றேன். மானுட மற்றும் சமூகவியல் கற்கைகள்
வழங்கும் அறிவை மற்றும் உலக கண்ணோட்டத்தை தவறாக
புரியப்பட்டுள்ள “தொழில் திறன்களுடனான” கற்பித்தல் செயற்பாடுகள்
அழித்துக்கொண்டு வருகின்றன. இருப்பினும் பேராசிரியர் குறிப்பிட்ட சில
விடயங்களோடு ஒத்துப்போக முடியவில்லை. மற்றும் பீடங்களின் மீது அவர்
வைக்கும் பாரிய பொறுப்பு, வரலாற்றுரீதியாக கலைப்பீடங்கள்

வளர்ச்சியடைந்து வந்த பாதை குறித்த போதிய புரிதலற்ற நிலையோடும்
பரந்தளவிலான இடையீடுகள் தேவைப்படும் அமைப்பு சார்ந்து காணப்படும்
நெருக்கடிக்கு தனிப்பட்டரீதியில் மற்றும் பீடங்களின் தோள்களில் சாட்டும்
படியுமாக இருக்கின்றது. கல்விச் சீர்திருத்த செயற்றிட்டங்கள் தொடர்பாக
பொதுவெளியில் காணப்படும் வகுப்பு சார்ந்த இயங்குநிலையும் உயர்வர்க்க
அரசியலும் பற்றிய பேராசிரியரின் விமர்சனத்தில், அதற்கேயுரிய
முற்கோள்களை அடையாளம் காணாமல் இக்கலந்துரையாடலை மேலும்
விரிவுபடுத்த முடியாது.
கலைக்கற்கைகளில் நெருக்கடி காணப்படும் தகவல் நமக்கு புதிதல்ல.
கலைப்பீடங்களின் உறுப்பினர்களாக இருக்கும் எங்களுக்கு நிறைய
எதிர்பார்ப்புகள் இருக்கின்றன, எமது பீடங்கள் சிறந்த ஆய்வு நிலையங்களை
கொண்டிருக்க வேண்டும், பீடங்களில் இணையும் மாணவர்கள் விமர்சன
சிந்தனையிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இங்கு
காணப்படும் பால்மை சார்ந்த உறவுகள் கடந்து போன நூற்றாண்டில்
இருப்பதைப் போலல்லாது இருக்க வேண்டும், எமது பீடங்கள் சிங்கள
பௌத்த ஆதிக்கத்தின் நிலையங்களாக காணப்படாதிருக்க வேண்டும்,
இனப்பல்வகைமை கொண்ட பீடங்களாகவும் நாட்டில் காணப்படும்
இனரீதியான நெருக்கடிகள் குறித்த பரந்த கலந்துரையாடல்களை
முன்வைக்கும் இடங்களாகவும் இருக்க வேண்டும், கலைசார்ந்த கற்கைகளின்
பட்டப்பின்படிப்பு நிலையங்கள் உரிய முறையில் இயங்குவனவாக இருக்க
வேண்டும், மிக முக்கியமாக, தோல்வியடையும் மேற்கின் மாதிரிகளுக்கு
ஒப்ப எமது பீடங்களை நவதாறாளவாதமயப்படுத்தும் செயற்பாடுகள்
வெற்றிகரமாக எதிர்க்கப்பட வேண்டும். எமது பல்கலைக்கழகங்கள் அடைந்து
வரும் தோல்வி, அவை குறித்து பொதுமக்களுக்கிடையில் காணப்படும்
நிலைப்பாடுகள், அவர்கள் கேட்கத்தவறும் கேள்விகள்,
கொள்கைவகுப்பாளர்கள் விடையளிக்கத்தவறும் பதில்கள் பற்றிய எமது
இடையீடுகளின் குப்பி ஆக்கங்களாக வெளிவருகின்றன.
கலைப்பீடங்களின் தற்போதைய நிலைக்கு பல வரலாற்று ரீதியான
காரணங்கள் உண்டு. பேராசிரியர் மென்டிஸின் விமர்சனம்

கருத்தோட்டமுள்ள ஒன்றாக காணப்பட்டாலும் அவர் எடுத்த நிலைப்பாடு
கலைப்பீடங்கள் குறித்து முன்வைக்கப்படும் வழமையான விமர்சனங்களைப்
போலவும் கடந்த காலங்களில் மானிட கற்கைகள் (முக்கியமாக ஆங்கில
மொழியிலான கற்கைகள்) விருத்தியடைந்திருந்த நிலையை
நினைவில்கொண்டு முன்வைக்கப்படும் கருத்துகளாகவும் காணப்படுகின்றன.
ஸ்வபாஷா போன்ற விடயங்களில் இருக்கும் ஈடுபாட்டை ஏற்படுத்திய
காலனித்துவ எதிர்ப்பு கோட்பாடுகளை ஒழுங்குமுறையானதா எனக்கேட்கும்
பேராசிரியர், அத்தகைய கோட்பாடுகளின் முழுமையான தத்துவங்களை
புரியாமல் பயன்படுத்தி ஆதரவளிக்கும் சுதேசத்துவத்தை எண்ணி
இரங்குகின்றார். சுதேச சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுக்கும்
கல்வியியலாளர்கள் வழமைகளுக்கு மீரி சிந்திக்க முடியாதவர்களாக
இருப்பதோடு உலக வளர்ச்சியை குறித்த தெளிவற்றவர்களாகவும் இருப்பதாக
இவர் சாடுகின்றார்.
இவரது விமர்சனங்களில் பல உண்மையானதாகவும் ஏலவே குப்பி
ஆக்க‌ங்களில் பேசப்பட்டதாகவும் இருக்கின்றன (பார்க்க, ஹர்ஷன
ரம்புக்வெல்ல 23 நவம்பர், 2021). கலைக் கற்கைகளில் உள்ள நெருக்கடிகள்
பற்றி குமுது குசும் குமார (2013) மற்றும் பிரபா மனுரத்ன (2018) ஆகியோர்
கணிசமானளவு பேசியிருக்கின்றனர். தேசிய கொள்கையாக மாற்றப்பட்ட
ஸ்வபாஷா எவ்வாறு பல்கலைக்கழக கல்வி அமைப்பை புரட்டிப்போட்டது
என குமார எழுதியிருக்கின்றார். H மற்றும் SS கற்கைகளை தேசிய
மொழிகளில் மாத்திரமே கற்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை ஸ்வபாஷா
மூலம் உருவாக்கப்பட்டதால் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில்
போதுமான கற்றல் கற்பித்தலுக்கான சாதனங்கள் இல்லாததனால்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து வெளியேறும்
நிலை ஏற்பட்டதை குமார் சுட்டிக்காட்டுகின்றார். ஏனெனில் பல்கலைக்கழக
கற்கைகள் பெரும்பாலும் விரிவுரையாளர்கள் நடத்தும் விரிவுரைகளிலும்
அவர்களால் வழங்கப்படும் குறிப்புகளிலுமே தங்கியிருக்கின்றன.
கல்வித்துறையின் கொள்கைவகுப்பாளர்கள், H மற்றும் SS துறைகளில் தேசிய
மொழிகளில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கும் அதனால் தேசிய மொழிகளில்
உருவாகும் அறிவுக்கும் ஆதரவும் நிதியுதவியும் வழங்கத்தவறியதோடு

தேசிய மொழிகளுக்கு கற்றல் கற்பித்தல் சாதனங்களை மொழிமாற்றம்
செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இன்று வரை
கலைப்பீடங்களுக்கு இந்நிலை தொடர்கின்றது: கல்வியின் படி மாணவ,
ஆசிரிய விகிதம் 10:1 ஆக இருக்க வேண்டும், ஆனால் கலைப்பீடங்களில்
இது 18:1 ஆக இருக்கின்றது. சிங்களம் பேசும் கல்வியியலாளர்களின்
சுதேசத்துவத்தை ஆராயாமல் இவ்வாறான கொள்கைகளுக்கு வழிவகுத்த
அமைப்புசார் காரணிகளையும், அவர்கள் செயற்படும் வளங்களை
வரையறுப்பதையும் ஆராய்வது கபடத்தனமான செயலாகும். மேலும்,
இவ்வாறான கொள்கைகளைத் தாண்டியும் உள்நாட்டு
பல்கலைக்கழகங்ல்களில் மிளிர்ந்த ஆளுமைகளை அங்கீகரிக்கும்
முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது நிதர்சனமாகும்.
H மற்றும் SS கற்கைகளுக்கான சிறப்பான பயிற்சிகளுக்காக‌ ஆங்கில அறிவு
அத்தியாவசியமானதென்பது யாவரும் அறிந்ததே. இலங்கையின் மத்தியதர
வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் பேசும் திறமை தனிச்சிறப்பு, திறமை மற்றும்
நம்பிக்கையான நடத்தையோடு இணைத்து பாதுகாப்புக் கேடயமாக
பாவிப்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இலங்கையில் தற்போது
காணப்படும் கொள்கைகள் ஆங்கில மொழியை வெறுமனே வகுப்பை
குறிக்கும் ஒரு அலகாக பாவிப்பதோடு அதனை கல்வித்துறைகளில்
பாண்டித்தியம் அடைவதற்கான கருவியாகவோ அதைப்போன்ற பரந்த
நோக்குடனோ அணுகுவதில்லை.
பல்கலைக்கழகங்களில் இருக்கும் சிங்கள மற்றும் தமிழ் பேசும் ஊழியர்கள்
ஆங்கில மொழியில் உரையாட கஷ்டப்படுவதற்கான காரணம், ஸ்வபாஷா
கொள்கையின் விளைவே அன்றி அவர்களின் திறன்விருத்தியின்மை அல்ல.
UGCயில் இருக்கும் வல்லுநர்கள் தர உறுதிப்பாட்டு கூட்டங்களின் போது
“சரியான” மொழியில் கேள்விகள் தொடுக்காமல் இருப்பதைக் கூறி
விமர்சிக்கின்றனர். ஆங்கில மொழி தாய்மொழியாக இருக்காத
கல்வியியலாளர்களுக்கு இவ்வாறான சூழ்நிலைகளை சமாளிப்பதென்பது
அறிவார்ந்த ரீதியிலும் உணர்வுசார்ந்த அடிப்படையிலும் எத்தகைய
சவால்மிக்கதென்பதை கல்வித்துறையின் கொள்கைவகுப்பாளர்கள்

அறிந்திருக்க வேன்டும். இக்கருத்தை நான் பகுதியளவில் பேராசிரியர்
மென்டிஸின் விமர்சனத்துக்கு பதிலாக வழங்கினாலும், இதற்கான காரணம்,
கலைப்பீடங்களில் தம்மோடு பணியாற்றும் ஆசிரியர்களை அவர்களது
ஆங்கில மொழித்திறனின் அடிப்படையில் திறமையற்றவர்களாக கருதும்
நிலை கலைப்பீடங்களிலும், பல்கலைக்கழகங்களின் ஏனைய பீடங்களிலும்
கூட காணபப்டுகின்றது. இப்பார்வை, பேராசிரியர் மென்டிஸ்
முன்வைப்பதைப்போன்ற கலைப்பீடங்களின் மீது முன்வைக்கப்படும்
விமர்சனங்களின் தொடர்ச்சியாக வெளிப்படும் விடயமாகும்.
கலைக் கற்கைகள் தொடர்பில் பிரபா மனுரத்ன அவர்கள் எழுதிய ஆக்கம்
கலைப்பீடங்களுக்குள் நுழையும் “சாதாரண கலைப்பீட மாணவர்களை”
பற்றியதாகும். அம்மாணவர்கள் வரும் பொருளாதார வகுப்புகளை
கவனத்திலெடுக்கும் மனுரத்ன அவர்கள் தற்போதைய கல்விசார்ந்த
கொள்கைகள் எவ்வாறு மாணவர்களின் வளர்ச்சியை கற்பனை செய்கின்றன
என்பதை விமர்சிக்கின்றார். குப்பி ஆக்கமொன்றில் விமர்சிக்கப்பட்ட‌
அண்மையில் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையொன்றில் கூட
கலைப்பீடங்களுக்கு வரும் மாணவர்களின் பொதுத்தன்மை பற்றி
கூறப்பட்டுள்ளது. இவ்வாறான மாணவர்கள் பெரும்பாலும் உயர்தரத்தில்
விஞ்ஞானக்கல்வி வழங்கப்படாத பாடசாலைகளிலிருந்தும், பின்தங்கிய
மாவட்டங்களில் இருந்து வருவோராகவும் பெரும்பாலும் பெண்களாகவும்
இருக்கின்றனர். இக்கணக்காய்வு அறிக்கை இம்மாணவர்களை பயனற்ற
கற்கைகளை கற்கவரும் பலவீனமான மாணவர்களாக
அடையாளப்படுத்துகின்றது. இம்மாணாவ்ர்களே பல்கலைக்கழகங்களுக்குள்
நுழையும் மாணவர்களில் பெரும்பாலானவர்களாக இருக்கின்றனர்.
இக்கணக்காய்வு அறிக்கையின்படி குறித்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப
அறிவு வழங்கப்பட வேண்டி இருப்பதோடு வசதியற்ற வகுப்புகளிலிருந்து
வரும் இம்மாணவர்கள் தொழில்சந்தைகளுக்குள் நுழைவதற்கான
இயலுமையும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதனாலேயே
உருவாக்கப்படுவதாகவும் பரிந்துரைக்கின்றது. இவ்வறிக்கை மேலும்
குறிப்பிடுவதன்படி வளர்ந்துவரும் நாடாக இருக்கும் நாங்கள் கலைத்துறை
பட்டதாரிகளை அதிகமாக உருவாக்குவதாலோ கலைப்பீடங்களுக்கு நிதியுதவி

வழங்குவதாலோ பயனடையப்போவதில்லை எனவும் எடுத்துரைக்கின்றது.
இலங்கையில் H மற்றும் SS கற்கைகள் எத்தரத்தில் வைத்து
பார்க்கப்படுகின்றன என்பதற்கு இவ்வறிக்கை ஒரு சிறந்த சான்றாக
இருப்பதோடு இதனை நாங்கள் விமர்சித்தும் இருக்கின்றோம் (பர்ஸானா
ஹனீபா, தி ஐலன்ட் 27 ஏப்ரல் 2021). கலைப்பீடஙக்ளுக்கு வரும் மாணவர்கள்
வளங்குன்றிய பாடசாலைகளிலும் தரங்குன்றிய சமூக மற்றும் பொருளாதார
சூழ்நிலைகளிலிருந்தும் வருவதாகவும் இவ்வறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் கலைப்பீடங்களில் நுழையும் மக்கள்தொகை பற்றிய சரியான
அரசியல் சமூக பகுப்பாய்வு காணப்படாமை, பேராசிரியர் மென்டிஸ் போன்ற
விமர்சகர்களின் மேட்டிமைத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. கலை
மற்றும் சமூகவியல் பீடங்கள் மாணாவ்ர்களுக்கு எதனை வழங்க வேண்டும்
என்பது குறித்தான கலந்துரையாடலகள் கூட இம்மேட்டிமைத்தனத்தை
கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். இலங்கையில்
கலைப்பீடங்களுக்குள் நுழையும் வசதியற்ற சூழலிலிருந்து வரும்
மாணவ‌ர்களை பலமிக்கவர்களாக மாற்றுவதில் நாம் கடுமையான
சிக்கல்களை முகங்கொடுத்து செயற்படுகின்றோம். பேராசிரியர் மென்டிச்
கொண்டுவரும் ஹார்வட் பல்கலைக்கழகங்கள் போன்ற மேற்கோள்கள்
அடிமையாக்கப்படும் அடித்தட்டு மக்களை சுரண்டி வளர்ச்சியடைந்த‌
மேட்டுக்குடியினரின் கல்விநிலையங்கள் என்பதை இவர்கள் நினைவிலிருத்த
வேண்டும். இவர்கள் மேட்டுக்குடியினரின் அறிவையே மீள உற்பத்தி
செய்வதோடு துன்பப்படும் நகர்ப்புற மற்றும் கிராமிய அடித்தட்டு மக்களின்
நலன்களையோ மானுட விடுதலை சார்ந்த அறிவையோ
முன்னிறுத்துவதில்லை.

நாம் முன்னிருத்த வேண்டியது ஹார்வர்ட் போன்ற நிலையங்களை அல்ல;
மாறாக தொழிலாளர் போராட்டங்களையும் வகுப்பு சார்ந்த பகுப்பாய்வோடு
கூடிய கலாசார விமர்சனக்களையும் கொண்டுவரும் சூழமைவுகளையாகும்.
எமது காலனித்துவநீக்க விமர்சனங்களும் இவ்வாறான சூழமைவுகளிலேயே
முன்னிருத்தப்பட வேண்டும். தாம் வளர்ந்து வந்த சமூக அமைப்பில்

காணப்படும் கட்டமைப்புசார்ந்த தீங்குகளை விளங்கி அத்தீங்குகளை
விலக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு தமது சமுதாயத்தினருக்கு அவற்றை
வழங்கக்கூடிய நிலையில் மாணவர்களை உருவாக்குவதே எமது தலையாய
கடமையாகும். இதனை நோக்கிய அடைவாகவே எமது கல்விப்பயணம்
காணப்பட வேண்டியதல்லாமல் வெறுமனே தாம் வளர்ந்து வந்த
பொருளாதார வகுப்பிலிருந்து மேம்பட்ட நிலைக்கு வருவதற்காக
“தொழில்வாண்மை”யை கற்பிக்கும் இலக்குகள் எமது கல்வியின் அடைவாக
இருக்கக் கூடாது. நாம் எதிர்க்கவேண்டியதெல்லாம் எதிர்கால சந்ததியினரின்
வளங்களை சுரண்டிப்பிழைக்கும் தொழில்நிறுவனங்களில்
வேலைவாய்ப்புகளை பெறுவதை மாணவர்களின் இலக்காக நிர்ணயிக்கும்
நவதாராளவாத அமைப்பையே ஆகும்.