கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள்

நியாந்தினி கதிர்காமர்

இலங்கையின் கல்வி முறையானது காலங்கடந்தது என இழிவுபடுத்தப்படுவது வழக்கம். இருப்பினும் இலவசப் பொதுக் கல்விக்கான கேள்விக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது. “வேலைவாய்ப்பைப்” பெறுந்தகவு குறைந்த கற்கைநெறிகளாகக் கருதப்படும் கலைப் பிரிவுகளில் கூட எதிர்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இவ்வதிகரித்த கேள்வியைக் கையாளும் முகமாக அரசாங்கமும் அரச பல்கலைக்கழகங்களில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதாக வாக்குறுதியளித்துள்ளது.

உயர்கல்விக்கான வாய்ப்பைப் பெறும் இளைஞர் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆரம்பகட்டங்களில் சரியானது போல் தென்படுகின்றது. எனினும் இவ்வதிகரிப்பைக் கையாளுவதற்கான வளங்களையோ கொள்திறனையோ மேம்படுத்தாதிருப்பது உயர் கல்வி நிறுவனங்களின் மேல் ஒரு பாரிய சுமையைத் திணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விஸ்தரிப்பு சார்பான உத்தரவுகளுக்கு பீடங்களோ, பல்கலைக்கழக நிர்வாகங்களோ பெரும்பாலும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. உள்ளெடுக்கப்படும் மாணவர் எண்ணிக்கையின் அதிகரிப்பினால் எழும் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குரலெழுப்பியிருந்தது. மாணவர் எண்ணிக்கையைக் குறைக்காவிடின் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்ற அவர்களது முடிவு, இதன் யதார்த்தமான சிக்கல்களை முன்வைக்கும் துணிவான நடவடிக்கை எனலாம்.

கல்விக்கான நிதித் திட்டம்

இலங்கையின் முன்னேற்றப் பாதையில் கல்விக்கு மத்திய இடம் கொடுக்கப்படும் எனத் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதிகள் அளிக்கப்படினும், அதனைத் தொடரும் கல்விக்கான நிதியொதுக்கீடுகளோ அவற்றுக்கு மாறாகவே காணப்படுகின்றன. நன்றி கெட்ட (போராட்டங்களில் ஈடுபடும்) இளைஞர்களுக்காக இலவசக் கல்வியில் தமது பணம் விரயமாகின்றது என வரி செலுத்துவோர் அதிருப்தியுடன் முறையிடுகின்றனர். எனினும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் அம்முறைப்பாடுகளுக்கு எதிர்மறையாக அடிமட்டத்தில் உள்ளன. தெற்காசியாவில் சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3% கல்விக்காக ஒதுக்கப்படுகின்றது. கீழே உருவில் காட்டப்பட்டவாறு இலங்கையில் போருக்குப் பிற்பட்ட தசாப்தத்தில் கூட இப் பெறுமானம் தொடர்ந்தும் 2 வீதமாகவே இருந்துவருகின்றது.

பங்களாதேசத்தை விடுத்து இப் பிராந்தியத்தில் இலங்கையின் கல்விக்கான நிதி ஒதுக்கீடே மிகவும் குறைந்ததாகவுள்ளது. இதற்கு மத்தியில், செயல்திறனின் பெருநிறுவனப் பண்டிதர்களும் தலைகுனியும் அளவிற்கு எமது பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் வினைத்திறனுடன் இயங்கி வருகின்றன. வளங்கள் அருகிவரும்போதும் அதன் சவால்களை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். ஏற்கனவே பெரும் சுமையின் கீழ் தள்ளப்பட்டிருக்கும் இவ்வமைப்பு முறை விரைவில் தகர்ந்து போகக்கூடும்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், கல்வி உட்பட சமூகத் துறைகளில் முதலீடுகளை மறுசீரமைக்கத் தவறியுள்ளன. போருக்குப் பிற்பட்ட தசாப்த காலத்தின் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 2012 இல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் தாழ்ந்த நிலையை எட்டியது. இது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பினால் (FUTA) போராட்டங்களையும், கல்விக்காக பொது உள்நாட்டு உற்பத்தியின் 6% ஒதுக்கீட்டைக் கோரி பிரசாரங்களையும் தூண்டியது. இப் பிரசாரங்கள் இறுதியில் தோல்வி கண்டதுடன் கல்விக்கான நிதி ஒதுக்கீடும் எவ்வித முன்னேற்றத்தையும் காணத் தவறியது.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் அதன் ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் கல்விக்கான முதலீட்டைப் படிப்படியாக அதிகரிக்க வாக்குறுதியளித்தது. 2016 இல் நிதி ஒதுக்கீடு 3.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட போதும் மீண்டும் அவ்வொதுக்கீட்டுப் பெறுமானம் வீழ்ச்சி கண்டதால் நல்லாட்சியின் வாக்குறுதியும் குறுகிய காலமே செல்லுபடியாகியிருந்தது.

கொரோனாத் தொற்றின் மத்தியில் வரவு செலவுத் திட்டம்

நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலைக்குக் கொரோனாத் தொற்று பங்களித்த போதும் அதன் மீதே முழுப் பழியையும் சுமத்தி விட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கோடும், செலவழிப்பதற்கு அற்பசொற்ப அரச வருவாயுடனும் ஒரு அரசாங்கத்தை எமது நாடு நியமிக்கும் போதே வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தும் கட்டாயத்துடன் கூடிய பொருளாதார நெருக்கடி நிலையானது வெளிவருவதற்குக் காத்துக் கொண்டுதான் இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் 2021 வரவு செலவுத் திட்டமோ அக்கறையற்றதாகவும், கொரோனா நிலைமையையோ, வீழ்ச்சி காணும் பொருளாதாரத்தையோ பொருட்படுத்தாததாகவும் காணப்பட்டது.

அரசாங்கத்தின் கொரோனாவுக்குப் பிற்பட்ட கொள்கை விளக்கங்களில், கல்வியானது அறிவுப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுக் கற்பனை செய்யப்படுகின்றது. எனினும் இவ்வாறான வீழ்ச்சியின் போது இத்தகைய மாற்றம் சாத்தியப்பட மாட்டாது. தொலைதூரக் கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றின் மேம்பாடு கருதப்படுவதுடன், விஞ்ஞானம், தொழினுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. நிகழ்நிலைக் கல்விக்கான வசதிகளையும், சாதனங்களையும் வழங்கி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் செய்வதைத் தடுத்தல், மீண்டும் வகுப்பறைக்கல்விக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்தல் போன்ற உடனடித் தேவைகளை 2021 வரவு செலவுத் திட்டமானது அங்கீகரிக்கத் தவறியுள்ளது.

இது போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற வரவு செலவுத் திட்டங்கள் நிமித்தம் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் தமது செலவுகளை மேலும் மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றன. செலவுகளை மீள்கட்டமைப்புச் செய்தல் இன்றியமையாததாக இருப்பதோடு, தமது நிலவுகைக்காகக் கல்வி நிறுவனங்கள் நிதி திரட்ட வேண்டிய நிலை எழுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. பற்றாக்குறையான நிதி ஒதுக்கீட்டால் பொதுக் கல்வி பாதிக்கப்படுதல், தனியார்மயமாக்கலின் அதிகரிப்புக்கும், கல்வி வாய்ப்புக்கான குறைபாட்டுக்குமே வழிவகுக்கும்.

சமனற்ற பகிர்வு

நலிந்து வரும் கல்விக்கான பொது நிதி ஒதுக்கீடு ஒரு புறமிருக்க அதனால் உண்டாகும் பிரச்சினைகள் வேறு சவால்களை உருவாக்குகின்றன. தொலைதூரக் கல்வி மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் ஏற்கனவே களைத்திருக்கும் நிலையில், புதிய கல்வியாண்டினை ஆரம்பிக்கத் தயக்கத்துடன் இவர்கள் பாடசாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் திரும்புகின்றனர். கொரோனாத் தொற்றின் அச்சுறுத்தலையோ, பொருளாதார நெருக்கடியையோ கையாளத் தேவையான மேலதிக வளங்கள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்றிற்கு முன்பே கல்வித் துறையானது, குறிப்பாகப் பொதுக் கல்வி, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. செய்தி அறிக்கைகளின் படி அண்மையில் பொதுக் கணக்குகளுக்கான குழு சந்திப்பொன்றில் 2013 இற்கும் 2018 இற்கும் இடையே 200 கிராமப்புறப் பாடசாலைகள் மூடபட்டுள்ளன என வெளிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது 200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 5000 பாடசாலைகளில் கல்வியின் தரத்தைப் பற்றிய கவலைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. இவ்வாறான கிராமப்புறப் பாடசாலைகளில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், இடவசதி, சுகாதர மற்றும் நீர் விநியோக வசதிகள் போன்றவற்றின் பற்றாக்குறை முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டன. தற்போதைய ஆட்சிக்கு முந்திய அரசாங்கமானது இவ்வாறான பிரச்சினைகளைக் கையாள “அருகில் இருக்கும் பாடசாலையே சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தைக் கொணர்ந்தும் இத்தகைய நிலை காணப்படுவது கவலைக்கிடமானது. 

வளங்களின் பகிர்விலுள்ள வேறுபாடுகள் கொரோனாவுக்குப் பின் மேலும் வெளிப்படையாகத் தென்படுகின்றன. உதாரணமாக சில பாடசாலைகளில் கைகளைக் கழுவுவதற்கான ஓடும் நீர் வசதி கூட வழங்கப்படாதுள்ளது. நேரடியான கற்றலிலிருந்து நிகழ்நிலைக் கல்விக்கான சீரற்ற மாற்றத்துடன் கிரமப்புற மற்றும் குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். புதிய ஆண்டில் இவர்கள் பாடசாலைக்குத் திரும்புவதும் அசாத்தியமானது. சமூக நலன்சார் உதவிகளும், பொருளாதார வீழ்ச்சியை மட்டுப்படுத்துவதற்கான உதவித்தொகைகளும் இன்றிய பட்சத்தில் இன்னும் பல சிறுவர்கள் மேற்கண்ட நிலைக்குத் தள்ளப்படக்கூடும். இந் நிலை போரினால் பாதிப்புற்ற பிராந்தியங்களில் மேலும் பாரதூரமாகக் காணப்படுகின்றது. தலைமுறைகளாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட இளைஞர் மற்றும் சிறுவர் சந்ததிகளுக்குக் கல்விக்கான முதலீடுகள் கூட இன்னும் தோற்றம் பெறாமை குறிப்பிடத்தக்கது.

மனித மூலதனம்

உலக வங்கியானது உயர்ந்த இலட்சியமுடைய மனித மூலதனத் திட்டமொன்றை 2019இல் இலங்கைக்கு அறிவித்தது. பொதுக் கல்விக்கான அதன் திட்டமானது எமது பொருளாதாரம் கிராமியப் பொருளாதாரத்திலிருந்து நகரம்சார் பொருளாதாரத்துக்கு மாறும், உலகளாவிய போட்டியுடன் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டதோர் பொருளாதாரம் என்ற தவறான ஊகத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக கல்வி முதலீடுகளின் மறுசீரமைப்புகளுக்கு அடித்தளமாக இருப்பது இம் மனித மூலதன எண்ணமாகும்.

சிக்காகோ (நவதாராளவாத) பொருளாதார நிபுணர்கள் பள்ளியால் 1960 களில் முன்வைக்கப்பட்ட மனித மூலதனக் கோட்பாடு ஒரு நேரிய தொடர்பைக் கருதுகின்றது. அதாவது கல்வியில் அதிக முதலீடுகள், அதிக வருடங்களுக்கான கல்விக்கும், அதனைத் தொடர்ந்து அதிக சம்பளம் பெறும் வாய்ப்புக்களுக்கும், இறுதியில் உயர்ந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும் என்பது அக்கருத்தாகும். கல்வி முறைகளின் வெற்றியை வருவாய் விகிதங்களைக் கொண்டு அளவிடுவதும், மனித மூலதனச் சுட்டி கொண்டு நாடுகளைத் தரவரிசைப்படுத்துவதும் இதனைத் தொடர்ந்து உண்டாகின.  உயர் மனித மூலதனச் சுட்டிகளை அடைய, வினைத்திறனான தொழிலாளரை உருவாக்கத் தேவையான திறன்களையும், தேர்ச்சிகளையும் வழங்கக்கூடியவாறு கற்கைநெறிகள், கல்விமுறைகள், மதிப்பீடுகள் ஆகியன வடிவமைக்கப் பட வேண்டும்.

மனித மூலதனக் கோட்பாடானது பல குறைபாடுகளைக் கொண்டது. கல்வி பெறும் ஆண்டுகள் மற்றும் விளைதிறன், விளைதிறன் மற்றும் வருமானம், விளைதிறன் மற்றும் சம்பாத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் வருடங்களாக வாதாடப்பட்டு வருகின்றன. முறையான சம்பளமுள்ள வேலைக்கான வாய்ப்பு, கட்டமைப்பு சார் காரணிகளான வர்க்கம், பால், இனம், சாதி ஆகியவற்றிலும் தங்கியிருப்பதை மனித மூலதனக் கோட்பாடு புறக்கணிக்கின்றதென்பது பல விமர்சகர்களின் கருத்தாகும். அதுமட்டுமல்லாது கல்வி தொடர்பான இவ்வாறான குறுகிய கண்ணோட்டம், ஜனநாயகக் குடியுரிமை போன்ற கருத்துகளுக்கான இடத்தையும் மட்டுப்படுத்துகின்றது.

மனித மூலதனக் கோட்பாடானது எமது உள்நாட்டுக் கொள்கைக் கலந்துரையாடல்களிலும் ஊடுருவிவிட்டது. SLPP இன் தேர்தல் பிரசாரம் முதல் புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பில் ஜனாதிபதியின் உரை வரை இதனைக் காணக்கூடியதாகவுள்ளது. வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது கூட மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்து மனித மூலதனமே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து எமது அரசாங்கத்தின் தூரநோக்குகளும், உலக வங்கியின் பரிந்துரைகளும் ஒன்றிணைகின்றமை தெளிவாகின்றது.

நிதி ஒதுக்கீட்டுச் சவால்களை எதிர்கொள்ளல்

கல்வி நிதி ஒதுக்கீட்டிலுள்ள தற்போதைய நெருக்கடி, கடந்த இரண்டு தசாப்தங்களாகக் கல்வியில் பொது முதலீடுகள் நலிவடைந்ததன் விளைவாகும். கொரோனாத் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் உண்டாகக் கூடிய பிரச்சினைகளுக்கு எளிதில் ஆளாகக்கூடிய நிலைக்கு கல்வித்துறை தள்ளப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுச் சவால்களைக் கல்வியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? சிந்தனைப் போக்கு மற்றும் நிதி ஒதுக்கீட்டிலுள்ள தவறுகளை எதிர்கொள்வதும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் மேல்-கீழ் அணுகுமுறையை எதிர்ப்பதும் உடனடித் தேவைகளாக உள்ளன.