கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை

உதாரி அபேசிங்க

கௌஷல்யா பெரேரா எழுதிய கடந்த வார குப்பி ஆக்கத்தில் அவர் அரச
பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஊழியர்களை ஆட்சேர்த்தல், தக்கவைத்தல்
ஆகிய விடயங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைளினால் தொழிலாளர்
நலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவ்வார
ஆக்கத்தில் நான் இளம் விரிவுரையாளர்களை அரச பல்கலைக்கழகங்களில்
இணைப்பதிலும் அவர்களை தக்கவைப்பதிலும் செல்வாக்கு செலுத்தும்
காரணிகளும் குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
அவ்விளம் விரிவுரையாளர்களின் தொழில் முன்னேற்றம் குறித்த நிலமைகள்
தொடர்பில் கவனம் செலுத்தலாம். இது எனது தனிப்பட்ட மற்றும்
நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பல்கலைக்கழகங்களில் தொழில்
புரியும் வைத்திய மற்றும் பல்மருத்துவ பீட இளம் விரிவுரையாளர்களிடம்
இருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பின் அடிப்படையிலும்
எழுதப்பட்டுள்ளது.

தடுக்கப்படும் தொழில் முன்னேற்றம்
பல்கலைக்கழகங்களில் காணப்படும் அர்த்தமற்ற சுற்றுநிருபங்களும்
நெகிழ்வற்ற ஆட்சேர்ப்பு திட்டங்களும் மருத்துவ மற்றும் பல்மருத்ஹ்டுவ
பீடங்களில் தொழில்புரியும் இளம் விரிவுரையாளர்களுக்கு தமது தொழில்
முன்னேற்றம் மீதான அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆணைய சுற்றுநிருபம் 08/2022ன் அண்மைய சீர்திருத்தத்தின்படி சிரேஷ்ட
விரிவுரையாளர் தரம் I, II ஆகிய பதவிகளுக்கான தகுதிகளாக மருத்துவ

பட்டப்பின்படிப்பு நிலையத்தால் (PGIM) சான்றளிக்கப்பட்ட கலாநிதிப்பட்டம்
அல்லது மருத்துவ கலாநிதிப்பட்டம் (MD) பெற்றிருத்தல் அல்லது
தொடர்புடைய துறையில் குறைந்தது 24 மாதங்கள் முழுநேர
ஆய்வுடன்கூடிய முதுகலைப்பட்டத்தை பெற்றிருத்தல் என்பன
காணப்படுகின்றன. இதனடிப்படையில் பகுதிநேர முதுகலைப்பட்டப்படிப்பை
மேற்கொண்டவர் இப்பதவிக்கோ பதவியுயர்வுக்கோ தகுதியுடையவராக
மாட்டார்.
இச்சீர்திருத்தத்தின் மூலம் தகுதிகாண் நிலையில் தொழில்புரியும்
விரிவுரையாளர்கள் தமது சேவைக்காலத்தில் கல்வித்தகுதிகளை
அதிகரித்துக்கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் புதிய ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ள
இக்காலகட்டத்தில் விரிவுரையாளர்களை பகுதிநேர முதுமானி அல்லது
வேறெந்த பட்டப்படிப்புகளுக்கும் அனுமதிப்பதானது, பல்கலைக்கழகங்களின்
நிர்வாக மற்றும் கல்விச்செயற்பாடுகளை அவர்கள் நிறைவேற்றும்
அதேவேளை அவர்களின் கல்வித்தகுதிகளை தக்கவைத்துக்கொள்ளவும்
ஏதுவாக, அதாவது இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான ஆட்சேர்ப்பு திட்டங்கள் இளம் விரிவுரையாளர்களுக்கு புதிய
தொழில்பாதைகளை கண்டறிய தடையாக அமைகின்றன. குறித்த
துறைகளில் இளங்கலைப்பட்டத்தை நிறைவுசெய்திருக்க வேண்டுமென்ற
முன்னுரிமை நிலை காணப்படுவதால் அத்துறையில் இளங்கலை பட்டத்தை
நிறைவு செய்யாத ஆனால் தகுதியுடைய விரிவுரையாளார்கள் பல்துறைசார்
கல்வித்திட்டங்களில் நுழைய முடியாத நிலை காணப்படுவது
கவலைக்கிடமான விடயமாகும். மேலும் மருத்துவபீடத்திலுள்ள சில
துறைகள் கலாநிதிப்பட்டத்திலும் பார்க்க மருத்துவ கலாநிதிப்பட்டத்தை
முன்னுரிமைப்படுத்துவதால் கலாநிதிகளும் சவால்களை சந்திக்க
நேர்ந்துள்ளது. வித்தியாசமான கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்கள்
வித்தியாசமான திறன்களோடு துறைகளில் நுழையும்போது கற்றல்
கற்பித்தலில் பன்மைத்தன்மை உருவாக்கப்டும் என்பதை ஆட்சேர்ப்பு
திட்டங்கள் கவனத்திலெடுக்க வேண்டும்.

வெளிநாட்டு பயிற்சிகளில் காணப்படும் சிக்கல்கள்
மருத்துவ மற்றும் பல்மருத்துவ பீடங்களில் உள்ள புலன்மருத்துவ
துறைகளில் உள்வாங்கப்படும் தகுதிகாண் விரிவுரையாளர்கள் புலன்மருத்துவ
பின்பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களாக இருக்கவேண்டுமென
எதிர்பார்க்கப்படுகின்றார்கள். இலங்கையில் அவ்வகையான பின்பட்டப்படிப்பை
வழங்கும் ஒரே கல்விநிறுவனம் கொழும்பு பல்கலைக்கழக பின்ப்பட்டப்படிப்பு
நிலையமாகும். மருத்துவ கலாநிதிப்பட்டத்தை நிறைவுசெய்த ஒருவர்
அங்கீகாரம் பெற்ற ஆலோசகராக வேண்டுமாயின் ஒரு வருடம்
வெளிநாட்டில் பயிற்சிபெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் பொருத்தமான
பல்கலைக்கழகமொன்றில் பயிற்சிநெறியை நிறைவுசெய்வது தேர்வு
நாடுபவ‌ரின் பொறுப்பாகும். பெரும்பாலான வெளிநாட்டு பயிற்சிகள் ஊதியம்
வழங்கப்படாத பயிற்சிநெறிகளாகும். ஒரு வருடத்துக்கு மாதாந்த
ஊதியத்தொகை வழங்கப்படுகின்றது.
அரசாங்கம் அண்மையில் எடுத்த முடிவின்படி, உள்நாட்டு நிதியீட்டத்தில்
வெளிநாட்டு பயிற்சியை நிறைவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இது பாரிய
சவால்களை ஏற்படுத்தியுள்ளது. விரிவுரையாளர்கள் தமது பதவியை
தக்கவைத்துக்கொள்ள மருத்துவ கலாநிதிப்பட்டம் போதுமாக இருப்பினும்
வாரியத்தின் சான்றிதழ்ழ் இல்லாமல் சிரேஷ்ட விரிவுரையாளர்களாக
வரமுடியாது. இம்முடிவினால் ஏற்கனவே சேவையில் இருக்கும்
விரிவுரையாளர்களை தக்கவைப்பதிலும் திறமையான விரிவுரையாளர்களை
பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்குவதிலும் பாரிய சவால்கள்
ஏற்பட்டுள்ளன. வருடக்கணக்கில் சேவையில் ஈடுபட்டும் தமது
தொழில்நிலையை உயர்த்த முடியாமல் இளம் விரிவுரையாளர் தரத்திலேயே
தேங்கி இருப்பதற்கு எவரும் விரும்புவாரா?
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியின்
விளைவாக இளம் விரிவுரையாளர்கள் பிணைமுறி உடன்படிக்கைகளை
உத்தரவாதமளிப்பவர்களை அடைவது கடினமான விடயமாக மாறியுள்ளது.
மேற்படிப்புக்கான விடுப்புக்காலம் வழங்கப்படும் ஒரு விரிவுரையாளர்

கட்டாய சேவைக்காலத்தை நிபந்தனையாகக் கொண்ட பிணைமுறி
உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும். ஒரு விரிவுரையாளர் தனது
சொந்த முயற்சியில் வெளிநாட்டு புலமைப்பரிசில் ஒன்றை பெறுவாராயின்
அப்புலமைப்பரிசிலின் மூன்றில் ஒரு பகுதி பிணைமுறியின் பெறுமதியாகக்
கொள்ளப்பட வேண்டும். ஒரு விரிவுரையாளர் வெளிநாட்டு புலமைப்பரிசிலை
பல்கலைக்கழகத்தினூடாக பெறுவாராயின் அப்புலமைப்பரிசிலின்
முழுப்பெறுமதியும் பிணையாகக் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின்
நாணய பெறுமதி இழப்பின் காரணமாக சிலவேளைகளில் அத்தொகை 20
மில்லியன்களை தாண்டியதுமுண்டு. பொருளாதார நெருக்கடியால்
வெளிநாட்டுக்கு செல்லும் விரிவுரையாளர்கள் நாட்டுக்கு திரும்புவது சில
வேளைகளில் அசாத்தியமாக காணப்படுகின்றது. உத்தரவாதமளிப்பவர்களை
பெற முடியாதிருப்பதனால் இளன் விரிவுரையாளர்கள் பதவியை
இராஜினாமா செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றார்கள்.
கல்வித்திருட்டு
“கல்வித்திருட்டு” என்பது ஒருவரின் ஆய்வுக்கருத்துகளை, அவரின்
உழைப்பை திருடிவிட்டு அவருக்குரிய பெயரை வழங்காதிருப்பதாகும்.
உதாரணமாக, எவ்வித தொழில் தர்மமுமின்றி ஒருவரின் முயற்சிக்கு
ஏற்புத்தெரிவிக்காமலும் அவரின் முயற்சிக்கான சீர்மையை
வழங்காதிருப்பதுமாகும். ஒருவரின் உழைப்பு அடுத்தவரிடம் எவ்வித
ஏற்புமின்றி செல்வதாகும். இதுவே கல்வித்திருட்டாகும். இவ்வாறான
திருட்டுகள் நடைபெறும் சூழலில் சிறந்த ஆய்வாளர்கள் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறான சூழலில் சிக்கும் இளம் கல்வியியலாளர்கள் தமக்கு மேலே
இருக்கும் சிரேஷ்ட கல்வியியலாளர்களுக்குப் பயந்து இந்நிலையை
வெளிக்கொண்டுவர மாட்டார்கள். இவ்விளம் கல்வியியலாளர்கள் தமது
பதவிக்கும் பதவியுயர்வுக்கும் சிரேஷ்ட விரிவுரையாளர்களிலேயே
தங்கியிருக்கின்றார்கள்.
ஒரு விஞ்ஞான ஆய்வை வெளியிடுவதென்பது நேரத்தையும் உழைப்பையும்
கடுமையாக வேண்டும் செயலாகும். சிறந்த ஆய்வுத்தலைப்பை தெரிவு

செய்தல், அது தொடர்பான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தல்,
விளைவுகளை பொருள்கோடல் செய்தல் போன்றன அதிகமான காலத்தை
விரயப்படுத்தி செய்யும் செயற்பாடுகளாகும். இவ்வாறான செயற்பாடுகளின்
விளைவான ஆய்வுகள் திருடப்பட்டு, உரிய ஏற்புகள் கிடைக்காமல் போவது
இளம் கல்வியியலாளர்களை சோர்வடையச்செய்யும். இவ்வாறான
செயற்பாடுகள் குறிப்பிட்ட பீடங்களிலும் துறைகளிலும் நடைபெறுவதாக
தெரிந்தால் அவற்றுக்கு இளம் கல்வியியலாளர்களை ஈர்ப்பது கடினமான
செயலாக மாறி விடுகின்றது.
பாலியல் மற்றும் பால்மைசார் துஷ்பிரயோகம் மற்றும்
நிறுவனக்கட்டமைப்புசார் துஷ்பிரயோகம்
பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பால்மைசார் துஷ்பிரயோகங்களை
தடுப்பதற்கான கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் காணப்பட்டாலும் அவை
பரந்தளவில் காணப்படுகின்றன. இந்நிலைகளில் மிகவும் பாதிக்கப்படுவோராக
இருப்பவர்கள் பெண்மாணவர்களும் இளம் பெண் விரிவுரையாளர்களுமாவர்.
ஒரு இளம் பெண் விரிவுரையாளராக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்ட
அனுபவமும் அதற்கு உட்படுத்திய சிரேஷ்ட விரிவுரையாளருக்கெதிராக
நடவடிக்கை எடுத்த அனுபவமும் என்னிடமுண்டு. பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் அந்த சிரேஷ்ட
விரிவுரையாளர் குற்றமிழைக்கப்பட்டவராக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்
பல்கலைக்கழக மன்றம் அவ்விசாரணை அறிக்கையை நிராகரித்ததால்
குறிப்பிட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மீது எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்க முடியாமல் போனது. துஷ்பிரயோகம், முறைப்பாடு மேற்கொள்ளல்,
விசாரணை நடைபெற்ற காலத்தில் என்னை அணுகியோர் ஒரே
விடயத்தையே மீள மீளக்கூறினர், “பல்கலைக்கழகத்தை விட்டு சென்று
விடுங்கள். மீண்டும் இங்கே வருவதைப்பற்றி சிந்தித்தும் பார்க்காதீர்கள்…”.
அவர்கள் இதனை எனது பாதுகாப்பு கருதியே சொன்னார்கள் என
நம்புகின்றேன் (இல்லாமலும் இருக்கலாம்). பாலியல் மற்றும் பால்மைசார்
வன்ம்கொடுமையை அனுபவித்தவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டும்

வெளியேறுவதை தவிர வேறு எந்த தேர்வும் இல்லாத நிலையிலும்
பல்கலைக்கழகங்களில் இன்னமும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர்
பதவியில் இருக்கும் நிலையிலும் புதிய இளம் கல்வியியலாளர்களை
பல்கலைக்கழகங்களில் ஈர்ப்பது எட்டாக்கனியாக மாறி வருகின்றது.
பணிப்படிநிலையும் வேற்றுமை உணர்வும்
கல்விச்சேவையில் பணிப்படிநிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள்
தகுதிகாண் விரிவுரையாளர்களாவர். அவர்கள் பணிரீதியாக அதிகமான
பளுக்களை சுமப்பவர்களாகவும் சில துறைகளில், சிரேஷ்ட
விரிவுரையாளர்களின் பணியாளர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள்
நிர்வாகரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் நிறைய செயற்பாடுகளை
செய்யவைக்கப்படுவதோடு அவற்றுக்கான ஏற்பும் வழங்கப்படாமல்
இருக்கின்றார்கள். இதன் காரணமாக தமது தொழில்விருத்தியில் குறைந்த
நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கும் இவர்கள், பட்டப்பின்படிப்பு
சார்ந்து ஏற்படும் போட்டிகளில் பிந்தங்கிவிடுவதோடு அரச
பல்கலைக்கழகங்களில் காணப்படும் தேக்கநிலையை மேலும்
வலுவூட்டுபவர்களாக மாறுகின்றார்கள். வேற்றுமை உணர்வு மேலும் பல
விளைவுகளையும் கொண்டுவருகின்றது. உதாரணமாக,
பல்கலைக்கழகங்களில் இருப்பிட வசதிகள் சிரேஷ்ட நிலையை
கருத்திற்கொண்டே வழங்கப்படுகின்றன. பேராதனை பல்கலைக்கழகத்தில்
திருமணமாகாத இளம் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கான விடுதிகளில்
உள்ள ஊழியர் தங்குமிட வசதிகளில் இருக்கலாம். இருப்பினும்
திருமணமாகிய, குழந்தைகளோடு தூரப்பிரதேசங்களில் இருந்து வரும் இளம்
விரிவுரையாளர்களுக்கு இவ்வசதிகளில் இடமில்லை. இவ்வாறானவர்கள்
சிறந்த, தமக்கேற்ற வதிவிட வசதிகளை பெறுவதில் கடும் சிக்கல்களை
எதிர்கொள்வதோடு சிரேஷ்டநிலையை வைத்தும் இவர்களுக்கு ஏனைய
ஊழிய வதிவிட வசதிகள் கிடக்கப்பெறுவதுமில்லை. இந்நிலை தற்போதைய
பொருளாதார நெருக்கடியில் மேலும் சிக்கலுக்குள்ளாகியிருக்கின்றது.
வாடகைகள் அதிகரித்த நிலையில் தூரப்பிரதேசங்களில் வசிக்கும் இளம்

கல்வியியலாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்ப்பிபதில் தயக்கம்
காட்டுகின்றனர்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
பல்கலைக்கழகங்களில் இளம் கல்வியியலாளர்களை கவர்வதிலும்
தக்கவைப்பதிலும் உள்ள சிக்கல்களை இந்த பத்தியில் நான்
குறிப்பிட்டுள்ளேன். இதில் சில விடயங்கள் பல்கலைக்கழக, பீட அளவிலும்
சில விடயங்கள் உயர் நிர்வாக மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு தீர்க்கப்பட
வேண்டியனவாகும். சுற்றுநிருபங்களை வெளியிடும் உயர்கல்வி சார்
கொள்கைவகுப்பாளர்கள் அவற்றை வெளியிட முன்னர் அவ்விடயங்களோடு
தொடர்பில் இருப்பவர்களின் கருத்தை ஆலோசிப்பது அவசியமாகின்றது.
வெளிநாட்டில் பயிற்சிநெறியில் ஈடுபட இருக்கும் இளம்
கல்வியியலாளர்களுக்கு அதிகரித்துச்செல்லும் பிணைமுறிகளால்
ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கல்வியமைச்சு கவனத்திலெடுக்க வேண்டிய
சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகங்களில் நடைபெறும்
துஷ்பிரயோகங்கள் மற்றும் கல்வித்திருட்டுகளை இல்லாமலாக்கவும்
பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை வழங்கவுமான வழிமுறைகள்
உருவாக்கப்பட வேண்டும். சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ளாமல்
உருவாக்கப்படும் கொள்கைகளால் எவ்வித பயனுமில்லை. இளம்
கல்வியியயாளர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்களில் ஈடுபடும்
பல்கலைக்கழக அதிகாரிகளை பதில்சொல்லும் பொறுப்புடையவர்களாக
மாற்றும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தம்மையும் பாதுக்காக்கக்கூடிய
அளவிலான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறான
சிக்கல்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாத நிலையில் அரச
பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மருத்துவ மற்றும் பல்மருத்து பீடங்கள்
காலப்போக்கில் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகமாகும்.