கல்வியில் காலனித்துவ நீக்கமும் தர்க்க ரீதியான சிந்தனையும்

தர்ஷி தோரதெனிய

உயர் கல்வியில், குறிப்பாக வரலாறு தொடர்பாக தர்க்க ரீதியான சிந்தனையின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்துகள் ஒரு சிலவற்றை இங்கே பகிர விரும்புகின்றேன். கல்வியில் காலனித்துவ நீக்கம் பற்றி முன்பு எமது கட்டுரைத் தொடரில் ஹர்ஷன ரம்புக்வெல்ல அவர்கள் முன்வைத்த ஆழமான சிந்தனைகளைச் சற்று விரித்தும் இங்கு நோக்குவோம்.

கல்வி எவ்வாறு காலனித்துவத்தை உண்டாக்க உதவியதோ, காலனித்துவத்தின் நீக்க்கத்திற்கான கருவுயாகவும் அதுவே காணப்படுகின்றது. உதாரணமாக வரலாற்றுப் பாடத்தினைக் கருதுவோம். எமது கடந்த காலத்தைப்பற்றி ஏற்கனவே உள்ள அறிவினைக் காலனித்துவ நீக்கம் செய்து தர்க்க ரீதியாகப் புதியதோர் அறிவை உண்டாக்க  நாம் எத்தனிக்கின்றோம்.  அதாவது அறிவைக் காலனித்துவ நீக்கம் செய்ய உகந்த கருவி தர்க்க ரீதியான சிந்தனை ஆகும். ஆகவே அறிவின் காலனித்துவ நீக்கமும், தர்க்க ரீதியான சிந்தனையும்  காலனித்துவத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் உயர்கல்வி பற்றிய  இக்கலந்துரையாடலில் ஒருங்கிணைத்துப் பார்க்கபட வேண்டியவை.

லூயி ஆல்துசேரின் (Louis Althusser) படி கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம் கொண்ட மேல் வர்க்கத்தின் கருத்துக்களை நிலை நாட்டுவதற்கான கருத்தியல் அரச நிறுவனங்களாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், தேசிய பாடத்திட்டத்திற்கேற்ப இதனைச் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால் எமது பல்கலைக்கழகங்கள் தேசிய பாடத்திட்டம் ஒன்றிற்குக் கீழ்ப்படிந்தவையல்ல. மாறாக அவை அடைய வேண்டிய குறித்த தரநிலைக் கூற்றின் படி செயற்படுபவை.  மனித மற்றும் சமூக விஞ்ஞானப் பாடத்திட்டமானது முக்கிய கருத்துகள், கோட்பாடுகள், நூல்கள் மற்றும் நிகழ்வுகள் ஊடாகத் தர்க்க ரீதியான ஈடுபாட்டினை உக்குவிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பல்கலைக்கழகங்களில் பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மறக்கப்பட்டுத் தர்க்க ரீதியான சிந்தனை கற்றுக்கொள்ளப்படுகிறது.

விசரணையின் தன்மைக்கேற்ப தர்க்க ரீதியான சிந்தனையானது பல வடிவங்களை எடுக்கக் கூடியது. எனினும் அதன் முக்கிய அம்சமாக அமைவது போதிக்கப்படும் அறிவை அப்படியே ஏற்றுக்கொள்ளாது அதனை எதிர்க்கேள்வி கேட்பதாகும். உதாரணமாக யார் இவ்வறிவை உருவாக்கியது? யாருக்காக அது உருவாக்கப்பட்டது? எம்மாதிரியான ஆதாரங்களிலிருந்து அது பெறப்பட்டது? போன்றவற்றை ஆராய்வதன் மூலமே எமது பள்ளிக்கூடங்களில் நாம் பெற்று, விருத்தி செய்த காலனித்துவ மனப்பாங்கு எமக்குப் புலப்படுகின்றது.

எமது பள்ளிக்கூடங்களிலும், சில பல்கலைக்கழகங்களிலும் வரலாறு பாடத்தினைக் கற்கும்-கற்பிக்கும் முறையானது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. பள்ளிக்கூட வரலாற்றுப் பாடத்தில் சிங்கள-பெளத்த கலாசாரமானது 2500 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்த, தூய, களங்கமற்ற கலாசாரம் என்ற கருத்து அதிகம் வலியுறுத்தப்படுகின்றது. மூலாதாரங்களைத் தர்க்கரீதியாக ஆராயாது இக்கருத்தானது முன்வைக்கப்படுகின்றது. இலங்கையின் வரலாற்றை வடிவமைப்பதில் செல்வாக்குச் செலுத்திய முக்கிய வரலாற்று ஆதாரங்களிலொன்று மகாவம்சம் என்ற மாபெரும் சரித்திர நூலாகும். எழுத்தாளரின் நோக்கங்களையோ, ஆராயப்பட்ட மூலாதாரங்களையோ, யாருக்காக இது எழுதப்பட்டது என்பதையோ கேட்குமாறு பாடசாலைக் காலங்களில் கற்பிக்கப்படவில்லை. காலனித்துவ நிர்வாகிகளின் தலையீடுடன் சிங்கள-பெளத்த கலாசாரமானது ஆதிக்கம் வாய்ந்த சித்தாந்தமாக எழுச்சி கண்டது. 1800 களின் ஆரம்பத்தில் மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் மீது பெரிதும் செல்வாக்குச் செலுத்திய அக்காலப்பகுதிக்குரிய (1811- 1819) இலங்கையின் தலைமை நீதிபதி அலெக்சான்டர் ஜான்ஸ்டனை இதற்குதாரணமாகக் கூறலாம். 12ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைத்தேய மற்றும் மேலைத்தேய உலகங்களுக்கிடையிலான வணிகப்பாதையில் இலங்கை அமைந்திருக்கின்றது. அதன் இவ்வமைவிடம் காரணமாக வேறு இனங்களுக்கும் இலங்கை தொடர்பில் வேறுபல மாற்றுரைகள் இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறுகளை நாம் ஆராய மறுப்பது கவலைக்கிடமானது. மேற்கண்ட கேள்விகளைக் கேட்கவும், தர்க்க ரீதியாகச் சிந்திக்கவும் தவறுவதே இதற்கான பிரதான காரணமாகும்.

குடியேற்ற நாடுகளில் வரலாற்று எழுத்துக்களை உண்டாக்கியது காலனித்துவ நிர்வாகிகளென்பதால் அவ்வரலாறு காலனித்துவ அறிவின் தயாரிப்பாகக் காணப்படுகின்றது. இவ்வரலாறுகள் ஐரோப்பியப் பயணிகளாலும், மிஷனரிகளாலும், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரிகளாலும், நிர்வாகிகளாலும் எழுதப்பட்டவை. ஜேம்ஸ் மில் (James Mill) என்ற ஸ்கொட்லாந்து பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளரின் இந்தியா பற்றிய விளக்கத்தின் மீது 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் பயனுடைமைவாத, தேசியவாதச் சித்தாந்தங்கள் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. இதன் காரணமாக “பிரித்தானிய இந்தியாவின் வரலாறு” (1817) (History of British India) என்ற அவரது நூலில் இந்திய நாகரிகத்தை நிலையானதொன்றாகக் கருதி, அதனை  இந்து நாகரிகம், முஸ்லிம் நாகரிகம், மற்றும் பிரித்தனியரின் காலம் என மூன்றாகப் பிரிக்கின்றார். இதனைப் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரான ரொமிலா தபார் (Romila Thapar) சுட்டிக்காட்டுகின்றார். பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள், தத்தமது பொறுப்புகளை ஏற்கமுன் இந் நூலை வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆகவே சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் கூடிய நிலையான ஒரு சமூகம் இந்திய வரலாற்றில் “உண்மை” என ஏற்கப்பட்டது. கிழக்கித்திய சர்வாதிகார ஆட்சி என்ற கருத்தானது, இந்தியாவில் பிரித்தானியரின் சட்ட மற்றும் நிர்வாக முறைகளின் அறிமுகத்தை நியாயப்படுத்துவதாக அமைந்தது. இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்தகைய தகவல்களின் காலனித்துவ நீக்கம் இடம்பெறும்வரை மேற்குறிப்பிடப்பட்ட காலனித்துவ வரலாற்றுவரைவியல் எதிர்க்கேள்வியோ மறுப்போ இன்றி ஏற்கப்பட்டிருந்தது.

இலங்கையினதும் இந்தியாவினதும் வரலாற்றுவரைவியல்களில் இணையொத்த அம்சங்கள் பல உண்டு. இமேர்சன் டெனன்ட் (Emerson Tenant)மற்றும் கொட்ரிங்டன்(Codrington) ஆகிய காலனித்துவ நிர்வாகிகள் அனுராதபுரம், பொலன்னறுவை, தம்பதெனிய, யாப்பஹூவ, குருநாகல், கம்பளை, கோட்டை இராச்சியங்களை அடிப்படையாக் கொண்டு, சிங்கள பெளத்த கலாசாரத்தை வலியுறுத்தும் ஒரு நேர்கோட்டுத்தன்மையான தொடர்ச்சியான இலங்கை வரலாற்றை எழுதியுள்ளனர்.  1970 களில் மாக்ஸிஸ வரலாற்றாசிரியர்களின் குழுவொன்று வரலாற்றுத் தகவல்களைத் தர்க்க ரீதியாக ஆராய முனைந்து அவ்வறிவைக் காலனித்துவ நீக்கம் செய்ய ஆரம்பித்தது.

காலனித்துவப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை, அறிவைக் காலனித்துவ நீக்கம் செய்தல், அடிபணியும் நிலையிலிருந்து மீளுதல் போன்றவற்றிற்குத் தாய் மொழியின் முக்கியத்துவத்தை ப்ரென்சுக் குடியேற்றமான மார்டினீக்கின் அரசியல் தத்துவவாதி ஃபிரான்ஸ் ஃபனன்(Frantz Fanon), கறுப்புத் தோல், வெள்ளை முகமூடிகள் (1952) (Black Skin, White Masks) என்ற அவரது நூலில்  எடுத்துக்காட்டுகின்றார். மனிதரின் கற்பனைகளின் மெய்யான விஸ்தீரணம் தாய் மொழியிலன்றி, காலனித்துவ ஆட்சியாளனின் மொழியில் ஒரு போதும் வெளிப்படாது என்பது அவரது கருத்தாகும். பலஸ்தீனிய- அமெரிக்கப் பொது அறிவுஜீவி எட்வார்ட் செட்(Edward Said) கிழக்கித்தியம் (1978)(Orientalism) என்ற அவரது முன்னோடியான நூலில் மொழி பற்றிய இவ்விவாதத்தை மேலும் ஒரு படி கொண்டு செல்கின்றார். கிழக்குலகினைக் (மத்திய கிழக்கு மற்றும் ஆசியா) காட்டுமிராண்டித்தனமான, பின்னடைந்த, பாரம்பரியமானதொன்றாகக் கற்பனை செய்யும்படி ஐரோப்பியப் பாரபட்சங்கள் எவ்வாறு மக்களின் எண்ணங்களை வடிவமைத்தன என இங்கு எடுத்துக்காட்டப்படுகின்றது. நாளடைவில் இவ்வாறான கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை என்ற நிலையையும் கூட அடைந்து விட்டன.

இதைப் போன்ற காலனித்துவ நீக்கம் சார் அனுபவங்களை லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் காணலாம். மக்களின் மனப்பாங்கினை காலனித்துவ நீக்கம் செய்வதற்கு முதலில் குடியேற்றவாதிகளால் தாபிக்கப்பட்ட முறையான கல்வி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் என்பது லத்தீன் அமெரிக்க கலாசார மானுடவியலாளர் வால்டர் மிக்னோலோவின் (Walter Mignolo) கருத்தாகும். இல்லாவிடில் இவ்வாறான நிலையங்கள் உருவாக்கும் அறிவிற்குள் மக்களின் கற்பனைகளும் சிக்கிவிடுகின்றன. முறைசார் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் போதே மக்களால் சுதந்திரமாகச் சிந்திக்கவும் அறிவாற்றலை அனுபவிக்கவும் முடிகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் மனித மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கையில் மாபெரும் பணியொன்று காணப்படுகின்றது. காலனித்துவ நீக்கத்தை நாம் எவ்வாறு மேலும் முன்னெடுப்பது? குறித்ததோர் அறிவு உருவாகும் உள்நாட்டுப் பின்னணியைப் புரிந்துகொள்வதற்காக அனைத்து மனித மற்றும் சமூக விஞ்ஞான இளங்கலை மாணவர்களுக்கும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்பித்தல் ஒரு முதற்படியாக அமையலாம். தற்போது இலங்கையில் வரலாற்றினை எழுதுவது இருமொழியிலேயே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. மும்மொழி சார் வரலாற்றாசிரியர்கள் சொற்பமானோரே இலங்கையில் காணப்படுவதால் மும்மொழியிலுமான எழுத்தாக்கங்கள் வெகு குறைவாகவே காணப்படுகின்றன. மூன்றாவது மொழியினைக் (சிங்களம் அல்லது தமிழ்) கிரகிக்க முடியாமை, அம்மொழிசார் மக்களின் மனப்பாங்கினைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றது.

குடியேற்றத்திற்குட்படுத்தப்பட்ட “மற்றைய” சமூகத்தினை அறிந்து கொள்ளாது எமது வரலாற்றை எழுதுவது எவ்வாறு சாத்தியப்படும்? அவர்களின் மொழியை அறிந்திராததால் எம்மால் சமூகத்தின் ஒரு பகுதியைப் பற்றிய அறிவையே உருவாக்க முடிகின்றது. சிங்களமும் ஆங்கிலமும் பேசும் வரலாற்றாசிரியர்கள் மேலாதிக்கமான சிங்கள-பெளத்த உரைக்கு விசுவாசமாக உள்ளார்கள். அதே சமயம் தமிழும் ஆங்கிலமும் பேசும் வரலாற்றாசிரியர்கள் மாற்றுரை ஒன்றை முன்வைக்கின்றார்கள். இம் மாற்றுரையானது எமது வரலாற்றுவரைவியலின் முக்கியபோக்கிற்குள் உள்ளடக்கப்படுவது சாத்தியமற்றது. பல்கலைக்கழகக் கல்வியைக் காலனித்துவ நீக்கம் செய்வதில் மிகவும் அடிப்படையானதோர் சிக்கல் இருப்பது தெளிவாகின்றது. அரச பல்கலைக்கழகங்களின் பீடங்கள் அல்லது பிரிவுகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது, காலனித்துவத்தை நீக்கும் இச் செயற்றிட்டத்தை முழுமையாக அணுக உதவும் என்பது ஒரு பரிந்துரையாகும்.