கல்வியில் காலனித்துவ நீக்கம்

ஹர்ஷன ரம்புக்வெல்ல

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூகங்களைப் பொறுத்த வரையில் காலனித்துவ நீக்கத்தில் பாரிய பங்கு வகிப்பது கல்வியாகும். மாறாக காலனித்துவம் உண்டாவதிலும் கல்வியின் பங்கு பெரியதாகையால் இது எதேர்ச்சியான ஒரு விடயம் அல்ல. கல்வியை மீள் வடிவமைப்பதில் காலனித்துவ நீக்கத்தை நாம் நாடுகின்றோம். இதன் போது அறிவுசார் தளர்ச்சியை உண்டாக்கக் கூடிய குறுகிய நோக்கத்தைக் கொண்ட பிறப்பிடம் சார் கொள்கைகளின்பால் நாம் செல்வதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

காலனித்துவத்தினடிப்படையில் பின்தங்கிய சமூகங்களை நவீனமயப்படுத்துவதற்குக் கல்வியைப் பயன்படுத்துவது தொடர்பாக தோமஸ் மக்கோலே போன்ற கொள்கையமைப்பாளர்கள் வலுவான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். மக்கோலே குறிப்பாக வடமொழி மற்றும் ஆங்கில வழிக் கல்வி தொடர்பாகக் கொண்டிருந்த பின்வரும் கருத்து பிரபலமானது. அதாவது ஐரோப்பிய புத்தகசாலையின் ஒரு தனிப் புத்தக அடுக்கு கொண்டிருக்கும் அறிவுசார் விடயங்கள் சமஸ்கிருதம் போன்ற உள்நாட்டு மொழிவழிக் கல்வியின் தொகுப்பிலும் பார்க்க அதிகமானது என அவர் குறிப்பிடுகின்றார். சமூகத்தை நவீனமயப்படுத்துவதில் ஆங்கில வழிக் கல்வியின் தேவை தொடர்பாக இதனை ஒத்த கண்ணோட்டம் இலங்கையிலும் காணப்படுகின்றது. காலனித்துவத்தின் கீழிருந்த இலங்கையில் ஆங்கில மொழி மூலமான கல்வி சில உயர் நிலைப் பாடசாலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் 1831இல் கோல்புறூக்-கமரன் சீர்திருத்தம் மேற்கொண்டிருந்த கல்வி ரீதியான கொள்கை மாற்றங்கள் நவீனமயமாக்கலுக்கு இன்றியமையாதவையாக இருந்தன என ஜி. சி. மென்டிஸ் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எனினும் 1950 களிலேயே மென்டிஸ் அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பது, காலனித்துவக் கல்வியானது எமது சமூகத்தில் எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காலனித்துவக் கொள்கைகள் சமூகத்தில் மேலைத்தேய வழக்கங்களைப் பின்பற்றும் “உயர் வர்க்கத்தினரை” அல்லது “சாகிப்புக்களை” உருவாக்கியுள்ளதால் “மக்கோலேயின் பிள்ளைகள்” என்ற கூற்று இங்கு பொருத்தமானது. ஆகவே காலனித்துவத்திலிருந்து விடுபடுகையில், “மனதின் காலனித்துவ நீக்கம்” என்பது அவசியமாகின்றது என குகி வா’ தியோங்கோ என்ற கென்ய எழுத்தாளர் கருதுகின்றார். கல்வியை மறுசீரமைத்தலும், காலனித்துவ நீக்கமும் இன்று பல காரணங்களுக்காக அவசியமாகின்றன. காலனித்துவம் இல்லாத போதும் உலகளாவிய ரீதியில் அறிவு உற்பத்தியில் காணப்படும் சமத்துவமின்மையால் காலனித்துவ நீக்கத்தின் தொடர்ச்சிக்குக் கல்வியாளர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். பல கல்விசார் கற்கை நெறிகளில் பாடத்திட்டம், பாட உள்ளடக்கம், மதிப்பீடுகள் போன்றவை “அறிவுற்பத்தி மையங்களால்” வகுக்கப்படுவதுடன் அவை உலகத்தின் வட மற்றும் தென் பகுதிகளின் பிரிவையும் ஒத்துக் காணப்படுகின்றன.

காலனித்துவ நீக்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அதே சமயம் இதன் மீது ஒருமையாகக் கவனம் செலுத்துவது குறுகிய சிந்தனையுடைய பிறப்பிடக் கொள்கைசார் தேசியவாதிகளை உருவாக்கக் கூடிய ஒரு விடயமாகும். 1950 களிலிருந்து இலங்கையில் காலனித்துவ நீக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான வெளிப்பாடாக “சிங்களம் மட்டும்” என்ற சட்டத்தைக் கருதலாம்.  உள்நாட்டு மொழிகள் மேம்படுத்தப்படுவதுடன் ஆங்கிலத்துக்கு வழங்கியிருக்கும் அதியுயர் முக்கியத்துவமானது குறைக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடுகள் பெரிதும் இல்லாத போதும் இக் கொள்கையால் முக்கிய பாதக விளைவுகள் இரண்டும் காணப்படுகின்றன. ஒரு பக்கம் அரசியல் சமயோசிதத்தால் தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ நிலை அளிக்கப்படாமையும் அதனால் அரைத் தசாப்தத்திற்கும் மேலாக இனமத அரசியல் மீது ஏற்பட்ட தாக்கமும் காணப்படுகின்றன. மறுபுறம் சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் ஆங்கிலத்திற்குத் தொடர்ந்தும் சிறப்புரிமை காணப்படுவதோடு இன்றும் ஆங்கிலமானது சமூக மற்றும் கலாசார மூலதனமாகக் கருதப்படும் தன்மை நிலவுகின்றது. இதே சமயம் எமது கல்வி முறை பற்றிய விமர்சனங்கள் சிங்கள தேசியவாத சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. சுய- அந்நியமான நபர்களை உருவாக்கும் இடங்களாகப் பல்கலைக்கழகங்களை உருவகிக்கின்றனர் குணதாச அமரசேகர போன்ற அறிவாளர்கள். அதாவது மேலைத்தேய சிந்தனையைக் கொண்ட, தமது கலாசாரத்திற்குப் பொருந்தாதவர்களாக இவர்கள் கருதப்படுகின்றார்கள். இக் கருத்தானது மேற்குறிப்பிட்ட குகி வா’ தியோங்கோவின் “மனதின் காலனித்துவ நீக்கம்” என்பதற்கு ஒத்ததாகும். இவ்வாறான கருத்துகள் சிங்களக் கலந்துரையாடல்களில் முக்கிய பங்கு வகித்ததோடு 1970, 80 களில் அது “ஜாதிக சிந்தனய” அல்லது “தேசிய சிந்தனை” என்ற வடிவில் வெளிக்காட்டப்பட்டன. நலின் டி சில்வா போன்ற அறிவாளர்கள் இக் கலந்துரையாடல்களை விஞ்ஞானத் துறையிலும் முன்னெடுத்ததோடு விஞ்ஞான முறை என்பது தவறானதென்றும் உள்நாட்டு அறிவுசார் முறைகள் நாடப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

காலனித்துவ நீக்கம் என்ற அணுகுமுறையை நான் எதிர்க்கவில்லை. உலக அறிவுசார் படிநிலைகள் சில வகையான அறிவுகளைப் புறக்கணிக்கின்றன. அறிவு என்பது குறித்த ஒரு சமூகத்தையோ கலாசாரத்தையோ பேணுவதற்கான ஒரு கருவி என்பதை விட எமது சமூகங்களின் அறிவுசார் விடயங்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் உணர வேண்டும். இவை பற்றிய விமர்சனங்கள் ஆங்கிலம், விஞ்ஞானம், ஜனநாயகம் போன்ற மேலைத்தேய மரபுகள் எமது சமூகங்களில் நீண்ட, சிக்கலான வரலாறுகளைக் கொண்டவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தில் நியாயத்துக்கான போராட்டத்திலும், மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் இவை இன்றியமையாதவையாகின்றன. ஆகவே எமது கல்வி முறைகளில் காலனித்துவ நீக்கத்தை ஏற்படுத்துகையில் சில ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உள்நாட்டுத் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் அணுகுவது அவசியம். இங்கு காலனித்துவத்திற்கு முற்பட்ட "தூய" உள்நாட்டு அறிவுசார் விடயங்கள் தற்போதைய சமூக சிக்கல்களைத் தீர்க்கும் என்ற கருத்து தவறானது. உதாரணமாக ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஜனநாயகத்திற்கு மாறாக மத்திய ஆட்சி முறையே எமது சமூகங்களுக்குப் பொருத்தமானது என்ற கருத்து நிலவுகின்றது. அதன் பாதகமான பக்க விளைவுகளை இலங்கையும் இந்தியாவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வாதிகாரத்தினூடாகத் தற்போது அனுபவித்து வருகின்றன. அதிசயமான COVID குணப்படுத்துதல்கள் முதல் 'தூய' காலனித்துவத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்கள் வரை பல்வேறு வகையான பூர்வீக சிந்தனைகளின் எழுச்சியையும் நாங்கள் கண்டிருக்கிறோம். காலனித்துவ நீக்கத்தின் முக்கிய சிந்தனையாளரான ஃபிரான்ட்ஸ் ஃபனான், அவரது பாரம்பரிய உரையான ரெச்சட் ஒஃப் தி ஏர்த் “Wretched of the Earth” இல் கடந்த காலத்தின் மீதான இந்த கவர்ச்சியைப் பற்றியும் பல தேசியவாத சிந்தனையாளர்கள் கடந்த காலத்திற்குத் திரும்பி, அதில் சிக்கிக் கொள்வார்கள் எனவும் எச்சரித்தார். இலங்கையைப் பொறுத்த வரையில் கல்வியிலோ எமது அமைப்பு முறைகளிலோ காலனித்துவ நீக்கம் பற்றிச் சிந்திக்கையில், காலனித்துவத்தின் விளைவாக உண்டாகிய கருத்துகளும், முறைகளும் முற்றாக நீக்கப்பட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். காலனித்துவம் எமக்களித்த மரபுகளைத் தர்க்க ரீதியாகச் சமகாலத்துக்கு ஏற்றவாறு அணுகுவதோடு அவற்றோடு ஒத்துவாழவும் பழகிக்கொள்ள வேண்டும். காலனித்துவ நீக்கம் என்பது சமகால நிலவுகையுடனான கடினமான போராட்டமேயொழிய ஒரு வெறும் உருவகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வது இங்கு அவசியமாகின்றது.