கல்வியும் நல்லிணக்கமும்

அனுஷ்கா கஹந்தகமகே

தசாப்தங்களாக நீடித்த யுத்தம், ஆயிரக்கணக்கான இளம் உயிர்களைக் காவுகொண்ட இரு இளைஞர் கலகங்களுக்கு (1971, 1988-89) மத்தியில் இச்சிறு தீவு ஒரு இரத்த ஆற்றையே கண்டுவிட்டது. யுத்தம் முடிந்தபோதும் வன்முறையானது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எனத் தடையின்றித் தொடர்கின்றது. அவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் சூட்கேஸ் ஒன்றினுள் தலையின்றிக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் போன்ற எண்ணற்ற கோரச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

யுத்தத்திற்குப் பின்பும் இனமத வேற்றுமைகள் இன்னும் சாம்பல் போர்வையில் மறைந்திருக்கும் தீப்பொறிகளாய்ப் புகைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கான அரசியல் தீர்வோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. சமூகப் படிநிலைகள், சமூகங்களுக்கிடையிலான இடைவெளி, சமுதாயத்தைத் தனி நபர்களாக உடைத்தல் என்பவற்றைத் தூர நோக்கற்ற அரசியல் பொருளாதரக் கொள்கைகள் மேலும் விரிவுபடுத்தியுள்ளன. ஆதிக்கம் படைத்த அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் வியாபாரத்துவத்தால் உந்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவை சிங்கள-பெளத்த பெரும்பான்மையின் பிரதிநிதித்துவத்தை மூலதனமாகக் கொண்டவை. இவர்களின் மேலோட்டமான பேச்சுக்களும் கொள்கைகளும் பெரும்பாலான சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களுக்குள் ஊடுருவிவிட்டன. எமது கல்விமுறையும் இதில் சிக்கத்தவறவில்லை.

கூறப்போனால் இவ்வாறான மேலாதிக்க விவரணங்களை நிலை நிறுத்துவதே எமது கல்வி நிறுவனங்கள் தான். பொதுவாக எமது பாடத்திட்டங்கள் சிங்கள-பெளத்த கலாசாரத்தைப் பெருமைப்படுத்திக் காட்டுவதோடு மாணவர்கள் மத்தியில் தர்க்கரீதியான சிந்தனையையும், கற்றலையும் ஊக்குவிக்காது அவற்றை அடக்கிவைக்கின்றன. உதாரணமாக பள்ளிக்கூட வரலாற்றுப் பாடத்திட்டமானது பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்திற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்தரப்பட்ட மக்களின் கண்ணோட்டங்கள் வழியே கூறப்படும் வரலாறுகளின்படி எமது இன்றைய நிலைப்பாடு என்ன என்பதை ஆசிரியர்களோ மாணவர்களோ சிந்தித்தறியும் சந்தர்ப்பம் இல்லை.  சிறுபான்மையினரின் குரல்கள் அடக்கப்பட்டு சிங்கள-பெளத்த மேலாதிக்கத்துடன் கூடிய ஒரு உத்தியோகபூர்வ வரலாறே எமது பாடப்புத்தகங்களில் சித்தரிக்கப்படுகின்றது.

பல நூற்றண்டுகளுக்கு முன் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் மீது தற்கால இனவாத்தைத் திணிப்பதன் மூலம் எமது தேசத்தின் இன-மையமான தன்மை வலுப்படுத்தப்படுகின்றது. உதாரணமாகத் “தமிழ்” மன்னனான எல்லாளனை முறையடித்த “சிங்கள-பெளத்த” மன்னன் என துட்டகைமுனு கொண்டாடப்படுகின்றான். பாடப்புத்தகங்களில் சிறுபான்மை இனங்களின் பொருத்தமற்ற சித்தரிப்பும் பாடசாலைகளை இனம், மதம், மற்றும் மொழி ரீதியாக வேறுபடுத்துவதும் இனங்களுக்கிடையிலான இடைவெளி, தவறான அபிப்பிராயங்கள், சந்தேகம், அறியாமை ஆகியவற்றை மேலும் அதிகரிக்கின்றன. இவற்றின் விளைவுகள் பாரதூரமானவை.

ஆகவே யுத்தகாலத்தின் போதும் அதன் பின்பும் நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்குமான முயற்சிகள் உள்நாட்டு ஆதரவு பெரியளவிலின்றி பெரும்பாலும் வெளிச்சக்திகளால் மேற்கொள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகளை நாட்டின் இறையாண்மையைத் தகர்ப்பதற்காகச் சர்வதேசச் சமூகம் மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் என இழிவுபடுத்துகிறார்கள். இது சம்பந்தமான சிங்கள-பெளத்த சமூகத்தின் எதிர்ப்போ அற்பசொற்பம். போருக்குப் பிற்பட்ட இக்காலத்தில் சிங்கள-பெளத்த தேசியவாதக் குழுக்கள் சிங்கள இளைஞர்களையும் அணிசேர்த்து முஸ்லிம் சமூகங்கள் மீது ஒருமுகப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இனங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டிவிடும் இத்தகைய அரசியல் முயற்சிகள் மிகவும் சிறிதளவு கருத்தியல் எதிர்ப்புக்களையே எதிர்கொள்கின்றன.

இங்கு வேடிக்கையான விடயம் யாதெனில் பிரச்சனைக்குரிய இச்சமூக நிலைப்பாடுகளுக்கும் கல்விக்கும் இடையேயுள்ள தொடர்பை நாம் காண மறுப்பதாகும். அவற்றைத் தொடர்புபடுத்தும் தர்க்கங்களும் வாதங்களும் சிறிய முற்போக்கு வட்டாரங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எமது சமூகங்களுக்கிடையே நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதை விடுத்து எமது கல்வித்திட்டமானது இனம், வர்க்கம், பால் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட வன்முறையையே வளர்த்துள்ளது. அரசியல் தலைவர்களோ கல்வி தொடர்பான கலந்துரையாடல்களைப் பொருளாதார அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதோடு, நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான பழியைக் கல்வி மீது சுமத்திவிடுகிறார்கள். 

வேலைவாய்ப்புக்களை முதன்மையாகக்கொண்டு எமது அரசாங்கமானது பொருளாதார நெருக்கடியைக் கல்வி நெருக்கடியாக வடிவமைத்திருக்கின்றது. “அறிவுசார் பொருளாதாரத்துக்குப்” பங்களிக்ககூடிய “ஆற்றல்” மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதில் எமது கல்வித்திட்டத்தின் இயலாமை இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்கான காரணமாகவும் தீர்வாகவும் கல்வியைச் சாட்டுவது சுலபம். எமது கல்வித்திட்டத்தின் வழிகாட்டியான SLPP கொள்கை விளக்க அறிக்கையானது கல்விப் பிரச்சனைக்கான ஒரே தீர்வு விஞ்ஞானம் (Science), தொழினுட்பம் (Technology), பொறியியல் (Engineering), மற்றும் கணிதம் (Mathematics) சார் “STEM” கல்வியென முன்மொழிகின்றது.

இவ்வறிக்கையின் “தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்கான உயர்கல்வி முறை” என்ற பகுதியில் கலைப்பிரிவுக் கல்வி புறந்தள்ளப்பட்டு மேற்கூறிய STEM கல்வியின் மேம்பாடும், ஆங்கிலப் புலமையாற்றலுமே வலியுறுத்தப்படுகின்றன. இங்கு STEM கல்வியால் பொருளாதாரம், கல்வி இரண்டினதும் நெருக்கடிகளை ஒருங்கே தீர்த்து நாட்டைப் “பொருளாதார அபிவிருத்தியை” நோக்கி இட்டுச் செல்ல முடியும் எனக் கருதப்படுகின்றது. எதிர்கால வேலைவாய்ப்புக்களின் தன்மையை எதிர்வுகூற முடியாததோடு, தற்போது இலங்கையில் தொழிலாளர்களுக்கான கேள்வி ஆடைக் கைத்தொழில் மற்றும் பாதுகாப்புச் சேவைகளிலேயே அதிகம் காணப்படுகிறது (தொழிலாளர் கேள்வி மதிப்பாய்வு 2017). எனினும் கொள்கையமைப்பாளர்களோ தகவல் தொழில்நுட்பம்சார் திறன்களை வளர்ப்பதிலும் தற்காலிகப் பொருளாதாரத்துக்கு ஏற்புடைய பணியாட்களை உருவாக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றனர்.

இருப்பினும் சகவாழ்வை விருத்தி செய்ய இன்றியமையாததாகப் பரந்தளவில் இனங்காணப்பட்டிருப்பது கலைப்பிரிவுக் கல்வியாகும். 2016 இல் நல்லிணக்க செயன்முறைகளுக்கான ஆலோசனைச் செயற்குழு, வரலாற்றுப் பாடத்திட்டத்தில் விலக்கப்பட்ட, சிறுபான்மையின் வரலாற்றுச் சித்தரிப்புகளையும் உள்ளடக்குவதைப் பரிந்துரை செய்தது. இது தற்போதைய மேலாதிக்க வரலாற்று விவரணங்களிலிருந்து வெளிவந்து தர்க்கரீதியான சிந்தனையுடன் இராணுவமயமாக்கப்பட்ட, சாதி/இனப் பாரபட்சத்துடனான, ஆணாதிக்க, எதிர்ப்பாலுணர்ச்சியை நெறிமுறையாகக் கொண்ட இச்சமூகத்தில் வளர்ந்து வந்ததன் விளைவுகளைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை உணர்த்துகின்றது.

இச்செயற்குழுவானது இனமத வேறுபாடுகளையும், சமூகங்களுக்கிடையிலான அவநம்பிக்கையையும் கையளுவதற்குச் சில பரிந்துரைகளை முன்வைத்தது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சிகள், மொழி மற்றும் கலை தொடர்பான நிகழ்ச்சிகள், சர்வதேசத் தொடர்புகள் போன்ற பொதுப் பாடநெறிகளைப் பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தல் போன்றவை அவற்றுள் சில. இப் பரிந்துரைகளில் பெரும்பாலானவை செயற்படுத்தப்படாமலேயே இருந்துவிட்டன. பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு STEM கல்வியின் மீதான கவனமும், “வேலையின்மை” என்ற பழங்கதையும் சமூக சிக்கல்களிலிருந்து கல்வி முன்னிட்ட வாதங்களைத் திசைதிருப்புவதோடு கலைப் பிரிவுக் கல்வியையும் பலவீனப்படுத்துகின்றன.

பொருளாதாரத்தை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு கல்விச் சீர்திருத்தத்தை முன்வைப்பது எனது குறிக்கோள் அல்ல. மாறாக யுத்தத்திற்குப் பிற்பட்ட பலவீனமான எமது சூழ்நிலையில் வெறும் “பொருளாதார அபிவிருத்தியை” நோக்கியதாக எமது கல்வித்திட்டம் அமைந்திருப்பதன் தாக்கங்களின் பால் எம் கவனத்தைத் திருப்புவதே எனது நோக்கமாகும். ஆம், நாட்டின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திப்பது கல்வியின் கடமையாகும். எனினும் அபிவிருத்தியென்பது பொருளாதாரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலம் கடந்துவிட்டது. அதற்கும் மேலான தூரநோக்குடைய சமூக இலக்குகளை நோக்கிச் செல்வதே மெய்யான அபிவிருத்திக்கான சிறந்த வழி என்பது சமகால உண்மையாகும். கல்வியானது ஆக்கத்திறன்களின் அபிவிருத்தியூடாகவும் சமாதானமான சகவாழ்வூடாகவும் மேற்குறிப்பிடப்பட்ட பரந்த சமூக இலக்குகளை அடைவதற்கான கருவியாக அமைய வேண்டும். இதுவே வன்முறையற்ற ஒரு சமூகத்தில் பொருளாதார இலக்குகளையும் அடைய வழிசெய்யும்.

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும்.

அனுஷ்கா கஹந்தகமகே புதுடில்லியின் தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் கலாநிதிப் பட்டம் பயிலும் மாணவியாவார். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்