சமூக விஞ்ஞானத்துள் நெருக்கடியா அல்லது சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடியா

அருணி சமரகோன்

ஒரு மாதத்திற்கு முன்னர், நான் இருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து கல்விசார் ஊழியர்கள் 2017-2021 காலப்பகுதிக்குள் வெளியிட்ட ஆய்வுகளின் பட்டியலைக்கோரி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இத்தகவல்கள் கணக்காய்வு அலுவலகத்தினால் வேண்டப்பட்டிருப்பதாக அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நோக்கம் சமூக விஞ்ஞான பீடங்களின் ஆய்வு வெளியீடுகளை அளவீடு செய்வதாகும். இந்த ஆய்வுகள் எவற்றைப்பற்றியவை அல்லது இந்த ஆய்வுகளின் பங்களிப்பு என்ன போன்ற தகவல்களை விடுத்து எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே மின்னஞ்சலில் கேட்டிருந்த தகவலாகும்.

இது சமூக விஞ்ஞானங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் விளைவுகளை வரவிலக்கணப்படுத்தல்ம் மற்றும் பகுப்பாய்வு செய்தல் குறித்து தொடர்ந்து நிலவும் பதட்ட நிலையின் அடையாளமாகும். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் ஜோர்ஜ் ஸ்டீவன்சன் பிரவ்னின் கருத்துப்படி, சமூக விஞ்ஞானத்தின் குறிக்கோள் “மாணவர்களில் தாம் வாழும் சமூகத்தை பாதிக்கும் அனைத்தையும் குறித்த ஆர்வத்தோடு இருக்கச்செய்தலும், பொதுமக்கள் சார்ந்த சிக்கல்கள் குறித்த தெளிந்த பார்வையோடும் அதனை தாம் வாழும் சுற்றாடலை குறித்த அறிவை பெறும்போது பயன்படுத்தும் இயலுமையையும் வளர்த்தலாகும்”. அதாவது, சமூக விஞ்ஞானங்களின் பங்களிப்பு அளவீடுசெய்ய முடியாததாகும். ஆனால், நமது உயர்கல்வி நிறுவனங்கள் நம்மிடம் வேண்டுவது யாதெனில், இவற்றை அளவுசார் அடிப்படையில் வரையறை செய்வதாகும், அதாவது, (ஊழியர் சந்தைகளுக்காக) உருவாக்கப்படும் இளநிலை மாணவர்களின் எண்ணிக்கை அல்லது ஆய்வு வெளியீடுகளின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாக கொண்டதாக இருக்கின்றது.

இந்த அனுபவம், 03/02/2021ஆம் ஆண்டு சிவமோகன் சுமதி அவர்களால் எழுதப்பட்டு ‘தி ஐலன்ட்’ குப்பி குழுமத்தில் வெளியிடப்பட்ட முதலாவது கட்டுரையான “கல்வியில் நெருக்கடியும் கல்வியின் நெருக்கடியும்” என்ற கட்டுரைக்கு மீட்டுச்சென்றது. இந்தக்கட்டுரை மூலம் நான் சுமதி முன்வைத்த இந்த இரண்டு நெருக்கடிகள் மீதான நிகழ்கால வாசிப்பை மேற்கொள்ள விழைகின்றேன்.  அரசியல் விஞ்ஞானத்துறையை சார்ந்திருக்கும் காரணத்தால் எனது வாதத்தை சமூக விஞ்ஞானத்துள் வரையறுக்கிறேன்.

சமூக விஞ்ஞானத்தில் நெருக்கடியா?

சுமதி கூறுவதைப்போல “கல்வியில் ஏற்பட்ட நெருக்கடிக்கான காரணம் அதன் அமைப்புகள், அதனை சார்ந்தோர், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்வியும் பலமிழந்திருப்பதும், சந்தை சக்திகள் போன்ற வெளிவாரியான காரணங்களால் கல்விக் கொள்கைகள் தேய்ய்ந்திருப்பதுமாகும்”. பிரவுனின் கூற்றுப்படி சமூக விஞ்ஞானங்கள் பயிலும் இளங்கலை பட்டதாரிகள் சமூகத்தின் சிக்கல்களை அடையாளம் காண முடிவதோடு அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்க இயலுமானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் பல்கலைக்கழக கற்றலும் கற்பித்தலும் இக்குறிக்கோள் நோக்கி செல்லாததன் காரணம் நவதாராளவாத சந்தை சக்திகளாகும்.

முன்னைய பத்தியில் குறிப்பிட்டது போல பல்கலைக்கழகங்கள் போன்ற பொதுச்சொத்துகளை சந்தை நோக்கிய, லாபம் காணும் நிறுவனங்களாக மாற்றும் கொள்கை சமூக விஞ்ஞானங்களின் மீது குறைந்தது இரு வழிகளில் சவாலாக மாறுகின்றது: கற்றல் மற்றும் கற்பித்தலின் குறிக்கோளாக “தொழில்வாய்ப்பு திறன்” மாற்றப்பட்டதும் சந்தை தேவைகளுக்கேற்ப சமூக விஞ்ஞான பாடங்கள் வடிவமைக்கப்பட்டதுமாகும்.

சமூக விஞ்ஞானங்களின் பிண்ணனியில் உருவாகியிராத நவதாராளவாத ஆதரவாளர்களாக இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்கைவகுப்பாளர்கள் தொழில்வாய்ப்பு திறன்களை விருத்தி செய்யும் பாடத்திட்ட மீளாய்வை வரவேற்கின்றனர். நிர்வாகங்களால் சமூக விஞ்ஞானிகளிடம் அவ்வாறு எதிர்பார்க்கும் திறன்கள் ஆங்கில மொழிப்புலமையும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் காணப்படும் போதுமான அறிவுமாகும். எனவே உலகவங்கியால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஆங்கில மற்றும் ICT செயலமர்வுகள் சமூக விஞ்ஞான பட்டதாரிகளின் “திறன்களை” விருத்தி செய்யவும் அவர்களை ஊழியர்சந்தைக்கு தயார்படுத்தவும் நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சிகளை பெற்ற பின்னரும் சமூக வின்ஞ்ஞான பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளை பெறுகின்றார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. உலகவங்கியின் செயற்றிட்டங்கள் பட்டதாரிகளை மத்தியதர சந்தை பொருளாதாரத்துக்கு தயார்படுத்தினாலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை அடிப்படை மனிதத்தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியாததாக காணப்படுகின்றது. இச்செயலமர்வுகளின் மேலும் குரூரமான விளைவாகவும் அதன் பாதியாகவும் இருப்பது பொதுமக்களை பலப்படுத்தும் சர்வஜன வழிமுறையாக கல்வி காணப்படும் நிலையை அழிப்பதாகும். இது சுமதியின் “கல்வியின் நெருக்கடி” என்ற வாதத்துக்கு அழைத்துச்செல்கின்றது.

சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடி

கல்வியின் நெருக்கடி என்பது யாது? சுமதி தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “கல்வியின் நெருக்கடி என்பது  சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை பலப்படுத்தும் மற்றும் உலகப்பார்வையை அனைத்து மக்களையும் நோக்கிய நகர்வாக மாற்றக்கூடிய அதன் சர்வஜன இயலுமை குறித்த பார்வையை இழத்தலாகும்”. இது கல்வியின் உட்பொருள் மற்றும் குறிக்கோள் குறித்ததாகும். கல்வியியலாளர்களாக நாம் யாருக்கு சேவகம் செய்கின்றோம்?

சமூக விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் இளங்கலை பயிலுன்ரகளிடம் நாம் காணும் பிரதிபலிப்புகள் யாவை? பொதுமக்களின் சிக்கல்கள் குறித்து சிந்திக்கும் வகையில் நாம் கற்பித்திருக்கின்றோமா? அவர்கள் தங்கள் சமூகங்களிடையில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்? சமூக விஞ்ஞான கல்வித்திட்டங்கள் மக்களை விமர்சனரீதியில் சிந்திக்கும் வகையில், அதாவது தமக்காகவும், வன்முறைக்கெதிராகவும், இனரீதியான படுகொலைகளுக்கு எதிராகவும் கேள்விகேட்கவும்; கலாசார பன்மைத்துவத்தை மதிக்கவும்; தேசியவாதத்தை எதிர்த்துப் பேசுமளவு பலப்படுத்தியிருக்கின்றனவா?

எமது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தமது அறிவை பாடப்புத்தகங்களுடனும் பரீட்சைகளுடனும் சுருக்கிவிடுவதோடு ஏனைய சமூகங்களுடனான உறவை கட்டியெழுப்பவோ பன்மைத்துவத்தை ஏற்று மதிக்கவோ நேரம் ஒதுக்குவதில்லை.

மாணவர்களில் “சிறந்தவர்” என தரப்படுத்தும் அமைப்பு மூலம் கூட்டொருமைப்பாடு மேலும் பலவீனப்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் உருவாக்கப்படும் ஊழியப்படை தமது உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதிக்காக ஒருங்கிணைந்து போராட திராணியற்ற ஊழியப்படையாகவும் அதிகாரத்துக்கு கட்டுப்படும் மக்களாகவும் சந்தைக்குள் நுழைகின்றார்கள்.

இப்பட்டதாரிகள் ஊழியசந்தைக்குள் நுழையும் போது செயல்திறமை கொண்டவர்களாக இருக்கவே நாடுகின்றார்கள் தவிர விமர்சன சிந்தனையாளர்களாக இருக்க நாடுவதில்லை. இம்மனநிலையிலேயே உயர்கல்விக்கான நிர்வாக அமைப்புகளில் நுழையும் “திறமைசாலிகள்” பல்கலைக்கழகங்களின் வெளியீடுகளின் எண்ணிக்கை, அதாவது வெளியாகும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, ஆய்வு வெளியீடுகளின் எண்ணிக்கை என்பவற்றிலேயே கவனத்தை குவிப்பதோடு பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்களுக்கிடையாலான போட்டியை ஊக்குவிக்கும் இவ்வமைப்பு அவர்களுக்கிடையில் உருவாக்கப்பட வேண்டிய கூட்டொருமைப்பாட்டை இல்லாமலாக்கி அவர்களை தனித்தனி துருவங்களாக மாற்றுகின்றது.

தேசியவாதம் குறித்தான விமர்சன சிந்தனையை வளர்க்கும் அடித்தளத்தை பல்கலைக்கழகங்கள் உருவாக்குகின்றனவா? அல்லது தேசிய இனப்பிரச்சினை குறித்த முன்மொழிவுகளை மேற்கொள்கின்றனவா? 2010ல் நான் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்த போது வடகிழக்கில் கணக்கற்று இறந்த மக்களை விடுத்து கொண்டாடப்படும் யுத்தவெற்றியை சமுக விஞ்ஞான விரிவுரையாளர்களும் இளங்கலை பட்டதாரிகளும் கொண்டாடுவதை கண்டேன். சக மனிதனின் இறப்பை எவ்வாறு ஒருவரால் கொண்டாட்டமாக மாற்ற முடிகின்றது? இருப்பினும், சில பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் யுத்தவெற்றிக்காக ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

யுத்தம் முடிந்து தசாப்தமாகியும் இன்னும் சில மூத்த சகபணியாளர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு யுத்தமே பதிலாகும் என நம்பியிருக்கின்றார்கள். 2019ல் நான் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட களவிஜயத்தின்போது என் சகபணியாளர் ஒருவர் நிகழ்வொன்றில் பேசும்போது தமிழ் தேசிய கூட்டணி இலங்கையை தனியரசாக மாற்றும் நோக்கில் செயற்படவில்லை எனக்கூறினார். இவ்வாறான முற்கோள்கள் இளங்கலை பட்டதாரிகளிடம் தேசியவாத எண்ணங்களை ஏற்படுத்தவல்லதோடு ஏனைய இனங்களுக்கு மேலான அதிருப்தியை ஏற்படுத்தும். சமூக விஞ்ஞானக்களை எண்கணித அளவீட்டுக்குள் குறுக்கும்போது இவ்வாறான விளைவுகளையே பல்கலைக்கழகங்களில் காணலாம்.

அறுதியாக, தரம் மற்றும் கணியம் ஆகியவை இருவேறான பகுப்பாய்வு அளவீடுகளாகும். சமூக விஞ்ஞானம் போன்ற பண்புசார் பாடங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளை பகுப்பய்வு செய்ய அளவீட்டு அம்சங்களை பயன்படுத்த முடியாது. கல்வியில் காணப்படும் நெருக்கடி கல்வியின் நெருக்கடியாக தற்காலத்தில் மாறியிருப்பதால் எமது இளங்கலை பட்டதாரிகள் விமர்சன சிந்தனையை வளர்க்கமுடியாமல் இருக்கின்றார்கள். ஊழியசந்தைக்கான “வெளியீடுகளாக” எண்ணிக்கைகளில் அளவிடப்படும் நிலையால் சமூகம் ஜனநாயகரீதியில் ஒழுங்கமைவதிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அடிப்படை தேவைகளாஇ கூட பூர்த்திசெய்ய முடியாமல் திணரும் மக்களுக்கிடையில் பட்டம் பெற்றிருப்பதால் மட்டும் தொழில்வாய்ப்புகள் இருவாகிவிடாது. நமக்கு வேண்டியதெல்லாம் மக்களின் அன்றாட சிக்கல்கள் குறித்த தீர்க்கமான பார்வை உள்ள பன்மைத்துவ சமூகத்தை மதிக்கும் பிரஜைகளே.