சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும்

அகிலன் கதிர்காமர்

கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பதினேழாவது ஒப்பந்தமானது
அதற்கு முன்னையவற்றிலும் பார்க்க விபரீதமானதாகும். இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக
அதன் வெளிக் கடனைத் தீர்க்கத் தவறிய இத் தருணத்தில் இவ்வொப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டமை அதற்கான காரணம் எனலாம். இலங்கைக்கும் அதன் அந்நியக்
கடனாளர்களுக்கும் இடையே, கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பாக சர்வதேச நாணய
நிதியமானது மத்தியஸ்தம் செய்கின்றது. இதனால் இலங்கை கணிசமான அந்நிய முதலீட்டைப்
பெற்றாலும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நேர்கின்றது.
1970 களில் எமது சமூக நலன் சார் அமைப்புமுறையைப் பாதித்த நாணய நிதியத்தின்
கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டத்தை விட, மேற்கண்ட உடன்படிக்கையின் விளைவுகள்
பரந்துபட்டவையாகவும், பாரதூரமானவையாகவும் இருக்கும். இந்த வாரக் கட்டுரையில் எமது
கல்வியமைப்பு எதிர்கொள்ளக்கூடிய சில ஆபத்துகளை நோக்க விளைகின்றேன். கல்வியானது
சமூக நலன் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்தது. சர்வதேச நாணய
நிதியத்தின் தொடர்பும், தற்போதைய நவதாராளவாத அரசும், காலப்போக்கில் மக்களின்
உடமைகளையும் உரிமைகளையும் பறிமுதல் செய்யும் சர்வாதிகார ஆட்சிக்கு
இட்டுச்செல்லுக்கூடும். தற்சமயம் எமது நாட்டில் மாணவர்களதும், ஆசிரியர்களதும் பாரிய
எதிர்ப்பிலும், தொழிலாளர் சமூகத்தின் ஒத்துழைப்பிலுமே இலவசக் கல்வி தங்கியுள்ளது.
சமூக நலனும் ஜனநாயகமும்
இலங்கையில் சமூக நலன் தொடர்பான செயற்பாடுகள் 1940 களிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. உலகளாவிய திட்டங்களான உணவு மானியங்கள், இலவசக் கல்வி, மற்றும்
இலவசச் சுகாதார சேவை போன்றவை அவற்றுள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 1970 களில்
நவதாராளவாதக் கோட்பாடுகள் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம்
மற்றும் உலக வங்கியின் உடன்படிக்கைகள் இவ்வாறான உலகளாவிய சமூக நலன் திட்டங்களை
நலிவாக்க விளைந்துள்ளன. இவர்களது நோக்கம், கல்வி மற்றும் சுகாதாரச் சேவையை
வணிகமயமாக்குவதன் மூலம் ஒரு சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். தாராளவாதக்
கோட்பாடுகள் தனிமனிதச் சலுகைகளை மையமாகக் கொண்டவை. ஆகையால் தனிமனிதனின்
நலனைப் பேண வேண்டிய முழுச் சுமையும் அவன் மீதே திணிக்கப்படுகின்றது. அமெரிக்க
ஜனாதிபதி ரொனல்ட் ரியேகனோடு உலகளாவிய ரீதியல் நவதாராளவாத யுகத்தை
ஆரம்பித்துவைத்த பிரித்தானியப் பிரதமர் மார்கரட் தச்சரின் பின்வரும் கூற்றை இங்கு மேற்கோள்
காட்டலாம்- “சமூகம் என்று எதுவும் இல்லை”.
இவ்வாறு “சமூகம்” என்ற விடயத்தைப் புறக்கணிக்கும்போது சமூக நலனானது
பாதிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் ஒருங்கே சமூக நலன்
என்பதன் பொருளைப் பணப் பரிமாற்றம் என்ற குறுகிய நோக்கிற்குள் கொண்டு வர
முயல்கின்றன. சமூக நலன்புரித் திட்டங்கள் பாதிக்கப்படுகையில், குறைந்தபட்ச ஆதரவைப்
பெறுவோர் யாவர் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம், ஏற்கனவே சமூகத்தில் அதிகாரம்

படைத்த குழுவினருக்கு வழங்கப்படும். இவ்வுரிமையானது நாணயமயமாக்கப்படுவதோடு அதன்
பெறுமதி காலப்போக்கில் குறைக்கப்படவோ, பணவீக்கமடையவோ கூடும்.
வரலாற்றின்படி, உலகளாவிய நலன்புரித் திட்டமானது, 1931 இன் பொது வாக்குரிமைத்
திட்டத்தின் பின்னே முன்னெடுக்கப்பட்டது. மேலும், 1940 களின் நடுப்பகுதியில் இலவசக்
கல்வித் திட்டங்கள் எழுந்தன. இலங்கையைப் பொறுத்த வரையில் மக்கள் சக்தியை
ஜனநாயகத்தினூடாக வெளிப்படுத்துவதை வலுவூட்டுவதன் பெயரில் இலவசக் கல்வி
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இன்று சமூக நலன்புரித்திட்டங்களுக்கெதிரான
நடவடிக்கைகள், மறைமுகமாக சட்டவிரோதமான, ஜனநாயகமற்ற ஒரு ஆட்சியைத்
தாபிப்பதற்கான யுக்தியாக அமைகின்றன. சமூக, அரசியல், மற்றும் பொருளாதார
மாற்றங்களுக்கான ஊடகமாக அமையும், ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கும் மக்களையன்றி,
சந்தைப் பொருளாதாரத்துக்கான அடிமைகளை உருவாக்குவதையே கல்வியின் குறிக்கோளாகக்
கருதுகிறது சர்வதேச நாணய நிதியம். இத் தொழிநுட்ப அறிஞராட்சி சார் கருத்தையே எமது
கல்விக்கான தொலைநோக்காக அரசாங்கம் தத்தெடுத்துள்ளது.
மட்டுப்படுத்தப்படும் செலவீனங்களும் பறிக்கப்படும் உரிமைகளும்
தனிமனிதனுக்கு முக்கியத்துவமளிக்கும் தாராளவாதக் கருத்துக்களாலும் கோட்பாடுகளாலும்
மட்டுமே இங்கு இலவசக் கல்வி தாக்கப்படவில்லை. நாணய நிதியத்தின் திட்டத்தோடு
பொருளாதாரச் செலவீனங்களும் மட்டுப்படுத்தப்படும் போது கல்விக்கான நிதி ஒதுக்கீடும்
குறைக்கப்படும். அடுத்த வருடத்திற்குள் முதன்மை நிதி மிகுதியொன்றை உருவாக்குவதற்கான
வழிகளைக் கண்டறியும் கட்டாயத்திற்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இது கல்வியை
வணிகமயமாக்கும் செயற்பாடுகளுக்கு வழிகோலும். உதாரணமாக அரச பல்கலைக்கழகங்களில்
கட்டணம் அறவிடும் கற்கைநெறிகளின் விஸ்தரிப்பு, கல்விக்கான கடன் திட்டங்கள், தனியார்
பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் கல்வி நிலயங்கள் தாபிக்கப்படல் போன்றவற்றைக்
குறிப்பிடலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகளும் மக்களின் முக்கிய சமூக நலன்சார் உரிமையான கல்வியைப் பறிமுதல்
செய்யப்போகின்றன. மாணவர்கள் பாடசாலைக் கல்வியைக் கைவிடுதல், கிரமமாகப்
பாடசாலைக்குச் சமுகமளிக்காமை, உணவுப் பற்றாக்குறையால் பாடவேளைகளில் மயங்கி
விழுதல், வாழ்வதற்காக இச்சிறுவர்கள் வேலை செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாதல் போன்றவை
ஏற்கனவே இடம்பெற்றுவருகின்றன. மறுபுறம் பல்கலைக்கழக மாணவர்கள் போக்குவரத்துக்கும்,
கூறப்போனால் மதிய உணவுக்கும் கூடப் போதிய பணமின்றி அல்லலுறுகின்றனர்.
செலவீனங்களை மட்டுப்படுத்தும் பெயரில் சுருங்கி வரும் பொருளாதாரத்தின் பிரதிபலிப்புகளே
இவை. கடந்த சில வருடங்களில் எமது பொருளாதாரமானது ஐந்தில் ஒரு பங்கு சுருங்கியுள்ளது.
1930 களில் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியிலிருந்து மீள்கையில் எமது நாட்டில் உண்டான
சமூக நலன் சார் செயற்றிட்டங்கள் அனைத்தும் மீண்டும் இல்லாது போகும் ஆபத்தை நாம்
எதிர்கொண்டுள்ளோம். தற்போதைய பொருளாதார நெருக்கடியும், சர்வதேச நாணய நிதியத்தின்
தலையீடும் இவ்வாபத்தினை மேலும் பெருப்பித்துள்ளன.
எமது நாடு எதிர்கொண்டிருக்கும் இவ்விக்கட்டான சூழ்நிலையை ஒற்றுமையாலும், பலத்த
எதிர்ப்பினாலுமே எதிர்கொள்ள முடியும். தாராளவாதக் கருத்துகளால் பாதிப்புற்றிருக்கும்

சமூகவுடைமையை மீளக் கட்டியெழுப்புவதோடு, ஜனநாயகத்துக்கான போராட்டமும்
முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த வருடம், பெரும் சவால்களுக்கும் காலாகாலமாகவுள்ள
தாராளவாதக் கொள்கைகளுக்கும் மத்தியில், ஒரு சர்வாதிகார ஜனாதிபதியை எமது மக்கள்
வெளியேற்றினர். இது தொழிலாளர் மத்தியில் ஒற்றுமை, சமூகம் என்ற நோக்கு, மற்றும்
எதிர்ப்பை வெளிப்படுத்தல் ஆகிய பண்புகள் உயிர்ப்புடன் காணப்படுவதை
வெளிப்படுத்துகின்றது.
குடியேற்றவாதத்தின் பின் மிகவும் கடினமான ஒரு காலப்பகுதியை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
எமது பொருளாதாரம் வீழ்கின்றபோதும், எமது சமூகத்தின் மேல்வர்க்கத்தினர் நாணய
நிதியத்துடனும், குளோபல் ஃபைனான்ஸ் கப்பிடல் (Global Finance Capital) ஆகிய
நிறுவனங்களுடனுமே கூட்டுச்சேர்ந்துள்ளனர். இவை ஒருங்கே எமது நாட்டின் கடனடைக்க
முடியா நிலையச் சாதகமாகப் பயன்படுத்தி எம்மை உடும்புப்பிடியாகப் பிடித்துள்ளன. எமது
நிலவுகையைப் பாதிக்ககூடிய இச் சூழ்நிலையில், இலவசக் கல்வியைப் பாதுகாக்க விளையும் எம்
போன்றவர், பரந்த சமூக நலனையும், ஜனநாயகத்தையும் முதலில் பேணப் போராடல் வேண்டும்.
மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்