தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்”

ஹர்ஷன ரம்புக்வெல்ல

தர்க்க ரீதியான சிந்தனை என்ற பதத்தைப் பொது மற்றும் உயர் கல்வியில் தற்போது பரவலாகக் காணலாம். கல்வி தொடர்பான கொள்கை அறிக்கைகளில் அதன் பயன்பாடு அதிகம். கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர் பலர் இதனை ஒரு முக்கிய ஆற்றலாகக் கருதுகின்றார்கள். வினைத்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகக் கல்வியை நோக்குவோரும் இதனை ஒரு சாதகமான விடயமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும் தர்க்க ரீதியான சிந்தனை என்றால் என்ன என்பதற்கான தெளிவு சொற்ப அளவே காணப்படுகின்றது. பலர் இதனை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அல்லது நியாயமான தீர்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆற்றலாகப் பார்வையிடுகின்றனர். அதாவது ப்ளூமின் வகைபிரிப்பில் (Bloom’s Taxonomy) ஒரு உயர் ஆற்றலாக இதனைக் கருதுகிறார்கள். தர்க்க ரீதியான சிந்தனை தொடர்பாக ஏகப்பட்ட அறிவார்ந்த எழுத்தாக்கங்கள் உள்ளன. இவை “தொழிற்துறையில்” தர்க்க ரீதியான சிந்தனியாளர்களின் தேவை பற்றியும், பல்கலைக்கழகங்கள் எவ்வாறு இத்தகைய சிந்தனையாளர்களை உருவாக்கத் தவறுகின்றன என்பது பற்றியும் விவரிக்கின்றன.

தர்க்க ரீதியான போக்கு என்பதற்கான அர்த்தங்கள் பல. “தர்க்க ரீதியான” என்ற அடைமொழியிலிருந்து “உய்யுமை” எனும் பெயர்ச்சொல்லுக்குச் செல்வோமானால் இங்கு அவற்றைப் புரிந்துகொள்வது சற்றே கடினமாகின்றது. அகராதி வரையறைப்படி உய்யுமை என்பது இராசயனம் போன்ற சடப்பொருட்கள் நிலையற்ற தன்மையை அடையும் புள்ளியாகும். மேலும் சுற்றியுள்ள உலகில் நடைபெறுபவற்றை அவதானித்து கேள்விகள் தொடுக்கும் தன்மையைக் கொண்ட வாழ்க்கை முறை எனவும் அது வரையறுக்கப்படுகின்றது. சற்றுத் தெளிவு குன்றிய இந்த வரைவிலக்கணமே எனது கவனத்தை ஈர்க்கின்றது. தர்க்க ரீதியான சிந்தனை எனும் கோட்பாடானது நீண்ட, சிக்கலான, தீவிரமான ஓர் அறிவுசார் வரலாற்றைக் கொண்டது. எனினும் முக்கியக் கல்விக் கலந்துரையாடல்களில் இது எளிமையாக்கப்பட்டு ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவரப்படுகின்றது. “தர்க்க ரீதியான சிந்தனை” பற்றிப் போதிக்கும் கல்வியாளர்கள் பலரின் நடத்தைகள் நடைமுறையில் அதற்கு எதிர்மறையாகவிருப்பது வியப்புக்குரியது. உதாரணமாகக் கருத்தாடல் மன்றங்கள் பலவற்றிலும் அதிகரித்து வரும் மாணவர் பழு பற்றியும் அதனைக் கையாளக்கூடிய மனித மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை பற்றியும் பேசப்படுகின்றன. இங்கு பெரும்பாலும் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் மாற்று மதிப்பீட்டு முறைகள் மூலம் இப்பற்றாக்குறையைச் சரி செய்வது தொடர்பாகவே கலந்துரையாடப்படுகின்றது. எமது பீடம் சார் மன்றங்களோ செனட் சபைகளோ இந்தப் பிரச்சினைக்கான அடுத்த கட்டக் கேள்விகளைத் தொடுக்க மறுக்கின்றன. மாணவர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவது ஏன்? உயர் கல்வியில் அரச முதலீடு குறைந்து வருவதற்கான காரணம் என்ன? கல்வி நிறுவனங்கள் மாணவ வெளிப்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவது ஏன்? எமது கல்வி முறையின் தன்மை மற்றும் அதன் குறிக்கோள் பற்றி எழுப்ப வேண்டிய பல அடிப்படைக் கேள்விகள் உள்ளன. இருப்பினும் இவ்வாறான கேள்விகள் “அரசியல்” சார்ந்தவை அல்லது நடைமுறைக்கு ஏற்பற்றவை எனக் கருதப்படுவதோடு கல்வியாளர்களும் அவர்களது பங்களிப்புகள் கருத்தியல் ரீதியாக இல்லாது நடைமுறைச் சாத்தியமாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள்.

தர்க்க ரீதியான சிந்தனை என்பதை வகுப்பறைகள் மற்றும் பாடத்திட்டங்களுக்குள் உள்ளடக்கும் போது அதன் அரசியல் மற்றும் கருத்தியல் அம்சங்கள் விலக்கப்படுகின்றன. பிரதான கல்வியைப் பொறுத்தவரையில் தர்க்க ரீதியான சிந்தனை என்பது பெரிதும் நவ தாராளவாதத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் தமது உணர்வுகள் தொடர்பாக சுய மதிப்பீடு செய்யக் கற்பிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக மாணவர்கள் மத்தியில் எல்லாவற்றுக்கும் இணங்கிக் கொடுக்கும் மனப்பான்மையும் தமது “வினைத்திறன்” அற்ற தன்மை பற்றிய குற்ற உணர்வுமே உண்டாக்கப்படுகின்றன. உதாரணமாக ஆசிரியர்களுக்கான கல்வியில் “பிரதிபலிப்புச் சிந்தனையை” நோக்குவோம். இதனடிப்படையில் ஒரு  ஆசிரியர் தொடர்ந்து தான் எவ்வாறு மேலும் சிறந்த ஒரு ஆசிரியராகத் தொழிற்பட முடியும் என்பதில் கவனம் செலுத்துகின்றார். எனது கற்பித்தல் முறைகள்  பொருத்தமானவையா? அவை மாணவர்-மையமாக உள்ளனவா? எனது கற்பித்தல் திட்டங்கள் பயனுள்ளவையா? இவ்வாறான ஒரு சிந்தனைப் போக்கில் அரசியலும் கருத்தியலும் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றன. எமது மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்களை எமது கல்வித்திட்டத்தின் சமத்துவமற்ற தன்மை, அதன் வர்க்க ரீதியான பாகுபாடுகள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுவது அரிதாகும். எமது பாடத்திட்டங்களில் பால், இனம், வர்க்கம் ரீதியாக உள்ள பாகுபாடுகளைப் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. உய்யுமை என்பதை ஒரு ஆற்றலாக உருவகித்திருப்பது எமது கல்வியில் தர்க்க ரீதியான சிந்தனைக்கு இடமளிக்கப்படுகின்றது என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

உய்மை என்பதை ஒரு பொருளாகக் கொள்ளும் இக்கருத்துக்கு மாறாக “தர்க்கம்” என்பதன் ஆழமான அர்த்தங்கள் உலகின் தெளிவற்ற ஒரங்களில் காணப்படுகின்றன. மேற்கத்திய தத்துவஞானத்தின் படி தர்க்கம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை எதிர்க் கேள்வி கேட்கும் சோக்ர்டீஸின் சிந்தனைகளில் ஆரம்பித்து இராஸ்மஸ், தாமஸ் முவர், பேகன், டெஸ்கார்டெஸ், ரஸல், ஜான் டூவி ஆகிய சிந்தனையாளர்கள் வரை விரிவடைந்துள்ளது. இவர்களது தத்துவஞானங்கள் பரந்துபட்டவையாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களைக் கேள்வி கேட்கும் பாங்கு இங்கு பொதுவான ஒன்றாக உள்ளது. அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழமைகளைப் நிராகரித்தார்கள் எனக் கூற முடியாது. மாறாக அவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாது கேள்விகள் ஊடாகத் தர்க்க ரீதியாக அவற்றைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள் என இங்கு கருதலாம்.

தற்போது “மதிப்பு” என்ற விடயத்தை நோக்குவோம். இன்றைய புதிய “பெரு நிறுவனம்” போன்ற பல்கலைக்கழக அமைப்பானது தத்துவஞானிகளாலன்றிக் கணக்காளர்களால் கையாளப்படுகின்றது என்பதை 1997 இல் பில் ரீடிங்ஸ் அவரது “பல்கலைக்கழகங்கள் சிதைவில்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தர்க்க ரீதியான சிந்தனை தொடர்பாக தற்போது இருக்கும் பிரச்சினையை எடுத்துக்காட்டுகின்றது. தர்க்க ரீதியான சிந்தனையானது பிரதான கலந்துரையாடல்களால் வடிவமைக்கப்பட்டு அதன் தத்துவஞானம் ரீதியான போக்கை இழந்துள்ளது. அதாவது அதன் மதிப்பு போட்டி நிறைந்த உலகில் வேலையை உறுதிப்படுத்தத் தேவையான ஒரு சாதகமான ஆற்றல் என்ற ரீதியில் அதன் மதிப்பு முடிவடைகின்றது. உயர் கல்வியின் நவ தாராளவாதம் நோக்கிய மாற்றத்தை ரீடிங்ஸினது நூல் எடுத்தியம்புகின்றது. இவர் இங்கு குறிப்பிடும்1990 களின் சம்பவங்கள் ஐரோப்பிய-அமெரிக்க பிராந்தியங்களில் இடம்பெற ஆரம்பித்த மாற்றங்களாகும். இங்கு அவர் “சிதைவுகள்” எனக் குறிப்பிட்டது தர்க்க மற்றும் தத்துவ ரீதியான சிந்தனைக்கான இடமாகிய பாரம்பரிய பல்கலைக்கழகங்களாகும். இலங்கையில் இன்று நாம் காண்பது இதன் தீவிரமான ஒரு பிரதிபலிப்பு எனக் கூறலாம். இலங்கையில் உயர் கல்வியானது வெகு விரைவாகச் சந்தைபடுத்தலுக்குட்பட்டுவருகின்றது. அரச கொள்கைகள் வேலைக்கமர்த்தக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதிலும், இலாபமீட்டக்கூடிய பட்டப்படிப்புக்களைத்  தாபிப்பதிலும் தமது கவனத்தைத் திருப்பியுள்ளன. இப்புதிய பல்கலைக்கழகங்களின் “மதிப்பானது” அது உருவாக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையிலும் அவர்களது வேலைக்கமர்த்தக் கூடிய தன்மையிலும் தங்கியுள்ளது. இங்கு நாம் பார்த்ததில் தர்க்க ரீதியான சிந்தனையானது பற்றாக்குறையான பதங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு நான் நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வை வழங்காவிட்டாலும் இது தொடர்பாகக் கலந்துரையாடல்களையும் வாதங்களையும் தூண்டுவதே எனது நோக்கமாகும்.

(எழுத்தாளர்  இலங்கைத் திறந்த பல்கலைக்கழக்த்தின் ஆங்கில முதுகலைப் பட்டப்படிப்பு நிறுவனத்தின் இயக்குனரும் ஆங்கிலப் பேராசிரியருமாவார்).

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும்.

மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்