தற்போதைய நெருக்கடிக்கு தேவையான கல்வி

ஷாமலா குமார்


துல்லியமான வார்த்தைகளை கூற முடியாதுள்ளது, ஆனால் அதன் சாரம்
இதுதான்: ஒருவர் கூட‌ எமது கல்வி குறித்து திருப்தியாக இல்லை.
கல்வியென்பது சிறந்தவொரு உலகம், நாடு மற்றும் எதிர்காலத்தை கற்பனை
செய்யவைக்க வேண்டும். ஆனால் எமது கல்வி அமைப்பை தக்கவைக்கவும்
அதனை விமர்சனமின்றி வெற்றுப்பார்வையோடு நோக்கவுமே
வழியமைக்கிறது.


குப்பி பத்திகளை எழுதும் குப்பி குழுமமானது இன்னும்
விரிவடைந்துகொண்டு வருகின்றது. கோவிட் 19 முடக்கத்தின் போது
நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களை
அனுஷ்கா கஹன்டகம அவர்கள் கூறினார். பின்வந்த காலங்களில் நாங்கள்
மேலே குறிப்பிட்ட கற்பனாதிறனை வளர்க்கக்கூடிய, சிந்திக்க வைக்கக்கூடிய,
செயற்படுத்தக்கூடிய‌ கல்வி எது என சிந்தித்தோம்.


நாம் பங்காளர்களாக இருக்கும் கல்வி அமைப்பானது நாம் காணும்
மாற்றங்களை உருவாக்கக்கூடியதல்ல. கோவிட் 19 முடக்கத்தின் போது எமது
கல்வியின் ஏற்பட்ட மாற்றம் பௌதீகரீதியில் வகுப்பறைகளில் நடந்த கல்வி
இணையவழி கல்வியாக மாறியதோடு இணையவழி கல்வி வாய்ப்புகள்
இல்லாதவர்களையும் பொருளாதார மற்றும் உளநலம் குறித்த
சிக்கல்களையும் சிறிதளவிலேனும் ஒப்புக்கொண்டதாகும்.
எம்மைச்சூழ்ந்திருந்த நெருக்கடியை பொருட்படுத்தாமலும் அதனை குறித்த
எந்தப்பார்வையுமின்றி ஏற்கனவே இருந்த பாடத்திட்டங்களையே நாங்கள்
கற்பித்தோம். யதார்த்தத்திலிருந்த விலகிய இந்த சூனியத்தன்மை எமது
பல்கலைக்கழகங்களிலும், தொழில்களிலும் , கல்வியிலும் கூட இருந்தே
வருகின்றது. கடந்த வாரத்தின் குப்பி ஆக்கத்தில் சுதேஷ் மந்திலக்க
அவர்களின் பொருமல் “எம்மைச்சூழ உலகமே சிதறிக்கொண்டிருக்கும் போது

நாங்கள் வழமையைப்போல வேலை செய்துகொண்டிருக்கின்றோம்” என
வெளிப்பட்டது.


எனவே நான் இந்த கணத்தில் எமது மாணவர்களிலிருந்தும்,
சமூகத்திலிருந்தும், ஏன், எங்களிலிருந்தும் கூட அந்நியமாகிப்போவதை
குறித்து சிந்தித்துப் பார்க்கின்றேன். எமக்கு என்ன ஆனது?


பல்கலைக்கழகமும் நிகழ்காலமும்


பல்கலைக்கழகத்தை சேர்ந்த நாங்கள் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப
எங்களை நிலைப்படுத்துவதில் தாமதமாகியுள்ளோம். அண்மைய காலங்களில்
பல்கலைக்கழகத்தில் நான் இருக்கும் பீடத்தில் கலந்துரையாடல் நிகழ்வுகள்
குறைந்து போயிருப்பதை அவதானிக்கிறேன். ஒருவர் கூறியதைப்போல
“எமது நேரம் நிர்வாக விடயங்களுடனேயே செலவழிந்து விடுகின்றது.
சிந்திப்பதற்கு நேரமிருப்பதே இல்லை”. நாம் தானியங்கிகளாகவும் வீணாக
நேரத்தை போக்குபவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றோம்.
விமர்சனக்களை, வாக்குவாதங்களை உருவாக்கும் சூடான
கலந்துரையாடல்கள் எங்கே போயின?


எதுவுமே நடவாதது போல நாம் இயங்கும் நிலை குறித்து சுதேஷ் அவரது
ஆதங்கங்களை தெரிவித்த அன்று எனது மாணவர்களும் சோர்வாக
இருப்பதை கவனித்தேன். இருவருடங்களாக அனுபவித்திருந்த மன
அதிர்ச்சியோடு கூட குடும்ப கஷ்டங்களை உணர்ந்து பகுதிநேர
வேலைகளில் இணைந்திருந்தார்கள். அவர்களின் வாழ்க்கை
கேள்விக்குறியாயிருந்தது. ஒரு மாணவர் என்னிடம் தாம் அனைவரும்
சோர்வாயிருப்பதாக கூறினார். அவர்களுக்கு பல சிக்கல்கள் கண் முன்
இருந்தன. அன்றாட பயணச்செலவு, உணவுக்கான செலவு எல்லாமே
விலையேறிப்போயிருந்தன. ஒரு நாளைக்கான உணவுச்செலவு 600 ரூபாவாக
இருப்பதாக கேள்விப்பட்டேன்.


‍எமது பீடம் தேவையுடைய மாணவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டு
வருகின்றது. பிரச்சினைகள் அதிகரிக்க தேவைகள் அதிகரிக்க எம்மால்

அவற்றை நிறைவேற்றிட முடியாத நிலை உருவாகியுள்ளது. “நாம்
அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? என்னிடம் விடைகளில்லை” என மாணவ
நலன்களுக்கு பொறுப்பான ஊழியர் என்னிடம் கூறினார். ஆனாலும் நாங்கள்
இன்னும் அதே கல்வித்திட்டத்தை கற்பித்து அதே தரத்தைப் பேணி எங்களை
நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறோம்.


தரம் எனும் கருத்துருவம்


பல்கலைக்கழகங்களில் தற்போது நடைபெறும் பாரிய மாற்றமொன்றாக நான்
தர நிர்ணய செயற்பாட்டை குறிப்பிடுவேன். பல்கலைக்கழக ஊழியர்கள்
அனைவருமே தாம் தரமான கல்வியை வ்ழங்குகின்ரோம் என்பதை
காண்பிப்பதற்கான ஆவணங்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். தரம்
என்பது மேலிடத்தில், அதாவது பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்படுகின்றது. எனது பல்கலைக்கழகத்தில்
தரத்தைப் பேணும் நோக்கில் நாம் என்ன செய்கின்றோம் என்ற
கலந்துரையாடலே நடைபெறவில்லை. தர நிர்ணய செயற்பாடு
ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆர்வமற்றவர்களாக மாற்றுகின்றது.
தொழிநுட்பரீதியாக, தொழில்ரீதியாக சிறந்த முறையில் பணியாற்றும் ஒரு
ஆசிரியர் ஊழியர் சந்தைக்கு தேவையான “தொழில் உலகுக்கு தேவையான”
“உற்பத்திகளை” உருவாக்குவார். எமது மாணவர்களை உற்பத்திகளை கருத
முடியுமா என்ற விவாதத்தை ஒரு பக்கம் வைத்தாலும் தொழில் உலகுக்கு
ஏதுவான மாணவர்களை உருவாக்கினாலும் அவர்கள் உலகை
மாற்றவல்லவர்களா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.


“சந்தை உற்பத்திகள் (பட்டதாரிகள்)” குறித்து ஏற்கனவே காணப்படும்
மாதிர்களுக்கமையெ மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல்கள் எமது அமைப்புகளை
மேலும் முன்னேற விடாமல் வைத்துள்ளதோடு எமது வாழ்க்கையில் நாம்
அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து எம்மை தூரமாக்கியே
வைத்திருக்கின்றன. எமது கற்பித்தல் மாணவர்களின் அனுபவங்களையோ,
எமது நாட்டிலுள்ள அவலங்களையோ, உலகில் நடைபெறும் யுத்தம்,

வன்முறை மற்றும் இன்னபிற அவலங்களையோ பிரதிபலிக்கவில்லை
என்பதே உண்மை.

அதைப்போல, பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின்
தரங்களும் அவை வெளியிடப்படும் சஞ்சிகைகளின் தரப்படுத்தல்களின்
அடிப்படையிலேயே தரப்படுத்தப்படுகின்றன. அதிகமாக கொண்டாடப்படும்
ஆய்வு வெளியீடுகள் அனைவராலும் பார்வையிட முடியாமல் இருப்பதாலும்
எம்மால் அவற்றை வாங்க முடியாததாலும் எமது நூலகங்களில்
காணப்ப‌டுவதில்லை. வெளியிடப்பட தகுதியானவையாகவும்
கவர்ச்சியானவையாகவும் உள்ள வெளியீடுகள் சமூகத்துக்கு தேவையானதை
அளிக்க தவறுவதாக இருக்கின்றன. அத்தகைய வெளியிடத்தக்க
விடயங்களாக கணிக்கப்படும் ஆய்வுகள் எங்கோ தூர தேசத்திலிருந்து ஆய்வு
வெளியீடுகளையும் நிறுவனங்களையும் இயக்குபவர்களின் செல்வாக்கின் கீழ்
இருக்கின்றன. ஆய்வுகளின் தரக்கணிப்பீடுகள் எமது யதார்த்தமான
பொருளாதார நெருக்கடியிலிருந்து எம்மை தூரமாக்கிவிட்டன.

தேசியரீதியான சிக்கலகளுக்கு இலங்கையின் பல்கலைக்கழகங்களின்
மந்தகதியான துலங்கல்களுக்கு இதுவே காரணமென்பேன். அடுத்த விடயம்
எங்களதும், நாட்டின் அனைவரதும் சிக்கலாக மாறியுள்ள
சம்பளக்கோரிக்கையாகும். ஆக மொத்தத்தில் நான் கூற வரும் விடயம்,
பலகலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எமது
நாட்டிலுள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளை வழங்க எவ்வகையிலும்
உதவவில்லை.

உருவாகிவரும் மாற்றுவழி

நாட்டின் “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டங்களை ஒரு மாற்றுப்பாதையாக
நான் காண்கின்றேன். பேசவும், கேட்கப்படவுமான திறந்த, ஐதான
வெளியொன்று உருவாகியிருப்பதாக நான் கருதுகின்றேன். இது சிலர்
மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும் பாதுகாப்பான வாயில்களும்
கண்காணிப்பு கமராக்களும் உடை தொடர்பான நிபந்தனைகளும் உள்ள

படித்தரங்களை பேணும் பல்கலைக்கழக வெளிகளிலும் பார்க்க‌ முற்றிலும்
வித்தியாசமான அமைப்பாகும்.


ஆர்ப்பாட்ட இயக்கத்தின் திறந்ததன்மை கூட வரையறுக்கப்பட்டது தான்.
சர்வதேச நாணய நிதியம் பற்றிய விமர்சனங்க‌ளை அதன் எல்லைகளுள்
மேற்கொள்ள முடியாதென என்னிட சில மாணவர்கள் கூறினார்கள்.
அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பது யாரென்ற கேள்வி தொக்கியே
நிற்கின்றது. சிறுபான்மையினரை பயமுறுத்தக்கூடிய, ஒடுக்கக்கூடிய தேசிய
கொடி, தேசிய கீதம் மற்றும் தேசப்பற்றை முன்னிருத்தும் ஏனைய
அடையாளாங்களும் கூட இந்த போராட்டங்களின் முக்கிய அங்கங்களாக
இருக்கின்றன.


கடந்த காலத்தை போன்று தேசப்பற்று என்ற விடயம் அதிகாரத்தை
பெற்றுக்கொள்ளவும் பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, சமூகரீதியாக
ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் உண்மையான சிக்கல்களிலிருந்து கவனத்தை
திருப்பவும் பயன்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மேலோங்குகின்றது.
இதனை சில நேரங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. சிறுபான்மை
மக்களின் விசனங்களாக இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை
அகற்றுதல், போரில் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை
பெற்றுக்கொடுத்தல், இராணுவமயமாக்கத்தை தடுத்தல், மீள்குடியேற்றம்
போன்ற விடயங்கள் போராட்ட இயக்கத்தினுள் பிரிவினையை
உருவாக்குவதாகவும் இரண்டாம்தரமாகவும் நடத்தப்படுவதையும்
காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும், இவையெல்லாம் தவிர்த்தும் கூட
“கோட்டா போ” போராட்ட இயக்கம் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்மறையாக
இருக்கின்றன. இதனை குறித்து சிந்திக்க கடமைப்பட்டுள்ள நாங்கள்,
இலவசக்கல்வி, இலவச பல்கலைக்கழக திறந்த வெளிகள், இதனூடான
கல்விச்சீர்திருத்தங்கள் போன்ற கருத்தியல்களை குறித்து எமது கவனத்தை
திருப்ப வேண்டும்.


இலவசக்கல்வியில் கலைக்கல்விக்கான இடம்

கல்விச்சீர்திருத்தத்துக்கான மையப்புள்ளியாக நான் கலைக்கல்வியை
பார்க்கின்றேன். இப்பத்தியில் நாங்கள் கல்விச்சீர்திருத்த செயற்பாடுகளில்
கலைக்கல்வி கவனத்தில் எடுக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி
விமர்சித்திருக்கின்றோம். நிதி ஒதுக்கீடுகள் குறைவாக மேற்கொள்ளப்பட்டு
கடினமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான மலிவான
மாற்றீடாக கலைக்கல்வி மாற்றப்பட்டிருக்கின்றது. இருப்பினும்,
கலைக்கல்வியே எமது கற்பனாதிறனை விருத்தியடைய வைப்பதோடு,
ஆழமான கருத்தியலகளை அழகான மொழியில் வெளிப்படுத்த
உதவிபுரிவதோடு அவற்றை மாற்றங்களுக்கான கருவிகளாகவும் மாற்றவல்ல
கல்வியாக இருக்கின்றது.


கடந்த வாரம் “கோட்டா கோ கம”வில் ஒருவர் திடீரென ஒரு கதிரையில் ஏறி
உரையாற்றத்தொடங்கினார். அந்தப்பெண்ணின் உருவத்தை நான்
மனதிலிருத்தினேன், வளமான எதிர்காலத்துக்கு எமக்கு இவ்வாறானவர்கள்
தேவை. அவள் தனது காந்தமான வார்த்தைகளால் தன்னை சூழ பலரை
ஈர்த்துக்கொண்டாள். போராட்ட இயக்கத்தில் இசை, கூத்து, பாட்டு
என்பவற்றை வெறுமனே கேளிக்கைகளாக மதித்து இல்லாமலாக்கக்கோரும்
கருத்துகளை எதிர்த்தாள். பல பாடலாசிரியர்களை, கலைஞர்களை,
இசையமைப்பாளர்களை அவள் வரிசைப்படுத்தினாள். “இவர்களெல்லாம்
புரட்சியாளர்களில்லையா” என உரத்த குரலில் கேட்டாள், “இவர்கள்
புரட்சித்தீயை ஊட்டவில்லையா?” எனக்கேட்டாள். கலைக்கல்வியே “கோட்டா
கோ கம”வின் கற்பித்தல் அமர்வுகளிலும் மையப்புள்ளியாக
மாறியிருக்கின்றது. சிறந்த கலைக்கல்வியானது ஒரு அழகான,
ஜனநாயகமான வாழ்வுக்கான கனவை மொழியாக்கம் செய்யக்கூடிய
மொழியாற்றலை எமக்கு வழங்கக்கூடியது.

திறந்த வெளிகளும் எம்மை நிலைப்படுத்தலும்


போராட்டமொன்று உருவாகியிருக்கும் இக்கணம் எமது
பல்கலைக்கழகங்களையும் அதன் கல்வி அமைப்பையும் மாற்றவேண்டும்
என்பதே என் அவா. நான் அன்றாடம் போல அதே வகுப்பறைகளில்

கற்பித்தலை மேற்கொண்டு தரநிர்ணய செயற்பாட்டுக்கு என்னை
தயார்படுத்திக்கொண்டிருக்கின்றேன். பல்கலைக்கழகத்தில்
நிதிக்குறைப்பாட்டால் உருவாகும் சிக்கலளை நினைத்து மாணவர்கள்
பற்றியும் வீட்டில் சமையல் வாயு இல்லாமல் போகும் நிலையில் என்
மகனைப் பற்றியும் அங்கலாய்க்கின்றேன். அன்றாடங்கள் மற்றும்
நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தனியாளாக அல்லது FUTA அமைப்பின்
அங்கத்தவராக போராட்டத்தின் பங்காளராக மாறி கிடைக்கும் சிறு
வாய்ப்புகளையும் பயன்படுத்த பார்க்கின்றேன். இதனை சிறு சிறு வழிகளில்
நாம் மேற்கொள்கின்றோம்.


எனது எதிர்பார்ப்பெல்லாமே எனது வேலையிலும் பல்கலைக்கழகத்திலும்
மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். எனது கற்பித்தலும் ஆய்வுப்பணியும்
நாட்டின் தற்போதைய யதார்த்தத்தையும் ஒடுக்கப்பட்டவர்களின்
விசனத்தையும் பிரதிபலிக்க வேண்டும் எனவே அவாக்கொள்கின்றேன். எமது
கல்வித்தரமென்பது யதார்த்தத்துக்கு மிக அருகாமையிலும் மாற்றங்களுக்கு
மிக நெருக்கமாகவும், இலவசக்கல்விக்கு இருக்க வேண்டிய அத்தனை
தரத்தோடும் இருக்க வேண்டும். அதற்காக நாம் இயங்க வேண்டிய சரியான
நேரம் இதுவாகும். இது எமது கூட்டு எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தவல்லதாகும். அவ்வாறான ஒரு எதிர்காலத்தில் நாங்கள்
மக்களோடும் யதார்த்தத்தோடும் இணைந்ததான கல்வியை நோக்கி
நடைபயிலலாம். அது எப்படிப்பட்டதாக இருக்கும்…