நிதியீடு மற்றும் சமவாய்ப்புக்கான கொள்கை: உயர்கல்விக்கு கட்டணம்
மேற்கொள்ள வேண்டியோர் யார்?

பர்சானா ஹனீஃபா

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில், கல்வி தொடர்பான விவாதங்கள்,
அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் உயர்கல்வி தொடர்பான விவாதங்கள்
குழப்பகரமாக இருக்கின்றன. ஒரு வகையில், அவ்விவாதங்கள்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களையும்
உள்ளீர்க்க முடியாத நிலையில் அரச பல்கலைக்கழகங்கள் காணப்படுவதை
சுட்டிக்காட்டுவதோடு இக்காரணத்தால் தனியார் பல்கலைக்கழகங்கள்
ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவையை சுட்டி நிற்கின்றன. இன்னொரு
வகையில், இவ்விவாதங்கள், அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும்
மாணவர்கள் தொழில்களுக்கான தகுதியாக்கத்தை பெறாதவர்களாக
காணப்படுவதால் பல்கலைக்கழக பாடத்திட்டங்களையும்
அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டுமென சுட்டி நிற்கின்றன.
இவ்வகையான விவாதங்கள் குறிப்பாக கலைப்பீட மாணவர்களை அரச
செலவீனங்களை உறிஞ்சிக்கொண்டு வெறுமனே அரசியல் செய்யும்
கூட்டுத்திரளாக காட்டுகின்றன. இன்று, அரச திரைசேறி அரச
பல்கலைக்கழகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியீட்டங்களை தடுத்து
நிறுத்துவதோடு உயர்கல்விக்கான நிதிகளையும் குறைத்து வருகின்றது. அரச
பல்கலைக்கழகங்களும் குறை மூலதனத்தில் அதிக மாணவர்களை
உள்ளீர்த்து கட்டணம் அறவிடப்படும் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துமாறு
வேண்டப்படுகின்றன.

அரசு தன்னை உயர்கல்விக்கு நிதியீட்டம் செய்வதிலிருந்து விலக்க வருவது
இதிலிருந்து தெள்ளத்தெளிவாகின்றது. இச்செயற்றிட்டத்தின் கீழ்
முதலீட்டுக்கான வருவாயானது (ROI) இரண்டாம்நிலைக் கல்வியைக்
காட்டிலும் உயர்கல்விக்கு குறைவாயுள்ளதாகவும் காரசாரமான விவாதங்கள்
முன்வைக்கப்படுகின்றன. (காரசாரமாக இருப்பதற்கான காரணம்,
இவ்விவாதத்தின் எடுகூற்று கேள்விக்குறியாக இருப்பதாலாகும்: கல்வித்துறை மீதான நிதியீட்டம் எல்லையற்றதாகும்; குறைநிதியீட்டம்
மேற்கொள்ளப்படும் துறையின் மீது திரித்துக்காட்டப்படும் சதவிகிதங்களை
வைத்து பேசுவது நேர்மையற்றதாகும்). மேலும், உயர்கல்வித்துறையை
தனியார் முதலீட்டுக்கு திறந்துவிடுவதற்கான உந்துதல்கள்
தனியார்துறையால் மேற்கொள்ளப்படுவதையும் மறுக்க முடியாது. இத்துணை
விவாதங்களுக்குள்ளும் எமது நாட்டின் இலவசக்கல்வியானது சமவாய்ப்புக்
கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டிருப்பதும் எமது
நாட்டின் அதிகமான மாணவர்கள் கஷ்டப்படும் மத்தியதர வர்க்கத்திலிருந்து
வருகின்றார்கள் என்ற விடயமும் மறைந்தே போகின்றன. இவ்வாக்கம்
அரசின் பல்கலைக்கழகங்களுக்கான நிதியீட்டத்தை குறைக்கும் முயற்சிகள்
மீதான உயர்கல்விக்கான நிதியீட்டம் சார்ந்த விவாதங்களை வேறொரு
வகையில் அணுகுகின்றது.

ஐக்கிய ராச்சியத்தின் (UK) இலவச உயர்கல்வியை இல்லாமலாக்கிய
திட்டமும் அதனால் விளைந்த நெருக்கடியும் இலங்கையின் கல்விக்
கொள்கைவகுப்புக்கு பயனுள்ள விடயமாக இருக்கலாம். 1962இலிருந்து 1998
வரை ஐக்கிய ராச்சியத்தில் இலவச உயர்கல்வி வழங்கப்பட்டது. 199ஒகளில்
ஆட்சியிலிருந்த தொழிலாளர் கட்சி, இலவச உயர்கல்வியை கட்டணம்
அறவிடப்படாத நிலையிலிருந்து பெயரளவிலான கட்டணம் செலுத்தும்
அமைப்பாக மாற்றியது. “பெயரளவிலான” கட்டணங்கள் கட்டம் கட்டமாக
அதிகரிக்கப்பட்டு தற்போது ஒரு மாணவருக்கான ஒரு வருடத்துக்கான
கட்டணமான 9250 பவுண்டுகள் உலகளவில் அதிகமான கட்டண அறவீடுகளில்
ஒன்றாகும். அதிகமான மாணவர்கள் கடன்களின் மூலமே கட்டணங்களை
வழங்குவதோடு வட்டிவீதமானது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்தபட்ச
சில்லறை விலைச் சுட்டியை (RPI) விட 3% அதிகமாகும். தற்போதைய
அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தின் விளைவாக, கல்விக்கடன்களின்
திட்டத்தை பொருத்து அவற்றின் வட்டிவீதத்தில் 6.25% மற்றும் 7.3% வீத
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வுக்கான தேசிய பணியகத்தால்
வெளியிடப்பட்ட அறிக்கையில் கட்டணங்கள் அறவிடப்பட்ட கடந்த 20
ஆண்டுகளில் கல்வியின் தரம், பல்கலைக்கழக அனுமதி மற்றும் சமவாய்ப்பு
போன்ற விடயங்களில் நேர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது (மேர்பி மற்றும் ஏனையோர் 2017). அறிக்கை
குறிப்பிட்டதன் படி, பொதுவாக கடன்கள் பெறப்படுவதன் மூலம்
உயர்கல்விக்கான கட்டணங்கள் வழங்கப்படுவதும், அக்கடன்கள் வழங்கப்பட
வேண்டிய காலமானது, மாணவர்கள் கல்விகற்ற பின்னர் உழைக்க
ஆரம்பிக்கும் போதும், ஒரு குறிப்பிட்ட வருமானம் வர ஆரம்பித்த
பின்னராகவே காணப்படுவதால், குறை வருமானம் பெறும் குடும்பங்களை
சேர்ந்த மாணவர்களுக்கு இந்நடைமுறை பொருத்தமானதாகவும் அதனால்
சமவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கின்றது. பல்கலைக்கழகங்களுக்குள்
நுழையும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் அவர்கள் வழங்கும்
கட்டணங்களுக்குமேற்ப பல்கலைக்கழகங்கள் செலவளிக்கக்கூடிய நிதி
பெறப்படுவதால் (அரச திரைசேரியின் ஒதுக்கப்படும் நிதிகளுக்கு புறம்பாக)
தரமும் உறுதிப்படுத்தப்படுவதாகும் அறிக்கை கூறுகின்றது. கட்டணங்கள்
அதிகரிக்கப்பட்ட காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களில் நுழையும்
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், கட்டண அதிகரிப்பின்
விளைவாக மாணவர்கள் நுழைவு எண்ணிக்கை உச்சவரம்பு கட்டுப்படுத்தப்பட
முடிவதாகவும் கட்டண அதிகரிப்புக்கு சார்பான விவாதங்கள்
ஏற்புடையதாக்கப்பட்டன.

இதே காலத்தில், ஐக்கிய ராச்சியத்தின் அரச துறை அறிக்கை வெளியிட்டதன்
படி, குறை வருமான குடும்பபங்களிலிருந்து வரும் மாணவர்கள், ஐக்கிய
ராச்சியத்தின் கடன் சுமத்தப்பட்ட கட்டணம் அறவிடப்படும் கல்வி முறைமை
காரணமாக பட்டமளிப்பின் பின்னர் கிட்டத்தட்ட 55,000 பவுண்டுகள் கடனில்
வீழ்வதாக குறிப்பிடுகின்றது. இவர்கள் வழங்க வேண்டிய கடன் தொகை
இவர்களின் பட்டப்பின் வருவாயோடு கட்டுண்டதாகவும் அவ்வருவாய்
கைகொடுக்குமெனின் 30 வருடங்களுக்குள் கடனை அடைக்க முடியுமான
அமைப்பாகவும் காணப்படுகின்றது. இதன் தன்மை இவ்வாறாக
காணப்படுவதோடு பல மாணவர்கள் கடன்களை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு இக்கடன் நடைமுறை விளைபயனற்றதாக
இருப்பதாக பலர் கூறுகின்றனர். 2022ல் கடன் தொகை அடைக்கப்பட
வேண்டிய வருடங்கள் 40ஆக மாற்றப்பட்டதோடு, கட்டணங்கள் வழங்கப்பட
வேண்டிய சம்பள வரம்பும் குறைக்கப்பட்டது. இக்கடன் நடைமுறையின்
காரணகர்த்தாவான ப்லெயார் அரசாங்கத்தில் பணியாற்றிய கல்வி
ஆலோசகர், அன்ட்ரூ அடோனிஸ், தாம் 2017ல் கார்டியனில் எழுதிய
ஆக்கத்தில் இத்திட்டத்தை இல்லாமலாக்குமாறு எழுதியிருந்தார். கடனுள்
மூழ்கடிக்கப்படும் கட்டணம் செலுத்தவேண்டிய இது மோசடியான
திட்டமெனவும், மாணவர்களை கடனுள் வீழவைப்பதோடு, அவர்களால்
திருப்ப செலுத்த முடியாத நிலையால் அரசாங்கத்தால் கடனை மீளப்பெற
முடியாத நிலை ஏற்படுவதாகவும் இவர் குறிப்பிட்டிருந்தார். கட்டண
அதிகரிப்பு கூட மாணவர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு
மத்தியில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மிக அண்மையில், 2023ல், ஐக்கிய ராச்சியத்தின் ஊடகமொன்றில்
அறிக்கையிட்டதன் படி, அங்கு உயர்கல்வித்துறையில் பாரிய நெருக்கடி
ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, ஐக்கிய ராச்சிய
பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் வரவில் ஏற்பட்ட வீழ்ச்சியின்
காரணமாக ஏற்பட்ட செலவு அதிகரிப்பால் தம்மை நிலைநிறுத்த பெரும்
சிக்கல்களை சந்திக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை
மற்றும் சிக்கலான குடிவரவுக் கொள்கைகள் காரணமாக இந்நிலை மேலும்
சிக்கலாக்கப்பட்டிருக்கின்றது. கல்விக்கு அரசின் ஆதரவு இருக்க வேண்டிய
தேவையை உணர்த்தும் (ஆர்வமற்ற) கதையாடல்கள் அங்குமிங்குமாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ பத்திரிகையான
பைனான்ஸியல் டைம்ஸ் கூட, உயர்கல்வித்துறையில் ஜேர்மனி அரசு
செலவிடும் தொகையில் பாதியையே ஐக்கிய ராச்சியம் செலவிடுவதாக
குறிப்பிட்டது.

ஐக்கிய ராச்சியத்தின் நிலையற்ற கொள்கைவகுப்பினால் நாம் பெறும்
படிப்பினை யாதெனில், அரசுகள் உயர்க்லவியில் அடைவு குறித்த சரியான
புரிதலின்றி இருக்குமாயின், நிதியீட்டம் தனக்கான வேட்கையை இழந்து பல்கலைக்கழகங்களின் இருப்புக்கான தேவையாகிய, எதிர்கால சந்ததியினர்
தமது முழு இயலுமையை பயன்படுத்த ஏதுவான அமைப்பை உருவாக்கும்
தேவையை உணரமுடியாமல் போகும் நிலை ஏற்படும். கல்வி
நிறுவனங்களின் இருப்பை உறுதிசெய்ய மாணவர்களை கடன் சுமைக்குள்
ஆழ்த்துவது சரியான வழியாகாது. மேலும் சர்வதேச மாணவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட சுரண்டலானது, பொறுப்பற்றதாகவும், நிதியீட்ட
இடைவெளிகளை நிரப்பும் முதலாளித்துவ வழிமுறையாகவுமே
கொள்ளவேண்டி இருக்கின்றது. ஐக்கிய ராச்சியம் இந்நெருக்கடியை எவ்வாறு
தீர்க்கப்போகின்றதென்ற கேள்வி இன்னும் தொக்கியே நிற்கின்றது.
கோர்பினின் தொழிலாளர் கட்சி தேர்தல் இயக்கம் கல்விக் கட்டணங்களை
அகற்றும் நிலைக்கு ஆதரவாக இருக்கின்றது.

2000ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசுகளில் (USA) உயர்கல்விக்கான
கட்டணங்கள் பணவீக்க அதிகரிப்பிற்கேற்ப 6%மாக அதிகரித்திருக்கின்றன.
ஒன்றிய அரசுகளின் மாதிரியை பொருத்தளவில், 4 வருட பட்டப்படிப்பை
தொடரும் மாணவர்கள் ஒன்றில் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம்
செலுத்தி கற்கின்ற நிலையிலும், அல்லது, அரச கல்லூரிகளில் குறைவான
கட்டணங்களோடும், அல்லது, தாம் வசிக்கும் மாநிலங்களில் மாநிலத்தில்
குடியிருப்போருக்கு வழங்கப்படும் கட்டண தளர்த்தல்களை பெற்று
அக்கல்லூரிகளில் பயில்பவர்களாக இருக்கின்றனர். குறைவான கட்டணங்கள்
அறவிடும் சமுதாயக் கல்லூரிகள் இரு வருட இணைப்பட்டப்படிப்புகளை
வழங்குகின்றன. 1700களில் ஒன்றிய அரசுகளில் கல்விக்கல்லூரிகள்
தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அவை மாணவர்களுக்கான
சமவாய்ப்புகளை வழங்கும் சாய்வுகளை கொண்டே ஆரம்பிக்கப்பட்டதோடு,
இதனடிப்படையிலேயே அங்கு உயர்கல்விக்கான மாதிரிகள்
மேற்கொள்ளப்பட்டன. முழுமையாக நிதியீட்டம் செய்யப்பட்ட அரச
கல்லூரிகள் அவர்களின் மாதிரிகளில் உள்ளடங்காவிட்டாலும்,
சமவாய்ப்புக்கான முயற்சிகள் இரண்டாம் உலக மகா யுத்த வீரர்களையும்
(1944), குறைவருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களையும்
(1965) அடிப்படையாகக் கொண்டு காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கல்லூரிகள் கூட புலமைப்பரிசில்கள் அல்லது கடன்கள் போன்ற வடிவங்களில் மாணவர்களுக்கான நிதியுதவிகளை மேற்கொண்டன. 2020ல்
மாணவர்களின் கடன்கள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டொலர்களாக
இருந்தன. குறைவருமான மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களை
சேர்ந்த மாணவர்கள் நிலையான கடன் திட்டங்கள் இல்லாத காரணத்தால்
கடன்சுமையில் திணறினர். பைடன் நிர்வாகம் தற்போது ஆண்டொன்றுக்கும்
125,000 டொலர்களை விட குறைவாக உழைக்கும் குடும்பங்களுக்கு கடன்
தள்ளுபடிகளை வழங்குகின்றன. 2021ல் ப்ரூகிங்ஸ் நிறுவனம் ‘இலவச கல்வி
நிறுவனங்களை உருவாக்குவது சிறந்த ஆலோசனையா?’ என்ற தலைப்பில்
வெளியிட்ட ஆக்கத்தில் தொடர்ச்சியான ஆய்வுகளின் படி தேவையென்பதாக
கூறுகின்றது (ஹெரிஸ், 2021).

மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்ன?
பிரித்தானியாவின் உதாரணத்திலிருந்து நாம் அறிவதாவது, மாணவர்களுக்கு
கட்டணங்கள் மூலம் சுமையை அவர்கள் பக்கம் நகர்த்துவது தீர்வாகாது.
அதிகரித்துவரும் பணவீக்கத்தால் பல்கலைக்கழகங்கள் தமது பாதீடுகளை
முகாமைசெய்ய முடியாமல் திணருவதோடு, உள்நாட்டு மாணவர்களை விட
மூன்றுமடங்குகள் சர்வதேச மாணவர்களிடம் கட்டணம் அறவிட வேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் பல்கலைக்கழகங்கள்
விரிவுரையாளர்களை அதிகமான விரிவுரைகள், பாரிய வகுப்புகள், நிர்வாக
வேலைகளில் அதிக தலையீடுகளை மேற்கொள்ளவைத்தல் மற்றும் ஆய்வு
நடவடிக்கைகளுக்கான நிதியீடுகளை பெறுவதற்கான அழுத்தங்களை
வழங்குதல் போன்ற விடயங்களை வைத்து அதிக சுமைகளை
சுமத்துகின்றன. இதனால் ஐக்கிய ராச்சியத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள்
அதிக சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சிறந்த வேலை அமைப்புகளைக் கோரி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஐக்கிய ராச்சியத்தின் சர்வதேச
மாணவர்கள் மீதான தங்கியிருக்கும்நிலை நிலையற்றதான சூழலை
உருவாக்கியிருக்கின்றது. இலங்கையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான
விளம்பரங்கள் அதிகமாக மேற்கொள்ளப்படும் சூழ்நிலையில் இவ்விடயத்தை
மனதிலிருத்த வேண்டும். விளம்பரங்களுக்காக பெருந்தொகையான பணம்
செலவளிக்கப்படும் நிலையில், இலங்கை மாணவர்கள் சர்வதேச
மாணவர்களாக செலவளிக்க முடியுமான நிலையை விட உண்மையில் இலங்கையில் செலவுமிகுந்த கல்வியை மேற்கொள்ள இயலுமானவர்களா
இருக்கின்றார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

இலங்கை பல்கலைக்கழகங்கள் மிகப்பாரிய‌ நிதியீட்ட சிக்கலில்
காணப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் தமக்கான நிதியீட்டங்களை
மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அதன் உச்சபட்ச அடைவு
மெதுமெதுவாக கட்டணம் அறவிடப்படும் கல்வியை வழங்கும் நிலைக்கு
கொண்டுவருவதாகும். நாம் உதாரணமாக எடுக்கும் நாடுகளில்
இந்நடைமுறைகள் பாரிய அடியாக விழுந்துள்ளதோடு பொருளாதாரரீதியாக
பின் தங்கியிருக்கும் மக்களுக்கும் இதனால் பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான விடயங்கள் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுவதுடன் எமது
கல்வி அமைப்பு உருவாக்கப்பட்ட அடிப்படையை மீண்டும் நாம்
மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதோடு
சமவாய்ப்புக்கான கொள்கையை நோக்கி நாம் மேலும் முனைப்பாக
செல்லவும் வேண்டியதாகின்றது. ஏற்கனவே எமது பல்கலைக்கழகங்கள்
நாட்டின் வறிய மக்களை சமூக நகர்வை ஏற்படுத்தும் ஊன்றுகோல்களாக
இருந்துவருகின்றன. எனவே, இவ்வாறான விடயங்களை நினவில் கொண்டு
அவற்றை மேலும் முன்னோக்கி நகர்த்துவதை விடுத்து, நாம் சரியான
தெளிவோடு இருக்காத, ஏற்கனவே நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவிக்கும்
அமைப்பு மாதிரிகளை நோக்கி எமது நகர்வுகளை மேற்கொள்வதை
தவிர்ப்போமாக.