ஷாமலா குமார்
பகிடிவதை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் பற்றிப் பகிரங்கமாகப் பேசிய மாணவன், வேறு தவறான உள் நோக்கங்களைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். பகிடிவதை இடம்பெறுவதைக் கண்டு அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கனிஷ்ட கல்வியாளர் பகிடிவதை செய்வோர் மட்டுமன்றி ஏனைய கல்வியாளர்களாலும் கண்டிக்கப்படுகிறார். பகிடிவதையைத் தடுப்பதற்காக பாடுபட்ட பீட உறுப்பினர், மாணவர்களிடையே பிரிவினையை உண்டுபடுத்தியதாகப் பழி சுமத்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார். பகிடிவதை தொடர்பாக நடத்திய மதிப்பாய்வொன்றில் “இப்போதாவது எம்மால் பகிடிவதை பற்றி பேசக்கூடியதாகவுள்ளது,” என கருத்து தெரிவிக்கிறான் ஒரு மாணவன். இங்கு பிரச்சனையாகவிருப்பது பகிடிவதை என்ற விடயம் மட்டுமே என சுட்ட முடியாது. அதற்கெதிரான நடவடிக்கைகள் மட்டுமல்லாது சாதாரணமாக அதைப் பற்றி பேசுவது தொடர்பான கருத்துக்கள், கொள்கைகள், மற்றும் நடத்தைகள், நினைப்பதை விடச் சிக்கலான ஒரு பிரச்சனை நிலவிவருவதையும், இதை தீர்ப்பதிலுள்ள சிரமங்களையும் வெளிக்காட்டுகின்றன.
பகிடிவதை
“மாணவன் ஒருவன் தலை மீது டயர் உருட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி” அல்லது “பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக இரண்டாம் மாடி யன்னலிலிருந்து குதித்த மாணவன் முடக்கு வாதத்துடன்” போன்ற சம்பவங்களை சில சமயங்கள் கேள்விப்பட்டுத் திகைக்கிறோம். இவ்வாறான செயல்கள் பகிரங்கமாகத் தவறானவை, வெளிப்படையானவை, ஆகவே இலகுவாகக் கண்டிக்கப்படுகின்றன. எனினும் யதார்த்தத்தில் பகிடிவதை என்பது பெரிதும் இலைமறை காயாகவே இருந்து வருகிறது. அது நேரடியான ஒரு வன்முறைச் சம்பவமாக எப்போதும் இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் பாடுவது அல்லது தகாத வார்த்தைகளைக் கேட்பது போன்ற வெளித்தோற்றத்தில் பாதகமற்றவையாக தென்படும் பகிடிவதை செயற்பாடுகளைத் தாங்கள் இரசித்ததாகவும், அவற்றை இனிமையான நினைவுகளாக மீட்டிப் பார்க்கக்கூடியதாக இருந்ததாகவும் கூறுவார்கள். இருப்பினும் இவ்வாறான செயல்களை ஒரு மாணவன் எதிர்க்கும் போது அவன் மிகத் துரிதமாகக் கையாளப்படுகிறான். அவனை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துன்புறுத்தி, ஒரு வேற்று மனிதனாக ஒதுக்கிவிடுகிறார்கள்.
வன்முறை துணைக் கலாசாரம்
சிரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட காரணத்தால் எதுவித முகபாவமுமின்றி, ஒரேவிதமான ஆடையோடு, அமைதியாக ஒரு வரிசையில், சோடி சோடியாக முதலாம் வருட மாணவர்கள் நடந்து செல்வது பல்கலைக்கழக வளாகத்தில் சாதாரணமான காட்சியாகிவிட்டது. இவ்வாறான சம்பவம் ஒரு பெரிய விடயமாகப் பொருட்படுத்த முடியாத அளவுக்கு பல்கலைக்கழக சமூகத்தினருக்குப் பழக்கப்பட்டுவிட்டது. இது எந்த அளவு ஆழமாக இப் பகிடிவதை கலாசாரம் இச் சமூகத்துள் ஊடுருவியிருக்கிறது என்பதை காட்டுகிறது. சமுதாயத்தில் கனிஷ்ட மாணவனுக்கு மேலாக சிரேஷ்ட மாணவனும், அவர்களுக்கு மேலாக நிர்வாகம் மற்றும் கல்விசார் ஊழியர்களும், பெண்களுக்கு மேலாக ஆண்களும், சிறுபான்மை மொழிகளுக்கு மேலாகப் பெரும்பான்மையும் அதிகாரம் பெற்றிருப்பதை மேலும் வலுப்படுத்துதுகிறது. இதன் மூலம் பகிடிவதையானது யாருக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு, இல்லை என்பதை நிர்ணயிக்கும் ஒரு அடக்குமுறையான சர்வாதிகாரச் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளது.
பகிடிவதை ஒரு பெண் வெறுப்பு கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. வழமையாகப் பெண் மாணவர்கள் இழைக்கும் “தவறுகளுக்கு” ஆண் மாணவர்கள் பொறுப்பேற்பதும், அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்டு. அதாவது தம்முடைய செயற்பாடுகளுக்குப் பொறுப்பேற்கக் கூட முடியாத சூழ் நிலைக்கு மாணவிகளை ஆளாக்கியிருக்கிறது இந்த கலாசாரம். பெண்கள், ஆண்களைக் காட்டிலும் இழிவானவர்கள், பலவீனமானவர்கள் என்னும் அடிப்படைக் கோட்பாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது இக் கலாசாரம். பகிடிவதைச் செயற்பாடுகள் வன்முறையும் அடக்குமுறையும் நிறைந்த இக் கட்டமைப்பிற்குள் மேலும் புதிய மாணவர்களை அணி சேர்க்கின்றன. பகிடிவதைக்கான காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து இக் கலாசாரம் பேணப்படுகிறது. இதனை எதிர்ப்பதன் பின் விளைவுகள் மாணவப் பருவம் பூராகவும், சொல்லப் போனால், அதற்குப் பின்பும் தொடர்கின்றன.
கல்வியாளர்கள் வழமையாக அதிகாரப் படி நிலைகளைத் தாபித்து, அதிகாரத்தைக் கேள்வி கேட்போரை அல்லது எதிர்ப்போரை உடனடியாகத் தண்டிக்கிறார்கள். கல்வியாளர்அபிவிருத்தி தொடர்பான மன்றங்கள், கலந்துரையாடலகள் போன்றவற்றின் போது கனிஷ்ட அல்லது அனுபவம் குறைந்த கல்வியாளர்கள் கருத்து முன்வைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு கருத்துத் தெரிவித்தால் அவர்களைப் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தவோ, அல்லது அவர்களின் கருத்து முற்றாகப் புறக்கணிக்கப்படவோ கூடும் என அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆகவே இவ்வாறு படி நிலையில் குறைந்த, அதிகாரமற்ற, “ஓரங்களில்” இருக்கும் நபர்கள் “கையாளப்படுகிறார்களே” ஒழிய, அவர்கள் அர்த்தபூர்வமான வகையில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான கேடு விளைவிக்கும் கொள்கைகளின் பாரதூரமான வெளிப்பாடுகளாக பாலியல் துஷ்பிரயோகங்களும், துன்புறுத்தல்களும் காணப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை நாம் அறிந்த போதிலும் அது பற்றி நாம் வெளிப்படையாகக் கலந்துரையாட மறுக்கிறோம். இந்த மறுப்பின் காரணமாகவே இக் கலாசாரம் பல்கலைக்கழக சமூகத்தில் ஊறி, ஊடுருவி, பகிடிவதைச் செயற்பாடுகளைக் கண்ணுக்குப் புலப்படாதவையாக அமைத்திருக்கின்றது. இப் பகிடிவதைக் கலாசாரத்தைப் பெரிதும் ஒத்த ஒரு வன்முறைக் கலாசாரம் பரந்த சமூகத்தில் நிலவி வருவதால், பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு வெளியே இருப்பவர்களுக்கும் இது புலப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.
சமூகக் கட்டமைப்பு
பகிடிவதை எனும் செயற்பாட்டின் குறிக்கோள், அதிகாரப் படி நிலையுடன் கூடிய ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதெனின், அது யாருக்கு உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தொடர்புகளின் செல்வாக்கு மேலோங்கும் மாணவ ஒன்றியங்கள் பகிடிவதைச் செயற்பாடுகள் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைவது நாம் அறிந்ததே. துடிப்பான மாணவ இயக்கங்கள், முக்கியமாக இவ்வாறான ஒன்றியங்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைப்பது, கேள்விகளை எழுப்புவது, சீர்திருத்தங்களை உண்டாக்குவது போன்றவை மூலம் பல்கலைக்கழகச் சமூகத்துக்கு இன்றியமையாத ஒரு கூறாக இருக்கின்றன. ஆனால் பகிடிவதை தொடர்பான கொள்கைகளில் காணப்படும் பலவீனமும், சகல மாணவ செயற்பாடுகளையும் முற்றாகத் தமது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கின்றமையும் அதன் குறைபாடுகளாகக் காணப்படுகின்றன. மாணவ இயக்கங்கள் இல்லாத பல்கலைக்கழங்களிலும், உயர் பாடசாலைகளிலுமே பகிடிவதைச் செயற்பாடுகள் நிலவி வருகின்றமையால், அரசியல் செல்வாக்குடன் கூடிய மாணவ ஒன்றியங்கள்/ இயக்கங்கள் மீது மட்டும் எம்மால் முற்றாக பழி சுமத்த முடியாது.
பகிடிவதைச் செயற்பாடுகள் மூலம் உருவாக்கப்படும் உறவுகள், உதவி அல்லது ஆதரவு வழங்கும் அமைப்புகள், உதாரணமாக, “குப்பி” வகுப்புக்கள், அறிவுரை பெறக்கூடிய நட்புறவுகள், விடுதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு அந்த வசதிகள், மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அதை வினைத் திறனுடன் கையாளும் சகாக்கள் போன்ற பல நன்மைகளைப் புதிய மாணவர்கள் மட்டுமன்றி, சிரேஷ்ட மாணவர்களும் பெறக்கூடியதாக இருப்பது பகிடிவதைச் செயற்பாடுகளை விரும்பத்தக்கதாக்கின்றது.
பகிடிவதைச் செயற்பாடுகள் வாயிலாக உருவாக்கப்படும் கீழ்ப்படிவானது மாணவர் குழாத்தை இலகுவாகக் கையாள பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உதவுகிறது. பகிடிவதையுடன் தொடர்பற்ற வேறு பிரச்சனைகள் எழும் போது நிர்வாகமானது அதனைத் தீர்க்கும் பொறுப்பை மாணவத் தலைவர்களிடம் ஒப்படைக்கக் கூடியமை, ஆசான்கள் மாணவர்களிடமிருந்து எதிர்க் கேள்வியின்றி கற்பிக்கமுடிகின்றமை, அரசாங்கங்களால் மாணவ எழுச்சி எனும் அச்சுறுத்தலின்றி சுலபமாக மாணவச் செயல்பாடுகள், இயக்கங்களைக் கையாளக்கூடியதாக இருக்கின்றமை எனப் பகிடிவதயால் உருவாக்கப்படும் சமூகப் படி நிலைகளால் பலன்பெறுவோர் பலர்.
பகிடிவதையை நிறுத்துவது
பல்கலைக்கழகங்களில் இன்னமும் பகிடிவதை தொடர்வது பல வெளி நபர்களுக்கு நம்பமுடியாத விடயமாகவுள்ளது. செயற்படுத்தப்பட்ட சட்டங்களோ, ஆணைக் குழுக்கள்/ செயற்குழுக்களோ, மதிப்பாய்வுகளோ, எண்ணற்ற பத்திரிகைக் கட்டுரைகளோ பகிடிவதையை நிறுத்தமுடியாதிருப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது.
இதில் முதன்மையாகவிருப்பது பகிடிவதையின் மெய்யான விஸ்தீரணத்தை நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளமையாகும். 1998 இன் பகிடிவதை எதிர்ப்புச் சட்டத்திற்கமைய பகிடிவதைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு பிணையற்ற, கட்டாய சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இருப்பினும் அனைத்துப் பகிடிவதை செயற்பாடுகளுக்கும் இவ்வளவு தீவிரமான தண்டனை பொருந்தாதிருப்பதால், பொறுப்பான அதிகாரிகள் இச் சட்டதைச் செயல்படுத்தத் தயங்குகின்றனர்.
பகிடிவதை என்பது ஒரு தனி மனித செயற்பாடு அல்ல. அது குழுக்களாக இயங்குவது. இங்கு குற்றவாளிகளுமே ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பகிடிவதைச் செயற்பாட்டில் ஈடுபடுகையில் ஒரு மாணவன் கையும் களவுமாகப் பிடிபடுகிறான் என்றால் அவன் உடனடியாக சிரேஷ்ட மாணவன் ஒருவனை நோக்கிக் கை காட்டி விடுகிறான். சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களைப் பகிடிவதைச் செயற்பாடுகளைச் செய்யக் கட்டாயப்படுத்துவதோடு அதை மேற்பார்வையும் செய்கின்றனர். தமது விருப்பத்திற்கேற்ப பகிடிவதை செய்யாத போது அவர்கள் இளைய மாணவர்களைத் தண்டிக்கிறார்கள். பகிடிவதை இடம்பெறுவதைக் கண்டும் காணாமல் இருக்கும், சொல்லப் போனால் மறைமுகமாக அதனை அங்கீகரிக்கும் நிறுவனங்களை இப் பகிடிவதை எதிர்ப்புச் சட்டம் உள்ளடக்கத் தவறியுள்ளதோடு, மேற்குறிப்பிடப்பட்ட சிக்கல்களைக் கையாளத் திறனற்றதாகக் காணப்படுகிறது.
யதார்த்தத்தில் பரந்தவொரு சமூகத்தில் வேர் கொண்டிருக்கும் வன்முறைப் போக்கினதும், ஆண்களை உயர்வாகவும் பெண்களைத் தாழ்வாகவும் பார்க்கும் கண்ணோட்டத்தினதும் வெளிப்பாடே பகிடிவதை என்பதால் அதை இனங்காணுவது கடினமானது. கல்வியாளர்கள் மத்தியில் பகிடிவதை தொடர்பான கலந்துரையாடல்களும், பகிடிவதை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளும், பகிடிவதையை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போரின் கருத்துக்களுக்கு மத்தியில் பெரிதும் தடம் மாறியிருக்கிறது. சில சமயங்களில் அதிகாரிகளே பகிடிவதைச் செயற்பாடுகளை மூடி மறைப்பதும், பகிடிவதை தொடர்பாக முறைப்பாடு செய்பவர்களும், பகிடிவதைக்குள்ளானவர்களும் பாதுகாக்கப்படாது, கல்வி நிறுவனத்திற்கு அவமதிப்பை உண்டாக்குவதாகப் பழி சுமத்தப்படுவதும், கண்டிக்கப்படுவதும் கவலைக்குரிய விடயங்களாகும்.
பகிடிவதையை முடக்குவதற்கு இராணுவத்தின் தலையீட்டை உண்டுபடுத்துவதற்கு சமீப காலத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. இராணுவத்தின் தலையீடு அதற்கே தனித்துவமான பகிடிவதைக் கலாசாரத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும், அதிகாரப் படி நிலைகளையும் பல்கலைக் கழகங்களில் தாபித்துவிடும். இது இருப்பதை விட மேலும் சிக்கலான சூழ் நிலையை உருவாக்குவதோடு, இராணுவத்தின் அபிலாஷைகளுக்கிணங்கச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுவிடும்.
கல்வியும் ஜனநாயகமும்
கல்வியின் அடிப்படைக் கொள்கைகளுக்கும், ஜன நாயகத்துக்கும் எதிர்மறையாக, பல்கலைக் கழகங்களின் கட்டமைப்புக்களுள் ஊடுருவி, மறைவாக இருக்கும், ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் மையமாகக் கொண்டியங்கும் ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகப் பகிடிவதை இனக்காணப்படும் வரை அதனை ஒழிப்பது சாத்தியமாக அமையாது.
பகிடிவதைக் கலாசாரத்தை எதிர்கொள்வதற்கான முதற்படியாக அதனைப் பார்வையிடும் கண்ணோட்டத்தை மாற்றுவதும், அதை உருவாக்கும் சமூகப் படி நிலைகளை முற்றாக எதிர்ப்பதுமாக அமைய வேண்டும். பல்கலைக் கழகங்களில் தர்க்க ரீதியான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஏனைய ஊழியர்களுக்கும் தாம் எதிர் கொண்ட வன்முறைச் சம்பவங்களைப் பேசும், கலைகளூடாக வெளிப்படுத்தும் ஒரு கலாசாரம் உருவாக வேண்டும்.
பகிடிவதை தொடர்பான கொள்கைகளும் சட்டங்களும், அதன் குழுவாக இயங்கும் தன்மையையும், பகிடிவதை எனும் சொல்லுக்குள் அடங்கும் சகல செயற்பாடுகளையும் இனங்காண வேண்டும். நாட்டிலும் பல்கலைக் கழகங்களிலும் நிலவும் வன்முறையோடு அதற்கு இருக்கும் தொடர்பையும் அவை கண்டறிய வேண்டும். பகிடிவதைச் செயற்பாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவையோ, சமனானவையோ அல்ல என்பதையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.
முக்கியமாக, இவ்வாறான கொள்கைகளும் சட்டங்களும் மாணவச் செயற்பாடுகள், கல்விச் சுதந்திரம், ஜன நாயகம் போன்றவற்றைப் பதிக்காத வகையில், கலந்துரையாடல்கள், தர்க்கங்கள், வாதங்கள் போன்ற ஜன நாயகத்திற்கு ஏற்புடைய வழிகள் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தவறியவிடத்து, பகிடிவதைச் செயற்பாடுகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் மாணவர்களின் இன்னல்களையும் தேவைகளையும் இனங்காணுவது அத்தியாவசிமானதாகும். கல்வி நிறுவனங்கள் வழங்காத சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிரேஷ்ட மாணவர்களில் தங்கும் நிலை மாணவச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது. ஆங்கில மொழியை விளங்குவதற்குப் பெரும்பாடுபடும் மாணவன், பல்கலைக் கழகங்களின் ஆங்கில வழிக் கல்வியால் பெரிதும் இக்கட்டான ஒரு சூழ் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவ்வாறான ஒரு இடறுகோல் இல்லாத போதும், சாதாரணமாக பல்கலைக் கழகக் கல்வி முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் இசைவாக்கமடைவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. மாற்றம் நடைபெறும் இக்காலப் பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான உதவியையும், ஆதரவையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடனும், வினைத்திறனுடனும் இயங்கும் கல்வியாளர்களும், நன்கு திட்டமிடப்பட்ட கற்கை நெறிகளும், செயற்திட்டங்களும் இன்றியமையாதவை.
பகிடிவதைக் கலாசாரம் பல்கலைக் கழகச் சமூகத்துள் நன்கு வேரூன்றியிருப்பதோடு, இங்கு கல்வியாளர்கள், மாணவர்கள், நிர்வாகம், பொதுமக்கள் என அனைவரும் இதற்குப் பொறுப்பு கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். எமது பலவீனங்களை ஏற்றுக் கொள்வதுடன், பகிடிவதையை எதிர்ப்பதற்கு மிதமிஞ்சிய வலிமையும், மனத்திடமும், அர்ப்பணிப்பும், ஒற்றுமையும் தேவை என்பதையும் உணர வேண்டும்.
பகிடிவதை என்பது புற்று நோயைப் போன்றது. அதை எதிர்கொள்வதும் கையாளுவதும் வேதனையையும் அசெளகரியத்தையும் உண்டாக்கினாலும் இறுதியில் அது ஒரு உயிர்கொடுக்கும், அத்தியாவசிய செயற்பாடாகிவிடுகிறது. அதைப் புறக்கணிப்பதோ மெதுவான, கொடிய இறப்பிற்கு வழிசெய்வதற்குச் சமானமாகும். ஆகவே வேதனைகளும், துன்பங்களும் நேர்கின்ற போதிலும், பகிடிவதையிலிருந்து விடுதலையான ஒரு பல்கலைக் கழகச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கித் திட நெஞ்சுடன் செயற்பட நாம் தயாராக வேண்டும்.
“குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்