பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும்

ரம்யா குமார்

பல்கலைக்கழகங்களில் “வன்முறை” எனக் கூறியதும் இயல்பாகவே எமது கலந்துரையாடல்கள் பகிடிவதையின் பால் திரும்பிவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கமான நடைமுறைகளையோ அதிகாரத்தையோ பின்பற்றாத துணைவேந்தரோ கல்வியாளரோ திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாகப் பேசிக்கொள்கின்றோம். எனினும் இவற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களில் தினசரி இடம்பெறும் பால், இனம், வர்க்கம் ரீதியான வன்முறைகள் மறைந்தே காணப்படுகின்றன. பல அரச பல்கலைக்கழகங்களின் மாணவ மற்றும் ஆசிரிய சமூகங்களுடனான உரையாடல்களைக் கொண்டு பால் அடிப்படையிலான வன்முறை எமது நாளாந்த வாழ்வில் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதையும் அது எவ்வாறு புறந்தள்ளல் மற்றும் அநீதியின் தொடர்ச்சியைப் பேணுகின்றது என்பதையும் இங்கு விவரிக்க விரும்புகின்றேன்.

அதிகாரப் படிநிலைகள்

முன்பள்ளியிலிருந்து மூன்றாம் நிலைக் கல்வி வரை எமது மாணவர்கள் அதிகாரத்துகுக் கீழ்ப்படியவும், எதிர்க்கேள்வி கேட்காதிருக்கவும் கற்பிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அடிபணியாதவர்கள் கண்டிக்கப்படுவதோடு, மாற்று வழிகளில் சிந்திப்பதும் தடுக்கப்படுகின்றது. தொன்மையான சிங்கள மன்னன், சேலையணிந்த நல்லொழுக்கமுள்ள தாய், மாமிசம் விரும்பும் முஸ்லிம்கள் போன்ற உருவகிப்புகளின் மூலம் பள்ளிக்கூடப் பாடத்திட்டங்கள் சமூகப் படிநிலைகளையும் வேறுபாடுகளையும் உண்டாக்குகின்றன.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் போதே எமது கல்விமுறையால் உருவாக்கப்பட்ட பாரபட்சங்களுடனும், முன்னபிப்பிராயங்களுடனும் வருகின்றார்கள். தமது சிந்தனைப் போக்கிற்குள் அடங்காதவர்களோடு அவர்கள் பெரும்பாலும் பழக முனைந்திருக்க மாட்டார்கள். அறியாமை, தவறான தகவல்கள் (பகிடிவதை மூலம் போதிக்கப்படுபவை), மற்றும் பரிச்சயமற்ற பல்கலைக்கழகச் சூழல் போன்றவை மாணவர்களை மேலும் பிரிவினைக்குட்படுத்துகின்றன. பல்கலைக்கழக மாணவியொருவர் தனது முதலாவது வாரத்தில் எதிர்கொண்ட அடக்குமுறையான சூழலைப் பின்வருமாறு வர்ணிக்கின்றார்.

நாம் (பெண்கள்) “தகாத” முறையில் ஆடையணிந்தாலோ, “தவறான” முறையில் நடந்துகொண்டாலோ சிரேஷ்ட அணிகளிலுள்ள ஆண் மாணவர்கள் எமது அணியிலுள்ள ஆண் மாணவர்களைக் கண்டிக்கிறார்கள். நாம் (மாணவிகள்) ஆடையணியும் முறை, எம்மிலுள்ள தவறுகள் போன்றவை தொடர்பாக அவ்விரு சாராரும் கலந்துரையாடியதோடு, மாணவிகளுக்கு ஆண் மாணவர்கள் “பொறுப்பு” என்றும் கூறப்பட்டது…..”

பல்கலைக்கழக அதிகாரிகளால் பகிடிவதையைக் கையாள முடியாதிருப்பது பல்கலைக்கழகங்களின் அமைப்பு முறையே அதிகாரப் படிநிலைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டிருப்பதாலும், சில சமயங்களில் அவர்களுமே இவ்வாறான வன்முறைகளுக்குத் துணைபோவதாலுமாகும். முஸ்லிம் இளங்கலை மாணவியொருவர் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் தான் ஹிஜாப் அணிந்த காரணத்தால் தன்னை மட்டும் ஓரங்கட்டித் தனது புத்தகப்பையை வாயில் பாதுகாவலர்கள் பரிசீலித்ததாகக் கூறுகிறார். ஏனைய மாணவர்களை அவர்கள் பரிசீலனையின்றி அனுமதித்த அதேசமயம் குறித்த இந்த மாணவி “ஸ்ஹ்ரானின் தங்கை” போல் இருப்பதாகவும் கேலி செய்திருந்தனர்.

இரண்டாம் நிலை மாணவர்களிலிருந்து……….

மாணவர்கள் இயல்பாகவே பால் ரீதியான மற்றும் ஏனைய “விதிமுறைகளை” உள்வாங்குகின்றார்கள். அவை தொடர்பாக எதிர்க்கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பங்களோ அற்ப சொற்பம். மாணவர்களின் செயற்பாடுகள் பெரும்பாலும் பால் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. உதாரணமாக நிகழ்வொன்றை ஒழுங்கு செய்யும் போது மாணவிகள் பெரும்பாலும் எழுத்து வேலைகள், கணக்கு வைத்திருத்தல், தேனீர் பரிமாறுதல் போன்றவற்றிற்குத் தள்ளப்படுகிறார்கள். சில பீடங்களில் மாணவிகள் தவறாது விரிவுரைகளுக்குச் சமுகமளித்துத் தமது ஆண் நண்பர்களுக்காக குறிப்பெடுக்கும் அதேசமயம், ஆண்களோ வேறு “சலிப்புக் குறைந்த” செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டப்படுகிறார்கள். இந்த துணைக்கலாசாரத்திற்கு அடிபணியாதவர்கள் சுய நலவாதிகள், சமூக விரோதிகள், உயர்குழு சார்ந்தோர் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

பல பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு (மாணவிகள்) மாணவர் ஒன்றியத் தலைவர் போன்ற தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. பெண் மாணவர்களின் எண்ணிக்கை ஆண் மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் பீடங்களிலும் கூட தலைமைப் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. “தலைவர்” என்ற ஒருவர் ஆணாகவே உருவகிக்கப்படுகின்றார் என பல்கலைக்கழக மாணவரொருவர் குறிப்பிட்டிருந்தார். கூட்டங்கள், கலந்துரையாடல்களின் பின் வீடுகள்/விடுதிகளுக்குத் தனித்துப் பெண்களால் திரும்ப முடியாது என்ற கருத்து மூலம் மேற்கண்ட கொள்கை நியாயப்படுத்தப்படுகிறது. தனித்துப் பயணம் செய்வதைப் பழக்கமாகக் கொண்ட பல பெண்களுக்கு இது வினோதமான ஒரு கருத்தாக இருக்கின்றது.

பெண்கள் ஆடையணியும் முறைகள் கடுமையாக மேற்பார்வை செய்யப்படுகின்றன. தான் அணிந்த ஆடை பாதம் வரைக்கும் நீளமாக இருக்காததால் பிரார்த்தனை அறைக்குத் தான் செல்வது தடை செய்யப்பட்டதாக முஸ்லிம் மாணவி ஒருவர் கூறியிருந்தார். நாட்டின் தென்பகுதியில் கற்கும் ஒரு மாணவி வேறு பீடத்தைச் சேர்ந்த தனது (தமிழ்) தோழிகள் “கலாசாரத்தைப்” பேணும் பெயரில் சல்வார், ஒற்றைப்பின்னல், பொட்டு, விபூதி அணிந்து வரக் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறுகின்றார். இது போலவே வடக்கில் தமிழர் பண்பாடுகளை மீறாதிருக்கவும், பாதுகாப்பின் பெயரிலும் இறுக்கமான, குட்டையான உடைகள் அணியக்கூடாது எனச் சிங்கள மாணவிகள் தமது ஆண் நண்பர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழக ஆசிரியர்களாலும் வேறு அதிகாரிகளாலும் கூட பால் ரீதியான விதிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. வைத்தியரொருவர் தனது பெண் மாணவிகளுக்குப் பட்டப் பின் படிப்பைத் தொடர முன் தெளிவாகச் சிந்திக்க வேண்டும் எனக் கூறியதால் ஊக்கமிழந்தவாறு தான் உணர்ந்ததாக ஒரு மருத்துவ பீட மாணவி குறிப்பிடுகின்றார்: “எமது திருமணம் தாமதமடையும், எம்மால் கணவரொருவரைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் என அந்த வைத்தியர் கூறினார்,” எனக் குறிப்பிடப்பட்டது. வேறு ஒரு மாணவி வைத்தியரொருவர் தன்னையும் ஏனைய மாணவிகளையும் உடல் பருமன் மற்றும் உருவத்தின் அடிப்படையில் சுட்டுவதாகக் கூறியிருந்தார். இவ்வாறான வன்முறைகள் தினமும் பெண்களால் எதிர்கொள்ளப்படுகின்றன. வரைமுறைகளை மீளவடிவமைக்க எத்தனிக்கும் பெண்கள் கூட இவற்றால் முக்கியத்துவமற்றவர்கள் போல் உணர்கின்றார்கள்.

……இரண்டாம் நிலைக் கல்வியாளர்கள் வரை

தற்காலிக மற்றும் தகுதிகாண் நிலை விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அதிகாரப் படிநிலையின் அடிமட்டத்தில் காணப்படுகின்றார்கள். பேராசிரியரொருவர் தனது பீடத்தில் கனிஷ்ட விரிவுரையாளர்கள், குறிப்பாகப் பெண்கள் கூட்டங்களின் போது புறக்கணிக்கப்படுவது அல்லது அடக்கிப் பேசப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். தனது வேலையை ஆரம்பிக்கும் போது துணை ஊழியர் ஒருவர் எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொண்டதாகத் தற்காலிக விரிவுரையாளரொருவர் கூறுகின்றார். அத்துணை ஊழியர் பெண்களை அவமதிக்கும் முறையில் நடந்துகொள்வது தெரிந்திருந்த போதும் தனது முறைப்பாடுகள் செவிமடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். உள்ளக ஆட்சேர்ப்பை ஆதரிக்கும் ஒரு நிறுவனத்தின் அதிகாரப் படிநிலையில் கனிஷ்ட ஊழியர்கள் மீது மேலதிக, அங்கீகரிக்கப்படாத வேலைகள் சுமத்தப்படுகின்றன.

கல்வியாளர்களுக்கு மத்தியில் பெண்கள் பெரும்பாலும் தீர்மானங்கள் மேற்கொள்வதில் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆண்கள் மற்றும் அதிகாரத்துக்கு விசுவாசமானவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட குழுக்களின் முறைசாராக் கூட்டங்கள் மூலம் அதிகமாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இவ்வாறான கலாசாரம் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் நிலவுவதோடு “மச்சான்” கலந்துரையாடல்களில் பங்குகொள்ளத் “திராணியற்ற” பெண்களும் சிறுபான்மையினரும் புறந்தள்ளப்படுகின்றார்கள். கேள்வி எழுப்புபவர்கள் முரண்பாடான, பிரச்சினைக்குரிய நபர்கள் என அலட்சியப்படுத்தப்படுகின்றார்கள். அவையினர் கூட்டமொன்றில் செயன்முறை விதி மீறப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைச் சுட்டிக்காட்டிய போது தேவையற்ற விடயங்களை முன்வைக்க வேண்டாம் எனத் துணைவேந்தர் கூறியதாகப் பேராசிரியரொருவர் தெரிவித்தார். கேள்வி கேட்பதை ஆதரிக்காத இவ்வாறான கூட்டத்தில் தான் அடக்கப்பட்டதாக உணர்ந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பால் ரீதியான அதிகாரப் படிநிலைகளைப் பல்கலைக்கழகங்களின் உயர் இடங்களில் அதிகம் காணலாம். பெண்கள் பீடாதிபதிகளாகவும், அதிலும் குறைவாகத் துணைவேந்தர்களாகவும் அதிகாரப் பதவிகளில் இருந்த போதும் கல்வி ரீதியான செயற்பாடுகள் பால் அடிப்படையில் பாகுபட்டே காணப்படுகின்றன. பல்வேறு செயற்குழுக்களில் பெண்கள் பெரும்பாலும் ஒருங்கிணைப்பு மற்றும் எழுத்துவேலைகளில் ஈடுபடுவதோடு, அவர்களது பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. பல பெண்கள் குடும்ப அர்ப்பணிப்புகள், பால் ரீதியான எதிர்மறையான பண்புகளின் பெயரில் குற்றஞ்சுமத்தப்படுகிறார்கள். எனினும் அவர்களது (பரந்த) சராசரித்தன்மைக்காக ஆண்கள் ஒருபோதும் பால் ரீதியாகக் குற்றஞ்சுமத்தப்படுவதில்லை.

இவை அனைத்திற்கும் அடிப்படையாகப் பெண்களைப் புறநிலைப்படுத்தும் பாலியல் ரீதியாகத் சித்தரிக்கும் பாலினவாதம் காணப்படுகின்றது. பெண் கல்வியாளர்கள் அவர்களது சிகை அலங்காரம், ஆடை தொடர்பாகக் கருத்துக்களை எதிர்கொள்வதைப் பொதுவாகக் காணலாம். பாலியல் துன்புறுத்தல் போன்ற பாரதூரமான தகாத செயற்பாடுகளின்போது கூட எவருக்கும் முறையிட முடியாத நிலை காணப்படுகின்றது. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழக நடைமுறைகள் பல பெண்கள் எதிர்கொள்ள விரும்பாத இடர்பாடுகளுடன் காணப்படுவதாகப் பேராசிரியரொருவர் குறிப்பிடுகின்றார்.

பின்விளைவுகள்

இவ்வாறானதொரு சூழ்நிலை எமது பல்கலைக்கழகங்களையும் சமூகத்தையும் எவ்வாறு தாக்கும்? அதன் உடனடி விளைவு பல்கலைக்கழக நிர்வாகிகளை அதிகாரத்துக்காக இயங்க அனுமதிப்பதாகும். இரண்டாவதாக அறிவு மற்றும் பொதுசனக் கலந்துரையாடல்களிலுள்ள வரையறைகளை உடைப்பதை விடுத்து சமூகப் படிநிலைகளையே பல்கலைக்கழகங்கள் தாபிக்கின்றன. மூன்றாவதாகத் தர்க்க ரீதியான கலந்துரையாடல்களை ஊக்குவிக்காதவிடத்து ஈடுபாடற்ற, அநீதிக்கெதிராக செயற்பட முடியாத ஒரு பல்கலைக்கழகச் சமூகத்தைப் பேண இவை உதவுகின்றன.

இப் பிரச்சினைக்கான தீர்வு எமது நிறுவனங்களுக்குள் ஆரம்பிக்க வேண்டும். சமத்துவமான இலவசக் கல்வியின் அடிப்படையில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கிணைந்து உயர் கல்வி தொடர்பான வாதங்களில் பங்குகொண்டு நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

(எழுத்தாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சமூக மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவில் கடமையாற்றுகின்றார்).

குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும். மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்