பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்

சிவமோகன் சுமதி

எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண், பெண் என்ற இருமமாகவும், பெண்மை என்பது கீழ் நிலையாகவும் கருதப்படுகின்றது. பாலியல் வன்முறையை எதிர்கொள்ள எமது கல்வி வளாகங்களில் பாலினம், பெண்கள் மற்றும் வேறு பாலினத்தாரை ஓரங்கட்டல் போன்றவை தொடர்பான கேள்விகள் தொடுக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்முறையானது அசாதாரணமான ஒரு விடயமாகவும் இயல்பாகவே காணப்படும் பாலின வேறுபாடுகளால் அது உருவாகின்றது எனவும் கருதப்படுகின்றது. இங்கு “பாதிக்கப்பட்டவரின்” ஓரங்கட்டப்பட்ட சமூக நிலையை நாம் கருத்தில் கொள்வதில்லை. பெரும்பாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் “பாதிக்கப்பட்ட” நபர் மீதே பழி சுமத்தப்படுகின்றது.  “அவளின்” பாலினப்பண்பு காரணமாகவே அப்பாவியான ஒருவர் குற்றம் செய்யத் தூண்டப்படுகிறார் என்று கூறுவது வழக்கம். பாலினத்தால் பாகுபட்ட எமது நிறுவனங்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சியில் பாலுணர்வு மற்றும் பாலினத்தால் தூண்டப்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பாலியல் வன்தாக்கத்தினை அதிகாரத்தைத் தாபிக்கும் ஒரு நடத்தையாக நோக்குவதோடு அதன் மெய்யான அர்த்தத்தையும் புரிந்துகொள்ளல் வேண்டும். அதாவது பாலின அடிப்படையில் பார்வையிடப்படும் “உடல்” மீதான பாலியல் வன்முறை என்ற தெளிவு இங்கு அவசியமாகின்றது.

இங்கு நன்னடத்தை என்பதையும் நெறிமுறை என்பதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒருவருக்குத் தனது பாலியல் அபிலாஷைகளை வன்முறையற்ற ரீதியில், சுய விருப்பத்துக்காக இன்னொருவரைப் பயன்படுத்தாத வகையில் வெளிக்காட்டுவதற்குச் சகல உரிமையும் உண்டு. இந்த உரிமையை நிவர்த்திப்பதையும், அதிகாரம் கொண்ட ஒருவர் எளிதில் இலக்காகக் கூடிய ஒரு நபரைச் சுய விருப்பத்துக்காகப் பயன்படுத்துவதையும் ஒன்றிணைத்துப் பார்த்தல் தவறானது.

பாலியல் துன்புறுத்தலும் வன்முறையும் நாளாந்த வாழ்வின் கூறுகளாகக் காணப்படுகின்றன. இதனையே பியர் போர்டியூ “தி ஹபிடஸ்” அல்லது “வழக்கம்” எனக் குறிப்பிடுகின்றார். பல்கலைக்கழகங்களில் நடத்தைகளை வழக்கப்படுத்தல், கல்விக்கான இடங்களை உரிமை கோரல் மற்றும் ஓரங்கட்டுதல் மூலம் இவ்வாறான வழக்கங்களின் தொடர்ச்சி பேணப்படுகின்றது. எமது வீடுகள், சந்தை போன்ற பொது இடங்கள், வீதிகள், திரையரங்குகள், கல்வி மற்றும் வேலைத் தளங்களில் உள்ள அதிகார அடிப்படையிலான இடைத்தொடர்புகளின் பிரதிபலிப்பாக இவ் “வழக்கம்” காணப்படுகின்றது. எமது உரையாடல்கள், நடத்தைகள், சூழல் என அனைத்து அம்சங்களிலும் இவ் வழக்கமானது அதிகார ரீதியிலான உறவுமுறைகளைத் தாபிக்கின்றது. இங்கு பாதிப்பிற்குள்ளாகுபவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த முறையில் உள்ளடங்காத அந்நியர்களாகவும் ஒதுக்கப்படுகின்றனர். இந்த நடைமுறையில் இதனை எதிர்த்துப் போராடச் சக்தியற்றவர்களாகவும் உதவிக்கரமற்றவர்களாகவும் அவர்கள் நிர்க்கதியாக்கப்படுகின்றனர்.

பாலியல் வன்முறைகள் பல்கலைக்கழகங்களின் அதிகார மற்றும் பாலினம் ரீதியான படிநிலைகளுள் உள்ளடக்கப்பட வேண்டும். ஒரு மாணவியோ கனிஷ்ட ஆசிரியையோ அசெளகரியமான, சங்கடப்படும்படியான, இழிவுபடுத்தும் அல்லது ஆபத்தான சந்தர்ப்பத்தை எதிர்நோக்குகையில் அவர் செல்லக் கூடிய இடம் யாது? அவரை இந் நிலைக்குள்ளாக்கிய அதே நபரால் இச் சம்பவம் மத்தியஸ்தம் செய்யப்படாது என்பதற்கான உத்தரவாதம் என்ன? பொதுவான கொள்கைகளுடைய நபர்களின் வலைப்பின்னலாகக் காணப்படும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நியாயமான விசாரணைகள் நடாத்தப்படுமா? வெளிப்படையாக அல்லாது சமூக மற்றும் நிறுவனம் சார் உறவுமுறைகளில் பின்னிப்பிணைந்திருக்கும் அதிகார இடைத்தொடர்புகளைக் கொண்ட, படிமுறை சார்ந்த எமது அமைப்புக்களில் மேற்கூறிய உத்தரவாதங்களை உறுதி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியானது.  

இன்று இலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பாலியல் மற்றும் பாலினம் ரீதியான துன்புறுத்தல் மற்றும்பாலியல் வன்முறைக்கெதிரான கொள்கையை (SGBHSV) உருவாக்கியுள்ளன. இதன் நோக்கம் பொதுவாக அதிகார நிலையிலுள்ள ஒரு நபரால் வேறொருவரின் கெளரவத்திற்குப் பங்கம் ஏற்படுகையில், பாதிக்கப்பட்டவருக்கான நடைமுறைகள் மற்றும் ஆதரவுக்கான வழிகாட்டலை வழங்குவதாகும். இருந்தாலும் பாலியல் துன்புறுத்தலானது ஒரு தீராப் பிரச்சினையாகத் தொடர்கின்றது. தனிநபர்களாகவும் நிறுவனங்களாகவும் ஒன்றிணைந்தாலன்றிப் பெண்களோ, இலகுவில் இவ் வன்முறைகளுக்கு ஆளாகக்கூடிய நபர்களோ எதிர்க்குரல் எழுப்ப உகந்த ஒரு கலாசாரத்தை உருவாக்குவது கடினம். வன்முறைக்குள்ளாகும் பலர் அமைதியாகவே வருந்துவதோடு அவர்களது அச்சங்களையோ அசெளகரியங்களையோ முற்றாக வெளிப்படுத்த இயலாதவர்களாகின்றனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகுதிகாண் விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் தனக்கெதிராக இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கெதிரான முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். எமது பல்கலைக்கழகமானது அதன் அங்கத்தவரான ஒருவரைப் பாதுகாக்கும் கடமையினின்றும் தவறிவிட்டதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இவ் வழக்கின் நியாயங்கள் ஒரு புறமிருக்க பல்கலைக்கழகம் என்ற ரீதியில் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பதில் அதிக கவனமும் செயலூக்கமும் தேவைப்படுகின்றதல்லவா?

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (SGBHSV) கொள்கையானது ஓரளவு தரமானதாக இருப்பினும் வன்முறைச் செயல் இடம்பெற முன்னர் அதனை எதிர்க்க ஒருவரை ஊக்குவிக்கும் தன்மை பற்றாக்குறையாகவுள்ளது. எமது மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இக் கொள்கை பற்றிய அறிவு அற்பசொற்பம். ஆசிரியர் விருத்திச் செயற்றிட்டங்களின் கீழ் இக் கொள்கை பரப்பப்படினும் வேறு பல்கலைக்கழகங்களில் இவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இக் கொள்கையானது பணியாளர் ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பினும் இதுவரை அவ்வாறான உள்ளடக்கம் எதுவும் இடம்பெறவில்லை. பல்கலைக்கழக வலைத் தளத்தின் “புகார்கள்” பகுதியின் கீழ் மட்டுமே அக் கொள்கையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களில் படிநிலை ரீதியான உறவுமுறைகள் இல்லாதொழிக்கப்பட்டு உரையாடல்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். படிநிலையில் “கீழே” உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கும் வகையில் இப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான பட்டறைகள் பாலியல் வன்முறைக்கெதிரான இயக்கத்தை உருவாக்க உதவும். எனினும் இப் போராட்டத்தில் இவை மட்டும் போதா.

பல்கலைக்கழகங்களில் SBGHSV கொள்கையானது வலுப்படுத்தப்பட்டு மத்திய பங்கு வகிக்கும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மத்தியில் இக் கொள்கையானது பரப்பப்படல் வேண்டும். சிறுபான்மை இனங்கள் பல்கலைக்கழகங்களில் முற்றாக உள்ளடக்கப்படுவது அரிது. இவ்வாறான வர்க்க ரீதியான பாகுபாடுகளும் புறந்தள்ளல்களும் சமத்துவமற்ற பாலியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துகின்றன. பகிடிவதைக்கெதிரான தீர்க்கமான கொள்கைகள் முன்வைக்கப்படுவதோடு மாணவர்களுக்கிடையிலான படிநிலைகளும் அகற்றப்பட வேண்டும். குறிப்பாக முதலாம் வருட மாணவர்களுக்கான வசதிகளும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும். பிரதிநிதித்துவம் மற்றும் பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் கனிஷ்ட ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிற்றூழியர்கள் பெரும்பாலும் வெளி நிறுவனங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கமர்த்தப்படுவதோடு அவர்களுள் பலர் பெண்களாவர். பல்கலைக்கழகங்களின் மறைமுகமான அதிகாரக் கட்டமைப்புகளை இவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது சிந்திக்கத் தக்கது.

அதிகாரப் படிநிலையின் கீழ் மட்டங்களிலுள்ள பெண்கள், மாணவர்கள், மற்றும் சிறுபான்மையினரிலிருந்து மாற்றமானது ஆரம்பிக்கப்படுவதோடு கல்வி சார்ந்தோர் மற்றும் சாராதோர் என சகல தரப்பினரும் இதில் ஒன்றுபடல் அவசியம். எமது தாபனங்களில் நெருக்கமான, ஆரோக்கியமான உறவுகளின் நிலவுகைக்கும், ஜனநாயகத்துக்குமான போராட்டமானது ஒருங்கிணைந்த ஒரு முயற்சியாக இடம்பெறுவது இன்றியமையாததாகும்.

(எழுத்தாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையைச் சார்ந்தவர்).