பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும்

ஃபர்ஸானா ஹனிஃபா

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களுக்கேற்ப, அவ்வாண்டில் உள்வாங்கப்பட்ட 109,660 மாணவர்களில் 64.3 சதவீதமானோர் பெண்களாவர். பெண்கள் பெரும்பான்மையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றது. மேற்கண்ட மூன்று துறைகளிலும் ஆண் மாணவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். கொழும்பு கலைப் பீடத்தில் 2020 ஆம் ஆண்டில் 2013 (85%) மாணவிகளும், 352 (15%) மாணர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். அதே போல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எண்ணிக்கை 2962 (82%) ஆகவும், மாணவர்கள் எண்ணிக்கை 651 (18%) ஆகவும் காணப்பட்டது.

மாணவர் தொகையில் பெண்கள் பெரும்பான்மையின் யதார்த்தத்தை அறிந்திருந்தும், பல்கலைக்கழக நிர்வாகங்களும் கொள்கையமைப்பாளர்களும் அதனை அங்கீகரிக்கவோ, ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ தவறுகின்றனர். இரண்டாம் நிலைக் கல்வியில் ஒப்பீட்டளவில் உயர் தகைமைகளைக் கொண்ட ஒரு இளம் பெண்கள் கூட்டம் இருக்கும் விடயமோ, அது அளிக்ககூடிய எதிர்கால வாய்ப்புக்களோ, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மற்றும் கல்விக் கொள்கைகள் மீது தாக்கம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

பரவலான பெண் வெறுப்பு

பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு சாதகமான ஒரு இடமாக இலங்கையைக் கூற முடியாது. நாட்டில் நிலவும் பெண் வெறுப்புக்குப் பின்வருபவை சான்று பகர்கின்றன: நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உள்ளூர் அரசாங்கம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களின் குறைந்த அரசியல் ஈடுபாடு/ பிரதிநிதித்துவம், உயர் வீதமான பாலின அடிப்படையிலான வன்முறை, மற்றும் எளிதில் பாதிப்படையும் பெண்கள் உழைப்பைச் சுரண்டும் பொருளாதாரம். அரசியலில் பெண் தலைமைத்துவத்தின் பற்றாக்குறை, பெரும்பாலான ஆண் அரசியல்வாதிகள் கையாளும் வன்முறையான ஆண்மை, பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் இழிவு மொழிநடை ஆகியவை நாட்டில் தலைமைத்துவம் பற்றிய புரிந்துணர்வையும், அங்கு பெண் தலைமைத்துவத்துக்கான சந்தர்ப்பங்களையும் பாதிக்கின்றன. 

இப் பற்றாக்குறையான பெண் பிரதிநிதித்துவப் பிரச்சினை, கடந்த தேர்தலில் உள்ளூராட்சிக்கான பெண்கள் ஒதுக்கீடு மூலம் சற்று எதிர்கொள்ளப்பட்டது. எனினும் இம்முறை தேர்தல் வேட்பு மனுக்களின் படி அரசியலில் பெண்கள் ஈடுபாட்டை இயல்பாகக் கொள்ளும் தன்மை அதிகரிப்பது புலனாகின்றது. பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து Dr. சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே மற்றும் Dr. ஹரினி அமரசூரிய ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாகியமை, எமது மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவுள்ளது. இருப்பினும், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெண்கள் வெறும் பன்னிருவரே. இது நாட்டின் பிரச்சனைக்குரிய தலைமைத்துவத்தையும், பெண்களின் பற்றாக்குறையையும் சுட்டுகின்றது. பாராளுமன்றத் தலைவர்கள் வன்முறையைக் கையாளுவதும், பிரஜைகளின் துயரங்கள் பற்றி அறவே அறிந்திராதிருப்பதும் பாலினம்சார் பாகுபாட்டைக் கொண்டிருப்பதுடன் ஏற்கமுடியாததொன்றாகும்.

பாலினவாதமான நுண்சுற்றுச்சூழல்

கலைப் பீடங்களில் மட்டுமல்லாது எமது கல்வியமைப்பில் உள்ள சகல இளம் பல்கலைக்கழகப் பெண்களும், பெண்வெறுப்பு மிகுந்த ஒரு நாட்டில் எழும் சவால்களைத் தர்க்கரீதியாகக் கிரகிக்கவும் எதிர்கொள்ளவும் பழக்கப்பட வேண்டும். அப்போது அவர்களால் தமது எதிர்காலங்கள் தொடர்பாக உபாயமான தெரிவுகளை மேற்கொள்ளக் கூடியதாயிருக்கும். எமது பல்கலைக்கழக அமைப்பில் பெண்கள் பலத்துக்கோ, தலைமைத்துவத்துக்கோ ஏற்ற மாதிரிகள் இல்லாமை கவலைக்கிடமானது. நாட்டின் நிலவரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாகமும் பெரும்பாலும் ஆண்களையே கொண்டுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப் பீடத்தின், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமானது பல பெண் செயலாளர்களைக் கொண்டிருந்த போதும் பெண் தலைவர்களோ அற்ப சொற்பமாகவே இருந்துள்ளனர். கொழும்புக் கலைப் பீடத்தின் வரலாற்றில் ஒரே ஒரு பெண் பீடாதிபதியே காணப்படுகின்றார். அதோடு ஒரு பெண் பொருளாளர், ஒரு பதிவாளர், மற்றும் மூன்று துணை வேந்தர்களும் இருந்துள்ளனர். எனினும் இவர்கள் விதிவிலக்கானவர்கள். ஆகவே பெண் மாணவர்களின் பெரும்பான்மை காணப்படும்போதும், தலைமைத்துவத்தில் ஆண்களே எப்போதும் இருப்பதில் வியப்பில்லையல்லவா?

எண்ணிக்கைகள் ஒருபுறமிருக்க, கடந்த காலத்தின் எச்சங்களாக எஞ்சியிருக்கும் சில பிரச்சனைக்குரிய ஆண் விரிவுரையாளர்களை நோக்குவோம். இக் கூட்டத்தினர் தமது ஆண்மை மற்றும் இன அடையாளங்களினடிப்படையில் பீடச் சந்திப்புகளில் மேலாதிக்கம் செலுத்தும் அதே சமயம் பெண்கள் மற்றும் சிறுபான்மை ஆசிரியர்களின் குரல்களையும் கீழழுத்திவிடுகின்றனர். அனைத்து சமூகங்களையும் சார்ந்த பல ஆண் விரிவுரையாளர்கள் தமது பெண் சக ஊழியர்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் பாலினவாதமான நடத்தைகளையே கொண்டுள்ளனர். இரு பாலாருமான சக ஊழியர்கள் இந் நடத்தைகளைக் கண்டு முகம் சுளித்தாலும், அதனை எதிர்க் கேள்வி கேட்பதில்லை. இவ்வாறான நடத்தைகளை வெளிப்படையாகத் தட்டிக்கேட்பதை இயல்புநிலையாக்கும் கலாசாரம் இன்னும் தோன்றவில்லை. மேற்கண்டவாறு நடந்துகொள்வோர் சிலரேயாயினும், ஆண் மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளுக்கும் தொடர்ந்தும் ஒரு தவறான முன்மாதிரியாகவுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் பாலியில் துன்புறுத்தல்கள் பற்றிய பல கட்டுரைகளை எமது குப்பி வலைத்தளம் கொண்டுள்ளது. ஆகவே பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் பிரச்சனைக்குரிய பாலினம் சார் விதிமுறைகளையும், பங்களிப்புகளையும் வளர்த்துவருகின்றன. அதோடு இவை வேறு பல சவால்களை எதிர்கொள்ளும் இளம் பெண்கள் சமூகத்துக்கும் ஓர் உந்துசக்தியாக அல்லாது ஒரு முட்டுக்கட்டையாகவே விளங்குகின்றன.

சவால்களை எதிர்த்து

கலைப் பீடங்களில் மட்டுமல்லாது, பொதுவாக எமது பல்கலைக்கழகங்களில் கற்கும் பெரும்பாலான மாணவர்கள் மிகவும் வறிய, அல்லது புதிதாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேவை ரீதியான நிபந்தனைகளில் ரூ. 150,000 இற்குக் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டுமென்பதை அண்மையில் அறிந்து கொண்டேன். அதன் படி, தகுதி பெறக்கூடிய மாணவர்கள் பலர் உள்ளனர். நாட்டின் வறுமையான மாவட்டங்களின் வசதி குன்றிய பாடசாலைகளிலிருந்து கலைப்பீடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். மாணவர்கள், தமது குடும்பங்கள் நிதி ரீதியான சவால்களை எதிர்கொள்வதாகவும், பட்டம் பெற்ற பின்னர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல தாம் சிரமப்படக்கூடும் எனவும் குறிப்பிடுகிறார்கள். தற்போதய பொருளாதார நெருக்கடியில் பல மாணவர்களின் குடும்பங்கள் மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணிகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் இளம் பெண்கள் இக் கற்கை நெறிகளில் சேர்ந்து கொள்வதிலும் சரி, கல்வியைத் தொடர்வதிலும் சரி பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். எமது கல்விச் சீர்திருத்தச் செயன்முறைகளோ இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாகப் பாராமுகமாகவே உள்ளன.

பெண் மாணவர்கள் நெருங்கிய உறவினர்களாலும் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகப் பல ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பல கடந்த சில வருடங்களில் ஊடகங்களில் பதிவாகியுள்ளன. அண்மையில் கொழும்பு விஞ்ஞான பீடத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி அதே பீடத்தில் கற்ற அவரது காதலனால் ஜனவரி 17, 2023 கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து எமது மாணவர் மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையை எதிர்கொள்ளவும், அச் சம்பவத்தைக் கிரகிக்கவும் எமது பல்கலைக்கழகச் சமூகத்தில் பலர் முன்வந்து கைகொடுத்தனர். நியூசிலாந்தின் வெலிங்டனில் தனது முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த, எமது பல்கலைக்கழகச் சமூகத்தைச் சார்ந்த அப்ஸரா விமலசிரி, 2022 இல் இலங்கை வந்திருந்த போது அவரது முன்னாள் கணவரால் கொல்லப்பட்டார். 2020 ஜனவரியில், யாழ் மருத்துவ பீட மாணவி ஹப்புஹெட்டிகே டொன் ரோஷினி காஞ்சனா, பரந்தன் மருத்துவப் படையில் இராணுவவீரராகப் பணியாற்றி வந்த அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார். 2015 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், மற்றும் கேர் இன்டர்னஷனல் (CARE International) ஆகியன ஒரு ஆய்வை நடாத்தியிருந்தன. அதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பகிடிவதையும், பாலியல் துன்புறுத்தல்களும் அவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான நீண்ட கால பாதிப்புகளையும், கூறப்போனால் மரணத்தையும் கூட ஏற்படுத்துகின்றன எனக் கண்டறியப்பட்டது. கேர் இன்டர்னஷனல் (CARE International) ஆண்மை மீது மேற்கொண்ட ஆய்வில் இலங்கையின் ஆண்கள் பொதுவாகப் பெண்கள் மீதும், குறிப்பாக நெருங்கிய துணைவர்கள் மீதும் வன்முறையைக் கையாளத் தமக்கு உரிமையுள்ளது எனக் கருதுவதாக அறியப்பட்டது. பெண்கள் நாளாந்தம் வீட்டிலும், உறவுகள் மத்தியிலும் தினந்தோறும் எதிர்கொண்டு, குறிப்பிட்டு, நிராகரிக்க வேண்டிய பரவலான வன்முறைக்கான ஒரு பயங்கர நினைவூட்டியாகவுள்ளது இவ்வாய்வு.

பற்றாக்குறையான நடவடிக்கைகள்

தர உறுதிப்படுத்தலை மையமாகக் கொண்ட தற்போதய திருத்தங்கள், மாணவர்களை “வேலைக்கமர்த்தக்கூடியவர்களாக்கத்” தேவையான ஆங்கிலம், கற்ற தொழில்முனைவுத்திறன் மற்றும் கணினித் தொழுனுட்பத்திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இவை பல்கலைக்கழகங்களிலோ, உலகிலோ நிலவும் பாலினவாதமான சமூகத்தை எதிர்கொள்ளவேண்டிய தேவையை முற்றிலும் புறக்கணித்துள்ளன. இத்தகைய புறக்கணிப்பிற்கு ஒரு காரணம், மாணவர் தொகையில் பாலினங்களின் பரவல் பற்றிய புரிந்துணர்வின்மையாகும். மற்றையது, பாலினவாதம் நிரம்பிய பல்கலைக்கழகச் சூழலிலோ, சமூகத்திலோ, உலகின் எந்தவொரு இடத்திலோ தம்மையும் தமது குடும்பங்களையும் வழிநடத்த மாணவர்கள் படும் அல்லல்களை அறிந்திராமையாகும். தொழில்சார் பாலினவாதம் பற்றி இங்கு சுருக்கமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. மகப்பேற்று விடுப்புகள் மற்றும் வீடு திரும்புவதிலுள்ள சிக்கல்கள் நிமித்தம் சற்று முன்னதாகவே வேலையிலிருந்து விடுவிக்கக் கோருவதால் பெண்களை வேலைக்கமர்த்த விரும்பாமை, கால அவகாசங்களுக்கான கோரிக்கைகளை நிராகரித்தல், பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான ஆதரவின்மை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வெளிப்படையான வன்முறை ஆகியன சில உதாரணங்களாகும். பெண்கள் சம்பளமின்றிக் குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை, அவர்களைத் தொழில்களில் ஈடுவதிலிருந்து தடுப்பதைத் தொழில் வாய்ப்பு சார் ஆய்வுகள் கருத்தில் கொள்வதில்லை.

இவ்வாரக் கட்டுரையானது கலைப் பீடங்களிலுள்ள பெண் மாணவர் பெரும்பான்மையை பல்கலைக்கழக அமைப்புகள் அங்கீகரித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.  பல மாணவர்கள் சிக்கலான பின்னணிகளிலிருந்து வருவதோடு, ஏராளமான சவால்களை எதிர்கொண்ட பின்னரே பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுள்ளனர். அவர்களது விடாமுயற்சியும் மனத்திடமும் அங்கீகரிக்கப்படுவதோடு, அவர்களது வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். எனினும் அவ்வாதரவு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்தித்துத் தெளிவது அவசியம். எமது கற்கை நெறிகளோ, கற்பித்தல் முறைகளோ, பாலினவாதமான பல்கலைக்கழகச் சூழலோ, வருங்காலச் சவால்களை எதிர்கொள்ள எமது இளம் பெண் மாணவிகளுக்கு உகந்தவையல்ல. நாட்டின் பாலினவாதம் பல்கலைக்கழகங்களினுள்ளும் பிரதிபலிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதுடன், அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சமூகத்திலுள்ள பாலின, இனவர்க்கப் பாகுபாடுகளால் மாணவர்களுக்கு வளங்கள், சந்தர்ப்பங்கள், சுய-உணர்தல் ஆகியவற்றைப் பெறும் தகவு ஆரம்பத்திலேயே பாதிக்கப்படுகின்றது. எமது மாணவிகள் வெறுமனே அவர்களது பொறுமைக்குப் பாராட்டப்படாது, அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.