பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும்

ஹசினி லேகம்வசம்

இலங்கையர்கள் ஊழலுக்கெதிரான தமது போராட்டத்தை
தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபாய
ராஜபக்ஷ அவர்களையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது
குடும்பத்தாரையும் பதவிவிலகக்கோரி வருகின்றனர். இவ்வாறான
கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக
ஒரு அரசாங்கத்தை பதவிவிலகக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கும்
வேளையில் பலமாக அமைந்த ஒரு அரசாங்கத்தின் விதி இத்தகைய சமூக
பொருளாதார இயல்வீழ்ச்சியை எவ்வாறு உருவாக்கியது என்பதே எனது
சிந்தனையாக இருக்கின்றது. இவ்வரசாங்கத்தினுள்ளும் அதற்கு வெளியேயும்
இருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், ஏனைய களங்கள், நடைமுறைகள்
மற்றும் பொறிமுறைகள் என்ன செய்துகொண்டிருந்தன அல்லது
என்னவாகின? எனது சூழமைவில் இருந்து பார்க்கையில், இவ்வாறான ஒரு
கொடுங்கனவு உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் என்ன
செய்துகொண்டிருந்தன? தற்போதைய அரசாங்கம் மட்டுமல்லாது அதற்கு
வெளியிலும் குறிப்பாக கல்வியியலாளர்களும் இந்நிலைக்கு பொறுப்பேற்க
வேண்டும். எனவே எனது இந்தப் பத்தி கல்வியியலாளர்களாக இருக்கும்
எங்களின் சுயவிமர்சனத்துக்கான தேவையை எடுத்துச்சொல்கின்றது.


அரசியலில் கல்வியின் பங்கு


ஏனைய பிரஜைகளை போலவே அரசியலில் இடையீடு செய்வதற்கான
சரியான, சிலவேளைகளில் மிகத்தேவையான பொறுப்பு
கல்வியியலாளர்களுக்கு உள்ளது. ஆனால் அதற்கான காரணங்களும்
அவர்களின் இடையீட்டின் தன்மையும் முக்கியமாக கவனிக்கப்பட
வேண்டியவை. இவை கவனிக்கப்பட வேண்டியதற்கான காரணம்
கல்வியியலாளர்களின் தேர்வுகள் அதிகமானோரின் மீது செல்வாக்கு
செலுத்தத்தக்கன. இவை செல்வாக்கு செலுத்துவதற்கான காரணம் கல்வியியலாளர்கள் முக்கியமானோராக கருதப்படுவதாகும். இவர்கள்
பேரளவில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் இருப்பது
அவர்களின் தகுதிக்கேற்ற செயலல்ல என்பது எனது கருத்தாகும்.
உண்மையில் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது யாதெனில் பேரளவில்
மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் கல்வியியலாளார்களின் நிபுணத்துவம்
மற்றும் அனுபவத்தைக்கொண்டு நாட்டின் வளார்ச்சிக்காக‌ செல்வாக்கு
செலுத்த வேண்டிய இயலுமையையாகும். இது தொடர்பாக இவர்கள்
இயங்குவதற்கான எல்லை விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
உதாரணமாக, நாட்டிலுள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் கொள்கையளவில்
ஒரு தீர்மானத்தில் இருக்கும் ஒரு கல்வியியலாளர், நடப்பு அரசாங்கத்துடன்
இணைந்து அந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பிலான கொள்கைவகுப்பில்
ஈடுபடுவதற்கான தனது நிபுணத்துவத்தை வழங்குதல். இவ்வாறான ஒரு
செயற்பாட்டை யாராலும் தட்டிக்கழிக்க முடியாதென்றே நம்புகின்றேன்.

இந்நடைமுறைக்கு முரணாக கடந்த சில தசாப்தங்களாக நாம் காண்பது,
தமது கொள்கைகளை தெளிவாக முன்வைக்காமல் அரசாங்கத்தின்
அமைச்சரவை பதவிகளிலிருந்து ஏனைய அதிகாரம்வாய்ந்த பதவிகளில்
இணைந்து அரசாங்கத்தோடு இயைந்து செயற்படும் கல்வியியலாளர்களையே.
இவர்கள் அரசாங்கக்குழுக்களின் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை
நியாயப்படுத்துவதோடு அவர்களின் பிற்போக்கான அரசியலையும்
நியாயப்படுத்தி, எப்போது இவையெல்லாம் தமது விருப்பங்களுக்கு மாறாக
இயங்க ஆரம்பிக்கின்றனவோ, அப்போது மெதுவாக
பல்கலைக்கழகங்களுக்குள் மீள நுழைகின்றனர். தமது கொள்கைகளுக்கு
முரணாக பதவியிலுள்ள அரசாங்கம் செயற்படுவதைக்கண்டு அதனை விட்டு
வெளியேறிய கல்வியியலாளர்களை காண்பது அரிதாகிவிட்டது.


புத்திஜீவித நேர்மையின்மை


‘புத்திஜீவித நேர்மையின்மை’ என்ற பதத்தால் நான் குறிப்பிடுவது தாம் கற்ற
கல்விக்கு எவ்வித நாணயமுமின்றி தமது கொள்கைகளுக்கு எவ்வித
நேர்மையுமின்றி சமூக, பொருள்சார் நன்மைகளுக்காக எவருக்கும் தரகுவேலை செய்யத்தயாராகும் கல்வியியலாளார்களையாகும். இவ்வாறான
செயற்பாடுகள் கேள்விக்கணக்கின்றி செல்லக்காரணம், அவ்வாறானவர்கள்
பல்கலைக்கழகங்களின் இறுக்கமான படிநிலைகளில் முக்கியமான
பதவிகளையும் அதனூடான விலக்களிப்பையும் அனுபவிப்பதாகும்.

கல்வியியலாளர்கள் அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்க
எதிர்பார்க்கப்படுகின்றார்கள் என்பதை நான் மீளக்கூறுகின்றேன். வியத்மக
செயற்றிட்டம், தான் தூரநோக்கிய சிறந்த எதிர்காலத்துக்கான
செயற்பாடுகளை மேற்கொண்டதை நான் விமர்சிக்கவில்லை. அது
அவர்களின் உரிமையும்கூட. ஆனால், அவர்கள் தூரநோக்கிய எதிர்காலத்தை
கேள்விக்குட்படுத்திய மற்றும் எதிர்த்த தரப்புகளையும் களங்களையும்
கவனமாக அடக்கி, அத்தகைய முயற்சிகளை கேலிக்குறியதாக்கியமை
ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். இத்தகைய கல்வியியலாளார்களின்
அனுசரணையோடு ஆட்சிக்கு வந்தரவ்களுக்கெதிராக அவர்களே
வீதிக்கிறங்கிதை கூட நான் புத்திஜீவித நேர்மையின்மை எனக்கூற
மாட்டேன்; மாறாக, அவர்கள் அதே போன்ற பலமான ஆட்சியாளர் ஒருவரை
வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், பல்கலைக்கழகங்களின்
படிநிலைகளில் அவர்கள் விரட்ட முனையும் பலமான ஆட்சியாளர்களைப்
போலவே நடந்துகொள்வதைத்தான் ஏற்க முடியாதிருக்கின்றது.


அரசியலில் முன்னேற்றங்களை ஏற்படுத்த கல்வியியலாளர்களால் இயலுமா?


இவ்வாறான ஒரு கேள்வி அரசியல் வெளியில் கேட்கப்படவேண்டிய
சூழ்நிலை உருவாகியதே கவலைக்குரிய விடயமாகும். உண்மையில்
பல்கலைக்கழகங்கள் ஒரு நாட்டின் கொள்கைவகுப்பிலும் மேற்கொள்ளப்படும்
தீர்மானங்களிலும் முக்கிய இடம் வகிக்க வேண்டும். எமது ஆய்வுகள் நாம்
கற்பிக்கும் விடயங்களில் மட்டுமல்லாது எமது அரசியல், சமூக
ஈடுபாடுகளிலும் முக்கியமாக கொள்கைவகுத்தல்களிலும் தாக்கம் செலுத்த
வேண்டும். இயற்கை விஞ்ஞானங்களைப் பொறுத்தவரையில் மேற்குறித்த
இடையீடுகள் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள், மருத்துவ மற்றும் பொறியியல்
தீர்வுகளை வழங்குவதாயும் சமூக விஞ்ஞானங்களை பொறுத்தவரையில் அவை எமது சமூக, பொருளாதார, அரசியல் ஏற்பாடுகளை பலப்படுத்தக்கூடிய
கொள்கைகளை வகுப்பதை அடிப்படையாகவும் கொன்டிருக்க வேண்டும்.

இரு இடையீடுகளும் ஒரு சிறந்த சமூக உருவாக்கத்துக்கான நேர்மையான
புத்திஜீவித ஈடுபாட்டையும், அத்தகைய சூழலை தக்கவைக்கக்கூடிய
நிலையையும் (இதனை புத்திஜீவித சுதந்திரம் எனலாம்) கொண்டிருக்க
வேண்டும்.


துரதிஷ்டவசமாக இலங்கையில் பல தசாப்தங்களாகவே இத்தகைய சூழல்
இல்லை. ஆய்வுத்துறையில் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்ட
கல்வியியலாளர்களர்களை அரசியல்வாதிகள் அணுகுவதில்லை, (ஏனெனில்
இவர்களின் கல்வியியல் ஈடுபாடு மிக முக்கியமானதாகும்) மாறாக,
சீரியதன்மையற்ற கல்வியியலாளர்கள் அரசியல் மையப்புள்ளிக்கு
கொண்டுவரப்படுகின்றார்கள். இதனால் சீரிய கல்வியியலாளர்கள் மேலும்
இதனிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்வதால்,
தவறான கொள்கைகளுக்கு விலைபோகும் தலையாட்டிகள் (பெண்கள் உட்பட)
உருவாகியுள்ளதோடு சீரிய கல்வியியலாளர்கள் பல்கலைக்கழகங்களோடு
சுருக்கப்படுகின்றார்கள். அவர்களின் நிபுணத்துவம் நாட்டின் வளர்ச்சிக்கு
எவ்வித நன்மையும் பயப்பதில்லை. எமது நாடு சீரிய மாற்றமொன்றை
வேண்டிநிற்பதை போல எமது கல்விப்புலமும் பல்கலைக்கழகங்களும் கூட
தமது நிலைகளை தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


இதற்கான தேவை கல்விப்புலத்தில் மேலும் முக்கியமாக உணரப்பட்ட
தருணம், கல்வியியலாளார்கள் தமது ஆய்வுக்காகவும் அரசியல்
ஈடுபாட்டுக்காகவும் கொண்டுள்ள மிகக்குறுகிய நேரத்தையும் கொல்லும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக தரஉறுதிப்பாட்டு
செயற்பாடுகளாகும். இச்செயற்பாடு எமது சேவைகளுக்கான
செய்விளக்கங்களை வெறுமனே ஆவணங்களாகக் கோர்க்கும்படி
வேண்டுவதோடு உண்மையில் அச்சேவைகள் மேற்கொள்ளப்பட்டனவா
என்பது கேள்விக்குறியாக்கப்படும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இதற்காக ஒதுக்கப்படும் நேரம் உண்மையில் எமது கல்வியியலாளார்களுடனான கலந்துரையாடல்களிலும் மாநாடுகளிலும்
செலவளிக்கப்படுமாயின் எமது அரசியல் ஈடுபாடுகள் தொடர்பில்
இணைநிலையினர் கொண்டுள்ள விமர்சனங்களை அறிய முடிவதோடு எமது
தேர்வுகள் மீதான மீளாய்வு, அவற்றின் கருத்தியல் ஏற்புத்தன்மை மற்றும்
சமூக அரசியல் விளைவுகளை மீளாய்வு செய்யவும் இயலுமாகும்.


தீர்வு என்ன?


ஒரு அராஜக அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய புத்திஜீவித
சுதந்திரத்தை வழங்கும் தொழில்தர்மங்களையும் தரங்களையும் ஏற்க நாங்கள்
தயாரா? அதே படித்தரத்துடன் தொழில்தர்மங்களை பேணி ஒரு அரசியல்
அதிகாரப்பரப்புடன் அதனை தட்டிக்கழிக்காமல் இணைந்து செயற்பட தயாரா?
இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில்
காணப்படும் விமர்சன கலாசாரத்தை மீள கட்டியெழுப்ப முடிவதோடு
மட்டுமல்லாது புத்திஜீவித ஒருமைப்பாட்டையும் உருவாக்கலாம்.
இவ்வாறான ஒழுங்கு வேறுமனே சில விதிகளையும் கட்டுப்பாடுகளையும்
அறிமுகப்படுத்துவதால் ஏற்பட்டுவிடாது; எமது செயற்பாடுகளை
சுயவிமர்சனத்தோடு சீர்திருத்த நாங்கள் தயாராக வேண்டும்.


இந்நேரத்தில் வின் ஆர்ப்பாட்டத்தின்போது என் சக பணியாளரொருவர்
மேற்கொண்ட அவதானம் நினைவுக்கு வருகின்றது; அவ்வார்ப்பாட்டத்தில்
கல்வி உட்பட ஏனைய விடயங்களை சீரழித்தமைக்காக அரசாங்கத்தை
தூற்றும் பதாகைகள் சுமக்கப்பட்டன. கல்வியை நாசமாக்கினாய்! என்ற
பதாகைக்கு பதிலாக அவர் கல்வியை நாம் கொன்றோம் என உச்சரித்தார்.
வேடிக்கையாக இது கூறப்பட்டாலும் இது முக்கியமான அவதானமாகும்.
நிறைய கல்வியியலாளர்கள் அரசியல் உணர்வுநிலையை மாத்திரமன்றி
அரசியல் ஈடுபாட்டுக்கான ஓர்மையையும் இழந்திருக்கின்றார்கள். இதனை
சீர்படுத்துவதற்கான பாதையில் முதலாவதாக மேற்கொள்ள வேண்டிய பணி
எம்மை வளப்படுத்துவதாகும். இதனை சரியான உணர்வுநிலையோடும்
புத்திஜீவித வழியிலும் மேற்கொள்ளும்போது தற்போதைய நெருக்கடியில்
நாம் ஈடுபட வேண்டிய வழிவ‌கை உருவாகும். இந்நிலை உருவாகும் வரை

அராஜக அரசாங்கமொன்றை எதிர்க்கத்துணிவான மாற்றுவழியொன்று
உருவாகுவது சாத்தியமற்றதொன்றாகும்.