போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்

அனுஷ்கா கஹன்டகமகே

போராட்டக்காரர்கள் ராஜபக்ஷாக்களை அவர்களின் அதிகாரம், பதவி,
தலைமைப் பொறுப்பு என அத்தனையிலும் இருந்து பதவிறங்கச் செய்யும்
வகையில் ராஜபக்ஷ ஆட்சியை முறியடித்திருக்கின்றார்கள். இச்சர்வாதிகார
வீழ்ச்சியின் பிற்பாடு, ராஜபக்ஷக்களின் கைப்பாவையாக இருக்கும் ரணில்
விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஒரு உடைந்த
பெரும்பான்மையோடு பதவியில் அமர்ந்திருக்கின்றார். மக்களின்
ஆணையின்றி பதவியை ஏற்று தன்னை ஜனாதிபதியாக வரிந்திருக்கும்
ரணில் விக்ரமசிங்க, தான் பதவிக்கு வருவதற்கான மூல காரணமான ‘அரகல’
போராட்டத்தை நசுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர்
பதவியேற்று சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே, ஆர்ப்பாட்டக்காரர்கள்
கோட்டா கோ கம (GGG) தளத்தை கலைக்கும் நோக்கில் இருந்தபோதே,
அதிகாலை வேளையொன்றில் ராணுவத்தினரை ஏவி விட்டதோடு அவர்கள்
பெண்கள் மற்றும் வலது குறைந்தோர் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை
தாக்கியுமுள்ளனர். ராணுவத்தினர் ஊடகவியலாளர்கள் உட்பட பல
ஊடகவியலாளார்களையும் தாக்கியுள்ளதோடு GGG போராட்டத்தளத்தில்
அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்களையும் உடைத்து தகர்த்துள்ளதோடு
பலரை அங்கு குழுமச்செய்திருக்கின்றார்கள். ரணில் முடுக்கிவிட்டுள்ள
இவ்வேட்டை மூலம் இன்னும் பல மக்கள் ஒருதலைப்பட்சமாகவும்
அநியாயமாகவும் கைதாகும் நிலையில் ரணில் பதவியேற்று சில
வாரங்களுக்குள்ளாகவே மிக அண்மையில் முக்கியமான
தொழிற்சங்கவாதியும் செயற்பாட்டாளருமான‌ ஜோசப் ஸ்டாலின் அவர்களும்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.


வகுப்புமயமாக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்: இரட்டை நிலைப்பாடு தேசிய மற்றும் சர்வதேச அளாவிலும் செயற்பாட்டாளர்கள்,
கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பல
தரப்பினராலும் () போராட்ட தளத்தின் மீதான தாக்குதல் கடுமையாக
விமர்சிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்கள் பூராகவும் பகிரப்பட்டுள்ள தாக்குதல்
தொடர்பான காணொளிகளும் ஆக்கங்களும் அரசாங்கத்தின்
இவ்வீனச்செயலை கண்டித்தவண்ணமுள்ளன. பல சமூக வலைத்தள
பதிவுகளும் ராணுவத்தினரை சாடியுள்ளதோடு இந்நடைமுறை
எதிர்பார்க்கப்பட்டதே. ஆனாலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற
குறிப்பிடத்தக்க விடயம், ராணுவத்தினரின் கல்வித்தகைமை குறித்த
விமர்சனங்களாகும்‍, “எட்டாந்தரம் சித்தியடைந்த இராணுவ சிப்பாய்”. இதே
வேளையில், ஆளுங்கட்சியிலுள்ள (ஏனையோரும் கூடவே) அரசியவாதிகள்
போராட்டக்காரர்களின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளதோடு அவர்களை
போதைப்பொருள் பாவனையாளர்களென விமர்சித்திருப்பதையும் நாம்
பார்க்கின்றோம். இராணுவத்தினரை அவர்களின் கல்வித்தகைமையை
வைத்தும், அவர்களால் நசுக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்களை
போதைப்பொருள் பாவனையாளர்களெனவும் விமர்சிக்கும் சமூக ஊடக
கலந்துரையாடல்கள், இவ்விரு தரப்பினரும் வெவ்வேறு இடங்களிலிருந்து
வருபவர்களாயிருப்பினும், இவ்விமர்சனங்கள் வர்க்கரீதியானதாக
இருப்பதோடு ஒருவரின் கல்வித்தகைமை மற்றும் அவர்களின் சமூக
வகுப்பை சாடும் விமர்சனங்களாக காணப்படுவதை நாம் காண்கின்றோம்.


இருப்பினும், இத்தாக்குதல்களை மேற்கொள்ள கட்டளையிட்ட ஜனாதிபதியின்
கல்வித்தகயை குறித்த விமர்சனங்கள் அரிதாகவே எழுந்துள்ளன.
விக்ரமசிங்க போன்ற கொடூரமான அரசியல் கடந்தகாலத்தையுடைய ஒருவர்
இத்தாக்குதல்களுக்கான ஆணையை ராணுவத்தினரிடம் பிறப்பித்திருப்பார்
என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தன்னை பதவியில் அமர்விக்க உதவியே
அதே போராட்டக்காரர்கள் மீதான தன்னிச்சையான கைதுக்கும் இவரே
அடிநாதமாக இருக்கிறார் என்பதும் தெள்ளத்தெளிவான விடயமாகும்.
ரணிலின் வன்முறையான நடத்தைகளும் ஈடுபாடுகளும் மக்களுக்கு
பொதுவாக தெரிந்திருக்கும் போதிலும் அவரின் செயற்பாடுகள் அவரின்
கல்வித்தகைமையோடு இணைக்கப்பட்டு பேசப்படுவதில்லை. போராட்டங்களின் போது அவரின் வீடும் நூலகமும் எரிக்கப்பட்ட
வேளையிலும் கூட பலரும் நூலக எரிப்பிற்கு எதிராக குரல்
கொடுத்ததோடல்லாமல் “கல்வி” “வாசிப்பு” ஆகியவற்றின் முக்கியத்துவம்
குறித்தும் அழுத்திப் பேசினர். ரணில் விக்ரமசிங்க அவர்கள் “நன்கு கற்ற” ஒரு
அரசியல்வாதியாக பார்க்கப்படுவதோடு வெளிநாட்டு கொள்கைகளிலும்
தெளிவுள்ளவராகவும் நோக்கப்படுகின்றார். ராணுவத்ஹ்டினரின் தாக்குதல்
(அவர்களை நான் எந்தவகையிலும் புகழ வரவில்லை) படிப்பற்றவர்களின்
செயலாக கண்டிக்கப்படும் அதே வேளை, விக்ரமசிங்கவின் வன்முறைகள்
இவ்வாறான விமர்சனங்களை பெறாமலிருப்பதிலிருந்து இரட்டை நிலைப்பாடு
வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

வன்முறையும் கல்வியும்

கல்விக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புகளும் காணப்ப‌டாவிடினும்
முதலாளித்துவ அமைப்புகளே எம்மை வன்முறையை கீழ்த்தட்டுவர்க்க
மக்களோடும் குறைவான கல்வித்தகைமையோடு தொடர்புபடுத்தும்
வகையில் வடிவமைத்திருக்கின்றன. முறைசார் கல்வி அமைப்புகள், எமது
சூழ்நிலையின் படி, நவதாராளவாத சந்தை பொருளாதாரங்களே அதிகாரம்
மற்றும் அதிகாரப்படிநிலைகளை தக்கவைத்திருக்கின்றன. கல்வியானது ஒரு
நபரை சமூகமயப்படுத்துவதோடு அவை ஆதிக்க சமூகத்தின் நம்பிக்கைகள்,
பெறுமானங்கள் மற்றும் வழக்காறுகளை அந்நபரில் பொதிக்கச்செய்கின்றன.
கல்வியமைப்புகள் முக்கியமான இரு வழிகளில் நடைமுறை சமூக
ஒழுங்கை பேணும், மற்றும் நெறிப்படுத்தும் பணியை செய்கின்றன;
தொழிலாளார்களை வினைத்திறனுடையவர்களாக மாற்றும் நிமித்தமான
பயிற்சிகளை வழங்குதல் மற்றும் உற்பத்தி சார்ந்த சமூக உறவுகளை
இயல்பூக்கம் செய்தல். இதன்மூலம் பார்க்கும் போது கல்வியானது நடப்பு
நிலையை பேண உதவும் கருவியாகவும் அதன் வழி சமமின்மை மற்றும்
சமூகப்படித்தரங்களை பேணும் அமைப்பாகவும் காணப்படுகின்றது.

நாம் வன்முறையை “குறைவான கல்வித்தகைமையோடும்” “கீழ்மட்ட
மக்களோடும்” இணைத்து நோக்கும் தன்மை, “நன்கு கற்ற” “பணக்கார” நிலைகளை புகழ்ச்சிக்குரியதாக்கும் அரசியல்‍ பொருளாதார அமைப்புகளின்
மூலம் ஏற்படுத்தப்பட்டதாகும். இராணுவத்தினரை எந்த வகையிலும் சரிகாண
முடியாதபோதிலும், போராட்டத்தளத்தில் ஆர்ப்பாட்டகாரர்களை தாக்கிய
ராணுவத்தினரின் செயல், ‘நன்கு கற்ற” ஜனாதிபதியின் ஆணையின் பேரில்
“கீழ்மட்ட வகுப்புகளிலிருந்து” வரும் இராணுவத்தினர் தமது “கடமைகளாஇ”
செய்ததாகவே கருத வேண்டும். வன்முறையை மேற்கொள்ளும் மக்களை
வைதுகொள்ளும் சமூகம் அதனை தூண்டும், அதற்கான தீர்மானங்களை
மேற்கொள்ளும் தரப்பை கண்டுகொள்ளாமல் விடுவது முரண்நகை.


முதலாளித்துவ பெறுமானாங்களை சுமந்திருக்கும் முறைசார் கல்வியை
வழங்கும் நிறுவனங்கள், ஆளும்வர்க்க கருத்தியல்களை உருவாக்கவும்,
மீளுருப்படுத்தவுமே செயற்படுகின்றன. உண்மையில் எமது நோயுற்ற சமூக
நிலைக்கும் கல்வி அமைப்புக்கும் தொடர்பிருப்பது தவிர்க்க முடியாதது. எமது
கல்வி அமைப்பு தொழில்வாண்மை, ஆக்கத்திறன், வினைத்திறன் போன்ற
கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அதே வேளை, மனித
பெறுமானங்களை அறிந்துகொள்ளக்கூடிய வகையிலான கல்வியும் விமர்சன
சிந்தையும் தூர வீசியெறியப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில்
கல்வி அமைப்பின் மாற்றமானது தவிர்க்கமுடியாததாகி இருக்கின்றது.

கல்வி தொடர்பான எதிர்கருத்தியல்களும் மாற்று வழிமுறைகளும்

சர்வாதிகார ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவிகவிழ்க்க கல்வி முக்கிய
கருவியாக தொழிற்பட்டது. அதாவது, ‘அரகலய’வில் மேற்கொள்ளப்பட்ட
கல்வி சார்ந்த முயற்சிகளை இதன்மூலம் நான் குறிப்பிடுகின்றேன்:
ஜனநாயகம் தொடர்பான கல்வி, அரசியல் யாப்பு, போராட்ட வரலாறுகள்,
பொருளாதாரம் இன்னும் பல. ‘அரகலய’வில் தொடர்புபட்ட குழுக்களும்
ஏனைய அமைப்புகளும் கூட GGG போராட்ட தளத்தில் வைத்து,
பதாகைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது,
போராட்டத்துக்கான “சரியான” மார்க்கத்தை எவ்வாறு கண்டுகொள்வது
போன்ற விடயங்களை முன்னிறுத்தி கலந்துரையாடலகள் மற்றும் ஏனைய
நிகழ்ச்சிகளை நடாத்தின. இதன் வழியாக நூற்றுக்கணக்கான இணையவழி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு அவை இணையதளங்களில்
பதிவேற்றப்பட்டு பல இணையத்தள பதிவுகளும் எழுதப்பட்டன. GGG
போராட்டத் தளத்தில் ஒரு நூலகம், பல்கலைக்கழக கலாசாலை மற்றும்
தகவல் தொழிநுட்ப மையமொன்றும் தாபிக்கப்பட்டதோடு மக்களை
“அறிவூட்டும்” நோக்கிலான இன்னும் பல சேவைகளும் வழங்கப்பட்டன.

‘கல்வி’யென்பது போராட்டத்தை இணைத்த கயிறாக தொழிற்பட்டது.
போராட்ட தளங்களிலும் அதற்கு வெளியிலும் கூட கல்விக்கான மாற்று
வழிமுறைகளை கொண்டுவருதல் மற்றும் சமூக படிநிலைகளையும்
நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்வி அமைப்புகளையும் சவாலாக்குதல்
தொடர்பாக பல கலந்துரையாடலகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே
இருக்கின்றன. போராட்ட தளமானது மக்களுக்கு கல்வியின் மாற்று
வழிமுறைகளை பரீட்சித்துப் பார்க்கக்கூடிய தளமாகவும்
எதிர்கருத்தியல்களை உருவாக்கும் இடமாகவும் காணப்படுகின்றது.
இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் பெரும்பாலும், நேரடியாகவோ
மறைமுகமாகவோ, ஆளும் கருத்திலயல்களை பிரஸ்தாபிக்கும் கல்வி
அமைப்புகளின் கைகளில் வீழ்ந்துள்ளதோடு சமூகப்படிநிலைகளும் சிங்கள
பௌத்த மேலாதிக்கமும் தொடர்ந்தும் பேணப்பட்டே வருகின்றன.
இதைப்போலவே மாற்றுக்கல்வி வழிமுறைகள் மற்றும் எதிர்கருத்தியலகளை
பிரஸ்தாபிக்கும் செயற்பாட்டளர்கள் கூட முதலாளித்துவ
சமூகப்படிநிலைகளை பேணும் அமைப்புகளின் கைகளில் வீழ்ந்துள்ளதை நாம்
காணலாம். பெரும்பாலான இணையவழி கலந்துரையாடல்கள் கூட
மேலிருந்து கீழான அமைப்பில் நடைபெறுவதோடு ஒரே ஆதிக்க மொழியில்
மேற்கொள்ளப்படுவதானது ஏனைய மொழி பேசும் மக்களை ஓரங்கட்டும்
செயலாகும்.

மேலும், இவ்வாறான கலந்துரையாடலுக்கான தளங்கள் பெரும்பாலும்
“விற்பன்னர்களால்” நடத்தப்படுவதோடு அவை “கல்வியறிவற்ற”
மக்களுக்கான போதிக்கும் கூடங்களாகவே தொழிற்படுகின்றன. முடிவாக, முதலாளித்துவ கல்வி அமைப்புகள் ஒருவரை அவரது கல்வி
மற்றும் சமூக வகுப்புவாரியாக பாகுபடுத்தும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதுவே அன்றாடமாக மாறி
இயல்பாகியிருக்கின்றது. இதன் சிறந்த உதாரணமே, ரணில் விக்ரமசிங்க
அவர்கள் வசதியாக வன்முறை குறித்த கலந்துரையாடலிலிருந்து ஒதுக்கி
வைக்கப்பட்டிருப்பதும் கீழ்மட்ட வர்க்க ராணுவத்தினர் அதனூடாக
விமர்சிக்கப்படும் நடைமுறையாகும். இவ்வாறான படிநிலைகளை
கேள்விக்குபடுத்த மாற்றுக்கல்வி நடைமுறைகள் காலத்தின் தேவையாக
இருக்கின்றன.