மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை

ஷாமலா குமார்

அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப்
பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான
வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட
உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான
கலந்துரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்; இதனால் விளைய
இருக்கும் சீரழிவுகளையும் உணரத்தலைப்பட்டோம். இருப்பினும்
பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இது குறித்த கலந்துரையாடல்கள்
ஆரம்பிக்கப்படவில்லை.

இம்மௌனமானது, பல்கலைக்கழகங்கள் ஜனநாயக வாழ்வொழுங்கொன்ருக்கு
அத்தியாவசியமான அமைப்பாக விளங்க வேண்டிய தனது வகிபாகத்தை
பூர்த்திசெய்யவில்லையோ என்ற சந்தேகத்தை வலுக்கச்செய்தது. அதன்
வெளிப்பாடாக இந்த ஆக்கத்தில் பல்கலைக்கழகங்கள் ஏன் இவ்வாறான
முக்கியமான கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை என்பதையும், கல்விக்
கொள்கைகள் மற்றும் நவதாராளவாத அமைப்பின் தற்காலத்தைய
மாற்றங்கள் எவ்வாறு ஜனநாயக அமைப்பின் முக்கிய முகவர்களாக இருக்க
வேண்டிய பல்கலைக்கழகங்களை இவ்வாறான கலந்துரையாடல்களில்
ஈடுபடுவதில் இருந்து தடுக்கின்றன எனவும் பார்க்கலாம்.
பலரின் அனுமானத்தைப் போலல்லாது, இலங்கையின் அரச
பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழில்
வகிபாகங்களும் பொதுமக்கள் சார்ந்த கலந்துரையாடல்களில்
ஈடுபடுவதற்கான ஆதரவை வழங்கும் வகையிலேயே
வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி சீர்திருத்தங்களைப் பற்றி பேசும் பலர்,
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பதவியுயர்வு திட்டங்களும் வேலை

நெறிமுறைகளும் “தேசிய அபிவிருத்தி” சார்ந்த செயற்பாடுகளில்
ஈடுபடுவதற்கான அழுத்தங்களை வழங்குவதை அறியாதிருக்கின்றனர்.
பூகோள வடக்கிலுள்ள முதல்தர பல்கலைக்கழகமொன்றில் கற்பிக்கும்
ஆசிரியர் ஒருவரின் பணி விவரிப்பிலிருந்தும் இது வித்தியாசமானது;
அவர்களின் முதன்மை கவனம் கல்விக்கான நிதிகளை பெறுவதிலும் உயர்ரக
பேரேடுகளில் தமது ஆக்கங்களை வெளியிடுவதிலுமே இருக்கின்றது.
இலங்கையில் கூட அரச பல்கலைக்கழகங்களல்லாத ஏனைய உயர்கல்வி
பீடங்களிலும் அவர்களின் கற்றல் சார்ந்த முதன்மை கவனம் அரச
பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் வித்தியாசமானது. மேலும் இலங்கையின்
பெரும்பாலான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தம் கற்கை சார்ந்த அரச மற்றும்
சர்வதேச‌ நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்பை பேணுவதோடு அவர்கள்
கற்பிக்கும் துறைகளில் விற்பன்னர்களாக இருந்து பொதுமக்களுக்கு சேவை
செய்கின்றனர். எனவே, பொதுமக்களை பாதிக்கும் விடயங்கள் குறித்த
முக்கியமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களில்
நடக்காமலிருப்பதற்கான காரணம் கல்வியியலாளர்களின்
விருப்பமின்மையோ பல்கலைக்கழக சூழலோ அல்ல; இது அதனை தாண்டிய
விடயமாகும்.
அதிகார பீடங்களுக்கு சவால்விடுதல்
பல்கலைக்கழக ஆசிரியர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபடும் வழிகளில்
சிக்கல்கள் இருக்கின்றன. நோம் சோம்ஸ்கி மற்றும் கோர்னேல் வெஸ்ட்
கூறுவதைப்போல பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அதிகார பீடங்களோடு
ஒத்துப்போகவும் முடியும்; அல்லது அவர்களை கேள்விக்குட்படுத்தி, எதிர்த்து,
சவால்விடவும் முடியும். இலங்கையில் இது எதனைக் குறிக்கின்றதென்றால்,
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தற்போதிருக்கும் சர்வாதிகார அரசாங்கத்தையும்
ஜனநாயகத்துக்கெதிரான முறைமையையும் ஆதரித்து இருக்கவும் முடியும்;
உயர்குடி நலன்களைக் காக்கும் நவதாராளவாத சிந்தனாமுறையை
ஆதரிக்கவும் முடியும்.

அதற்கு பதிலீடாக எம்மால் உலகிலும் எமது நாட்டிலும் வாழும்
பெரும்பான்மையான மக்களான ஒடுக்கப்பட்டவர்களோடு இணைந்து
குரல்கொடுக்கவும் முடியும். முன்னைய தேர்வு எங்களுக்கு அரச
ஆதரவையும் அரசியல் ஆதரவையும் தருவதோடு பின்னைய தேர்வு பலரால்
ஆதரிக்கப்படாமலிருப்பதோடு எங்களை வலிதற்றவர்களாக மாற்றுவதோடு
பிறரால் தாக்கப்படுவதற்கு ஏதுவான சூழலையும் உருவாக்கும். இச்சூர்நிலை
பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏன் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் போன்ற
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளால் முறையாக
ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்தான கலந்துரையடல்களிலும்
செயற்பாடுகளிலும் ஈடுபடவதிலிருந்து தடுக்கின்றது என்பதை
விளங்கிக்கொள்ளலாம்.
ஆனால் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இவ்வாறான விடயங்களை
பேசுவதற்கான சரியான தளமும் சலுகையும் உள்ளது. இச்சலுகைகள்
குறிப்பாக தற்போதைய ஒடுக்குமுறையான அரசியல் சூழலில் தனிச்சிறப்பான
விடயமாகும். பொதுமக்கள் உரையாடலுக்கான, குறிப்பாக அரசாங்கத்தின் மீது
விமர்சனங்களை முன்வைக்கும் கலந்துரையாடல்களுக்கான தளங்கள்
குறுகிக்கொண்டே வருகின்றன. மிக அண்மையில் நடைபெற்ற நடாஷா
எதிரிசூரியவின் கைது, அரசியல் உயர்குடி வகுப்பினரது முட்டாள்தனங்களை
நகைச்சுவை பாணியில் பாவிக்கும் தளத்தை இல்லாமலாக்கியதோடு,
விமர்சன சிந்தையுள்ள காணொளி இயக்குனரான ப்ரூனோ தினகரவின்
கைது, தற்போதைய அரசாங்கம் மட்டுமல்லாது இதற்கு முன்னைய
அரசாங்கங்களாலும் குறிவைக்கப்பட்ட சமூக வலைத்தள
பாவனைச்சுதந்திரத்தையும் வரையறுத்திருக்கின்றது. இக்கைதுகள்,
அதிகரித்துவரும் பொதுமக்கள் ஈடுபாடு மற்றும் ஒன்றுகூடல் மீதான
அரசாங்க ஒடுக்குமுறைகளின் அடுத்தகட்ட நகர்வாகவே கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர்களான எமக்கு இவ்வாறான
அச்சுறுத்தல்களிலிருந்தான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதிப்படுத்தலாம்
என்பதால் எம்மால் இவற்றை விமர்சிக்கலாம்.

மேலும், தகல்களைப் பெற்றுக்கொள்வதில் எமக்கிருக்கும் சிறப்புரிமை
காரணமாக சிக்கலான கருத்தியல்ரீதியான ஆதரவுகளையும், அரசாங்க
செயற்பாடுகளில் ஒழிந்திருக்கும் நோக்கங்களையும், இதனால் வரும்
திரித்துரைத்தல்களையும், இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற ஏதுவாக
இருக்கும் தேசிய மற்றும் சர்வதேச வரலாற்று சூழ்நிலைகளையும்
வெளிப்படுத்த எம்மால் இயலும். அதிஷ்டவசமாக இலங்கையில் உள்ள
இலவசக்கல்வியோடு இணைந்திருக்கும் கொள்கைகளால் எமக்கான கருத்து
சுதந்திரம் இதன் மூல இயல்பிலிருந்தே வழங்கப்பட்டிருக்கின்றது.
ஏனைய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களைப் போல, பல்கலைக்கழக
ஆசிரியர்களான எமது செயற்பாடுகள் நிதியீட்டல் மற்றும் மானியங்களில்
தங்கியிருப்பதில்லை. இதன் காரணமாக நிதியீட்டம் செய்யும் முகவர்கள்
மற்றும் தனியார் மூலதனத்துக்கு “பொறுப்புக்கூறும்” கடப்பாடு எமக்கிருப்பது
குறைவாகும். இதற்கு மாறாக எமது நிதி பொதுமக்களின் உழைப்பினால்
உருவாகும் மூலதனத்தால் ஆனதாக இருக்கின்றது. எனவே, பொதுமக்கள்
மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் குறித்தான கலந்துரையாடல்கள் மற்றும்
அவர்களுக்கான ஆதரவை வழங்குதல் குறித்தான‌ எமது இசைவற்றதன்மை
மிகவும் சிக்கலானது.
கல்விக்கொள்கை சீர்திருத்தங்களால் மௌனிக்கச்செய்தல்
அறிமுகப்படுத்த இருக்கும் கல்விக்கொள்கைகள் மேலும் எங்களை
மௌனிக்கச்செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும். அண்மைய காலங்களில்
பல்கலைக்கழகங்களில் மாற்றமுரும் நிர்வாக மற்றும் ஏனைய
செயற்பாடுகளின் செல்வழியை அவதானிப்பதன் மூலம் வரப்போகும்
கல்விக்கொள்கைகளின் நிலையை அறிந்துகொள்ளலாம். இம்மாற்றங்கள்
பல்கலைக்கழகங்களையும் அதற்கு வெளியில் வாழும் அடித்தட்டு
மக்களுக்கிடையிலான உறவை பலப்படுத்துவதில் சிறிதளவேனும் கரிசன
கொள்ளவில்லை.
உதாரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
ஆய்வுச்செயற்பாடுகளை தரமதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையில்

நாட்டிலுள்ள சிக்கல்களை குறித்து பேசும் ஆய்வுகளைக் காட்டிலும் சர்வதேச
விடயங்களைப் பற்றிப்பேசும் ஆய்வுகளையே மெச்சியிருந்தது. “பேச
வேண்டிய தலைப்புகளை” நிர்ணயம் செய்யும் உயர்ரக சஞ்சிகைகளும்
உள்நாட்டு விடயங்கள் அல்லாது சர்வதேச விடயங்களை மையப்படுத்தி
எழுதப்படும் ஆய்வுகளையே ஏற்றுக்கொள்கின்றன.
மேலும், ஆய்வுகளை மேற்கொள்ள (ஏற்கனவே மிகக்குறைவாக)
வழங்கப்படும் நிதியில் ஆய்வுகளை மேற்கொள்ள உந்தப்படும்
கல்வியியலாளர்கள் அவர்களின் ஆய்வுக்கு நிதி வழங்கும் முகரவர்களின்
எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் நிலைக்கு உள்ளாகின்றனர். பொதுவாக
இம்முகவர்களின் எதிர்பார்ப்புகள் நாட்டிலுள்ள சிக்கல்களை
மையப்படுத்துவதில்லை. அவ்வாறான அமைப்புகள் மற்றும் அவர்களின்
நிலைப்பாடுகளை சவாலுக்குட்படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான
தளமும் சுருங்கிக்கொண்டே இருக்கின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள
பல்கலைக்கழக கற்றலைப் பார்க்கும் போது, ஏற்கனவே
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கற்கைநெறிகளிலும் புதிதாக
அறிமுகப்படுத்தப்படும் கற்கைநெறிகளிலும் தொழிநுட்ப திறன்களுக்கே அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப திறன்களுக்கு
வழங்கப்பட்டுள்ள இவ்வதீத முக்கியத்துவத்தால் நாட்டிலுள்ள
சிக்கல்களுக்கான வேர்கள் படர்ந்துள்ள காலம், சூழ்நிலை மற்றும்
கருத்தியல்கள் குறித்தான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதில்
சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக, விவசாயபீட மாணவர்கள் இறக்குமதி செய்யப்படும் இரசாயன
கிருமிநாசினிகளுக்கு பகரமான “தீர்வுகளை” பற்றி சிந்திக்கத்
தூண்டப்பட்டாலும், இலங்கை வரலாற்றுரீதியாக இரசாயன
கிருமிநாசினிகளை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான
காரணங்களை பற்றி கற்பதற்கு அவர்கள் தூண்டப்படுவதில்லை. இவ்வாறான
கற்றல் முறைமைகள் மற்றும் கல்வித்திட்டங்கள் மாணவர்களை அரசாங்க

கொள்கைகளுக்கேற்ப தொழிநுட்ப தீர்வுகளை வழங்க ஏதுவாக சிந்திக்க
வழிசமைத்தாலும் இது தொடர்பான சிக்கல்கள் குறித்தான கருத்தியல்களைப்
பற்றி விளங்கிக்கொள்ள தூண்டுவதில்லை.

இவ்வாறான செல்நெறிகள் இலங்கைக்கு மட்டும் பொருத்தமானதல்ல.
உலகளவில் “தரம்வாய்ந்த’ கல்வித்திட்டங்கள் என்ற பேரில் தேசிய மற்றும்
சர்வதேச சான்றுப்படுத்தும் நிறுவனங்கள் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன.
தரநியமங்கள் மக்களை கல்வியிநின்றும் தூரமாக்கும் பணியை செய்கின்றன.
எவ்வாறெனில், இவ்வாறான தரநியமங்கள் சர்வதேச இலக்குறிகளை
அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு நிகழ்காலத்துக்கு பொருத்தமானதாக
இருக்கத்தவறிவிடுகின்றன. இதே நிலை பெருந்தொற்று காலத்தில்
பிரதிபலித்தது, உலகமே வித்தியாசமான செல்நெறிக்குள்
பயணித்துக்கொண்டிருக்கையில் நாங்கள் தரநியமங்கள் அடிப்படையில்
கற்றல் கற்பித்தலை மேற்கொண்டிருந்தோம். உயர்கல்விக்கு வழங்கப்பட்டும்
நிதிகளின் இறக்கம் பெரும்பாலான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை
தட்டிப்பறிப்பதோடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிதியை பெறக்கூடிய
மாணவர்களுக்கு மட்டும் கல்வியை வரையறுக்கும் நிலை உருவாகக்கூடும்.
இந்நிலை, பொருளாதார நெருக்கடி என்ற பேரில் நியாயப்படுத்தப்படவும்
கூடும்.
நெருக்கடி என்பது, சர்வதேச மூலதனம் மற்றும் பலமிழந்து செல்லும்
அரசாங்கங்களால் வழிநடத்தப்படும் அமைப்புகளில் ஒரு பகுதியே அன்றி
விதிவிலக்கல்ல. இவ்வாறான நெருக்கடி சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும்
உடனடி எதிர்வினைகள், இந்நெருக்கடிகளைப் பற்றி ஆழமாக பகுப்பாய்வு
செய்வதையோ, நெருக்கடியை “கோட்பாட்டாக்கம்” செய்யும்
செயற்பாடுகளையும் தேவையற்றதாகவும் இன்னும் சொல்லப்போனால்
ஆபத்தான செயலாகவும் சித்தரிக்கின்றன. இச்செயற்பாடுகள் நெருக்கடி
சூழலை மேலும் சிக்கலானதாக மாற்றுவதாகவும் சித்தரிக்கின்றன.
உதாரணமாக, சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின்
பேரம்பேசுதல் குறித்த விமர்சனங்கள் வீணான செயலென நிராகரிக்கப்பட்டன.

மேலும், நெருக்கடிக்கான காரணங்கள் மிகக்குறுகிய வட்டத்துக்குள்
சட்டகப்படுத்தப்பட்டதோடு இச்செயற்பாட்டில் கருத்தியல் புரிதல்களுக்கு
எந்தப்பெறுமானமும் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் இருக்கும்
எங்களின் இடையீடு இவ்வாறு குறுகியதாக இருக்கக்கூடாது. ஏனெனில்.
இந்நிலை ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மௌனிக்கப்பட்டவர்களின் நிலையை
முழுதாக நிராகரிக்கும் செயலாக மாறக்கூடும்.
இவ்வாறான சூழ்நிலையில், குறிப்பாக தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களாஇப்
பொருத்த வரையில், பல்கலைக்கழகங்களில் இருக்கும் பேசுதளங்கள்
ஒடுக்கப்பட்ட மற்றும் மௌனிக்கப்பட்டவர்களின் குரலோடு இணையும்?
எம்மை மேலும் இச்சூழலிலிருந்து புறந்தள்ளும் கல்வி சார்ந்த கொள்கை
சீர்திருத்தங்களையும் தேசிய மற்றும் சர்வதேச செல்நெறிகளை
சவாலுக்குட்படுத்துவதிலிருந்து எங்களை தூரமாக்கி அவற்றுக்கு இயைபாக
மாற்றும் அமைப்புகளையும் நாம் எவ்வாறு எதிர்க்கப்போகின்றோம்? இதற்கு
முதல்படியாக எமது இயலுமைகளை விரிவுபடுத்தும் ஜனநாயக
அமைப்புகளைப் பற்றிய பூரணமான புரிதலுக்கு வரவேண்டும்.
பொதுமக்களுக்கான தளமாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ‘திறந்த நாள்” நிகழ்வு
இதற்கான ஒரு படியாகும். பல்கலைக்கழகங்கள் “திறந்த நாட்களில்”
மட்டுமன்றி பொதுவாகவே பொதுமக்களுக்கான திறந்த தளமாக இருக்க
வேண்டும். மேலும் பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாக மற்றும் ஏனைய
காரணங்களால் அரசாங்கத்தை விமர்சிக்கும் தளங்கள் குறுகிச்செல்லும்
நிலைகள் சுட்டிக்காட்டும் இயலுமை பல்கலைகளுக்கு உள்ளும் வெளியிலும்
உருவாக வேண்டும். இத்தளங்களில் எமது கலந்துரையாடல்கள் தற்காலத்தில்
நாட்டில் அதிகம் பேசப்படும் கடன் சீரமைப்பு குறித்து ஆரம்பிக்கப்படலாம்.
அதாவது, நாட்டில் காணப்படும் பிணை ஊழல்களை, கடன் சீரமைப்பில் பங்கு
வகிக்கவேண்டிய செல்வ வரி போன்ற விடயங்களை கவனமாக தவிர்த்து
பேசப்படும் கடன் சீரமைப்புகளை தாண்டி சமூகநீதி அடிப்படையில் இதற்கு
எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை குறித்து கலந்துரையாடலாம்.