மாணவர்களைக் கொடியவர்களாக்கும் இலங்கை: கல்வித் தனியார்மயமாக்கத்திற்கானதோர் முயற்சி

அனுஷ்கா கஹந்தகமகே

தசாப்தங்கள் கணக்கான ஊழல் மற்றும் தூர நோக்கற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கை இன்று பெரும் கடன் பிரச்சினையில் சிக்குண்டுள்ளது. இவ்வக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்புவதற்காக சர்வதேச நாணய நிதியம் உட்படக் கடன் தர முன்வரும் எந்தவொரு அமைப்பின் எவ்வித நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள எமது அரசாங்கம் தயாராகவுள்ளது. அந்த வகையில் அரசாங்கமானது, மக்களின் சீற்றத்தை எதிர்நோக்க நேரிடும் என அறிந்தும் நாணய நிதியத்தின் தூண்டுதலில் கல்வியைத் தனியார்மயப்படுத்த எத்தனிக்கின்றது. இதனைத் தொடர்ந்து போராட்டங்கள் எழுவது அசாதாரணமானதல்ல. அவற்றை முடக்குவதற்கு ஒரு யுத்தியாக அரச கல்விசார் மாணவர்கள் கொடியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

“போதைக்கடிமைப்பட்டவர்களாகப்” பள்ளி மாணவர்கள்

அண்மையில் தற்போதைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஊடக ஜாம்பவானொன்று பாடசாலை மாணவர் மத்தியில் போதை வஸ்துப் பாவனை பற்றிச் செய்தி வெளியிட்டிருந்தது. பாடசாலைகளையும் சமூகங்களையும் உலுக்கிய இச் செய்தியைத் தொடர்ந்து வந்த அறிக்கைகளும், கட்டுரைகளும், சமூக வலைத்தளக் கதைகளும் ஏராளம். தீமை விளைவிக்கும் போதை வஸ்துக்களுக்குத் தாம் அடிமை எனக் கூறும் இரு பள்ளி மாணவிகளின் நேர்காணல் காணொளியொன்றையும் அவ்வூடகம் வெளியிட்டிருந்தது. இவற்றுக்கு மத்தியில் பொலிஸாரால் பாடசாலை மாணவர்கள் மீது திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போதை வஸ்துக்கள் நாட்டை எவ்வாறு வந்தடைகின்றன என்பதை ஆராய்வதை விடுத்து, இவ்வாறு திடீர் சோதனைகளை மேற்கொண்டு மாணவர்களின் பாடசாலைப் பைகளுள் எட்டிப் பார்க்கின்றனர் பொலிஸார். இச் செயல்கள் மாணவர்களை அவமதிப்பதோடு அவர்களை அச்சத்துக்குட்படுத்துகின்றன. சுமார் ஒரு கிழமையின் பின் பொலிஸார் சோதனைகள் மேற்கொண்டதோ, மோப்ப நாய்களைப் பயன்படுத்தியதோ பற்றித் தனக்குத் தெரியாது எனக் கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.  இவ்வாறான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். பாடசாலைகள் மீது பொலிஸ் சோதனைகள் நடாத்தியதையே அறிந்திராத அரசு, நாட்டிற்குள் போதை வஸ்துக்கள் வருவது தொடர்பாகப் பாராமுகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆபத்தான போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகும் அச்சுறுத்தல் இருப்பினும் இதற்கான பழியை முற்றிலும் மாணவர்கள் மீது மட்டுமே சுமத்த முடியாது. நாட்டின் தற்போதைய இந் நிலைக்குப் பொறுப்புக்கூறாது, போதைப் பொருட்கள் உள்வருவதைத் தடுக்காது, மாணவர்கள் மேல் சுமையைத் திணித்து அவர்களைப் “போதை வஸ்து அடிமைகள்” எனப் பட்டம் கட்டுகிறது அரசு.

“மது போதையில்” பிக்கு மாணவர்கள்

எனது அடுத்த உதாரணம் ஹோமாகமவின் பெளத்த மற்றும் பாளிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தது. முதலில் குறிப்பிட்ட அதே ஊடகம் இப் பல்கலைக்கழகத்தில் சில அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவித்திருந்தது. அங்கு பயிலும் பிக்கு மாணவர்கள் புதிதாகப் பல்கலைக்கழகத்துக்கு வரும் பிக்கு மாணவர்களை கஞ்சா, மது ஆகியவற்றைப் பயன்படுத்தவும் களியாட்டங்களில் ஈடுபடவும் கட்டாயப்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பாழடந்த கிணறொன்றினுள் மதுபானப் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அதிகாரிகள் பிக்கு மாணவத் தலைவர்களை விசாரிக்கும் பல செய்தியாளர் சந்திப்புக்களை நாம் கண்டிருந்தோம். ஒரு மாணவன் மீது இன்னொரு மாணவனால் முன்னடுக்கப்படும் வன்முறையைப் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் கூடாது. இருப்பினும் குறிப்பாக இத்தகைய நேரத்தில், இவ்வாறானதொரு சம்பவத்தினை அரசாங்கம் தூக்கிப்பிடிப்பது விசித்திரமாகவுள்ளது. மாணவப் பிக்குகள் ஒழுக்கமற்றவர்களெனவும், கல்வியைப் பெறத் தகுதியற்றவர்களெனவும் ஒரு பாரிய சமூக வலைத்தளப் பிரசாரமும் முன்னெடுக்கபப்ட்டது. இப் பல்கலைக்கழகத்தின் பிக்கு மாணவர்கள் அரகலய போராட்டத்தில் பாரியளவு ஈடுபட்டிருந்தமை தற்செயலான ஒரு விடயமாக இருக்க முடியாது. ஆகவே அரசானது மதுபோதைக்கு அடிமையானவர்களாகவும், அடக்குமுறையைக் கையாளுபவர்களாகவும் முத்திரை குத்தி, அம்மாணவர்களையும், பல்கலைக்கழகத்தையும் அவதூறு செய்ய முனைந்தமை தெளிவாகின்றது.

ராஜபக்ஷ அரசாங்கமானது தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பாகுபாட்டைத் தூண்டவும், தேர்தல்களில் வெற்றியீட்டவும் பெளத்த பிக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளது. அரசாங்கங்கள் அவற்றின் தேசியவாதக் குறிக்கோள்களை அடைய பிக்குகளைப் பலமுறை ஏவியுள்ளன. அவர்களது தேசியவாதச் செயற்பாடுகளுக்கோ, வன்முறையை உண்டாக்கவோ பிக்குகள் பயன்படுத்தப்பட்ட போது அவர்களது “ஒழுக்கத்தைக்” கேள்விகேட்பாரில்லை. உயர் பெளத்த அதிகாரிகளும் பொது பல சேனா, ராவண பலய போன்ற குழுக்களுக்கெதிராகவோ அவற்றின் வன்முறைக்கெதிராகவோ எவ்வித நடவடிக்கயையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே அரசாங்கத்துக்கெதிரான போராட்டத்தில் மக்களுடன் பிக்குகள் கைகோர்த்திருக்கும் இவ்வேளையில் அவர்களது ஒழுக்கத்தையும் நடத்தையையும் பற்றி அரசு கரிசனை காட்டுவது வேடிக்கையாகவுள்ளது.

“பயங்கரவாதிகளாகப்” பல்கலைக்கழக மாணவர்கள்

இவ்விறுதி உதாரணம் முக்கியமாகக் கருதப்பட வேண்டியது. 2022 ஆகஸ்ட் 18 ஆம் திகதி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரோடு ஹஷான் ஜீவந்த மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்குகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்வேவ சிரிதம்ம தேரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அரசிலயலில் துடிப்புடன் பங்கேற்ற இம்மாணவர்களை எமது அரசாங்கம் “பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தியது. மேற்கண்ட சம்பவமும் தற்செயலானதல்ல. ராஜபக்ஷ ஆட்சிக்கெதிரான அரகலய போரட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்குகள் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகித்தமை நாம் அறிந்ததே. அடக்குமுறையான, ஊழல் நிறைந்த ஆட்சிக்கெதிரான மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்தவை இம் மாணவர் ஒன்றியங்களே. ஆகவே மாணவத் தலைவர்களைப் “பயங்கரவாதிகள்” என்ற பெயரில் ரணில்-ராஜபக்ஷ அரசாங்கம் கைது செய்யத் தொடங்கியது.

அரசானது இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களைப் “பயங்கரவாதிகள்’ என்பது மூடத்தனமானது. தனது இளைஞர்களையே பயங்கரவாதிகள் என அரசு கூறும் போது, அவர்களை இவ்வாறான நடவடிக்கைகளின் பால் தள்ளிய அதன் செயல்கள் எவ்வாறானதாக இருக்க வேண்டும் எனச் சற்று சிந்திக்க வேண்டுமல்லவா?

கல்வியைத் தனியார்மயமாக்கல்

அரசாங்கமும் அதனை ஆதரிக்கும் ஊடகங்களும் மாணவர்களைக் கொடியவர்களாக, அதாவது, மது மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமைகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. இவை நாட்டின் மாணவர்களைக் குலைப்பதோடு அவதூறும் செய்கின்றன. இதன் மூலம் மாணவர்களைச் சமூகத்திலிருந்து அந்நியமாக்கி, அவர்கள் மீதான மக்கள் நம்பிக்கையை உடைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இங்கு மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும், பயங்கரவாதிகளும் அரச பாடசாலைகளிலும், அரச பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றமையாகும். இவ்வாறான கொடிய மாணவர்களை எவ்வித தனியார் கல்வி நிறுவனத்திலும் காணமுடியாதுள்ளது! அதாவது அரச கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நெறிகெட்டவர்கள், கீழ்ப்படியாதவர்கள் என்பதை ஊடகங்கள் பரப்புகின்றன. இதன் மத்தில் ராஜபக்ஷ கூட்டாளிகளின் கைப்பாவை ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தற்போதைய கடன் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என அவர் கருதும் பொருளாதார முறையொன்றை முன்மொழிகின்றார். இம்முன்மொழிவில் காலப்போக்கில் இலங்கையின் உயர்கல்வியைத் தனியார்மயப்படுத்தும் கல்வி மையத்தைத் தாபிப்பது உள்ளடக்கப்பட்டிருந்தது.

கல்வியைத் தனியார்மயமாக்குவது அரசாங்கத்தின் புதியதோர் திட்டமல்ல. எனினும் இப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ரணில்-ராஜபக்ஷ அரசாங்கத்தால் இத்திட்டம் மீளெழுப்பப்பட்டுள்ளது. அரச கல்விசார் மாணவர்களைக் கொடியவர்களாக சித்தரிப்பதற்கு முன்னரே, ஜூன் மாதம் 2022 இல் தேசிய கல்வி ஆணைக்குழுவானது ஒரு கல்விக் கொள்கைக் கட்டமைப்பை முன்வைத்தது. ராஜபக்ஷ கருத்தியல்களுக்குப் பக்கச் சார்பான தேசிய கல்வி ஆணைக்குழுவின் இக் கொள்கையானது உயர் கல்வியின் தனியார்மயமாக்கத்தை விஸ்தரிக்க முன்மொழிந்தது. அதன் அறிக்கையில் இலங்கை, ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை விடக் குறைந்த அளவு நிதியையே உயர் கல்விக்கு ஒதுக்குகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்து வரும் பகுதியில் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை விட நாம் உயர்கல்விக்காக அதிகம் அரசாங்க நிதியில் தங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை முன்பின் முரணாகவிருப்பதுடன் இலங்கையின் உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பெரிதும் பற்றாக்குறையாக இருப்பதையும் பிரதிபலிக்கின்றன. அடுத்து எமது குறைபாடுள்ள பாடசாலை முறையானது எவ்வாறு தர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தெரியாத, திறனற்ற மாணவர்களை உருவாக்கின்றது என்பது ஆராயப்பட்டது. இறுதியாக உயர் கல்வியில் நிதி திரட்டல் மற்றும் சந்தைக்கேற்ற பாடத்திட்டத்தினூடாக “வேலைக்கமர்த்தக் கூடிய” மாணவர்களை உருவாக்குதல் மூலம் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இங்கு ஒரு புறம் கல்வியின் தனியார்மயமாக்கத்தை ஊக்குவிப்பதோடு மறுபுறம் அரச கல்வி சார் மாணவர்கள் கொடியவர்களாக்கப்படுகின்றனர். அரசாங்கமானது தூரநோக்கற்ற கொள்கைகள், சட்ட அமுல்படுத்தல், ஊழல் என்பவற்றுக்கு மத்தியில் அதன் வழுக்களைக் காணத் தவறுகின்றது. இதற்குப் பதிலாக அது மாணவர்கள் மீது களங்கம் சுமத்திக் கல்வியைத் தனியார்மயமாக்கும் அதன் முயற்சியினின்றும் அவர்களின் கவனத்தைத் திசை திருப்ப எத்தனிக்கின்றது.