மாணவ ஒன்றியங்களில் மேலாதிக்கமும் அடக்குமுறையும்

நிகொலா பெரேரா

அண்மையில் காலி முகத்திடலில் தேசத்தின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைத்துவங்களின் கீழ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் குடிமக்களோ இவற்றிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். ஒரு வருடத்திற்கு முன் இதே இடத்தில் மக்களின் ஆவேசம், ஒற்றுமை, பலம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்த வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் வெகுதூரமாகவிருந்தது அந் நிகழ்வு. பரந்துபட்ட மக்கள் துன்பத்தை உண்டாக்கிய முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்போது ஒன்றுதிரண்டிருந்தனர். பல்வகைப்பட்ட இன, மத, சமூக, பால் மற்றும் பால் நிலை சார் மக்களும் தோளுக்குத் தோள் நின்று போராடினர். இம் மக்கள் போராட்டம்-அரகலய இயக்கத்தின் அச்சாணியாகவிருந்தது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகும். மாதக்கணக்கான நாடளாவிய தொடர் பிரசாரங்கள், தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல்கள், மக்களை வீதிகளில் இறங்கச் செய்தல் ஆகியவற்றில் அதன் பாரிய வலைப்பின்னல் ஓர் உந்துசக்தியாகவிருந்தது. போராட்டங்களுக்கெதிரான அரசின் வன்முறையை முன்னணியில் நின்று எதிர்த்தோர் இம் மாணவப் போராட்டக்காரர்களே. அவர்களது உடல்களே கண்ணீர்ப் புகையையும், தடியடிகளையும் எதிர்கொண்டு போராட்டத்தை முன் நகர்த்தின. இம் மாணவர்கள் மீது அரசு கொண்டிருக்கும் வெறுப்பும் அச்சமும் மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே தான் தடுப்புக் காவலில் இருந்த சம்பவத்தை மீட்டியதில் பிரதிபலிக்கப்பட்டது. அச் சமயத்தில் பொலீஸ் அதிகாரி ஒருவர் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த மேசையில் துப்பாக்கி ஒன்றை வைத்து, “விஜேவீரவிற்கு நடந்தது உனக்கு நியாபகமா?” எனத் தன்னிடம் வினவியதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரச பிரசாரங்களும், நுட்பமற்ற கருத்தியல்களும், நவ தாராளவாத நோக்குகளும், மாணவர் ஒன்றியங்களை ஒரு தீர்வாகவன்றி சமூகப் பிரச்சினையாகவே சித்தரிக்கின்றன.  அரசியல் ரீதியில் ஈடுபாடு கொண்ட சகல மாணவர் ஒன்றியங்களையும் பொதுவாகச் சுட்டுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரே பயன்படுத்தப்படுகின்றது. இச் சித்தரிப்பை ஆதரிப்பவர்களும், அரசின் பேச்சாளர்களும் இம் மன்றம் மீது சுமத்தும் பழிகளில் சில ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், மற்றயவை நியாயமற்றவையாக உள்ளன. மாணவர்களை ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு பகிடிவதையைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பது நியாயமானதே. எனினும் முன்னாள் அமைச்சர் ஒருவர் பல்கலைக்கழகங்களை “கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராத இடங்கள்” என இரணுவப் பேச்சுவழக்கில் சுட்டியமையும், மறைமுகமாக அதன் வன்முறையான முடக்கத்தைக் கோரியமையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  அரசாங்கமானது பல்கலைக்கழக மாணவர்களை அஞ்சுவதாக இக் கட்டுரைத் தொடரில் அனுஷ்கா கஹந்தகம முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஏனைய நாடுகளைப் போல, இங்கும் அறிவுசார் விழிப்புணர்வும், சமூக நீதிக்கான வாஞ்சையும் ஒருங்கிணையும், மாற்றத்திற்கான அரசியலின் பிறப்பிடமாகப் பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன.

சமூக நீதிக்கான தேடலின் கூறாக, மாணவ ஒன்றியங்கள் இன்றும் இலவசக் கல்விக்கான போராட்டத்தினைத் தொடர்கின்றன. 2012 காலப்பகுதியில், பல்கலைக்கழக அசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6% ஐக் கோரிப் பிரசாரம் செய்தது. எனினும் அன்றோடு ஒப்பிடுகையில் இச் சம்மேளனத்தின் குறிக்கோள்களில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரங்களும், தமது பிள்ளைகளைப் பெயர் படைத்த பாடசாலைகளில் சேர்ப்பதும், இலவசக் கல்வியை இடம்பெயர்த்துள்ளன. இக் கல்வியமைப்பில் நல்ல வருமானங்கள் கொண்ட தொழில்களை வளர்த்துக்கொண்ட எமது ஆசிரியகள் மத்தியில் தற்போது ஒரு கருத்து பிரபலமாகி வருகின்றது. இலங்கையின் உயர்கல்வி விருத்திக்கான அடுத்த படி, மேலும் தனியார் பல்கலைக்கழகங்களைத் தாபிப்பது என்பதே அக்கருத்தாகும். இவற்றுக்கு மத்தியில் பெரும்பாலான மாணவர்களுக்கு இலவசக் கல்வியானது இன்றியமையாதது என்பதை இனங்கண்டு அதற்கான இலக்கைத் தவறவிடாதிருப்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட அனைத்து மாணவ ஒன்றியங்களும் பாராட்டப்பட வேண்டியவை. இவ்வொன்றியங்கள் பாதுகாப்பதும் பிரதிநிதித்துவப்படுத்துவதும் மாணவர்கள் உரிமைகளையே. இம் மாணவர்கள் வளர்ந்துவரும் தனியார் உயர் கல்வி நிறுவனச் சந்தையின் செல்வம் படைத்த கொள்வனவாளர்கள் அல்லர். மாறாக இவர்கள் தம்மையும், தமது குடும்பங்களையும் வறுமையிலிருந்து மீட்கக் கல்வி மீது தங்கியிருப்பவர்களாவர்.

அனைத்து மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் ஒன்றியங்கள் மீது பல அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பினும், சில நியாயமான விமர்சனங்கள் அவற்றின் நம்பகத்தன்மையைப் பாதிக்கின்றன. உதாரணமாகப் பகிடிவதையின் பெயரில் இடம்பெறும் வன்முறையையும், அவர்களது உள்ளக அரசியலின் மாற்றத்தை விரும்பாத தன்மையையும் குறிப்பிடலாம். இவ்வாறான குறைபாடுகள் மாணவர் ஒன்றியங்களின் நிலையைப் பலவீனப்படுத்துவதுடன், அதனை அடக்க எத்தனிக்கும் விமர்சகர்களுக்கும், அரசாங்கத்துக்கும் சாதகமாக அமைந்துவிடுகின்றன. இவ்வாறு ஒன்றியங்கள் தமது நம்பகத்தன்மையை இழப்பது, அரசாங்கத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. மாணவப் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளையும், அரச கொள்கைகள் பற்றிய விமர்சனங்களையும் செல்லுபடியற்றதாக்க அரசானது இத்தகைய வெளிப்படையான குறைகளைப் பயன்படுத்துகின்றது.

பகிடிவதையை அங்கீகரித்து, அதில் ஈடுபடும் மாணவர் ஒன்றியங்கள், கல்வியின் ஜனநாயகத்தன்மையைப் பேணும் இயக்கத்தோடு எவ்வாறு ஒத்துப்போவர்? தனிப்பட்ட மாணவ ஒன்றியங்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனோ, வேறு அரசியல் அமைப்புகளுடனோ இணைந்திருக்கக் கூடும். எவ்வாறாயினும், மாணவர் அரசியலைப் பொறுத்த வரையில் அவர்களது அணுகுமுறையானது, அவர்கள் வீதிகளில் எதிர்க்கும் அதே மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. மாணவச் சமூகம் மீதான இம் மேலாதிக்கத்தில் வன்முறையானது சில சமயம் மறைந்தும், பெரும்பாலும் வெளிப்படையாகவும் நிலவுகின்றது. கூறப்போனால் கடந்த சில மாதங்களில் கூட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் இதனைக் காணக்கூடியதாகவிருந்தது. அச் சம்பவத்தில் “பகிடிவதைக்கு எதிரானவர்கள்” என இனங்காணப்பட்ட மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முகமாக ஏனைய மாணவர்களால் தாக்கப்பட்டனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒருவரின் கார், மாணவர்கள் சிலரின் வாகனங்களைச் சேதப்படுத்தியது எனக் கூறி அவரையும் அவரது மகனையும் மாணவர் கூட்டமொன்று தாக்கிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கீழ்த்தனமான செயற்பாடுகள், மேற்கூறிய சம்பவங்கள் வாயிலாகவோ, மாணவரொருவர் பகிடிவதையால் மரணிக்கும் போதோ பொதுமக்கள் கவனத்திற்கு வருகின்றன. அதோடு இவை வாய்மொழி, உடலியல் மற்றும் பாலியல் துன்புறுத்தலூடாகப் புதிய மாணவர்களைப் பல்கலைக்கழகக் கலாசாரத்தினுள் உள்வாங்கும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இக் கலாசாரமானது ஆணாதிக்கமான, ஓரினச்சேர்க்கையை வெறுக்கும், சிங்கள-பெளத்த மேலாதிக்கத்தை மீளத் தாபிப்பதோடு, மாணவர் மத்தியில் வலுவானதோர் அதிகாரப் படிநிலையையும் உருவாக்கி மாணவச் சிறுபான்மைகளை மீண்டும் ஓரங்கட்டுகின்றது.

அடக்கப்பட்ட மாணவர்களை இலவசக் கல்வி உட்பட போராட்டங்களில் வற்புறுத்தி ஈடுபடுத்தும் அரசியல் சார் நோக்கைப் பகிடிவதையானது நிறைவேற்றுகின்றது. வற்புத்தலை மையமாகக் கொண்ட மாணவர் அரசியலில், அவர்களைத் தமது சுய தேவைக்காகவோ, நாட்டிற்காகவோ செயற்பட ஊக்குவிப்பது இயலாத காரியமாகும். இதன் காரணத்தால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழக வளாகங்களுக்குள்ளான அவர்களது நடைமுறையின் முரண்பாடுகளை எதிர்கொள்வது அவசியம். தனிப்பட்ட மற்றும் ஒன்றுசேர்ந்த புரிந்துணர்வால் பல்கலைக்கழகத்திலும், சமூகத்திலும் நிலவும் அடக்குமுறையையும் அநீதிகளையும் தட்டிக் கேட்க முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். அப் புரிந்துணர்வை அடைவதற்கான ஆற்றலும் அவர்களிடமுண்டு. இருப்பினும் உண்மையில் இவ்வாறானதோர் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தை எவ்வளவு கடுமையாகவும், இரக்கமின்றியும் விமர்சிக்கிறார்களோ, அவ்வாறே தம்மையும் இவ்வொன்றியங்கள் விமர்சித்தல் இன்றியமையாததாகும்.