மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?

மதுரங்க கலுகம்பிடிய‌

பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத்
அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான
கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில்
பட்டம்பெற்று வெளியேறியோர்) நாட்டில் வேலைவாய்ப்பு காணப்படவில்லை
என்ற கருத்தை COPE (அரச தொழில்துறைகளின் செயற்குழு) அமர்வில் அவர்
மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கலைப்பட்டதாரிகளுக்கிடையில் நிலவும் வேலையில்லாப்பிரச்சினையே
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனக்களுக்கு
காரணம் என்ற கருத்தையும் இவர் முன்வைத்திருக்கின்றார்.

சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால், இக்கருத்தை வெளியிட்டிருக்கும்
UGCயின் தற்போதைய தலைவரான இவரும் மானிட மற்றும் சமூகவியல்
துறையை சேர்ந்தவர் என்பதோடு இக்கருத்தானது, மானிட மற்றும்
சமூகவியல் துறைகள் மற்றும் அது சார்ந்த பீடங்கள் மீதான
பொதுப்படையான மனப்பான்மையை படம்பிடித்துக்காட்டுகின்றது.
இத்துறைகளும் பீடங்களும் நாட்டின் ஊழியப்படைக்கு தேவையான
நேர்மறையான, வினைத்திறனான பங்களிப்பை வழங்கக்கூடிய
பட்டதாரிகளை உருவாக்கத் தவறியிருப்பதாக விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகின்றன.


UGC தலைவரின் அண்மைய கருத்தானது, பல்கலைக்கழகங்களின்
முதன்மையான பணி நாட்டின் காணப்படும் தொழில்வாய்ப்புகளுக்கேற்ப
தகவமைக்கப்பட்ட பட்டதாரிகளை உருவாக்குவதே என்ற கருதுகோளை
முன்வைப்பதாக இருக்கின்றது. இதுவே பலரதும் கருத்தாக இருக்கின்றது. அதாவது, வெளியில் தொழில்வாய்ப்புகள் அதிகமிருக்க பல்கலைக்கழகங்கள்
அதற்கேற்ப பட்டதாரிகளை பயிற்றுவிப்பதில்லை என்பதே பொதுவான
கருத்தாக நிலவுகின்றது. இக்கருதுகோளின் சிக்கல்தன்மை முதன்மையாத
அனைத்து பல்கலைக்கழகங்களையும் குறிப்பாக மானிட மற்றும் சமூகவியல்
துறைகளையும் இக்கருத்து குறிப்பதாகும். இலங்கையில் மட்டுமன்றி
உலகளாவிய ரீதியிலும் தற்கால பல்கலைக்கழக அமைப்பில் காணப்படும்
மானிட மற்றும் சமூகவியல் துறைகளில் சிக்கல்கள் காணப்படுவதாக நம்மில்
சிலர் கருத்து தெரிவித்தாலும், அச்சிக்கல்கள் UGC தலைவர் சிக்கலாகக்
கருதும் விடடயங்களிலிருந்து வித்தியாசமானவை. (பார்க்க: மானிட மற்றும்
சமூக விஞ்ஞானக்கள் சிக்கலானவையா? ஜூன் 6, 2023. இதே விடயத்தை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

தலைவரின் கருத்தின் பின்னாலுள்ள அனுமானத்தை கொஞ்சம் சிந்தித்துப்
பார்க்கலாம். மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தேவை என்பதில் ஐயமில்லை.
வேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதோடு
அரசாங்கமான‌து, ஒரு முக்கிய பங்காளராக, நாட்டில் ஊழியப்படைக்குள்
ஒவ்வொரு வருடமும் நுழையும் பட்டதாரிக‌ளுக்கு போதுமான
வேலைவாய்ப்புகளையும் அதற்கான வழிகளையும் உருவாக்குவது அதன்
பொறுப்பாகும். அரசின் முக்கிய பங்காளர்களாக இருக்கும்
பல்கலைக்கழகங்களின் பொறுப்பு, அவர்கள் பயிற்றுவிக்கும் பட்டதாரிகள்
தாம் நுழையும் துறைகளில் சமூக மேம்பாட்டுக்குரிய வழிவகைகளை
மேற்கொள்ளக்கூடியவர்களாக உருவாக்க வேண்டும் என்பதாகும். பல
சந்தர்ப்பங்களில் எம்மில் பல பேர் விவாதிக்கும் விடயம்,
பல்கலைக்கழகங்கள் முன்னதாகவே வரையறுக்கப்பட்டிருக்கும்
தொழில்வாய்ப்புகளுக்கேற்ற பட்டதாரிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்
அல்ல என்பதாகும். பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சி வழங்கப்படும்
விடயங்களுக்கும் அவர்கள் தொழில்துறைகளில் நுழைந்து வெளிப்படுத்தும்
திறன்களுக்கும் இடையே நேரடி தொடர்புகள் காணப்படும் பல தொழில்சார்
கற்கைநெறிகள் காணப்படுகின்றன; இருப்பினும் பல்கலைக்கழகங்கள்
வெறுமனே ஏற்கனவே வரையறுக்கப்பட்ட தொழில்துறைகளுக்குரிய
தொழிலாளர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக இல்லாமல் வரலாற்றுரீதியாக இவை பரந்தளவிலான வகையில் உயர்கல்வி
வழங்கக்கூடிய நன்மைகளை செயலூக்கம் செய்யும் அமைப்புகளாக இருக்க
வேண்டுமென்ற கருத்தை உணரத்தவறும் நிலையையே இது
சுட்டிக்காட்டுகின்றது.


சீர்மையான அமைப்பொன்றில் பல்கலைக்கழகங்களின் பணி தூரநோக்கோடு
சிந்திக்கும் மாணவர்களை உருவாக்குவதாகும். பல்கலைக்கழகங்களில்
எத்துறைகளில் இவர்கள் காணப்பட்டாலும் தனித்தன்மையாக சிந்தித்தல்
என்பதே அவர்களை சிறப்பானவர்களாக மாற்றும். செய்வதர்கு
தொழில்வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தனித்தன்மையாக சிந்திப்பது
எவ்வளவு தூரம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என ஒருவர் கேட்கலாம்.
இவ்வாதமானது அரசாங்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமைக்கான
காரணம் பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் அரச கட்டுப்பாட்டில்
இருப்பதில்லை என்ற வாதத்தை பார்க்கிலும் எவ்வித வித்தியாசமும்
அற்றதாக இருக்கின்றது. அதேபோல, பல்கலைக்கழகங்களில் இருந்து
வெளியாகும் பட்டதாரிகளிடம் தொழில்வாய்ப்புகள் இல்லை என ஒரு
அரசாங்கம் சொல்ல முடியாது. சமூகத்தில் தொழில்வாய்ப்புகள் இல்லாத
நிலையானது அச்சமூகத்தின் கட்டமைப்புசார் சிக்கலாகும். இது
அரசாங்கத்தின் தோல்வியாகும். தொழில்வாய்ப்புகள் காணப்படாமைக்கு
பல்கலைக்கழகங்களை குற்றஞ்சாட்டுவது அவற்றின் பரந்தளவான பணியை
மறுதலிப்பதாக அமைவதோடு மட்டுமல்லாமல் உண்மையில்
தொழில்வாய்ப்புகள் காணப்படாமைக்கான காரணிகளிலிருந்து மக்கள்
கவனத்தை திசைதிருப்பும் செயற்பாடாகவும் இருக்கின்றது.


மானிட மற்றும் சமூகவியல் துறைகளிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளின்
தொழில்வாய்ப்புகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு அத்துறைகள்
பலிக்கடாவாக்கப்படுவதோடு அத்துறைகளில் காணப்படும் குறைபாடுகள்
தொழில்நுட்ப கற்கைநெறிகளில் காணப்படும் நிறைகளை வைத்து
விமர்சிக்கப்படுகின்றன. மானிட மற்றும் சமூகவியல் துறைகள் தொழில்
உலகுக்கு ஒவ்வாத அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்படும்
புள்ளி தொழில்நுட்ப கற்கைநெறிகள் தொழில் உலகுக்கொப்ப உருவாக்கப்படும் அமைப்பிலிருந்தாகும். மானுட மற்றும் சமூகவியல்
துறைகளில் காணப்படும் தொழில்வாய்ப்பின்மை மற்றும் குறைவான
தொழில்வாய்ப்புகள் இருத்தல் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும்
புள்ளி தொழில்நுட்ப துறைகளில் காணப்படும் தொழில்வாய்ப்புகளைக்
கொண்டேயாகும். தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார் நெருக்கடி
காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப
துறைகளை சேர்ந்த பட்டதாரிகள் கூட வேலைவாய்ப்பின்மையால்
பாதிக்கப்பட்டிருப்பது கண்கூடு. இது தொடர்பில் எளிமையாக
முன்வைக்கக்கூடிய கேள்வி தற்போதைய பொருளாதார நெருக்கடியால்
உருவாகியிருக்கும் வேலைவாய்ப்பின்மையால் தொழில்நுட்ப துறைகள்
திடீரென ஒவ்வாதவையாக மாறிவிட்டனவா? இல்லாவிடின், மானிட மற்றும்
சமூகவியல் துறைகளின் மேல் முன்வைக்கப்படும் விமர்சனக்களில்
தெளிவான சிக்கலொன்று காணப்பட வேண்டும்.


தொழில்வாய்ப்பின்மை சிக்கல்களுக்கான தீர்வாக முன்வைக்கப்படும்
அடிப்படையான விடயம் தொழிநுட்பத்துறைகளில் காணப்படும் செயலறிவு
நுட்பங்களை, மானிட மற்றும் சமூகவியல் துறைகளிலும், அவை எவ்வளவு
தூரம் இத்துறைகளுக்கு பொருத்தமாக இருக்குமென்ற அளவீட்டை தாண்டி
செயற்படுத்த முனைவதாகும். இதற்கான கருதுகோள் யாதெனில் மானிட
மற்றும் சமூகவியல் துறைகளை சேர்ந்த மாணவர்கள் தொழில் உலகுக்கேற்ப
தகவமைக்கப்படாத நிலையில் ஆங்கில மற்றும் தகவல் தொழிநுட்ப
அறிவையாவது அவர்களுக்கு புகட்டுவதன் மூலம் தொழில் உல‌குக்கு
பொருத்தமானவற்களாக மாற்றும் செயற்பாடாகும். இவ்வாறான தொடர்பற்ற
செயற்பாடுகள் பலர் விமர்சிப்பதைப் போல‌ மானுட மற்றும் சமூகவியல்
பாடநெறிகளின் நெறிமுறைகளையே விதிமீறுவதுடன் இத்துறைகள்
சமூகத்துக்கு வழங்கும் தனித்தன்மையான பங்களிப்புகளையும்
தடுக்கவல்லன.

வேலைவாய்ப்பின்மை என்பது கட்டமைப்பு சார்ந்த பரந்துபட்ட சிக்கல்
என்பதையும் இந்த சிக்கலுக்காக பல்கலைக்கழகங்களை, குறைந்தது
பல்கலைக்கழகங்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது தவறென்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் சமூகத்துக்காக
மேற்கொள்ள வேண்டிய வரலாற்றுரீதியாக வழங்கப்பட்டுள்ள பங்கினை
மறக்காதிருப்போம்.