மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா?

மதுரங்க கலுகம்பிட்டிய‌

மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் முன்மைய காலங்களைக் காட்டிலும்
விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்துறைகளில் பெறப்படும் பட்டங்களின்
தேவைப்பாடு மற்றும் காலத்தின் பொருத்தப்பாடு என்பன சரமாரியாக
கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் மிகவுமே
வரையறுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்துறைகளில் மேற்கொள்ளும்
பட்டப்படிப்புகளுக்காக செலவளிக்கப்படும் (அல்லது வீணாக்கப்படும்) நிதி,
உண்மையில் அர்த்தமுள்ள செலவீடா என்பது பலராலும் எழுப்பப்படும்
வினாவாக மாறியுள்ளது. மானிட மற்றும் சமூகவியல் துறையில்
நுண்திறன்க்ளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்துறையை
‘அர்த்தபூர்வமாக்கும்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவான கணிப்பீடாக முன்வைக்கப்படுவது யாதெனில், இத்துறைகளில்
வழங்கப்படும் பட்டங்கள் போதியளவு திறன்களை வளர்க்க உதவுவதில்லை
அல்லது பெறுமானங்கள் கொண்ட திறன்களை வளார்க்க உதவுவதில்லை
என்பதாகும். மானிட மற்றும் சமூகவியல் துறைகள் குறித்த (பின்னையதை
விட முன்னையதை குறித்த) இவ்வாறான நேர்மறையான கணிப்பீடுகள்
இத்துறைகளில் செயற்படுபபவர்களிடம் (மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
ஆய்வாளர்கள்) ஆகியோரிடம் காணப்படுவது பொதுவான அவதானிப்பாகும்.
சுமார் ஒன்று அல்லது இரு வருடங்களுக்கு முன்னர் உயர்கல்வி அமைச்சின்
கொள்கைவகுப்பாளார்கள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மானிட
மற்றும் சமூகவியல் துறைகளில் பணிபுரியும் கல்வியியலாளர்கள் இணைந்து
நடத்திய உயர்மட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஒரு முக்கிய நபர்,
மானிட மற்றும் சமூகவியல் துறைகளுக்கு தெரிவாகி
பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்கள் “குறை விருத்தி”
கொண்டவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதை விட
கல்விமட்டத்திலேயே மானிட மற்றும் சமூகவியல் துறைகளின் மீது
காணப்படும் மோசமான மதிப்பீட்டை கூற வேறு உதாரணம் வேண்டுமா!?

மானிட மற்றும் சமூகவியல் துறைகளை தரங்குறைக்கும் நடவடிக்கைகள்
உலகளாவிய ரீதியில் நடைபெற்றாலும், அவற்றுக்கு காரணமாக
தற்போதைய உலக ஒழுங்கான நனதாரளவாதம் காணப்பட்டாலும்,
இத்துறைகளில் இயங்கும் நாங்கள் மேற்குறித்த தாக்கங்களுக்கெதிராக என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்?
மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் அடிப்படையிலும் மிகத்தெளிவாகவும்
இயங்கும் களம் சமூகமாகும். இத்துறைகள் எடுத்தியம்பும் எவ்விடயங்களுமே
நேரடியாக சமூகத்தின் பரிமாணங்கள் மற்றும் மானிட நிலவுகை
பற்றியதாகவே காணபப்டுகின்றன. எம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது
என்பதைப் பற்றிய உதாரணங்களோ புரிதலோ இன்றி பொருளியல், அரசியல்
விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகளை நடத்துவது முடியாத
காரியமாகும். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பிப்போர், தமது
சொந்த வாழ்வில் அம்மொழியை கற்கும்போது முகங்கொடுத்த சவால்களை,
ஏனையோர் அம்மொழியை கற்கும்போது முகங்கொடுக்கும் சவால்களை
சுட்டிக்காட்டாமல் இம்மொழியை கற்பிக்கவே முடியாது. வெளிநாட்டு
மொழிகளைக் கற்பிக்கும் ஒருவர் அக்குறித்த மொழ்ஹி பயன்பாட்டிலிருக்கும்
கலாசார சூழலை கற்பிக்காமல் மொழியை மாத்திரம் கற்பித்துவிட முடியாது.
எவ்வித படைப்புகளுமே‍‍, அவை ஒரு நாவல், திரைப்படம், ஓவியம், சிற்பம்,
கவிதை போன்ற எதுவாகவும் இருக்கட்டும்‍ அப்படைப்பு உருவாக்கப்பட்ட
காலசூழ்நிலை மற்றும் அதை வாசிப்பவரின் சூழ்நிலை மற்றும் அப்படைப்பை
குறித்த சூழ்நிலைக்கேற்ப வாசிக்கும் அமைப்பின்றி கற்பித்துவிட முடியாது.
ஒரு சட்டம், அது நடைமுறைப்படுத்தப்படும் சமூகத்தில் அச்சட்டத்தால்
உருவாக்கப்பட்ட விளைவுகள் மற்றும் அதன் ஏனைய சமூகப் பரிமாணங்கள்
இன்றி வாசிக்கப்படக்கூடாது. அதாவது, நாம் இயங்கும் இத்துறையானது
மானுட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய துறையாகக்
காணபப்டுவது தவிர்க்கமுடியாத உண்மையாகும். இயற்கை
விஞ்ஞானத்திலிருந்து ஒரு விடயத்தை அச்சடிக்கும் (சுய உணர்வோடு)
போது, மானிட மற்றும் சமூகவியல் கற்கைகளின் “ஆய்வுகூடமாக” இருப்பது
சமூகமாகும். மானிட மற்றும் சமூகவியல் துறைகளில் மிகக்குறைந்த

எண்ணிக்கையில் காணப்படும் கற்கைகளைத் தவிர ஏனைய அனைத்துமே
சமூகம் சார்ந்த ஈடுப்பட்டுடனேயே கற்கப்படுகின்றன.

எல்லா சமூக இடையீடுகளும் இயல்பிலேயே அரசியல்ரீதியானவை. நாம்
அன்றாடம் செய்யும் செயல்களை கேள்விக்குட்படுத்தும் அல்லது
சிக்கலுக்குள்ளாக்கும் செயல்களே இச்சமூக இடையீடுகளாகும். ஒரு
விடயத்தை சிக்கலாக்காமல் அவ்விடயம் குறித்து காலங்காலமாக
நம்பப்பட்டு வரும் உண்மை என்ற நம்பிக்கையை கேள்விக்குட்படுத்த
முடியாது. இச்சிக்கலாக்கும் செயற்பாட்டில் மானிட மற்றும் சமூகவியல்
துறைகளில் இருக்கும் எங்களில் எத்தனை பேர் ஈடுபடுகின்றோம்?
துரதிஷ்டவசமாக ஆதிக்கம் செலுத்தும் கருத்தாக்கங்களை
சிக்கலுக்குள்ளாக்கும், கேள்விக்குட்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும்
மானிட மற்றும் சமூகவியல் வட்டங்களில் காணமுடிவதில்லை. நாம்
அடிக்கடி காண்பதெல்லாம் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளை,
கருத்தாக்கங்களை மற்றும் சிந்தனாசட்டகங்களை வலுவூட்டும்
செயற்பாடுகளே. கருத்தியல்ரீதியான ஆழமான ஊடுருவல்,
விமர்சனாரீதியான சிந்தனை மற்றும் பயிற்சியின்மை என்பன ஆதிக்க
சிந்தனைகளை கேள்விக்குட்படுத்தும் பயிற்சிக்கு மூலகாரணமாக
இருந்தாலும் நன்கு கற்ற கல்வியியலாளர்கள் மத்தியிலேயே இந்நிலை
தொடர்வதை காணும்போது மேற்கூறிய காரணம் மட்டுமே செல்வாக்கு
செலுத்தவில்லை என்பது தெளிவு.
கேள்விக்குட்படுத்துவதும் சிக்கலுக்குள்ளாக்குவதும் இலகுவான காரியமல்ல.
சிக்கலுக்குள்ளாக்கும் பயிற்சியை,என்னுடைய பார்வையில் அத்தியாவசிய
முயற்சியை மேற்கொள்வதென்பது H2O, அதாவது தண்ணீரிலுள்ள ஒட்சிசனை
மீள்மதிப்பீடு செய்யும் செயற்பாடாகும். இச்செயற்பாட்டில் அதிலுள்ள இரு
ஐதரசன் அணுக்களையும் கூடவே மீள்மதிப்பீடு செய்யும் நடவடிக்கையும்
இடம்பெறும் காரணம் இம்மொத்த அலகின் பகுதியாக இவ்வணுக்களும்
காணப்படுவதாகும். ஒரு அணு மீதான புறநிலை வாசிப்பு இன்னொரு அணு
மீதான வாசிப்பிற்கும் பொருந்திவிடுமென கூறமுடியாது. இவ்வகையான

வாசிப்பு ஐதரசனின் நிலையிலிருந்து பார்க்கும் போது ஒட்சிசன் மீதான
வாசிப்பில் குழப்பநிலையை ஏற்படுத்தும். அதைப்போல மானிட மற்றும்
சமூகவியல் துறையில் இயங்கும் ஒரு கல்வியியலாளர் தான் செயற்படும்,
தான் வாழும், பயன்பெறும் அமைப்பை கேள்விக்குட்டபடுத்தும்
இடையீடுகளை மேற்கொள்வது அத்தியாவசியமாகிறது. உதாரணமாக,
திருமணம் எனும் அமைப்பில் காணப்படும் பெறுமானங்கள், வழக்காறுகள்,
மற்றும் அதனை சூழ நடைபெறும் செயற்பாடுகள் பால்சமத்துவத்தைக்
கொண்டிருப்பவையா என்பதை கேள்விக்குட்படுத்தும் ஒரு ஆண்
கல்வியியலாளர், தான் பயன்பெற்று வந்த அந்த அமைப்பையே
கேள்விக்குட்படுத்துகின்றார். இந்நிலை அவரை குறைந்தபட்சம்
தற்காலிகமாகவாவது தன் வாழ்க்கையின் மீதான சலிப்பை கொண்டுவரும்.
மேலும் சமூகத்திலிருந்தான எதிர்வினைகளையும் கொண்டுவரும்.
இவ்வாறான நிலைகளை முகங்கொடுக்க ஒருவருக்கு போதுமான பயிற்சி
காணப்பட வேண்டும்.
உலக வழக்கை கேள்விக்குட்படுத்தும் இடையீடுகளின் இடைவெளியை
நிரப்புவது பொது அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட
விடயங்களாகும். எனக்கு மிகவும் பழக்கப்பட்ட துறையில் இருந்து ஒரு
உதாரணத்தை கூறுவதாயின் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக
கற்பிக்கப்படும் சூழலில் மாணவர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியின்மை
மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பூரண பயிற்சியின்மை என்பனவே
காரணமாகும். இதனால் நாட்டில் இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும்
ஆங்கிலம் பின்னடைவான நிலையில் உள்ளது. இவ்விடயம் குறித்த
சாதாரண மனிதரொருவரின் புரிதலிலிருந்து ஆய்வு முடிவுகள்
வித்தியாசமானவையல்ல, ஆய்வில் பயன்படுத்தப்படும் தொழில்ரீதியான
மொழியைத் தவிர. இவ்வாறான புரிதல் நடப்பிலிருக்கும் உலக ஒழுங்கை
மாற்றுவதில்லை. அதிகாரமற்றவர்களின் மீது போடப்படும் பழி
இப்பின்னடைவுக்கு காரணமாக இருக்கும் அமைப்பின் மீது
போடப்படுவதில்லை. இதற்கு காரணமான அமைப்பின் மீதான மீள்பார்வை
என்பது எல்லா வழிகளிலும் அதனை சிக்கலுக்குள்ளாக்கும் செயற்பாடாகும்.
இதுவே காலத்தின் தேவையாகும். ஆனால் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக

கற்பிக்கப்படும் துறையில் இதனை காண முடிவதில்லை என்பதே
கவலைக்கிடமான உண்மையாகும்.
மானிட மற்றும் சமூகவியல் துறைகளில் உருவாக்கப்படும் அறிவு
வெறுமனே பொதுஅறிவை வலுவூட்டும் செயலாகவே குறுக்கப்படுமாயின்
இத்துறையில் எவ்வித பெறுமானங்களுமில்லை என்ற கருத்து ஏற்கப்பட
வேண்டியதே. ஒரு குறித்த விடயத்தில் ஒரு சாதாரண மனிதனின்
புரிதலுக்கும் ஒரு கல்வியியலாளாரின் புரிதலுக்குமிடையில் எவ்வித
வித்தியாசங்களுமில்லை என்ற நிலையில் அவ்வறிவு
உருவாக்கப்படுவதற்கான எவ்வித தேவையோ அதற்கு எந்த பெறுமானமோ
இல்லை.
எனது பார்வையில் மானுட மற்றும் சமூகவியல் கற்கைகள் அடிப்படையான
மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இம்மறுசீரமைப்பு வெறுமனே
நுண்திறன்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளித்து விடுவதாலும்
அதனால் மாணவர்கள் சமூகத்தில் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
தொழில் அலகுகளுக்குள் பொருத்தப்படுவதாலோ நடந்துவிடப்போவதில்லை.
மாறாக, இம்மறுசீரமைப்பு கல்வியியலாளர்களுக்கு மத்தியில்
விமர்சனப்பார்வையை வளர்க்க வேண்டும். இவ்வகையான மறுசீரமைப்பின்
மூலம் உருவாக்கப்படுவோர் எமது சூழ்நிலையை அரசியல் தீட்சண்யத்தோடு
அணுகுபவர்களாக, அதாவது எமது நிலவுகையை
கேள்விக்குட்படுத்துபவர்களாக காணப்ப‌டுவார்கள் என்பதில் எவ்வித
ஐயமுமில்லை.