மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு

மகேந்திரன் திருவரங்கன்

நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்?
எமக்கான எதிர்பார்ப்பு எனும் ஒளியை புதிதாக ஏற்றிவைக்கும் எந்த
விடயத்தையும் நாம் தற்போது காண்பதற்கில்லை. நாம் வாழும் வரலாற்று
தருணங்களை அதிகரித்து வரும் பெறுமதி சேர் வரிகள், வடகிழக்கில் நிகழும்
நில அபகரிப்புகள், மென்மேலும் சிக்கலாகியுள்ள வாழ்க்கைத்தரத்துக்கு
மத்தியில் ஊசலாடும் மலையக மக்களின் அன்றாட நிலவுகை,
பல்கலைக்கழகங்களில் நாம் காணும் ஒடுக்குமுறை கலாசாரங்கள் மற்றும்
காஸாவில் தொடுக்கப்படும் தொடர்ச்சியான யுத்தம் போன்ற விடயங்களே
அடையாளாப்படுத்துகின்றன. எனது ஆக்கத்தை மனச்சோர்வுடன்
ஆரம்பிப்பதை விடுத்து வேறு மார்க்கமில்லை.

கல்வியானது எம்மில் விமர்சன சிந்தையை தட்டியெழுப்பி, எமது அரசியல்
மற்றும் பொருளாதார அமைப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும்
வெளித்தள்ளல்கள் குறித்து ஆளும்வர்க்கத்திடம் முக்கியமான கேள்விகளை
முன்வைக்கும் இயலுமையை ஏற்படுத்துவதாக நம்மில் பலரும்
கூறிக்கொள்கின்றோம். சமத்துவமான மாற்றத்துக்கு இட்டுச்செல்லும்
விமர்சன சிந்தை மற்றும் கல்வி ஆகியன மாற்றுக்கருத்தை நசுக்கும் கல்வி
நிலையங்களால் எட்டாக்கனிகளாக மாறிவிடுகின்றன. எமது
பல்கலைக்கழகங்களில் தற்போதைய நிலையில் காணப்படும் கல்விசார்
சூழ்நிலையை எவ்வாறு ஒருவர் விளக்கப்படுத்தலாம்? எமது
பல்கலைக்கழகங்களில் ஒளிவுமறைவற்ற வாதப்பிரதிவாதங்களையும்
சிந்தனைப் பரிமாறல்களையும் உறுதிப்படுத்துவதற்கு நாம் என்னென்ன
வழிமுறைகளை மேற்கொண்டிருக்கின்றோம்?

நான் ஒரு தனிப்பட்ட அனுபவக்குறிப்போடு இதனை ஆரம்பிக்கின்றேன்.
கடந்த டிசம்பரில் நான் இன்னொரு அரையாண்டுப்பருவத்துக்கு கற்பித்தல்
செயற்பாடுகளுக்காக மீளச்சென்றேன்; ஆனால் பழைய நாட்களின் உற்சாகம்
என்னில் இல்லாமலிருந்தது. எனது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரு
சம்பவங்கள் மாற்றுக்கருத்து மற்றும் பல்வகைமையை ஊக்கப்படுத்தும்
தளங்களாக பல்கலைக்கழகங்கள் காணப்படும் கருத்தியல் மீது பாரிய
சந்தேகங்களை விதைத்திருந்தன. 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்
பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சட்டத்தரணியும்
தொழிற்சங்கவாதியுமான ஸ்வஸ்திகா அருளிங்கத்தின் ‘இலங்கையில்
நீதித்துறை சுதந்திரம்’ தொடர்பான உரை நிகழ்ச்சி, அவரின் முன்னைய
உரைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பாசிச அமைப்பென கூறிய
கருத்தை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்ததன் விளைவாக நிகழ்ச்சி
இடைநிறுத்தப்பட்டது. டிசம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபற்ற வந்த இருவர் காற்சட்டை அணிந்த
காரணத்தால் வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும்
அனுப்பப்பட்டனர். பெரும்பாலான நேரங்களில் காற்சட்டை அணிவதை
தடுப்பது ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களால்
பின்பற்றப்படுவதை நான் அறிந்தேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர், நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்
இணைந்த போது அதனை, தமிழர் ஆயுதப் போராட்டத்தின் பல‌
அழிவுகரமான செயல்களில் ஒன்றான தமிழ்த்தேசிய அரசியல் மற்றும்
விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை எதிர்த்த மாணவர்கள் மற்றும்
கல்வியியலாளர்கள் உள்ளடங்கலான தரப்பினரை மற்றமைப்படுத்திய‌ தமிழ்
ஆயுதப் போராட்டத்தின் நீண்ட நிழல்களிலிருந்து தன்னை மெல்ல
விடுவிக்கும் ஒரு அமைப்பாகவே பார்த்தேன். இருப்பினும்,
துணைவேந்தர்களின் பதவி நியமனம் மற்றும் நீக்கம், இராணுவத்தினர்
தொடர்பான வழக்கொன்றில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை பிரதிநிதித்துவம்
செய்த சட்ட வல்லுனர் ஒருவரை சட்டப்பணி ஆற்றுவதற்கு தடையாக
இருத்தல், யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும்
பொதுமக்களுக்கான நினைவேந்தலை தடுத்தல் போன்ற பல பல்கலைக்கழக செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான தலையீடுகள்
அறிவுமைய மற்றும் மாணவ இயக்க செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக
இருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற இரு நிகழ்வுகள் என்னை கவலைக்குள் ஆழ்த்தின,
காரணம் கல்விசார் சமூகத்தின் ஒரு பகுதியினர் மற்றும் வடக்கின்
பொதுச்சமூகம் அந்நிகழ்வுகளை நிகழ்நிலை ஊடகங்களூடாக நியாயம் காண
முனைந்தமையாகும். இதனால் வெளிப்படுத்தப்படுவது, வடக்கிலும் அதன்
பல்கலைக்கழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வந்த
வித்தியாசமான அரசியல் நிலைப்பாடுகளை கலந்துரையாட முடியுமான
தளமானது, அரசினால் மட்டுமன்றி வடக்கிலும் தமிழ் தேசிய
குழுக்களுக்கிடையிலும் காணப்படும் காரணிகளாலும் எதிர்காலத்தில்
குறுக்கப்படுமா? உண்மையில் நாட்டில் மாற்றுக்கருத்து நசுக்கப்படுவது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டுமன்று என்பதே யதார்த்தம். எனது
இந்த தனிப்பட்ட வெளிப்பாடானது நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள்
மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்கும் தளங்களாக இயங்கும் சூழ்நிலைகள்
குறித்த தேசியளவிலான கருத்தாடல்களை உருவாக்குமென நம்புகின்றேன்.

வகுப்பறையில் காத்திருக்கும் எனது மாணவர்களை நோக்கி நான்
நம்பிக்கையோடு அல்லது கட்டாயத்தின் பேரில் செல்கின்றேன். எனது
வகுப்பில் பேசுபவர்களோடு அல்லது மௌனித்திருப்பவர்களை நோக்கி நான்
செல்கின்றேன். பரந்த சமூகத்தில் இருந்து உள்வாங்கப்படும் முரண்பாடுகளை
கொண்ட சிக்கலான பல்வகைமை கொண்ட தொகுதியினரே மாணவர்களாவர்.
மேலும் தங்கள் சொந்த அனுபவங்கள், அரசின் வன்முறை நடத்தைகள்,
தேசியவாத ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், மேலாதிக்கமான
ஒருபடித்தான தன்மையை ஆதரிக்கும் பகிடிவதை மூலம் தமது மூத்த
வகுப்பினரால் உள்வாங்கப்படும் உபகலாசார நடத்தைகள் மற்றும்
துருவப்படுத்தும் புலம்பெயர் அரசியல் செயற்பாடுகள் ஆகியவையும்
மாணவர்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. மாணவர்களோடு அன்றாட
ரீதியில் தொடர்ச்சியான கலந்துரையாடலை நிகழ்த்துவோரில் ஆசிரியர்கள்
முக்கியமானவர்கள். கலாசாரம், தேசியம், கல்வி மற்றும் நீதி போன்ற
விடயங்களில் மாணவர்களின் சிந்தனைப்பாங்கில் தாக்கம் செலுத்தும் தேசியவாதம் மற்றும் கலாசார கட்டுப்பெட்டித்தனத்தின் பேரிரைச்சல்களுக்கு
மத்தியில் ஆசிரியர்கள் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு பற்பல
முயற்சிகளின் ஊடாக அவர்களில் விமர்சன சிந்தையை ஊட்ட வேண்டி
இருக்கின்றது. இந்நடைமுறை வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும்
நிகழ்த்தப்பட வேண்டி இருக்கின்றது. இந்நடவடிக்கையானது ஆசிரியர்-
மாணவர் என்ற அதிகாரப்படிநிலையின் தகர்ப்பின் மீதும் கட்டமைக்கப்பட
வேண்டி இருக்கின்றது. போலோ ப்ரேயர் சொல்வதைப்போல “கல்வியென்பது
ஆசிரியர்- மாணவர் முரண்பாட்டின் தீர்வை நோக்கி சமரசம் செய்வதிலிருந்து
ஆரம்பிப்பதோடு அதன் மூலம் துருவங்கள் சமரசப்படுவதால் ஆசிரியர்-
மாணவர் என்ற ஏகநிலை உருவாக்கப்படுகின்றது”.

நாம் உருவாக்கும் அல்லது உருவாக்கத் தவறும் ஜனநாயக வெளியானது
மாணவர்கள் என்னவாக ஆக்கப்போகின்றார்கள், அவர்களது
பல்கலைக்கழகங்களை எவ்வாறு காணப்போகின்றார்கள், சமூகம் மற்றும்
அவர்களின் அரசியல் நடத்தைகளில் பாரிய செல்வாக்கினை ஏற்படுத்தவல்ல
விடயமாகும். தேசியவாதம் மற்றும் கலாசார கட்டுப்பாடுகளை விதித்தல்
ஆகியன ஏற்படுத்தும் வெளித்தள்ளல்கள் குறித்து நாம் மேற்கொள்ளும்
அல்லது மேற்கொள்ளத் தவறும் கலந்துரையாடல்கள் அவர்களின் சமூக
கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். கவலைக்கிடமான விடயம்
என்னவென்றால் நாட்டில் நிலவும் தேசியவாதங்களை குறித்து
பெரும்பாலான கல்வியியலாளர்கள் சவால்விடுக்கத் தவறுவதாகும்.
ஒடுக்கப்பட்டவர்களின் தேசியவாதம் மற்றும் ஒடுக்குபவர்களின்
தேசியவாதமென்ற பிழையான இருமைக்குள் நின்று அவ்விரண்டுக்கும்
இடையிலான வெளிப்படையான ஒற்றுமைகளை காணத்தவறும் இவர்கள்
அதனை சுயநிர்ணயம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வைகளில்
ஆதரிக்கின்றனர். பல்கலைக்கழகங்கள் விமர்சனரீதியான
கலந்துரையாடல்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இது நாம் எமது
மாணவர்களோடும் கல்வியோடும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும்.
இவ்விடயம் சொல்வதைக் காட்டிலும் செயலில் கடினமாகும், ஏனெனில்
ஆசிரியர்கள் கூட தமது கருத்தியல்/ கோட்பாட்டுசார் நிலைப்பாடுகளுக்காக
நிர்வாகங்களால் மட்டுமன்றி மாணவர்களாலும் மற்றமையாக்கப் படுகின்றனர். இருப்பினும் ஆசிரியர்களான நாங்கள் எமது
ஜனநாயகமயப்படுத்தல் மீதான உறுதிப்பாட்டை அனுதாப்பப்பார்வையோ
இளங்கலை மாணவர்களே எதிர்காலத்தின் ஒரே முகவர்கள் என்ற கற்பனை
வாசலின் வழி பயணிக்காமலோ வெளிப்படுத்துவதோடு மாணவர்களையும்
(நிர்வாகங்களையும்) சவால்களுக்கு உட்படுத்த வேண்டியிருக்கின்றது.
போர்க்காலங்களில் மாணவர்களோடு இணைந்து செயற்பட்ட அதேநேரத்தில்
அவர்களின் அரசியலை சவாலுக்குட்படுத்திய ராஜனி திராணகம போன்ற
கல்வியியலாளர்களிடம் இருந்து நாம் நிறைய படிப்பினைகள் பெறவேண்டி
இருக்கின்றது.

பல்கலைக்கழகங்கள் மாற்றுக்கருத்துக்கு இடமளிக்காமைக்கான
காரணங்களில் ஒன்று கல்வியானது ஒரு பொறிமுறைசார் செயற்பாடாக
ஏற்கப்பட்டு உலகப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை பெறும்
செயற்பாடாக குறுக்கப்பட்டமையாகும். கல்வியானது எம்மில் இருப்பவர்கள்
அனுபவிக்கும் வெளித்தள்ளல், காயங்கள், மன அதிர்ச்சிகளை உள்ளார்ந்து
விளங்கக்கூடிய அமைப்பை உருவாக்கும் கல்வியே எமக்கு
தேவையானதாகும். சுய விமர்சனத்தைக் கோரும் கல்வி, முக்கியமாக
விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவற்றில் பாரிய
தவறுகளை இழைத்த சமூகத்திடம் சுயபரிசீலனையை கோரும் கல்வியே
எமக்கான தேவையாகும். இதனை நான் குறிப்பாக தமிழர்களின் விடுதலைப்
போராட்டம் மற்றும் அதனை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய‌
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அடிப்படையாக வைத்து
மேற்கொள்கின்றேன் என்பதோடு வடக்கின் கல்வியியலாளார்கள்
தம்மிடையே இருந்தவர்கள் மற்றும் பல மாணவர்கள் அரசிடமும் ஆயுதக்
குழுக்களிடமும் அச்சுறுத்தல்களை முகங்கொடுத்த போது மேற்கொண்ட
தவறுகளையும் மனதிலிருத்தியே கூறுகின்றேன்.

சமகால சூழ்நிலைகள் நாட்டின் உயர்கல்வியிலும் பாதிப்பை
ஏற்படுத்துகின்றன. கல்வியை தனியார்மயப்படுத்தும் செயற்பாடுகளில்
காட்டப்படும் தீவிர முனைப்பு மற்றும் மாணவ இயக்கங்களை வலிதற்றதாக
மாற்றுவதற்கான முயற்சிகள் கல்வியையும் சமூகநீதியையும் தொடர்பற்றதாக மாற்றும் முயற்சிகளாகவே காணபப்ட வேண்டி
இருக்கின்றது. தற்போதைய சடவாத சூழ்நிலைகள் எமது கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகளில் நேரடித் தாக்கம் செலுத்துகின்றன. தற்போது ஆட்சேர்ப்பு
நடவடிக்கைகளும் வெகுவாக குறைந்திருக்கின்றன. ஏற்கனவே எம்மிடம்
இருந்த மிகவும் குறைவான மனித வளங்களும் மூளைசாலிகள்
வெளியேற்றத்தால் மேலும் சிக்கலான நிலைக்கு வந்திருக்கின்றது. அரசின்
போதுமான முதலீடுகள் இன்றி மாற்றுக்கருத்துகளுக்கான தளங்களை
வளர்த்தெடுப்பதும் கடினமான செயலாகும். தற்போது ஏற்பட்டுள்ள
பொருளாதார உடைமை இழப்பு சூழ்நிலையானது கலந்துரையாடல்கள்
பன்மைத்துவப்படுவதிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை
வெகுவாக திசை திருப்புகின்றன.

ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார அழுத்தங்களால் தடம்புரண்டு போன
அமைப்பில் நம்பிக்கையை சுடரேற்றுவதற்கு அதிகமான ஆதரவுகள் தேவை.
அமைப்பு சிதருண்டு போகும் போது, விளிம்புநிலையில் இருக்கும்
பல்கலைக்கழகங்கள் அதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் சூழலில்
சிறந்த வளங்களோடு இருக்கும் பல்கலைக்கழகங்கள் அவற்றுக்கு ஆதரவு
நல்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இடையே அவதானிக்கப்படும்
ஏற்றத்தாழ்வுகள், பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பீடங்களுக்கு இடையே
காணப்படும் சமமின்மைகள், மேல் மாகாணத்துக்கு வெளியில் இருக்கும்
பல்கலைக்கழகங்களுக்கு காட்டப்படும் பாரபட்சங்கள் போன்ற விடயங்கள்
கல்வியியலாளர்களின் வட்டத்தில் பேசுபொருளாகாமல் இருப்பது சிக்கலான
விடயமாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி
அமைச்சு ஆகியவற்றை அரச பல்கலைக்கழக அமைப்புக்குள் வளங்களை
மீளப்பகிர்வு செய்வதற்கான முன்மொழிவுகளுக்கு தூண்டுவது பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாணவ இயக்கங்களின் பொறுப்பாக
மாறியிருக்கின்றது. கல்விக்கான பாதீட்டு ஒதுக்கீட்டை அதிகரிப்பது
தொடர்பில் அவை ஒற்றுமையோடு குரல் கொடுக்க வேண்டும்.


கலந்துரையாடல், அனுபவப்பகிர்வு, ஆதரவு நல்குதல் மற்றும் செயல்வினை
ஆகியவற்றில் நம்பிக்கை துளிர்ப்பது இன்றியமையாததாகும்.
இவ்விடயங்களை கருத்திற்கொண்டு செயற்படுவதும் பல்கலைக்கழகங்களை விமர்சன சிந்தைக்கான தளங்களாக கட்டமைப்பதில் மாணவர்களோடு
இணைந்து செயற்படுவதிலுமே கல்விக்கான எமது எதிர்காலம் தங்கியிருப்பது
குறிப்பிடத்தக்கதாகும்.