மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும்

நிகொலா பெரேரா

இன-மத ரீதியில் சிறுபான்மையைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகங்களில்  கொடுக்கப்படும் இடம் யாது? தமது அடையாளங்களையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டுவதற்கான பாதுகாப்பான சூழலோ, சுதந்திரமோ அவர்களுக்கு உள்ளதா? பல்கலைக்கழகத்தின் அமைப்பு அல்லது கொள்கைகளோ, பல்கலைக்கழகச் சமூகத்தின் கலாசாரம் அல்லது மனப்பாங்கோ இவர்களுக்கு எதிரான ஒதுக்குமுறைகளை அகற்றி சமத்துவமான சந்தர்ப்பங்கள், உரிமைகள், மற்றும் சலுகைகளை வழங்கி அவர்கள் கற்கவும், பணிசெய்யவும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சூழலை வழங்குகின்றனவா? எமது கல்வி முறையின் பொதுவான நிலையைப் பிரதிபலிக்கும், தெற்கின் பல்கலைக்கழகமொன்றின் பெரும்பான்மைவாத நடைமுறைகள் பற்றி இவ்வுரையில் கலந்துரையாடுகின்றேன்.

பல்கலைக்கழகங்களில் இன-மத சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என மாணவர்களையோ, ஆசிரியர்களையோ, நிர்வாகத்தையோ கேட்டால் அவர்கள் உடனடியாகப் பல்கலைக்கழகங்களில் பல்லாண்டு காலமாகக் காணப்படும் வெவ்வேறு கலாசாரக் குழுக்களைச் சுட்டிக்காட்டக் கூடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் பீடங்களும் தமிழ் மன்றம், இந்து மன்றம், முஸ்லிம் மஜ்லிஸ், மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சங்கங்களைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் நத்தார் கரோல், இஃப்தார் போன்ற கொண்டாட்டங்களை ஒழுங்குசெய்கின்றன. ஆகவே வெளிப்படையாகப் பார்க்கையில் சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது போல் எமக்குத் தென்படுகின்றது.

எனினும் உண்மையில் இவை வெறும் பெயரளவிலான நடவடிக்ககைகளே. உதாரணமாக ஒரு பீடத்தின் சகல மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர் ஒன்றியங்களைக் கருதுவோம். இவர்கள் உண்மையில் எச்சார்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குரியது. கலைப் பீடத்தின் மாணவர் ஒன்றியமானது வருட ஆரம்பத்தில் பெளத்த விழாக்கள், தானங்கள், பிரித் போன்றவற்றை ஒழுங்கு செய்வதுடன் வெசாக், பொசொன் போன்ற விசேட தினங்களில் பிக்குமாரையும் வரவேற்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் பிரதான நிகழ்வான சிங்களக் கலை விழா அல்லது சாகித்திய உலெலவின் போது சிங்கள இலக்கியத்தின் முக்கிய புள்ளிகள், அவர்களின் பிரபல மேற்கோள்கள் போன்றவை ஒவ்வொரு தூணையும் அலங்கரித்துக் காணப்படும். இவ்விழாவின் முக்கிய பகுதியான நாடக விழாவின் போது பிரபலமான சிங்கள நாடகங்கள் மேடையேற்றப்படுவதுண்டு.

இவ்வாறான பெரும்பான்மையினர் சார்ந்த இயல்பு நிலையும், சிறுபான்மையினரின் சகிப்புத்தன்மையும் பல்கலைக்கழகங்களின் பொதுப்படையான வழக்கங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே உண்மையில் இன-மத பாகுபாடின்றிச் சகல மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மாணவர் ஒன்றியம், சிங்கள- பெளத்த மாணவர்களுக்கும் அவர்களது கலாசாரத்துக்கும் பாரபட்சம் காண்பிக்கின்றது. இதினின்றும் விலகிக் காணப்படும் ஏனைய சிறுபான்மைக் கலாசாரங்களைக் கையாள வேறு சங்கங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே பெரும்பான்மைக் கலாசாரமானது பொதுவான இயல்பு நிலையாகவும், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் சகிக்கப்பட்ட பெயரளவுப் பதவிகளாகவுமே காணப்படுகின்றன. இங்கு எனது இனமானது பெரும்பான்மையைச் சாரும் பட்சத்தில் எனது நடவடிக்கைகள் குறிக்கப்படுவதோ, விமர்சிக்கப்படுவதோ, எதிர்க் கேள்வி கேட்கப்படுவதோ இல்லை.

மறுபுறம் சிறுபான்மை மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைக்குள்ளும் புறத்தேயும் எதிர்கொள்ளும் பாகுபாடுகள், அடக்குமுறைகள், வன்முறைகள் யாவை? வெளிப்படையாக, பதிலடி பற்றிய அச்சமின்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படின் எவ்வாறான விடயங்களை அவர்கள் முன்வைப்பார்கள்? கல்விசார் ஊழியர்கள் என்ற வகையில் உள்ளடக்குதல், ஏற்றுக்கொள்ளல், பாகுபாடுகளையும் பாரபட்சங்களையும் தட்டிக்கேட்டல் போன்றவை தொடர்பான உரையாடல்களை ஊக்குவிப்பதில் எமது பங்களிப்பு யாது? வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஊழியர்களும் நிர்வாகமும் மேற்கொள்ளும் அடக்குமுறைகளும் விரோதங்களும் என்ன? எமது பல்கலைக்கழகங்களில் நாம் உருவாக்கும் கலாசாரம் எத்தகையது?

அவர்கள் விரும்பும் கடும் நிற அபாயாக்கள், ஹிஜாப்கள் அல்லாது இளம் நிறங்களிலான அபாயாக்களை அணியுமாறு முஸ்லிம் மாணவிகள் கேட்கப்படுகின்றனர். பல்வேறு நிறங்களிலான ஷல்வார்களை உடுத்தித், தலையை மட்டும் மறைத்து ஹிஜாப் அணியும் முஸ்லிம் ஆசிரியை முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு அம்மாணவிகளிடம் உரையாடக் கோரப்படுகின்றார். இவ்வாறான கோரிக்கைகளை ஒசரிய அணிந்த ஒரு ஆசிரியை விடுத்ததன் பொருத்தம் யாது? பல்கலைக்கழகங்களின் இயல்பான கலாசாரமாக சிங்கள- பெளத்தம் காணப்படுவதால் தனிநபரொருவர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா?

உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின் பல்கலைக்கழக வாயிற் காவலர்களால் முஸ்லிம் மாணவிகள் இடை நிறுத்தப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். காதுகள் தெரியும் படி ஹிஜாப் அணியுமாறு அக் காவலாளிகள் மாணவிகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை துன்புறுத்தல்கள் என இனம் காணும் நிலையில் பல்கலைக்கழகங்கள் உள்ளனவா? காவலாளிகளின் இந் நடத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா? இல்லாவிடில் சிங்கள முறையிலான நடை, உடை, பாவனையை இயல்பாகவும் ஏனைய சிறுபான்மை இனங்களை வழக்கத்திற்கு மாறானவையாகவும் கருதும் கலாசாரத்தினால் இவர்கள் இவ்வாறு செயற்படத் தூண்டப்பட்டனரா? பல்கலைக்கழகங்கள் இன-மத பாகுபாடுகளைப் பார்ப்பதில்லை என்பதற்கு முஸ்லிம் மஜ்லிஸ் போன்ற சங்ககளின் நிலவுகை போதுமான சாட்சியாக அமையுமா? இவ்வாறு அவர்களது உடைகளைப் பற்றியோ இனம் அல்லது மதத்தைப் பற்றியோ கருத்துகள் தெரிவித்த அக்காவலாளிகளிடம் இவர்கள் எரிச்சலையோ, அதிருப்தியையோ பின்விளைவுகளின்றிக் காண்பித்திருக்க முடியுமா? இச் சிறு நடவடிக்கைகள் மூலம் வெளிக்காட்டப்படும் “உங்கள் நடத்தைகளை நாங்கள் கண்காணிப்பதோடு உங்களை நாம் சகித்துக் கொண்டிருக்கின்றோம்” என்ற மனப்பாங்கைத் தான் அவர்கள் எதிர்க் கேள்வி கேட்க முடியுமா?

பல்கலைக்கழகங்கள் வெறும் பெயரளவிலான கலாசார ஒன்றியங்களை இன-மத பாகுபாடின்மைக்கான ஆதாரங்களாகச் சுட்டிக்காட்ட முடியாது. இனப்பல்வகைமையைப் பேண வேண்டிய மிகச் சிறிய கடமையையே அவர்கள் செய்யத் தவறுகின்றனர். சிங்களக் கலை விழாக்களில் தமிழ் மொழி நாடகங்களும் மேடையேற்றப்பட வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் இலக்கிய எழுத்தாளர்களின் சித்திரங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். இவை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டியவையாயினும் இந் நடவடிக்கைகள் மட்டும் போதா. இன-மத பாகுபாடு, அதனடிப்படையிலான துன்புறுத்தல்களுக்கு எதிராகச் சொல்லிலும் செயலிலும் ஈடுபடுதல் இன்றியமையாதது. பல்கலைக்கழகக் கலாசாரத்தை தாபித்து, அதனை முன்னெடுக்கும் நாம், குறிப்பாக இவற்றுக்கெதிரான கொள்கைகள், விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு எமது சுய முயற்சிகள் மூலம் இப் பிரிவினைக்கு முற்றுப் புள்ளியிட முன்வர வேண்டும்.