விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப் பொருளும்

சுதேஷ் மந்திலக்க

இந்தக் கட்டுரையானது இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தர உறுதிப்படுத்தும் செயன்முறை பற்றி இத்தொடரில் எற்கனவே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களின் தொடர்ச்சியாகும். இக்கட்டுரையில் என்னுடைய தனிப்பட்ட கற்கைப் பயிற்சி மற்றும் அனுபவங்களை மீட்டுவதன் ஊடாக நான் தொடுக்கும் முக்கிய வினாவானது “விளைவு அடிப்படையிலான கல்வி” என்ற பதத்தை நாம் எவ்வாறு கிரகித்துள்ளோம் என்பதாகும். உலக வங்கியின் நிதியுதவியுடன் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் திட்டமொன்றின் கூறாக, இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது 2015 இல் நிறுவனம் மற்றும் இளங்கலைப் பட்டக் கல்வி நெறிக்கான மதிப்பாய்வுக் கையேடுகளை வெளியிட்டிருந்தது.  இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான இக்கையேடுகளில் விளைவு அடிப்படையிலான கல்விக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையும் இங்கு கலந்துரையாடவுள்ளேன். நடனம் மற்றும் ஆற்றுகைக்கான பல்கலைக்கழக விரிவுரையாளராக எனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக மானுடவியல் சமூக விஞ்ஞானத் துறையில் தரம் மற்றும் விளைவுகளை மதிப்பிடும் அணுகுமுறையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது மீளாய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.

விளைவு மற்றும் செயன்முறை அடிப்படையான கல்விமுறைகள்

இளங்கலை கல்வித் திட்டதின் ஆய்வுக்கான கையேடு, விளைவு அடிப்படையிலான கல்விமுறையைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறது; “ஒரு கல்வி அனுபவத்தின் முடிவில் ஒவ்வொரு மாணவரும் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சி மட்டங்களை அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்வதற்காக, அக் கல்விமுறையின் கற்றல், கற்பித்தல், மற்றும் மதிப்பீட்டுக் கூறுகளுக்கு எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அடித்தளமாகக் கொள்ளும் கோட்பாடாகும்”.  ஒரு கல்விசார் கோட்பாடென்ற வகையில் இதனை விவாதிக்கவோ, எதிர்க்கவோ, ஆமோதிக்கவோ முடிகின்றது. உதாரணத்திற்கு, நடன உடற்கூறியல் கற்பித்த பின்னர், அந்தக் கலைஞனுக்கு முதுகெலும்பின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருத்தல் அவசியம் என எம்மால் ஒப்புக் கொள்ள முடியும். இருப்பினும் விளைவு அடிப்படையிலான கல்விமுறையானது மாணவரது படைப்பாற்றல் மற்றும் உணர்வுசார் முதிர்ச்சியை அளக்க அல்லது மதிப்பீடு செய்ய உதவாது. இந்தப் பகுதியில் பர்சானா ஹானிபா ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் பின்வருமாறும் இக் கல்விக் கோட்பாட்டை வரையறுக்கலாம். கல்வியின் விளைவென்பது, மாணவர்களின் செழிப்புக்கு அத்தியாவசியமான, அவர்களது ஆக்கத்திறன்களை ஊக்குவிக்கும், ஆற்றல்களை வளர்க்கும் ஒரு செயன்முறையாகும். இருப்பினும், தற்போதைய தர உறுதிப்படுத்தல் செயற்பாட்டில் விளைவு அடிப்படையிலான கல்விமுறையானது குறுகிய முறையில் வரைவிலக்கணப்படுதப்படுகிறது. அது மட்டுமல்லாது கற்கை நெறிக்கான அதன் பொருத்தப்பாட்டைக் கருத்தில் கொள்ளாது அதனைப் பின்பற்றக் கல்வியியலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். “தர உறுதிப்படுத்தல்” தேவைகளின் பெயரில் பல்கலைக்கழகங்களும், பீடங்களும் வெளியிட்டுள்ள நிறுவன மீளாய்வுக் கையேடுகள், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள், மற்றும் வேறு ஆவணங்களும் இதனையே பிரதிபலிக்கின்றன.

இலங்கைப் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குரிய நிறுவன மதிப்பாய்வுக்கான கையேடுகளில், தர மதிப்பீட்டின் கீழ், நிபந்தனைகள் மற்றும் தொடர்புடைய சிறந்த நடைமுறைகள் நிபந்தனை 1 இல் (ஆட்சி மற்றும் முகாமைத்துவம்) குறிப்பிடப்படுவது யாதெனில்; ‘ஒரு பல்கலைக்கழகம்/ உயர்கல்வி நிறுவனத்தின் வெற்றியானது வினைத்திறனும் விளைதிறனும் கொண்ட மேற்பார்வை, மதிப்பீடு மற்றும் அறிக்கையிடும் பொறிமுறைகள் போன்றவைகளில் தங்கியுள்ளது என்பதாகும். இது உள்ளீடு அல்லது செயன்முறை அடிப்படையானதன்று, மாறாக வெளியீடு மற்றும் விளைவு அடிப்படையானது. அத்துடன் தரநிலைகள் பகுதி 4.2 இல், ஆதாரம் மற்றும் புள்ளி வழிகாட்டி உதாரணங்கள், நிபந்தனை 1 இல் (ஆட்சி மற்றும் முகாமைத்துவம்) கையேடு குறிப்பிடுவது பின்வருமாறு: செயன்முறை/ உள்ளீட்டை விடுத்து வெளியீடு/ விளைவுகள் மீது கவனம் செலுத்த பல்கலைக்கழகங்களினதும் உயர்கல்வி நிறுவனங்களினதும் தலைமைத்துவங்களின் வலுவான அர்ப்பணிப்பைப் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இக்கையேடானது “விளைவு அடிப்படையான முறையை” வலியுறுத்துவது மட்டுமன்றி “செயன்முறை அடிப்படையான” கல்வி அணுகுமுறையைக் கண்டித்து நிராகரிக்கிறது. இங்கு ‘விளைவு’ என்பது தொழிற்சாலையிலிருந்து வெளியிடும் உடனடிப் பண்டம் போல் குறுகிய கண்ணோட்டத்துடன் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. இதை அடித்தளமாகக் கொண்டு பல்கலைக்கழகங்கள் தத்தமது வரைமுறைகளை வகுக்கும் போது, ‘வெளியீடு’ என்பதை வேலைவாய்ப்பு, ஆரம்ப வெகுமதி, வருடாந்த சம்பளம் முதலிய அளவுகோல்களைக் கொண்டு வரைவிலக்கணம் செய்கின்றன. சில சந்தர்ப்பங்களில் விளைவும் செயல்திறன் இலக்குகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. போர்களிலும் போராட்டங்களிலும் இலக்குகளை அடிப்பது நன்றாக இருக்கலாம். இருப்பினும் மானுடவியல் கற்கையானது கல்வி ரீதியான இலக்குகளை அடைவதை விடுத்து, முழுமையான ஒருங்கிணைந்த கற்றல் செயன்முறையை ஊக்குவிக்க வேண்டுமென நான் நம்புகிறேன்.

விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப்பொருளும்

நான் நுண்கலைகள் கற்பிக்கின்றேன். நுண்கலைகளிலும் நாம் ‘தரம்’ பற்றி அதிகம் கவனம் செலுத்தி, தரமான வெளியீடு வழங்குவதை உறுதிப்படுத்துகிறோம். உதாரணத்திற்கு ஒரு சுவாரசியமான நாடகம் மூலமான உணர்வுபூர்வமான அனுபவமாகவும் இத் தரமான வெளியீடு அமைய முடியும். இந்த வகையான வெளியீடுகள் அளவீட்டுக்கு உட்படுத்தப்பட முடியாதவை. ஒரு சிலருக்கு வெளியீட்டின் தாக்கம் உடனடியானதாக இருக்க முடியும், இன்னும் சிலருக்கு இந்த உணர்வுபூர்வமான அனுபவம் பல ஆண்டுகளுக்குப் பின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எவ்வாறாயினும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தர உறுதிப்படுத்தல் எனும் பெயரில், நாம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறோம். மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கல்வியில் தரம் மற்றும் வெளியீடு என நாம் அடிப்படையில் கருதும் விதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ‘தரம்’ மற்றும் ‘வெளியீட்டைப் ‘ பின்பற்றும் நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

விளைவு அடிப்படையான கல்வியில் எதிர்பார்க்கப்படுவதைப் போல தரமும், வெளியீடும் எமது களத்தில் எப்போதும் அவதானிக்கவோ, அளக்கப்படவோ முடியாது. 2013 ஆம் ஆண்டு அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமி (American Academy of Arts and Sciences) ஆல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெளிவாக இனங்கண்டு விளக்கப்பட்டது. அது மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியை குடியரசின் காப்பளராகவும், விடயத்தின் கருப்பொருளாகவும் இனங்காண்கிறது. அந்த அறிக்கைக்கு எற்ப:

மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் வெறுமனே தேர்ந்தெடுக்கப்படுபவையோ அல்லது உயர்நிலை மற்றும் உயர்நிலை மக்களைச் சார்ந்தவையோ அல்ல. அவை உடனடி நிகழ்வுகளுக்கும் காரண காரியங்களுக்கும் அப்பால் சென்று கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் புரிந்து கொள்ள உதவுபவை. அவை அத்தியாவசியமானதோடு, இக்கட்டான காலங்களைப் போன்றே செழுமையான காலங்களிலும் எமது ஆதரவில் தங்கியிருக்கின்றன. எமது தேசத்தை நிறுவியவர்கள் விவரித்தது போல் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சி தொடர்பான எமது தேடல்களுக்கு அவை இன்றியமையாதவை. அவையே எமது நாளாந்தத்தின் கருப்பொருளாகவும் அமைகின்றன.

உடனடி வெளிப்பாடுகளையோ, முடிவுகளையோ கொண்டு மானுடவியல் சமூக விஞ்ஞானங்களின் பெறுமதியை மதிப்பிட முடியாது. எமது கற்கை நெறியில் அடங்கும் ஒரு பாடத்தின் தவணை முடிவில் அதன் தாக்கத்தைக் கண்டுவிட முடிவதில்லை. அவை எமது நாகரிகத்தில் வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் தேடலுக்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்குகின்றன. மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி மூலம் வளர்க்கப்படுகின்ற பண்புசார் அம்சங்களை தவணை ஈற்றில் அவதானிக்கவோ, அளக்கவோ முடியாது. இதில் ஒரு முரணுள்ளது (முரண் இல்லாமலும் இருக்கலாம்); பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தர உறுதிப்படுத்தல் சபை, சர்வதேச வடக்கிலிருந்து வெளிப்படும் தர உறுதிப்படுத்தும் செயன்முறை மற்றும் அங்கீகாரம் முதலியவற்றை ஏற்றுக்கொள்ளும் வேளை, அதே இடத்திலிருந்து வரும் விளைவு அடிப்படையிலான கல்வி பற்றிய விமர்சனங்களுக்குச் சம அளவு முக்கியத்துவம் அளிக்க மறுக்கின்றது. இங்கு கருப்பொருளாகவிருக்கும் விடயத்தின் மீது உண்மையில் கவனம் செலுத்தும் போது மானுடவியல் சமூக விஞ்ஞானங்களின் வெளியீடு மற்றும் தரத்தினைப் புறக்கணிக்க இயலாது.

விளைவு அடிப்படையிலான தர உறுதிப்பாடு: ஒரு காட்சி

நான் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தர உறுதிப்படுத்தல் செயன்முறையை, நாம் வெவ்வேறு பாத்திரங்கள் புரியும் காட்சியாகப் பார்க்கிறேன். நாடகப்படிவத்துக்கு ஏற்றாற் போல் வெளியீடு ஒரு காட்சியாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு படைப்பாற்றல் செயன்முறையானது புறக்கணிக்கப்படுகிறது. ஒரு கற்கை நெறியாக ஆற்றுகைக் கல்வியானது பாரம்பரிய நாடகக்கல்வியினின்றும் விலகி, கல்வி உட்பட நாளாந்த வாழ்வில் ஆற்றுகையின் பல்வேறுபட்ட அம்சங்களில் கவனம் செலுத்துகின்றது. ஆற்றுகைக் கற்கை அறிஞர் ஷனொன் ஜாக்ஸன் (Shannon Jackson) அவரது “ஆற்றுகையை வெளிப்படுத்தல்” (Professing Performance) (2004) எனும் நூலில், அமெரிக்காவின் நிறுவனமயமாக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்வியில் தொழில்முறை நிர்வாகிகள் வகுப்பில் சேரும் நபர்களின் ஆற்றுகை பற்றிக் கூறுகிறார். அவர் சில பல்கலைக்கழகக் கல்வியாளர்களும் இந்தத் தொழில்முறை நிர்வாகிகள் வகுப்பிற்கு உரியவர்கள் என நினைவூட்டுகிறார். தனது தர உறுதிப்படுத்தல் செயன்முறை மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கையில் ஒரு தொழில்முறை நிர்வாகிகள் வகுப்பினை உருவாக்குகிறது. தர உறுதிப்படுத்தல் காட்சிக்கான நாடகப்படிவத்தை தொழில்முறை நிர்வாகிகள் வகுப்பு எழுதும் வேளை, அதனை ஒத்திகை பார்த்தோ பார்க்காமலோ பின்பற்ற வேண்டியுள்ளது.

கல்வியின் வெளியீடுகள் எப்போதும் விளைபொருட்களாக அமைய மாட்டா. நடனம் மற்றும் ஆற்றுகை ஆசிரியராக எனது அனுபவத்தில் இறுதிப் படைப்பினை விட அதன் படைப்பாக்கச் செயன்முறைக்கே நான் அதிக மதிப்பு வழங்கியுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் நுண்கலைக் கல்வியின் வெளிப்பாடு, அதன் படைப்பாக்கச் செயன்முறையே. சில படைப்புகளின் போது தர்க்க ரீதியான சிந்தனையின்றி, நாம் எதற்காக எதனைச் செய்கின்றோம் என்றறியாது இயங்குகின்றோம். இறுதிப் படைப்பும் அது எவ்வாறு தென்படும் என்பதிலும் மட்டுமே எமது கவனத்தையும் உழைப்பையும் செலவிடுகின்றோம்.  இளம் நடனக் கலைஞர்களாக நாம் இருந்த காலத்தில், இன ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்ட “பல் கலாசார” ஆற்றுகைகளை நடாத்தும் படி அரசாங்கங்களும், வேறு அமைப்புகளும் எம்மைக் கேட்டதுண்டு. 1990 களில் இலங்கையின் பல்வேறுபட்ட கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் இவ்வாறான ஆற்றுகைகள் பலவற்றில் ஒரு சிங்கள நடனக் கலைஞராக நான் பங்கேற்றுள்ளேன். நாம் சிங்களக் கலைஞர்களாக இருந்த போதும் சிங்கள கலாசாரத்துக்கு மேலதிகமாகத் தமிழ் மக்களையும் அவர்களது கலாசாரத்தையும், ஒரு உண்மையான புரிந்துணர்வின்றிப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு எதிர்பார்க்கப்பட்டது. பல் கலாசார ஆற்றுகைக்கென விதிமுறைகள் இருந்ததால் அந் நடன அமைப்போ அதனை ஆற்றுவதோ சிரமமாக இருக்கவில்லை. உதாரணமாக ஒரு குறித்த நடன அமைப்பில் முதலில் சிங்கள நடனத்தின் தனித்துவம் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் தமிழ் நாட்டியத்தின் குணாதிசயங்கள் எடுத்துக் காட்டப்படும். இறுதியில் சிங்கள மற்றும் “தமிழ்க்” கலைஞர்கள் இணைந்து ஒரே மெட்டுக்குக் குழு நடனம் ஆடுவர். இவை மனோகரமான நடனக் காட்சிகளாக இருந்த போதிலும், இன ஒருமைப்பாட்டையோ நல்லிணக்கத்தையோ மேம்படுத்த உதவினவா?

தர உறுதிப்படுத்தல் நோக்கதுக்காக கவர்ச்சியான ஆவணங்கள் உருவாக்குவது நிதர்சனத்தில் எமது கல்வி அமைப்பில் தரத்தினை உறுதி செய்யாது. எமது சமுதாயத்தின் பல்கலாசாரத்தன்மை பற்றிய மேலோட்டமான, போலித் தோற்றத்தினை அளிக்கும் பல்-கலாசார நிகழ்வுகள் போல், தர உறுதிப்படுத்தும் காட்சியானது எமது பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு வெற்று பிம்பத்தையே தருகிறது. மேற்கண்ட பல்கலாசார ஆற்றுகைகளினதும், எமது தர நிர்ணயச் செயன்முறையினதும் போலிக் காட்சிகளில் எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதோடு மேலாதிக்க கருத்துகளையும் எம்முள் ஊடுருவ அனுமதிக்கின்றோம். இவற்றைச் செயற்படுத்த பல பொது மற்றும் தனியார் நிதிகளைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறான மேலோட்டமான, உண்மை நிலையை எடுத்தியம்பாத தர உறுதிப்படுத்தல் செயன்முறைகளில் எமது வளங்களும் சக்தியும் வீணே விரயமாகின்றன. அதோடு இங்கு கல்வியின் மேம்பாட்டுக்கான சந்தர்ப்பமும் நழுவவிடப்படுகின்றது.

முடிவாக, மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியானது, தர உறுதிப்படுத்தல் சார் கலந்துரையாடல்களில் ஒரு முக்கிய கருப்பொருளாகக் கொள்ளப்படுதல் அவசியம். அது வாழ்க்கையின் அர்த்தம், சுதந்திரம், சமபங்கு, சமத்துவம் மற்றும் இன்பம் ஆகியவற்றை எமக்கு நினைவூட்டுகின்றன. அவை தேர்ச்சி மட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிடவோ அவதானிக்கவோ கூடிய தவணை முடிவின் வெளியீடுகளாக இருக்க மாட்டா.