கௌஷல்யா பெரேரா
கொழும்பு பல்கலைக்கழக ஆய்விதழில் (2021, தொகுதி 2 வெளியீடு 1)
வெளிவந்த பன்டுக்க கருணாநாயக்க எழுதிய “கல்வியின் மூன்று முக்கிய
பகுதிகளும் ‘மெக்பல்கலைக்கழகங்களும்: சில விளக்கவுரைகள்” என்ற
ஆக்கமானது மெக்பலகலைக்கழகங்களின் திடீர் வளர்ச்சி குறித்தும், வெபேரிய
அணுகுமுறையான கருவியியல் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக்
கொண்ட அவற்றின் இலக்கான ‘இயங்குதிறனை’ நோக்கிய செயற்பாடு
குறித்தும் அலசுகின்றார். இந்த பல்கலைக்கழக மாதிரி இயங்குதிறனை
அதிகரிக்குமென்றாலும் சில கொள்கைகளை விட்டுக்கொடுக்க
வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதது. வேறு (எனது) வார்த்தைகளில்
கூறுவதாயின், மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து அனைவராலும்
ஏற்கப்படக்கூடிய தகைமைகளைக் கொண்டு வெளியேறுவார்களாயினும்
அவர்களிடம் அறநெறிசார்ந்த அல்லது சமூக- அரசியல் சார்ந்த
பெறுமானங்கள் பெறுமதியற்றதாக இருக்கும்.
இலங்கையர்களுக்கு மத்தியில் காணப்படும் கல்வியை மீறிய
கல்வித்தகைமை மீதான தாகம் ஏற்கனவே கல்வியியலாளர்களுக்கும்
வியாபாரிகளுக்கும் தெரிந்த விடயமே. ஒரு மெக்பட்டதாரியை
உருவாக்குவதைத்தான் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களிடம்
இருந்தும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். மேலே குறிப்பிட்ட ஆக்கத்தில்
பன்டுக்க கருணாநாயக்க அவர்கள் “எமது (பல்கலைக்கழகங்கள்) அல்லது
குறைந்தது எம்மையாவது விளக்கியறிவிக்குமாறு” (p.9) வாசகர்களை
வற்புறுத்திக் கேட்கின்றார். இந்த வார ஆக்கத்தின் மூலம் நான்
அச்செயற்பாட்டையே முயல்கின்றேன்.
அரச பல்கலைக்கழகம் என்றால் என்ன? அது பொதுப்
பல்கலைக்கழகத்தினின்றும் வேறுபட்டதா?
அரச பல்கலைக்கழகங்கள் என்பது, பங்களாதேஷைப் போல, பிரான்ஸ்
மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் காணப்படுவதை போல அரசினால்
கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாகும். அதாவது, அவை அரசின்
சட்டத்திட்டங்களின் அடிப்படையில் இயங்குவதோடு அரச திரைசேரியில்
இருந்து தமக்கான செலவீனங்களைப் பெறுகின்றன. பெரும்பாலும் இந்த அரச
பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்பையே ஜப்பானில் காணப்படும் தேசிய
பல்கலைக்கழகங்களும் அமெரிக்காவில் காணப்படும்
பொதுப்பல்கலைக்கழகங்களும் கொண்டிருக்கின்றன. அவை
உருவாக்கப்பட்டதும் நிதியீட்டம் செய்யப்பட்டதும் அரசுகளால் ஆகும்.
கலைச்சொல் வித்தியாசங்கள் பெரும்பாலும் பிராந்திய ரீதியில் காணப்படும்
வித்தியாசங்களினால் ஆகும்.
அரச பல்கலைக்கழகங்களின் அரச திரைசேரிகள் வழியான நிதியீட்டம்
தற்போது சிக்கலுக்குள்ளாகி இருக்கும் விடயமாகும். அரசு வழங்கும்
நிதியின் அளவு காலம் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்து மாற்றமடையும்.
துருக்குயை பொருத்தளவில் 2020ஆம் ஆண்டளவில் (ஹசன் தொசுன், 2020ன்
படி) 95% வீதமான நிர்வாக செலவுகள் அரசின் மூலமாகவே பெறப்படுகின்றன.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள்
நூறுவீதமாக அரச நிதியீட்டத்திலேயே இயங்கின. தற்போதைய சூழ்நிலை
அவ்வாறில்லை.
அண்மையில், நகர்ப்புற பல்கலைக்கழகமொன்றில் உயரிய நிர்வாக
உத்தியோகத்தர் ஒருவர் தமது பல்கலைக்கழகத்துக்கு 2024ஆம் ஆண்டுக்கு
தேவையான தேவையான 60% வீதமான நிதிப்பங்களிப்பை தமது நிர்வாகமே
திரட்டியதாக கருத்து தெரிவித்தார். 10 பட்டப்பின் கற்கைநெறிகளுக்கான
நிலையங்களில் 6 நிலையங்களுக்கு (ஆங்கிலம் மற்றும் மருத்துவ பட்டபின்
கற்கைநெறிகளுக்கான நிலையங்கள் உட்பட) 2023ஆம் ஆண்டுக்கான அரச
நிதியீட்டம் வழங்கப்படவில்லை. பிரித்தானியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி அரச பல்கலைக்கழகங்கள் 8- 15%
வீதமான செலவீனங்களுக்கான நிதியீட்டத்தையே அரசின் மூலம் நேரடியாக
பெற்றிருக்கின்றன. எனவே ஒரு அரச பல்கலைக்கழகமானது எத்தனை வீதம்
அரசினால் நிதியீட்டம் செய்யப்பட வேண்டும் என்ற கேள்விக்கான விடை:
அது பல காரணிகளில் தங்கியுள்ளது என்பதாகவே இருக்கக்கூடும். அரச
பல்கலைக்கழகங்கள் அரசாங்கங்களிடம் பெறப்படும் இச்சிறு நிதியீட்டம்
காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் என அழைக்கப்படுவதோடு அவை
அவற்றின் இயல்பு மற்றும் செயற்பாடு காரணமாகவும் அவ்வாறு
பொருள்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் பொதுவாக பல்கலைக்கழகங்கள் ‘அரச’ அல்லது ‘தனியார்’
பல்கலைக்கழகங்கள் எனவே வரையறுக்கப்படுகின்றன. ஒரு ‘அரச’
பல்கலைக்கழகமானது, எனது கருத்தின் படி, அரசு மற்றும் அதன் மக்களுக்கு
சேவை செய்யும் வகையில் காணப்படும் பொதுச்சொத்தாகும். இலாப
நோக்கில் இயங்காத ஒரு தனியார் பல்கலைக்கழகம் கூட, நாட்டிற்கு சேவை
செய்யும் வகையில் செயற்படலாம் என்றாலும், அதனை உருவாக்கிய
‘தனியார்’ அமைப்பின் அடிப்படையிலேயே அதன் செயற்பாடுகள்
வரையறுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே நான் இலங்கையின்
அரச பல்கலைக்கழகங்கள் உண்மையில் பொது அமைப்பாக காணப்படாத
நிலையையும் தனியார் பல்கலைக்கழகங்கள் உண்மையில்
பல்கலைக்கழங்களாக இயங்காத நிலையையும் தலைப்பின் மூலம்
எடுத்துரைத்திருக்கின்றேன்.
அரசின் நிதியீட்டத்தை பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக குறைக்கும்
செயற்பாடு தற்போது உலகளாவிய போக்காக காணப்படுவதோடு
இந்நடைமுறையானது தனியார் விருப்ப நோக்கம் கொண்டவர்களால்
பல்கலைக்கழகங்கள் ‘அதிக சுயாதிகாரத்தோடு அல்லது சுயகட்டுப்பாட்டோடு’
இயங்கக்கூடிய நிலையை உருவாக்குவதாக கூறுகின்றனர்.
பல்கலைக்கழகங்கள் சுயாதிகாரத்தோடு இயங்கும் நிலைக்கு வருமாயின்
அவற்றில் கற்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அதிக கட்டுப்பாட்டை
கொண்டிருக்க முடிவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் நிர்வாகத்துக்கான செலவீனங்களை மேற்கொள்வதற்கான நிதியீட்ட வழிகளை நிர்ணயிக்கவும்
முடியுமாக இருக்கும். இவ்வாறான பலக்லைக்கழகங்கள் தமது நிதியீட்ட
வழிகளில் ஒன்றாக இருக்கும் பட்டதாரி மாணவர்களுக்கான கட்டணங்களை
அறவிடுவதோடு செலவீனங்களுக்கேற்ப கட்டண அறவீடுகடுகளும்
தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் தற்போதும் மேலே
குறிப்பிடப்பட்டதை போன்று அரச பல்கலைக்கழகங்களாகவே
இயங்குகின்றன. எமது பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழகங்கள்
நியதிச்சட்டம் வழிப்படுத்துகின்றது; கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு ஆகியன எம்மை கண்காணிக்கின்றன; மற்றும்
நான் ஒரு அரச உத்தியோகத்தராக இருக்கின்றேன்.
ஆனால் நான் அரசாங்கத்தால் சம்பளம் வழங்கப்படுகின்றேனா? இது
விவாதத்துக்குறிய விடயமாகும். பல்கலைக்கழகங்களின் செலவீனங்கள் அரச
திரைசேரியில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் பல்கலைக்கழங்களால்
திரட்டப்படும் நிதியால் இயக்கப்படுவதாகவும் தேசிய பாதீடானது வெளிநாட்டு
கடன்களால் நிலைப்படுத்தப்படுவதாகவும் காணப்படுமாயின் நான் இலங்கை
அரசினால் சம்பளம் வழங்கப்படும் தொழிலாளரா?
நான் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஒரு ‘அரச’
பல்கலைக்கழகத்தால்தானா?
பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நேரடியாகவோ
மறைமுகமாகவோ பொதுச்சமூகத்துக்கு நன்மை பயக்கவெனில் நான்
வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஒரு ‘அரச’ பல்கலைக்கழகத்தால் அல்ல.
அரச பல்கலைக்கழகங்கள் பொதுச்சமூகத்திற்கு சேவைநல்குவதன்றி
குறிப்பிட்ட சமூகத்தவருக்கு மட்டுமே நன்மை பயக்கின்றன.
ஏற்கனவே கலந்துரையாடியதன்படி, இலங்கையில் காணப்படும் அரச
பல்கலைக்கழக அமைப்புகள் நலிவடையச்செய்யப்படுவதோடு அவற்றின்
ஆடுகளம் நிலை ஒன்றுக்கு தாழ்த்தப்பட்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் அரச பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும்
மாணவர்கள் ஒன்றில் நல்ல வசதியுடைய பாடசாலைகளில்
பயின்றவர்களாகவோ அல்லது தனியார் வகுப்புகளுக்கு சென்று
கற்றவர்களாகவோ தான் இருக்கின்றனர். இதன் மூலம் நான் குறிப்பிடும்
மாணவர்கள் பொதுவாக அரச பல்கலைக்கழகங்களை தெரிவு செய்யாத
வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரும் மாண்வர்கள் அல்லர். அரச
பல்கலைக்கழகங்கள் இன்னமும் சமூக ஏற்றத்துக்கான ஏணிகளாக இருப்பதை
மறுப்பதற்கில்லை. அந்த தெரிவு எதை குறிக்கின்றதென்றால் மாணவர்கள்
பல்கலைக்கழகங்களுக்குள் உள்நுழைய முடிவெடுக்கும் போது
அக்குடும்பத்தினர் ஏனைய செலவுகளைக் காட்டிலும் கல்விக்கான
செலவுகளை முன்னிருத்த முடிவெடுத்திருக்கின்றனர் என்பதாகும்.
இம்மாணவர்கள் கல்வி கற்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டி
இருக்கும் நிலையிலும் இவர்களை கற்பிக்க வேண்டி அவர்களின்
குடும்பங்கள் பட்டினி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் போதோ அரச
பல்கலைக்கழகங்கள் தாம் செய்ய வேண்டிய சேவையை சரியாக
நிறைவேற்றவில்லை என்பதாகவே கருதவேண்டி இருக்கின்றது.
அதேவேளையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் எமது
பல்கலைக்கழகங்களுக்கான நிதியீட்டங்களை வேறு துறைகளுக்கு கடத்தி
விடும் போது பல்கலைக்கழகங்கள் மோசமான வசதிகளுடன் பின் தங்கும்
நிலையிலும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் பல்கலைக்கழகங்கள்
கோட்டைவிடுகின்றன.
அவ்வாறாயின் தனியார் பல்கலைக்கழகங்கள் என அழைக்கப்படுபவை
யாவை?
தனியார் பல்கலைக்கழகங்கள் எனும் போது அமெரிக்காவில் காணப்படும்
ஹார்வட் அல்லது கோர்னேல் போன்ற பல்கலைக்கழகங்கள் நினைவில்
வரலாம். இவை சமய நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்கள் போன்ற தனியார்
அமைப்புகளால் உருவாக்கப்பட்டு முழுமையாக தனியார் அமைப்புகளால்
நிதியீட்டம் செய்யப்படுகின்றன.
‘தனியார்’ என இங்கே வரையறுக்கப்படுபவை அறக்கட்டளைகள், பழைய
மாணவர் உதவித்தொகை, ஆய்வு உதவித்தொகை, பெறுநிறுவன நிதிகள்
மற்றும் மாணவர்களில் இருந்து பெறப்படும் கட்டண அறவீடுகள்
போன்றவற்றால் நடத்தப்படுகின்றன. இவ்வாறான பல்கலைக்கழகங்கள்
தமக்கான கற்கைநெறிகளை தாமே உருவாக்குவதோடு (அரச
பல்கலைக்கழகங்களை போல) அவர்களின் அனுமதிக்கான
நியதிக்கோட்பாடுகள் அவர்களால் உருவாக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களே அல்ல.
இவ்வாறானவை ஆரம்பத்தில் தனியார் (இலாப நோக்க அல்லது இலாப
நோக்கற்ற) நிறுவனங்களாகவோ அல்லது வேறு வகையான
நிறுவனங்களாகவோ உருவாக்கப்படுவதன்றி கல்வி நிறுவனங்களாக அல்ல.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுநேர அல்லது நிரந்தர கல்விசார்
ஊழியர்களை நியமிப்பதில்லை என்பதோடு இவர்களின் கல்விசார்
ஊழியர்களின் கல்வித்தகைமைகளை அவர்களின் வலைத்தளங்களில்
மேலோட்டமாக பார்த்தாலே பட்டப்பின்கல்வி கூட முடிக்காமல்
இருப்பவர்களாகவே இருப்பார்கள்.
மிக முக்கியமான விடயம் யாதெனில், இலங்கையில் தனியார்
‘பல்கலைக்கழகங்கள்’ முகமையிடல் முறைமை அடிப்டையிலேயே
இயங்குகின்றன. அவை தமக்கான கல்வித்திட்டத்தை அரிதாகவே
உருவாக்குவதோடு கற்றல் வசதிகளை மட்டும் வழங்கும் பொதுவாக
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டங்களை வழங்கும்
முகமையிடல் அமைப்புகளாகவே இயங்குகின்றன.
இறுதியில், ஒரு பல்கலைக்கழகம் தனியார், அரச அல்லது
பொதுப்பல்கலைக்கழகம் என எவ்வாறு வரையறுக்கப்பட்டாலுமோ,
அவற்றுக்கே உரிய கல்விசார் ஊழியர்களி நியமிக்கப்பட்டோ இருந்தாலும்
அடிப்படையான அம்சமாக அவை தமக்கான கற்கைநெறிகளை
உருவாக்கியிருக்க வேண்டும். அவ்வாறான கற்கைநெறிகள் நாட்டுக்கோ
அல்லது தாம் இருக்கும் பிராந்தியத்துக்கோ தேவைப்பாடானதாகவும் நன்மை பயப்பதாகவும் இருப்பது அவசியமாகும். ஒரு கர்கைநெறியை
உருவாக்குவதில் முக்கியமாக பங்களிக்க வேண்டிய விடயங்கள் குறித்து
நம்மில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை நாட்டின் மற்றும்
பொதுச்சமூகத்தின், அதன் அரசியலின் தற்போதைய மற்றும் வருங்கால
நன்மையக் கருதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் கருத்து
வேறுபாடில்லை.
இவை சிறப்பான நிலையில் இல்லாவிட்டாலும் எதோவொரு வகையில் அரச
பல்கலைக்கழகங்களில் நிலைநாட்டப்படுகின்றன. எமது கற்கைநெறிகள்
தரம்வாய்ந்த கல்வியியலாளார்களால் உருவாக்கபப்டுவதோடு உள்நாட்டின்
தேவைகளை கருத்தில் கொண்டு கற்கைநெறிகள் உருவாக்கப்படும் நிலை
அரச பல்கலைக்கழகங்களைப் போல தனியார் பல்கலைக்கழகங்களில்
காணப்படுவதில்லை.
தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கற்கைநெறிகள் பொதுவாக
வார்ப்புருக்களாகவே இருபப்தோடு, அதாவது, அவை வெளிநாடுகளில்
உருவாக்கப்பட்டு அவர்களின் முகவர்கள் மூலம் எமது நாட்டில்
கற்பிக்கப்படுவதாகவே வடிவமைக்கப்படுகின்றன. இவற்றில் காணப்படும்
இன்னுமொரு மிகப்பெரிய பிரதிகூலம் யாதெனில் அவை முகமை
அமைப்புகளாக இயங்குவதால் இங்கே உருவாக்கப்படும் நிதியானது
வெளிநாடுகளுக்கு செல்வதாகும்.
எஞ்சியிருக்கும் எண்ணற்ற கேள்விகள்
‘பொது பல்கலைக்கழகம்’ ஒன்றின் நிதியீட்டத்துக்கு யார் பொறுப்பாகிறார்?
அது பொதுமக்களா? அப்படியாயின், அவ்வாறான நிதியீட்டங்கள் ஏன்
பல்கலைக்கழகங்களுக்கு எட்டப்படுவதில்லை? பொது
பல்கலைக்கழகத்துக்கான நிதியீட்டம் பிரஜைகளின் தனிப்பட்ட
பொறுப்பாகுமா? அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியவர்களா?
அவ்வாறாயின் தனிப்பட்ட கட்டண அறவீடு என்றால் அது தனியார்
பல்கலைக்கழகம் ஆகாதா?
பொதுமக்களின் கல்வி குறித்த அக்கறை தமக்கு இருப்பதாக
காட்டிக்கொள்ளும் அரசுகள் எந்த அளவில்- குறைவாக அல்லது நிறைவாக-
பொது அல்லது அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியிட்டத்திலிருந்து
ஒதுங்கிய நிலையில் நாட்டை முன்னேற்றுவதாக வெறுமனே
காட்டிக்கொண்டிருக்கலாம்?
குறைவாக கல்வி புகட்டப்பட்ட பிரஜைகள் எனப்படுவது குறைவான கல்வி
உடைய நாடு என்பதாகுவதோடு அதனோடு இணைந்த சிக்கல்களும் சேர்ந்தே
காணப்படும் நாடாகின்றது. நாம் தொடர்ந்து செய்து வருவது போல நாட்டை
கல்விரீதியாக முன்னேற்றும் பொறுப்பை ஏற்காத அரசாங்கங்களுக்கு
ஒப்புதல் அளிப்பது கூடுமா?
எமக்கான கல்வியை எமக்கான வழிகளில் நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு
கொண்டு வந்து நிறுத்தும் அரசாங்கங்கள் எம்மை மகிழ்விக்குமா? கல்வி
கற்பதற்கு மேற்கொள்ளப்படும் அவ்வாறான தனிப்பட்ட முயற்சிகள் நாட்டை
ஒன்றிணைக்கும், மனிதநேயமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திக்கும்
கல்வியை நோக்கி நம்மை நகர்த்துமா?
இலங்கைக்காக நாம் நாடும் கல்வி எத்தகையது? இலங்கைக்காக நாம் நாடும்
சமூகம் எவ்வாறானது? மற்றும் அடுத்து வரவிருக்கும் அரசாங்கத்தை எம்மை
செவிமடுக்கும் ஆட்சியாளர்களாக நாம் எவ்வாறு தகவமைக்கலாம்?