நிகொலா பெரேரா
வழக்கமான கருத்து: பொதுக் கல்வியானது தோற்றுவிட்டது
பெரும்பாலான கலைப் பட்டதாரிகள் வேலையின்றிக் காணப்படுவதற்கான காரணம் அவர்களது ஆங்கிலப் புலமைக் குறைபாடே எனக் கருதுகிறது தனியார் துறை. கலை மற்றும் மனிதநேயப் பட்டமானது பயனற்றது என்பது ஒரு வழமையான கருத்தாகும். பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையை அளிக்கத் தவறுகின்றன என்ற வெளித்தோற்றமானது இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. கலைப் பட்டதாரிகள் பொதுமக்கள் கண்ணோட்டத்தில் தோல்வியடைந்தவர்களாக எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்வையிடப்படுகின்றது. மேலும் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான தர்க்க ரீதியான ஒரு மாற்றுக் கல்விமுறையின் தேவையும் இங்கு கலந்துரையாடப்படுகிறது.
கலைப் பட்டதாரிகள் தொடர்பாக நிலவும் பின்வரும் கருத்தானது மக்களுக்குப் பெரிதும் பழக்கப்பட்டதொன்றாகும். பொது மக்கள் பணத்தில் கல்வி கற்கும் இம்மாணவர்கள் பயனுள்ள STEM கல்வியையோ, பொருளாதார மதிப்புள்ள வேறு கற்கை நெறியையோ பின்பற்றுவதை விடுத்துக் கலை மற்றும் மனிதநேயக் கல்வியில் பயனற்றவற்றைக் கற்கின்றனர். இவர்கள் கொடூரமான பகிடிவதையில் ஈடுபடுவதோடு, இலவசக் கல்வியைப் பாதுகாக்குமாறும், அரச தொழில்களைப் பெற்றுத்தருமாறும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டமும் செய்கின்றார்கள். ஆகவே பொதுமக்கள் பார்வையில் இப் பல்கலைக்கழக மாணவர்கள் சகல சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் திராணியற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். மேலும் இலாபகரமான தனியார் துறைத் தொழில்களைப் பெறுவதற்கு ஆங்கிலப் புலமையானது, இவர்களைப் பொறுத்த வரையில் ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது என இம்மாணவர்களுக்குக் கூறப்படுகின்றது.
பொதுவான எண்ணம்: பொதுக் கல்வியானது பயன்படுத்தப்படாத ஆதாயங்களின் திரட்டாகும்
புதிய தாராளமயமாக்கத்தை நியாயப்படுத்துவதற்காக ஒரே மாதிரியான வாதங்களே தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன. அதாவது சந்தைப்படுத்தக்கூடிய ஆற்றல்களைக் கற்பிக்காதவிடத்து அரச பல்கலைக்கழகங்களும், குறிப்பாக கலை மற்றும் மனிதநேயக் கல்வியும் பொதுமக்களின் நிதியை வீணடிப்பதோடு எதிர்காலத்துக்கான வழி, கட்டணம் அறவிடும் தனியார் கல்வியே எனக் குறிப்பிடப்படுகின்றது. சரியாகக் கூறப்போனால் தனியார் கல்வி முறை மூலம் பாரிய இலாபமீட்டக்கூடிய முதலாளிமார்களையும், ஒரு தொகை துணைச் சேவைகளையுமே கட்டணம் அறவிடும் தனியார் பல்கலைக்கழகங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவ்வாறான ஒரு விடயத்தை மேலும் கவர்ச்சிப்படுத்துவதற்கு அரச கல்விக்கான நிதியைக் குறைத்து அதனை முடிந்தவரை வினைத்திறனற்றதாக மாற்றும் ஒரு திட்டதையும் அவை சுட்டிக்காட்டுகின்றன. இந்த செயற்திட்டங்கள் உண்மையில் பல தசாப்த காலங்களாக இடம்பெற்று வருவதோடு மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான வளங்களும் அருகிய நிலையில் உள்ளன. அதிக விலையுடைய தனியார் கல்வி மூலம் மாணவர்களைத் தவிர பணத்தைப் பெருக்ககூடிய தரப்புகள் பல காணப்படுவதால் அரசும் இலவசக் கல்வி மீது பாரிய ஆர்வமோ அர்ப்பணிப்போ காட்டாது உள்ளது.
கலைப்பட்டதாரிகளின் உறுதியற்ற ஆங்கிலப் புலமையானது, அரசின் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் கீழ் இலவசக் கல்வியானது நிலைதழும்புவதன் பாரதூரமான பின்விளைவாகும். அதனைத் தொடர்ந்து வரும் சமுதாய உரைநடைகளும் பிரச்சினைகளின் மூலகாரணங்களைத் தெளிவற்றவையாக்கின்றன. யதார்த்தத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் கற்பதற்கான திடசித்தம், அச்சம், விரக்தி ஆகிய அனைத்தும் காணப்படுகின்றன. இலங்கையில் இலவசக் கல்வியின் சமூக சமத்துவமின்மைகள் பற்றி அம்மாணவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். எமக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் இருப்பதில்லை அல்லது சில சமயங்களே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பாடப்புத்தகங்களும் பற்றாக்குறையாகவே காணப்பட்டன. ஆங்கில ஆசிரியர் குழப்பமடைந்து காணப்பட்டார்; பாடப்புத்தகத்தை அப்படியே வாசித்தார்; வகுப்புக்கு வந்தார் ஆனால் கற்பிக்கவில்லை; வேறு வேலையில் ஈடுபட்டார். இதன் விளைவாக இப் புதிய தாராளவாதக் கருத்தியலின் கீழ் பிரச்சினைகளும் தீர்வுகளும் தனிநபரடிப்படையில் பிளவுபட்டுக் காணப்படும் நிலையில் மாணவர்கள் பிரயாசைப்பட வேண்டியுள்ளது. சமுதாய மூலதனத்தின் குறைபாட்டையும், வீடுகளில் பேசப்படாத ஒரு மொழியைக் கற்க வகுப்பறைக் கல்வியில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் நன்கறிந்த மாணவன், எமது அமைப்பு முறையிலுள்ள குறைபாடுகளைத் தனது சுய தோல்விகளாக உள்வாங்குகின்றான். அதாவது வளங்கள் குறைந்த பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை, மற்றும் அவர்களது குறைந்த பயிற்சியும் சம்பளமும் குறைபாடுகளாகவுள்ளன.
ஒன்றுசேர்ந்த சமுதாய நலனை விடுத்துக் குறித்த சில உயர்குழுவினருக்கான விற்பனைப் பொருளாகக் கல்வியைக் கையாளுவதில் நாம் எப்போது இன்பம் காண ஆரம்பித்தோம்?
மொழியொன்றைக் கற்பிப்பதானது ஏனைய பாடங்களைக் கற்பிப்பது போன்றதல்ல. ஒரு மொழியின் அடிப்படைகள் இலகுவில் கற்பிக்கக்கூடிய கோட்பாடுகளல்ல. இதனைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகக் கற்பித்தலுக்கான கருவிகள் மிகையாக எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, அடிப்படைகளும் போதியளவு உள்ளடக்கப்படாதுள்ளன. ஆனால் ஒரு மொழியைக் கற்பதன் மிகவும் கடினமான கூறு அதன் அடிப்படைகளாகும். ஆகவே வாசித்தல், கதைத்தல், எழுதுதல் போன்றவற்றில் பயிற்சி பெற மாணவர்களுக்குப் போதியளவு நேரம் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாது மொழிகள் சமூகம் மற்றும் இடைத்தொடர்பாடல் சார்ந்தவை: அதாவது மாணவர்கள் ஒன்றாகக் கற்க வேண்டும்.
கொள்கைப் பிரச்சினைகள்: தீர்வுகளுக்கான பழைய முயற்சிகளின் பயனற்ற எச்சங்கள்
கலை மற்றும் மனிதநேயக் கல்வியின் “பொருந்துமை” மற்றும் “சந்தைப்படுத்தக்கூடிய தன்மையை” அதிகரிக்க முயற்சிக்கப்பட்டது. அந்த நோக்கத்துடன் பல்கலைக்கழக அனுமதியின் போது நடாத்தப்படும் ஆங்கிலப் புலமைப் பரீட்சையில் விலக்களிக்கப்படாத அனைவருக்கும் ஆங்கிலம் கட்டாய பாடமாக்கப்பட்டது. எனினும் மொழியைக் கற்பதிலன்றிப் பரீட்சைப் பெறுபேறுகளில் கவனம் செலுத்துவது நன்மை பயக்குவதிலும் பார்க்கப் பயனற்றதாகவே காணப்படுகின்றது. நடைமுறையில் பரீட்சைகள் அவற்றின் பொருத்தத்தை இழக்கும் வரை ஐதாக்கப்பட்டுள்ளமையே இடம்பெற்றுள்ளது. மாணவர்களும் ஆங்கிலக் கற்கை நெறியைக் கடுமையான, அதிகாரத்துவமான ஒரு தேவையாகவும், முடியுமான வரை சமுகமளிக்க அவசியமற்ற வகுப்புக்களாகவும் பார்வையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது மொழியைக் கற்கும்-கற்பிக்கும் நடவடிக்கைகளை நிலைகுலையச் செய்கின்றன. ஆங்கிலம் கற்பதற்கான ஊக்கத்தை மாணவர்கள் மத்தியில் உண்டாக்க வேண்டுமெனில் பல்கலைக்கழகங்களில் மொழியானது, வெற்றுத் தகைமையை மட்டும் சுட்டி நிற்கும் பரீட்சைகளிலிருந்து வேறுபிரிக்கப்பட வேண்டும்.
ஒன்றுதிரட்டப்பட்ட, தர்க்க ரீதியான ஊடகமாக வகுப்பறைகள்
ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்களைக் குழந்தைகள் போன்று நடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். கனிவான ஒரு நபர் அறிவை வழங்குவது என்ற நிலையை ஆசிரியர்கள் அடைவதை இது உருவாக்குவதோடு இலங்கையில் காணப்படும் ஆங்கில ஆதிக்க மனப்பான்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. கற்பித்தல் கருவிகள் வளர்ந்த ஒரு நபரின் அறிவாற்றலையோ அவரது தனிப்பட்ட/சமூகம் சார்ந்த அடையாளத்தையோ அவமதிப்பதாக இருக்கக் கூடாது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கிலப் புலமை குறைவானதாக இருப்பினும் அதனைக் கற்பதற்கு அவர்களின் ஆர்வத்தைக் கவரக்கூடியதாகப் பாட உள்ளடக்கம் இருக்க வேண்டுமேயொழிய, சிறு பிள்ளைகளுக்காக எழுதப்பட்டவையாக அவை இருத்தல் கூடாது. இலக்கண நெறிமுறைகளை எளிமையாக்கப்பட்ட சுருக்கங்களாகக் கற்பிப்பது நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக ஆங்கிலம் எவ்வாறு பிரயோகிக்கப்படுகின்றதோ அவ்வாறு கற்பிப்பதன் மூலம் வாக்கியங்களிலும் பந்திகளிலும் இலக்கணத்தின் முறையான கையாளுகையை அவர்களுக்குணர்த்த வேண்டும்.
ஆங்கில உரையாடல்களுக்கு பழக்கப்படும் வகையில் வகுப்பறைச் சூழல்கள் மாற்றப்படுவதோடு பாடத்திட்டமானது மாணவர்களின் நாளாந்த அனுபவங்களைப் பிரதிபலிப்பவையாகவும் அவற்றை விவரிக்க ஆங்கிலத்தைப் பிரயோகிக்கத் தூண்டுபவையாகவும் இருத்தல் வேண்டும்
நிகழ்நிலையாகவோ நேரடியாகவோ நடாத்தப்படும் ஆங்கில வகுப்புகள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குப்பிடிக்ககூடிய ஊடகங்களாக மாற வேண்டும். மாணவர்களை வாழ்க்கையில் பின் தங்கிய நிலையில் தடுத்து வைத்திருக்கும் சக்திவாய்ந்த சமூகக் குறியீடாக ஆங்கிலப் புலமைக் குறைபாடு கருதப்படுகின்றது. தனிப்படுத்தப்பட்ட புலமைப்பரிசிலாகக் காணப்படும் உயர் கல்வியை, ஒன்றிணைந்த, ஒருங்கிணைக்கப்பட்ட ஆங்கிலக் கல்வியனுபவமாக மாற்றுவதற்கான மற்றும் ஒன்றுசேர்ந்து சமூக உயர் நிலையை அடைவதற்கான அபிலாஷைகளிலிருந்து ஆங்கிலம் பயிலுவதற்கான ஆர்வம் எழ வேண்டும்.
பொதுமக்கள் சிந்தையிலும், மாணவர்களின் கண்ணோட்டத்திலும் ஆங்கிலம் கற்பதன் முக்கியத்துவம் பெரிதாகக் காணப்பட்ட போதும், ஆங்கில வகுப்பறைகள், குறிப்பாகக் கலைப் பீடங்களில் வெறுமையான, பயனளிக்காத, பெறுபேறுகளைப் பெற்றுத் தராத வெற்றிடங்களாகவே காணப்படுகின்றன. இவ் வெற்றிடங்களின் மிகையான சக்தியையும் ஆற்றலையும் ஆசிரியர்களும் மாணவர்களும் உணர வேண்டும்.
(எழுத்தாளர் கொழும்புப் பல்கைலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவில் பணியாற்றிவருகின்றார்).
“குப்பி“, ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரங்களைக் கேள்வி கேட்கும் அதே சமயம், அவ்வதிகாரப் படி நிலைகளை மீள உறுதிப்படுத்தும், விரிவுரை மண்டபங்களின் ஓரங்களில் இடம்பெறும் ஒரு அரசியலும் ஒரு புதிய கல்விக் கலாசாரமுமாகும்.
மொழிபெயர்ப்பு: கோபிகா சிவகுமார்