இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு

சிவமோகன் சுமதி

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித்
தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ
பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை.
அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும்
இலவசக்கல்விக்காக குரலெழுப்பினாலும் அந்த அமைப்பிலிருந்து விலத்தியே
வைக்கப்பட்டிருந்தனர். அவர் இலங்கை மண்ணில் அவரது வாழ்நாள்
காலத்தில் ஒரு கவிஞராக புகழப்படவில்லை, அவரை அறிந்திருந்தவர்களும்
தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வட்டத்துள் இருந்த வெகுசிலரே.
இப்பத்தியை நிறைவு செய்கையில் அவரின் ஒரு கவிதையின் (ஆங்கில)
மொழிபெயர்ப்பு வடிவத்தை சமர்ப்பிக்கும் நான், எமது வரலாற்றின் வாசிப்பை
சமர்ப்பிப்பதோடு அதன் மூலமான சமூக மற்றும் அரசியல் விடுதலை
தொடர்பான கூட்டுப்பார்வையொன்றையும் உருவாக்குமென
எதிர்பார்க்கின்றேன்.

2023ஆம் ஆண்டு நாம் இலங்கையில் 75ஆவது சுதந்திர தினத்தை
கொண்டாடினோம். பிரித்தானியாவிலிருந்தும் அதன்
ஏகாதிபத்தியத்திலிருந்தும் முறித்துக்கொண்ட நாங்கள் பின்காலனித்துவ
சூரியனின் கீழ் எமது இடத்தை தக்கவைத்துக் கொள்ள அதிக சிரமப்பட்டோம்.
எமது பின்காலனித்துவ வரலாற்றின் அதிகமான பகுதிகள் சமூக அமைப்புகள்
மற்றும் அரச இயந்திரங்களில் புரையோடிப்போன வன்முறைகளாலேயே
வரையறுக்கப்பட்டன. காலனித்துவம் எம்மை இன்னமும் மேற்குலகின்
நவகாலனித்துவ, நவதாராளவாத ஏகாதிபத்திய அமைப்புகளினூடாக
கிழக்குலகின் வளங்களை சுரண்டும் முதலீட்டு முதலாளித்துவ மற்றும்
சுரண்டல் அமைப்புகளின் கூரிய நகங்களை உலகமயமாக்கம் என்ற
போர்வையில் எமது உழைப்பையும் சேர்த்து சுரண்டுகின்றன.

இன்று நாம் மிகப்பாரிய பொருளாதார வீழ்ச்சியொன்றை நோக்கி சென்று
கொண்டிருப்பதோடு அதன் வீழ்ச்சி 2024ல் இன்னும் அதிகரிப்பதையே
காணப்போகின்றோம். அதிகரித்துவரும் விலைவாசியும் செயலிழ‌ந்துவரும்
நலன்புரி செயற்றிட்டங்களும் நாட்டில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும்
மானுட உரிமைகள் மற்றும் நலன்புரி சேவைகளையே காட்டுகின்றன. எமது
பொருளாதாரம் தொடர்ந்தும் நலிவடைந்துவரும் நிலையில் அது
சார்ந்திருக்கும் தொழிலாளர் வர்க்க பெண்களின் உரிமைகளை நசுக்கும்
நிலையே தொடர்கின்றது.

2023ஆம் ஆண்டு எமது காலனித்துவ வரலாற்றின் முக்கிய மைல்கல்லாகும்.
1823ஆம் ஆண்டு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்தில்
பெருந்தோட்ட கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக பாரியளாவு நிலம்
ஒதுக்கப்பட்டது. இந்நிகழ்வு தென்னிந்தியாவில் இருந்து தொடர்ந்தும்
கொண்டுவரப்பட்ட தமிழ் பேசும் தொழிலாளர்களின் வருகையின் பின்னர்
நடைபெற்றது. கூலிகளாக ஒப்பந்தத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட இவர்கல்,
பீண்ணாற் தேயிலை தோட்டங்களிலும் பணிபுரிந்தனர். இவ்வாறு சில
தசாப்தங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான தொழிலாளார்கள்
கொண்டுவரப்பட்டனர். பெருந்தோட்ட தேயிலைப் பயிர்ச்செய்கையும்
இலங்கையில் பாரிய விருத்தி கண்டதோடு உலகளவில் தேயிலை
உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என்ற பேரினை பெற்றுக்கொள்ளவும்
காரணமானது. இருப்பினும், இதனோடு பேசப்பட வேண்டிய வரலாற்றின்
இன்னொரு பக்கமே தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறாகும்.

இலங்கையின் தேயிலை பெருந்தோட்டத்துறை மற்றும் பெருந்தோட்ட
தொழிலாளர்களின் வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று
பிண்ணிப்பிணைந்திருப்பதோடு இவை குடியிருப்பு, குடிபெயர்க்கப்படல்
மற்றும் மோதல்களின் வரலாறாகும். காலனியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட
குடியகல்வு/குடிபெயர்வானது பின்காலனியத்திலும் நடைபெறுகின்றது. 1948-49
காலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளால் இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு
மில்லியன் கணக்கில் வாழ்ந்த இம்மக்களதும் அவர்களின் உறவினர்களதும் பிரஜாவுரிமை மொத்தமாக பறிக்கப்பட்டது. 1970களின் நாட்டின் கிட்டத்தட்ட
56% வீதமான அன்னிய செலாவணி வருமானத்துக்கு காரணமாகிய
மலையகத் தமிழர்கள் என தம்மை அழைக்கும் அல்லது தாம்
அழைக்கப்படும் இம்மக்கள் எவ்வித உரிமைகளும் இன்றி தமது உழைப்பை
வழங்க ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடிருந்தும் நாடற்ற மக்களாக
மாற்றப்பட்டனர்.

மலையகம் மற்றும் கல்வி தொடர்பான கேள்வியின் எனது நுழைவு
பின்வறுவனவற்றை மையப்படுத்தியதாகும், அ) நாம் எமது வரலாறு, 75
வருட சுதந்திரத்தினதும் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மக்களின்
உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட 200 வருட
பெருந்தோட்டத்துறையினதும் இரட்டை வரலாறு என்பவற்றை எவ்வாறு
புரிந்துகொள்ளப் போகின்றோம், ஆ) இவ்விரண்டையும் கல்வி தொடர்பான
எமது முயற்சிகளுக்கான விடைகளை காண்டும் பொருட்டு எவ்வாறு
ஓரிடத்திற்கு கொண்டுவரப்போகின்றோம், மற்றும் இ) எவ்வாறு
அம்முயற்சிகளூடு நாம் எமது கல்வியியல் தொடர்பான நடைமுறைகள்
குறித்த கலந்துரையாடலை ஆரம்பிக்கப்போகின்றோம், கல்வி தொடர்பான
எமது முன்னுரிமைகள் என்னவாக இருக்கப்போகின்றன, கல்வி
நடவடிக்கைகள் மீது நிகழ்த்தப்படும் சமகால கேள்விகளால், ஒரு வகையில்
உலக வங்கி போன்ற சந்தை மற்றும் கட்டளைகளால் முன்வைக்கப்படும்
கோரிக்கைகள் மற்றும் இன்னொரு வகையில் உருமாறி வரும் கல்வியியல்
நடவடிக்கைகளால் வேண்டப்படும் கோரிக்கைகளால் எழும் சவால்களை நாம்
எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றோம்.

கல்வியும் மலையகமும்

எமது 75 வருடகால வரலாற்றில் எடுத்துக் காட்டுவ‌தற்கு ஒன்றுமில்லை
என நாம் எண்ணக்கூடும். இருப்பினும் எமது இந்த இருண்ட காலத்தில்,
சிவில் வாழ்வில் ஏற்படுத்தப்பட்ட இரு முன்னேற்றங்களை அரசின்
வரலாற்றுப் போக்கில் எடுத்துக் காட்டலாம்: இலவசக்கல்வி மற்றும் இலவச
மருத்துவம். ஒருங்கிணைந்த முழுமையான அரச கொள்கையாகவும் சாதாரண மக்களை பலப்படுத்தி ஜனநாயக அமைப்பின் சமூக மற்றும்
அரசியல் வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் ஈட்டுவதற்கு
துணைபுரிந்ததாக கொள்ளப்படும் இலவசக்கல்விக்கான உரிமை மலையக
மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்தின் பின்னரும் கூட 1907ஆம்
ஆண்டின் கிராமிய பாடசாலைகள் சட்டத்தின் படி பெருந்தோட்ட கம்பனிகள்
மலையக மக்களுக்கு ஆரம்பக் கல்வியை தமது பெருந்தோட்ட
பாடசாலைகள் மூலம் வழங்க வேண்டுமென்ற விதிமுறையே பின்பற்றப்பட்டு
வந்தது. 1943ல் வெளியிடப்பட்ட கன்னங்கரா அறிக்கை கூட கிட்டத்தட்ட
வெளிப்படையாகவே மலையக மக்களை தனது தேச வளர்ச்சிக்கான
திட்டத்திலிருந்து விலத்தி வைத்தே வரையப்பட்டிருந்தது. இதனை ஏஞ்சலா
லிட்டில் என்பவர் தனது ஆய்வில் எவ்வாறு அரச கல்விக்கொள்கைகள்
மலையக மக்களை பாதித்தன என்பதை விரிவாக விளக்குகின்றார். இவரின்
கருத்துப்படி 1905 முதல் 1947 வரையான சுதந்திரத்தின் அண்மைய ஆண்டுகள்,
சுதந்திரத்தின் பின்னரான் முதல் காலகட்டமான 1947இலிருந்து 1977
வரையான காலப்பகுதியை விட‌ பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பான
இயங்குநிலையை அதிகம் காட்டுவதாக குறிப்பிடுகின்றார். 1970களின்
நடுப்பகுதியில் பெருந்தோட்ட பாடசாலைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்
வந்ததோடு அதன் பின்னர் மலையக சமூகத்தை ஒருங்கிணைப்பை நோக்கி
நகர்த்தின. 80களின் நடுப்பகுதியில் தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் மத்திய
மலைநாட்டில் அதிகரிக்கப்பட்டதோடு ஆசிரிய கலாசாலைகள் போன்ற
ஏனைய முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி
பெருந்தோட்ட பாடசாலைகள் இரண்டாந்தர அமைப்புகளாகவே
பார்க்கப்பட்டன. அவற்றில் அடிப்படை வசதிகள் கூட நிறைவாக
காணப்படவில்லை. மலையகத்தின் மத்திய பகுதிகளைத் தாண்டிய
பகுதிகளில் அதிகளவில் சிறுவர்கள் சிங்கள மொழிமூலத்தில் கற்க வேண்டிய
நிலை உருவானமை சிக்கலான விடயமாகும். மலையக மக்களின்
பிரஜாவுரிமை அல்லது அதன் இன்மை மற்றும் பொருளாதார ரீதியாக
பலமிழந்திருக்கும் தன்மை அவர்களின் அரச கல்வி அமைப்புடனான உறவை தீர்மானித்தன. மிக அண்மையில் 2003ஆம் ஆண்டில் ‘அண்மைய இந்திய
பூர்விகத்தை’ கொண்ட மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படும் வரை
இலவசக்கல்வியின் மிக முக்கிய அம்சமான அரச பல்கலைக்கழகங்ளுக்கு
நுழைவதற்கான அனுமதி கூட இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இன்று
கல்வியானது சமூக நிலைமாற்றத்துக்கான முக்கிய கருவியாக
பார்க்கப்படுகின்றது. அண்மைய காலங்களில் நாம் மலைய மக்களின்
பிள்ளைகள் அதிகமாக அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை
பார்க்கின்றோம். இதுவே எமது இலவசக்கல்வியின் வரலாறாகும்.

ஆங்கில காலை உணவுத் தேநீர்: முழுமாற்ற கல்வி நடவடிக்கை தொடர்பான
செயற்றிட்டத்தை நோக்கி

முழுமாற்ற கல்வி நடவடிக்கை தொடர்பான செயற்றிட்டமானது
நவதாராளவாத மாற்றங்களால் கல்வியிலிருந்து புறந்தள்ளப்படும்
பாரியளவான மக்களின் அடிப்படையான அக்கறைகளை கவனத்திலெடுக்க
வேண்டும். இவ்வாறான கேள்விகள் மற்றும் அக்கறைகளை நாம் எவ்வாறு
நிறைவேற்றப்போகின்றோம் என்ற விடயம் தொடர்பில் நான் எமது
வரலாற்றுக் கருத்தாடலில் நான் சில தகர்க்கின்ற இடையீடுகளை
மேற்கொள்வதற்கான வழிமுறைகளை முன்மொழிகின்றேன். ஒரு நாடு என்ற
வகையில் நாம் யார் என்ற கருதுகோளுக்கும் இந்நாட்டின் பொருளாதாரத்தின்
அச்சாணியாக இருக்கின்ற மக்கள் என்ற வகையிலும் மலையகத்தின்
வரலாற்றை மற்றும் அதன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வரலாற்றை
விளங்குவதை துவக்கலாம்.

இதோ ஒரு சுருக்கமான வரைபடம். ‘ஆங்கில காலை உணவு தேநீரை’
உலகளாவிய சந்தையில் அதிகமாக காண முடிவதோடு இது காலனித்துவ
தோற்றுவாயை உரக்கச்சொல்லும் பெயராகும். சர்வதேச விமானங்கள்,
விமானத்தளங்கள் அல்லது சர்வதேச மாநாடுகள் என அனைத்து
விடயங்களிலும் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் இரட்டை குழந்தைகளான
காலனித்துவம் மற்றும் முதலாளித்துவம் ஆகியன
இயல்பாக்கப்பட்டிருக்கின்றன. அல்லது இதுவொரு வெளித்தள்ளும் மேட்டிமைவாதத்தின் அடையாளமாகவும் இருக்கலாம், சில வருடங்களுக்கு
முன்னர் வெளிவந்த சுவாரஷ்யமானதொரு விளம்பரத்தில் வருவது போல,
‘ம்லெஸ்னா, இயற்கையாகவே சிறந்தது’. இவ்விளம்பரம் வர்க்கத்தையும்
மூலதனத்தையும் பிரத்தியேகமானதாகவும் இயற்கையானதாகவும்
குறிக்கின்றது. தற்போது எமது உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும்
நவதாராளவாத காலநிலையில் எமது கல்வி அடைவுகளை முதலாளித்துவ
வளார்சிக்கேற்ப நேர்ப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். ம்லெஸ்னா தேநீரின்
விளம்பரத்தை போல முதலாளித்துவ உற்பத்தியை இயல்பானதாகவும்,
இயற்கையானதாகவும் மற்றும் அனைவர்க்கும் நன்மை பயக்கக்கூடியதாகவும்
கட்டமைப்பது போல அதன் நுகர்வோரை வாசிப்போராகவும், சிறப்புரிமை
பெற்ற சிலராகவுமே கட்டமைக்கப்படுகின்றனர்.

இரு இலைகள்

இருப்பினும் தேநீர் என்பதில் எவ்வித அற்புதமோ அல்லது அது
இயற்கையானதோ இல்லை. இது ஒரு இரத்தம் படிந்த உடைமை இழப்பை
குறிக்கும் வரலாற்றில் விளைந்த விடயமாகும். இவ்விளம்பரத்தை, நான்
எனது வகுப்பறையில் மாணவர்களுக்கு பயிற்சியான கட்டுடைப்புச் செய்து
பார்க்கும் முயற்சியில், தேநீர் என்பதனை அற்புதமான இயற்கையான
நுகர்வுப்பொருள் என்ற நிலை எவ்வாறான விடயங்களை அழிக்கின்றதென
பார்க்க வேண்டும். அவ்வாறாக அழிக்கப்பட்ட விடயம் இந்நுகர்வுப் பொருளின்
உற்பத்தியில் கடினமான நிலைகளில் ஈடுபட்ட பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட
தொழிலாளியின் உழைப்பாகும். தேநீரை நுகர்வுக்கலாசாரத்தினதும்
முதலாளித்துவ வளர்ச்சியினதும் வெற்றிப்பொருளாகக் காண்பிப்பதிலிருந்து
என் பார்வையை திருப்பும் நான், அவ்வாறான புரிதலை கட்டுடைத்து
அதனை உழைப்பின் அடையாளமாக நோக்க விளைகின்றேன்: கொழுந்து‍-
இரு இலைகளும் ஒரு துளிரும். இதுவே உற்பத்தியாளரது அடையாளமாக
இருப்பதோடு இது ஒரு கவிஞரை குறித்தும் பேசுகின்றது.

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித்
தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை.
அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும்
இலவசக்கல்விக்காக குரலெழுப்பினாலும் அந்த அமைப்பிலிருந்து விலத்தியே
வைக்கப்பட்டிருந்தனர். அவர் இலங்கை மண்ணில் அவரது வாழ்நாள்
காலத்தில் ஒரு கவிஞராக புகழப்படவில்லை, அவரை அறிந்திருந்தவர்களும்
தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வட்டத்துள் இருந்த வெகுசிலரே.
இப்பத்தியை நிறைவு செய்கையில் அவரின் ஒரு கவிதையின் (ஆங்கில)
மொழிபெயர்ப்பு வடிவத்தை சமர்ப்பிக்கும் நான், எமது வரலாற்றின் வாசிப்பை
சமர்ப்பிப்பதோடு அதன் மூலமான சமூக மற்றும் அரசியல் விடுதலை
தொடர்பான கூட்டுப்பார்வையொன்றையும் உருவாக்குமென
எதிர்பார்க்கின்றேன்.

இரவு அரக்கனின்
பலாத்கார
அரவணைப்பில்
கசங்கிய
பூமிக்கன்னியின்
மேனி உதிர்த்த
வியர்வை
முத்துக்கள்.
குருதிப் பூக்கள்
வீணே மலர்ந்து
உதிர்ந்து கருகும்
தேயிலைப் பூக்களா
நாங்கள்?
எங்கள்
குருதியை
உறிஞ்சிக் குடுத்து
ஊதிப் பெருத்த
முதலாளித்துவத்தின்

தொந்தியை
கிழித்து
அதில்
தோய்த்து எடுத்த
குருதிப் பூக்கள்
நாம்.
(குறிஞ்சித் தென்னவன்)
கவிச்சாரல் ரூபவ்
தொகுப்பு: ரூபவ் சாரல்நாடன். கொட்டகல ரூபவ் சாரல் பதிப்பகம். பக்கம். 117.