கௌசல்யா பெரேரா
2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம் இல்லை” என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். ஆனால், ஆராய்ச்சி கலாசாரம் இருப்பதன் அர்த்தம் என்ன? அதிகளவு நிதி போதுமானதா? ஆக்கத்திறன்மிக்க மற்றும் அர்த்தமுள்ள ஆராய்ச்சி கலாசாரத்தை நோக்கிச் செயற்படுவதிலிருந்து வேறு என்ன விடயங்கள் நம்மைத் தடுத்தது? அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி கலாசாரத்தை மேம்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அத்தகைய நடைமுறைகள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்பது குறித்தான விவாதங்கள் உள்ளன. (இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் இது குறித்து அதிகம் கவனம் எடுக்கப்படவில்லை. ஆனால் அது வேறு ஒரு விவாதமாக இருக்கிறது) எனவே, எனது சக ஊழியர் எங்கள் நிலைமை குறித்து புலம்பியதிலிருந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னர், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?
ஆராய்ச்சி கலாசாரம் என்றால் என்ன?
ஒரு நல்ல ஆராய்ச்சி கலாசாரம் என்பது, நாமே, கல்வியியாளர்களும் மாணவர்களும், பயனுள்ள முறையில் ஆராய்ச்சியில் ஈடுபட தேவையான வளங்களைக் கொண்டிருப்பதே ஆகும். அதற்கு அடிப்படை வசதிகள், பயிற்சி, ஆரோக்கியமான வழிகாட்டுதல், மேலும் “Headspace” என்று அழைக்கப்படுகின்ற இடம் ஆகியவை தேவைப்படும். முன்னைய குப்பி கட்டுரையில், இலங்கைப் பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சியாளர்களாக நாம் எதிர்நோக்குகின்ற, கலாவதியான நிர்வாக விதிமுறைகள், போதிய நிதி வளங்களின் குறைவு போன்ற சில பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். எனது பார்வை, சமூக விஞ்ஞான துறையினூடான கோணத்தில் இருக்கிறது. அது வேறு துறைகளில் இருந்து வேறுபடக்கூடும். இருந்தபோதிலும், குறைந்த பட்சம் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகள் உள்ளன என்று நான் நினைக்கின்றேன்.
முதலாவது விடயம்: பணம் முக்கியம்
உதாரணமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொள்ளலாம். “Harvard Magazine” படி, ஹார்வார்ட் பல்கலைக்கழகம் 2024 ஆம் நிதியாண்டில், $686.5 மில்லியன் அளவிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சி நிதியைப் பெற்றுள்ளது. ஆனால், அந்த நிதியானது தடைசெய்யப்பட்டதால் திடீரென சிக்கலில் சிக்கியுள்ளது. இவ்வாறான பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நிதிகள் பெரும்பாலும் ஆராய்ச்சி ஆய்வுகூடங்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு, உபகரணங்கள், பொருட்கள் மற்றும் பிற வளங்களின் செலவுகள், பட்டமேற்படிப்பு மற்றும் பிற ஆராய்ச்சி உதவியாளர்களுக்கான சம்பளம், மற்றும் ஆய்வு மாநாடுகள் போன்றவற்றிற்கே செலவிடப்படுகின்றன. இத்தகைய நிதி ரீதியான ஆதரவு இல்லாமல், பிற நாடுகளில் திறமையும் அறிவும் கொண்டவர்களை அமெரிக்கா ஈர்த்து வைத்திருக்க முடியாது. அதேபோல, ஆராய்ச்சிக்கு என பெரும் தொகை ஒதுக்கப்படாத வரை, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களும் அவர்கள் விரும்புகின்ற ஆராய்ச்சி கலாசாரத்தை உருவாக்க முடியாது. நாட்டின் கடினமான பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளும் போது, கடந்த ஆண்டுகளில் ஆராய்ச்சி நிதிகள் பெரும்பாலும் சுயமாக உருவாக்கப்பட்ட நிதி மற்றும் திறைசேரி நிதியிலிருந்தே வந்துள்ளன. இருப்பினும், ஆராய்ச்சி நிதிகள் கிடைக்கின்ற போதும் (அவை பொதுவாக போதுமானதாக இல்லை), எமக்கு சில கூடுதல் பிரச்சினைகள் இருக்கின்றன.
இரண்டாவது விடயம்: முடிவில்லாத சிவப்பு பட்டிகள் (Red Tape)
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள் (சிவப்பு பட்டிகள்) முடிவில்லாமல் தொடர்கின்றன. வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கே குறைந்தபட்சம் ஒரு வருடமாகின்றது. ஆராய்ச்சி நிதி வழங்கல் மற்றும் அதைச் செலவழிப்பதற்கான நிதி விதிமுறைகள் மிகவும் எரிச்சலூட்டுகின்றன.
இதோ, எனது சொந்த அனுபவம். 2018 இல் எனது பல்கலைக்கழகத்திலிருந்து சிறிய அளவிலான ஓர் ஆராய்ச்சி நிதிக்கு நான் விண்ணப்பித்தேன். பல மாதங்கள் கழித்து அது எனக்கு வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது எனக்கு தவணைக்கு அதிகபட்சம் ரூ.100 000, அளவில் மட்டுமே கிடைத்தது. இதனைப் பெறுவதற்கு Voucher ஒன்றை சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. அதன் பின்னர், அது பல அலுவலகங்களைக் கடந்து பல அனுமதிகள் பெற்று வரும்வரை சில வாரங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. மர்மமான நிதி காரணங்களுக்காக, பணத்தை முதலில் செலவிட்டு, பின்னர் நிதியைக் கோருவது ஊக்குவிக்கப்படுதில்லை. இந்த நிலையில், நான் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டிய ஆய்வில் ஈடுபட்டிருந்தால், அல்லது உபகரணங்கள், ஆராய்ச்சி பொருட்கள் போன்றவற்றிற்கு அதிகளவு பணம் தேவையாக இருந்தால், இந்த நிதியைப் பயன்படுத்த முடியாது. எனது ஆராய்ச்சி உதவியாளர்கள் போன்றோர், நான் இந்த முற்பணத்தைப் பெறும் வரையில் தங்களின் சம்பளத்திற்காகக் காத்திருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் நான் இரண்டாவது முற்பணத்தைப் பெற்ற போது அதை விடக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த தொகையை மூன்று வாரங்களுக்குள் செலவழித்து, கணக்குகளை முடிக்கும் படி என்னிடம் கூறப்பட்டது. “என் ஆராய்ச்சி உதவியாளர்களை வேலை செய்யச் சொல்லி விட்டு, சம்பளத்திற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்கச் சொல்லவா? அல்லது பணத்தைப் பெற்ற பின்னரே வேலைகளை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குள் முடித்து கணக்கைச் சீர் செய்யச் சொல்லவா?” என்று நான் குழப்பத்துடன் கேள்வி எழுப்பினேன்.
பல்கலைக்கழக நிதியை வழக்கமாகப் பயன்படுத்தும் சக ஊழியர்களில் சிலர் குழப்பத்துடன் இவ்வாறான சிக்கல்களுடன் தங்களைச் சீர்படுத்திக் கொள்வதுடன், ஏனையோர் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயுள்ள அமைப்புக்களோடு இணைந்து வேலை செய்வதைத் தெரிவு செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இளம் ஆராய்ச்சியாளர்களை ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்வது எப்படி என்பதைக் கலந்தாலோசிக்க ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்தில், சில மூத்த ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி கலாசாரத்தை வளர்க்க வேண்டுமானால் தீர்க்கப்பட வேண்டிய நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளின் பட்டியலோடு கூட்டத்தை நிறைவு செய்திருந்தனர். எனினும், அவை இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளன. இங்குதான் கல்வியாளர்கள் சங்கம் தலையிட முடியும். இருப்பினும் அவர்கள் பெரும்பாலும் சம்பளம், அனுமதிகள், பாடசாலை ஒதுக்கீடு போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆராய்ச்சி என்பது ஒரு கல்வியாளரின் வகிபங்கு மற்றும் பொறுப்பின் ஒரு பகுதியாக இருந்தால், ஆராய்ச்சி – நட்பு சூழலை உருவாக்குவது ஒரு சலுகையாக இருக்காது. ஆனால் அது ஒரு தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்லாமல், புதிய அறிவை உருவாக்கும் கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும் விடயமாகும்.
மூன்றாவது விடயம் : கருவியாக்கப்பட்ட ஆராய்ச்சி – ஒரு உலகளாவிய தொற்று
இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும், ஆராய்ச்சியின் தரம் என்பது அதிகம் கவனம் செலுத்தப்படுகின்ற ஒரு விடயமாகும். மிகவும் போட்டித் தன்மை கொண்ட உலகளாவிய ஆராய்ச்சி சூழல் பல்வேறு ஆபத்தான விடயங்களை உருவாக்கியுள்ளது. அதாவது, பிரபலமான தலைப்புகளுக்கு மட்டும் நிதி வழங்கப்படுதல், போலியான மோசடி இதழ்கள், மாநாடுகள், தரமற்ற அல்லது முறையற்ற வகையில் எழுதப்பட்ட ஆய்வு இதழ்கள், மற்றும் போலியான தரவுகளைக் கொண்ட வெளியீடுகள் போன்றவை. படைப்புத் திருட்டு, குறித்த ஒரு நபரின் பெயரில் அவருக்கு பதிலாக இன்னொருவர் எழுதுதல், மற்றும் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளின் ஒழுங்கற்ற பயன்பாடு போன்றவை இன்றைய காலகட்டத்தில் மேலதிக பிரச்சினைகளாக உள்ளன. இலங்கையிலும் பல ஆராய்ச்சியாளர்கள் மிக விரைவாக வெளியீடு செய்ய முயற்சி செய்கின்றனர். குறுகிய ஆய்வுகளைச் செய்துவிட்டு விரைவில் வெளியிட போலியான இதழ்களுக்கு கட்டுரைகளை அனுப்புவது, ஒரே கட்டுரையை பல இதழ்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்புவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறனர். பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட மாநாடுகள் என்பதற்குப் பதிலாக அதிக மாநாடுகளை நடத்த வேண்டுமென்றே விரும்புகின்றன. பல இலங்கை பல்கலைக்கழகங்களில், கலாநிதிப் பட்ட மாணவர்கள் தங்கள் ஆய்வினை சமர்ப்பிக்க முன்னர் இதழ்களில் ஆய்வு கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக புதிய ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி போலியான இதழ்களுக்குப் பலியாகின்றனர். மேலும், பல்கலைக்கழகங்கள் தங்களின் பீடங்கள் அல்லது துறைகளுக்கான் ஆய்வு இதழ்களை வெளியிட ஊக்குவித்துள்ளன. ஆனால், அவற்றின் சக மதிப்பீட்டுத் தரம் பல நேரங்களில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அத்துடன் குறுகிய நோக்கத்தைக் கொண்ட நிறுவன மாற்றங்களும் காரணமாகின்றன. உதாரணமாக, University Business Linkage Cells கடந்த உலக வங்கி கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டன. இவை ஆராய்ச்சியை வணிகமயமாக்க உதவுவதாக கருதப்பட்டன. அதாவது, காப்புரிமை பெறக்கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துதல் ஆகும். இத்தகைய குறுகிய நோக்கம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற விரிவான ஆய்வுகள், குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு பரந்துபட்ட பார்வை இருந்திருந்தால் ஆராய்ச்சியை வணிகமயமாக்குவதற்குப் பதிலாக பிற துறைகளிலும் விரிவடைய உதவி இருக்கக்கூடிய வகையில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
இது எந்தவகையான ஆராய்ச்சிகள் பொருத்தமானவை அல்லது பயனுள்ளவையாகக் கருதப்படுகின்றன என்ற பிரச்சினைக்கு இட்டுச் செல்கின்றன. இது குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்ட ஒரு கேள்வி ஆகும். ஒரு வகையில், ஆராய்ச்சி என்பது உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் முயற்சியாகும். ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பொது நிதி பயனுள்ள திட்டங்களுக்கு செலவிடப்படும் என்று பொதுமக்கள் எங்களை நம்ப வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். இருப்பினும், அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் குறுகிய காலத்தில் பயன் தெரியாத நிலை காணப்படுகிறது. சில ஆய்வுகளை நிபுணர்கள் தவிர ஏனையவர்கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே, சில ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடப்படும் நேரம் அல்லது நிதி உடனடியாக மதிப்பு பெறாது, அத்தகைய அறிவு ஒரு கட்டத்தில் தேவைப்படும் வரை, அவை தேவையற்றவை அல்லது சலுகை போலத் தோன்றும்.
ஒரு சிறிய உதாரணம் போதுமானது. 1970 களிலிருந்து, சிங்களம் மற்றும் இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளின் அமைப்புகள் (ஒலிக் கூறுகள், பேச்சு மொழியின் வாக்கிய அமைப்புகள் போன்றவை) தொடர்பான ஆராய்ச்சி கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டே உள்ளது. இத்தகைய தலைப்புகளின் மீதான ஆர்வம் குறைந்து கடந்த 30 ஆண்டுகளில் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் முன்னுரிமையாகக் கருதப்படவில்லை. ஏனெனில், இது காப்புரிமைகள் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கான தெளிவான பங்களிப்புக்களை உருவாக்கக்கூடிய துறையாக இல்லாத காரணத்தால் ஆகும். ஆனால் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் பயன்பாட்டில் வந்துள்ளதால் இந்த மொழிகளைப் பற்றிய முறையான அறிவின் தேவை மிகத் தெளிவாகத் தெரிகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளூர் மொழிகளில் இயங்கும்போதே மக்களுக்குப் பயனுள்ளதாக அமைகின்றது. உள்ளூர் மொழிகளின் அமைப்புகள் மற்றும் ஒலிகளைப் பற்றிய அறிவில்லாமல், குறிப்பாக பேசப்படும் வடிவங்களைப் பற்றிய அறிவில்லாமல், ஆங்கிலம் தெரியாதவர்கள் அந்த சாதனங்களையும் தளங்களையும் பயன்படுத்த முடியாது. இத்தகைய தேவை மொழியியல் ஆய்வுகளுக்குத் தூண்டுதலாக இருப்பதோடு, பயன்தன்மை சார்ந்த ஆராய்ச்சியையும் நியாயப்படுத்துகிறது.
இவ்வாறே, கருவியாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கருத்தியல்களின் பிரச்சினை வெளிப்படுகின்றது. உலக வங்கி கொள்கைகள், ஆராய்ச்சியை நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் இணைக்கச் செய்கின்றன. ஆனால் நமது நாட்டை போன்ற இடங்களில் அரசாங்கக் கொள்கைகள் தேர்தல் அறிக்கைகளுடன் இணைந்திருப்பதால், ஆராய்ச்சி வெளியீடுகள் தேர்தல்களுடன் கட்டுப்பட்டுவிடுகின்றன. உதாரணமாக 2019 இல் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக இருந்தால் 2025 இல் அது சுத்தமான இலங்கையாக மாறலாம். குறுகிய நோக்கமுடைய தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த ஆராய்ச்சி நீண்ட காலத்தில் எங்களுக்கு பெரிதாக பயனளிக்காது. அதேசமயம், சர்வதேச போட்டித் தன்மையுள்ள ஆராய்ச்சி நிதிகளுக்காக விண்ணப்பிப்பதும் சிக்கலாகும். ஏனெனில் அவற்றின் ஆராய்ச்சி திட்டங்கள் நமது நாட்டிற்கு தொடர்பில்லாதவையாக இருக்கலாம். இவை அனைத்தும் ஆராய்ச்சி நெறிமுறைகள் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.
முடிவான சிந்தனைகள்
நல்ல ஆராய்ச்சி கலாசாரம் நோக்கி நகரும் முயற்சியில் இலங்கையின் அரசுப் பல்கலைக்கழகங்கள் முதலாம் உலக நாடுகளை பாதித்த சில பிரச்சினைக்குரிய போக்குகளின் வலையில் சிக்கியுள்ளன. ஆனால், நாம் காலத்திற்கு பின் தங்கியிருக்கிறோம் என்பதால் அந்தச் சிக்கல்களின் தீமையான விளைவுகளைப் பார்க்கவும், பயனளிக்கும் செயல்முறைகளைத் தேர்ந்தெடுக்கவும் நமக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இப்போதைய நிலையில், இலங்கைக்கு ஆராய்ச்சி முன்னுரிமைகளை மெதுவாகவும் ஆழமாகவும் ஆராயும் அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் புதிய உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை உருவாக்கி, அன்பும் அக்கறையும் கொண்ட வழிகாட்டுதலின் மூலம் சிறந்த ஆராய்ச்சி சூழலை உருவாக்குவதற்கான ஒரு கூட்டு நடவடிக்கைக்கான காலமாகவும் உள்ளது.