ஷாமலா குமார்
டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக Sunday Observer செய்தி வெளியிட்டது. 225 சர்வதேச மாணவர்களுடன், அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதால், பல்கலைக்கழகம் அதன் இலக்கை அடையும் பாதையில் இருப்பதாக VC கூறினார். அவரது கருத்துக்கள், அரச நிதி சார்பிலிருந்து பொது பல்கலைக்கழகங்களை விலகச் செய்யும் தேசியத் திட்டங்களையும் உலகளாவிய போக்குகளையும் பிரதிபலிக்கின்றன.
சந்தை நோக்கமுடைய மாதிரி
VC அவர்களின் கருத்துக்கள், உயர் கல்வியை ஆழமாக மாற்றி வரும் ஒரு கொள்கை நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. ஜனநாயகத்தின் தூண்களாகக் காணப்பட்ட பல்கலைக்கழகங்களை, தனியார் நலன்களுக்குச் சேவை செய்யும், தாங்களே நிதி திரட்டும் “தன்னாட்சி” அமைப்புக்களாக மாற்றுகின்ற மாற்றம் மெதுவாக நடைபெறுகின்றது. உலக வங்கி போன்ற நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நவதாராளமயமாக்கக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த தொலைநோக்கு, தேசிய எல்லைகள் மற்றும் பிற தடைகளால் கட்டுப்படுத்தப்படாத, சுதந்திரமாகப் பாயும் உலகளாவிய மூலதனச் சந்தையை ஆதரிக்க பல்கலைக்கழகங்களை மறுசீரமைக்கிறது. (ஹார்வி,2006) நல்ல வேலைகள், வலுவான பொது சேவைகள், வளர்ச்சியடைந்த சூழல் ஆகியவற்றுக்கான மக்களின் ஆசைகள் சந்தைத் தர்க்கத்துடன் முரண்படும் போது, அவை காலத்திற்குப் புறம்பானவை, நடைமுறையில் சாத்தியமற்றவை, பயனற்றவை அல்லது செயல்திறன் குறைவானவை என்று தள்ளிப் போடப்படுகின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முழுமையாகச் செயல்படும் சந்தை அமைப்பொன்றுக்கு, இலவசக் கல்வி போன்ற “செயல்திறன் குறைகள்” தளர்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இலங்கையின் உயர் கல்விக் கொள்கையைப் பற்றிய உலக வங்கி அறிக்கை, “தற்போது உயர்கல்வியில் தனியார் துறை கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுகிறது” (p.20) என்று குறிப்பிடுகிறது. “கட்டுப்பாடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, கல்வியின் முதன்மை வழங்குநராக அரசை அடையாளப்படுத்தும் நமது இலவசக் கல்விக் கொள்கைகளையே ஆகும். “அணுகலையும் தரத்தையும் மேம்படுத்தும் இரட்டைச் சவாலைக் கருத்தில் கொண்டால், திறன் மற்றும் வளங்களின் குறைவுகளுக்கு மத்தியில், இலாப நோக்கத்துடனும் இலாப நோக்கம் இன்றியும் செயல்படும் தனியார் துறையின் பங்கேற்பை ஈர்ப்பது அவசியமாகின்றது” (p.20) என்றவாறு அறிக்கை தொடர்கிறது.
மாற்றுவழிகளுக்கான தேடல்
உலகளவில், இத்தகைய மறுசீரமைப்புகள் அரசின் பங்கைக் குறிப்பிடத்தக்க வகையில் ஒழுங்குமுறைப்படுத்தும் நிலைக்கு மாற்றி, கல்வியை சந்தைமயமாகவும்/ பண்டமாகவும் மாற்றி, தனியார் செயற்பாட்டாளர்கள் இந்த துறையில் நுழைய வழித்தடங்களை உருவாக்குகின்றன. எனவே, இலங்கையும் தனியார் மற்றும் கட்டண வசூலிக்கும் அரசக் கல்வியின் விரிவாக்கத்தை ஊக்குவித்ததிலும், புதிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிலம், உட்கட்டமைப்பு, பயன்பாடுகள் போன்ற சலுகைகளை வழங்கியதிலும், காசோலை (voucher) முறையை முன்மொழிந்ததிலும், அவற்றை ஆதரிக்க கடன்கள் மற்றும் அரச-தனியார் கூட்டாண்மைகளை அறிமுகப்படுத்தியதிலும் ஆச்சரியம் இல்லை.
தனியார் உயர்கல்வியின் வலுப்படுத்தல், பொது கல்வி நிதியில் கடுமையான குறைப்புக்களுடன் இணைந்துள்ளது. பல தசாப்தங்களாக இலங்கையின் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அளவுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் தாழ்வாகவே இருந்துள்ளன; 1960 களில் 4.25% ஆக இருந்தது 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 1.5% ஆகக் குறைந்துவிட்டது. (சர்வானந்தன், 2020). பல்கலைக்கழகங்கள் இயங்கத் தேவையான நிதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எப்படியோ நிரப்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது. செயற்பாட்டுச் செலவுகளை நிறைவேற்ற பல்கலைக்கழகங்கள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டு மாணவர் சந்தையைப் பயன்படுத்துதல் மற்றும் தனியார் துறையுடன் உறவுகளை மேம்படுத்துதல் போன்ற தந்திரங்கள் செயற்படுத்தப்படுகின்றன. பேராதனைப் பல்கலைக்கழகம், தனது அழகிய வளாகத்தையும், விரிவான உட்கட்டமையும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு மாறாக, வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், போரின் தாக்கங்கள், தொடர்ந்துவரும் இராணுவமயமாக்கல், மற்றும் போதிய வளங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது, அல்லது, கொழும்பிலிருந்து தொலைவில் இருக்கும், புதிதாக உருவான, பணியாளர்கள் குறைவான ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு நிதி உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
தீவிரமடையும் ஏற்றத்தாழ்வுகள்
இந்த வேறுபாடுகள் 2022 ஆம் ஆண்டின் UGC தரவுகளிலும் பிரதிபலிக்கின்றன. கொழும்பு பல்கலைக்கழகம் தனது வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு ஈட்டிய நிதியிலிருந்து பெற்றிருந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம் 2% இற்கும் குறைவாகவே பெற்றுள்ளன. உயர்கல்விக்கான முதன்மை நிதி ஆதாரமாக ஈட்டிய வருவாயை அடையாளப்படுத்தும் நிலையில், புறநகர் பல்கலைக்கழகங்கள் மேலும் பலவீனப்படுவதற்கான அபாயத்தில் உள்ளன என்பதை இந்த தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. (வரைபை பார்க்கவும்)
எனினும், வேறுபாடுகள் வெறுமனே நிதியிலேயே அல்ல; பிரச்சினை அதைவிட அதிகமாக இருப்பதைக் குறிக்கின்றன. UGC தரவுகள், கொழும்பு பல்கலைக்கழகத்தை விட குறைவான கல்விசார் பணியாளர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதிகமான மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, UOC இல் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் விகிதம் 1:1 ஆக இருந்தால், UOJ இல் அது 3:1 ஆக உள்ளது. தற்காலிகப் பணியாளர்களின் மீதான சார்பும் ஒப்பீட்டளவில் UOC ஐ விட (959 பேரில் 30%) UOJ இல் அதிகம் (867 பேரில் 40%). (UGC, 2022)
போருக்குப் பின்னர் UOJ இல் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்வடைந்திருக்கிறது போல் தெரிகிறது. 2007 இல் UOC இன் சேர்க்கை எண்ணிக்கை UOJ இனை விட இருமடங்கு இருந்த நிலையில், 2022 இற்குள் UOJ சிறிதளவு UOC ஐ முந்தியுள்ளது. எனினும், UGC தரவுகளின் படி, மாணவர் ஒருவருக்கான வருவாய் (அரசு ஒதுக்கீடும் ஈட்டிய நிதியும் சேர்த்து) UOJ இல் (LKR 326) UOC இன் (LKR 959) மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. இது வளங்களுக்கான அணுகலில் உள்ள மிகப்பெரிய சமத்துவமின்மையை வெளிப்படுத்துகிறது (பல்கலைக்கழகங்களில் தங்கள் இலக்குகளை அடைய பயன்படுத்தக்கூடிய வளங்களின் அளவை “வருவாய்” பிரதிபலிப்பதாகக் கருதினால்). இந்த எண்ணிக்கைகள், UOJ மிக விரைவாக மாணவர் சேர்க்கையை அதிகரித்திருந்தாலும், அதற்கு இணையான அரச நிதி ஆதரவு வழங்கப்படவில்லை என்பதையும் காட்டுகின்றன.
இந்த வேறுபாடுகள், ஒவ்வொரு நிறுவனமும் கொண்டுள்ள அரசியல் செல்வாக்கின் சமமற்ற தன்மையில் இருந்து உருவாகின்றன. அத்துடன் வரலாற்று ரீதியாக நிதி ஒதுக்கீடுகளில் காணப்படும் வேறுபாடுகளையும் வடிவமைத்துள்ளது (CEPA, 2017) ஆனால், முக்கியமான கேள்வி, வேறுபாடுகள் உள்ளனவா? என்பதல்ல, அவை தெளிவாக உள்ளன. மாறாக, தற்போதைய மறுசீரமைப்புகள் அவற்றைக் குறைக்குமா? மேலும், நமது பல்கலைக்கழகங்களின் இலவசக் கல்வி கோட்பாடு, அதனூடாக ஒரு ஜனநாயகமும் நியாயமான சமூகமும், இப்படிப்பட்ட மறுசீரமைப்புகள் மூலம் நிறைவேற்றப்படுமா/ அடையப்படுமா? என்பதே ஆகும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் எனது பதில், இல்லை என்பதாகும்.
கடுமையான விளைவுகள்
முதலாவதாக, உலகளவில் நவதாராளவாதக் கொள்கைகள் சமூகப் பாகுபாடுகளை விரிவாக்கியுள்ளன. (Mogendi,2024; Ulhaq et al.,2023; Yulia et al.,2023) பல்கலைக்கழகங்கள் வருவாய் உருவாக்கத்தை முதன்மைப்படுத்தும் போது, அவற்றின் முக்கிய கடமையான இலவசப் பட்டப்படிப்பு கல்வி பின்தள்ளப்படுகிறது. ஏற்கனவே கூட, சிரமங்களை எதிர்கொள்ளும் சில மாணவர்கள் படிப்பை நிறுத்த வேண்டியிருக்கிறது. கட்டணம் அறவிடும் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்துவது நடுத்தர வர்க்கத்திற்கான அணுகலை அதிகரிக்கக் கூடும். ஆனால் பல்கலைக்கழகங்கள் கட்டணம் செலுத்தும் திறன் உள்ளவர்களை முன்னுரிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இலவசக் கல்வி மட்டுமே வாய்ப்பாக உள்ள மாணவர்களுக்கு அணுகல் மேலும் குறைக்கப்படும்.
மேலும், கல்வி மறுசீரமைப்புகள் தனித்துவமாக நடைபெறவில்லை. கடின போராட்டங்களின் மூலம் பெற்ற பிற ஜனநாயக உரிமைகளிலும் இது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சந்தையின் “தடைகள்” அகற்றப்படுவதற்காக பாதுகாப்பு பின்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சுகாதார சேவைகளுக்கான அணுகல் குறைவு, நிலமின்மை, கடன் சுமை மற்றும் ஒழுங்கற்ற உழைப்பின் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் நிச்சயமற்ற தன்மை விரிவடைகிறது. இத்தகைய விளைவுகள், மூலதனம் திரளாகக் காணப்படும் மையத்திலிருந்து தூரத்தில் உள்ள புறப்பகுதிகளில் (உயர் கல்வியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் போல) இன்னும் தீவிரமாக உணரப்படுகின்றன.
இரண்டாவதாக, இந்த மாதிரி பல்கலைக்கழகங்களை ஒரு பெரிய அதிகாரத்தின், அதாவது பல்கலைக்கழகம் நிதி பெறத் தகுதியானதா என்பதை நிர்ணயிப்பவர்களின், பணியாளர்களாக மாற்றுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, எனது பீடத்தில் ஒரு புதிய படிப்புக்கான மாணவர்களை UGC சேர்த்துக் கொண்டாலும், வாக்குறுதியளித்த வசதிகளை வழங்கத் தவறிவிட்டது. அந்தப் படிப்பை முறையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பீடம் புதிய மாணவர்களைச் சேர்க்காமல் இருக்க முடிவு செய்தது. அந்தக் காலத்தில், தேவையான வளங்களை வழங்குவது அரசின் கட்டாயப் பொறுப்பாகவே பல்கலைக்கழகம் கருதியது. ஆனால், பத்து ஆண்டுகள் கழித்து, 2019 இல், ஜனாதிபதி, சேர்க்கை எண்ணிக்கையை கடுமையாக உயர்த்துமாறு கோரிய போது, ஏற்கனவே அதிகமாக எண்ணிக்கையைக் கொண்டிருந்த பல்கலைக்கழகங்களும் கூட அதனை ஏற்றுக்கொண்டன. சில பல்கலைக்கழகங்கள் ஓர் அளவிற்கு எதிரக்க முடிந்தாலும், பலரால் அதனைச் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் மீதான சுமை மிகவும் கடுமையானதாக மாறியது.
பல்கலைக்கழகங்கள் படிப்படியாக தங்கள் மதிப்பை இழந்து அதிகாரத்திற்கும் அரசாங்கத்திற்கும் அடிபணிந்து வருவதாகக் தெரிகிறது. இந்த மாற்றம் ஓரளவுக்கு சீர்திருத்தங்களிலிருந்து வருகிறது. அவை அவற்றை தற்காப்பு நிலையில் வைத்திருக்கின்றன. அவற்றின் செயற்திறன், செயல்திறன் மற்றும் மதிப்பை ஒரு பொது தன்மையாக நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உண்மையில் பொறுப்புக்கூறல் அவசியமாவதுடன் மேலும் பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயற்பட உதவுகிறது. இருப்பினும் UGC கருதுவது போல, பொறுப்புக்கூறல் அதிகாரத்தை இழக்கச் செய்து, தற்போதுள்ள பொறிமுறையின் (eg. Faculty boards and Senates) செயல்திறனைக் குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளது. அவை UGC புதிதாக நிறுவியதை விட (உ+ம் – UGC இனால் நிறுவப்பட்ட மேலிருந்து கீழான தர உறுதி கட்டமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளது) மிகவும் ஜனநாயகமானவை. பிற பொறுப்புக்கூறல் வழிமுறைகள் தேவைப்படலாம் என்றாலும், அவை உள்ளக வழிமுறைகளை பலவீனப்படுத்தக்கூடாது.
மூன்றாவதாக, இந்த மறுசீரமைப்பு பாதை தொடருமானால், இறுதியில் செயல்திறன் அடிப்படையிலான நிதியுதவி அல்லது “நல்ல செயல்திறனுக்கான” ஊக்கத்தொகைகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். 2023 தேசிய கல்விக் கொள்கை வடிவமைப்பு இத்தகைய ஒரு முன்மொழிவை முன்வைக்கிறது. அது நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே பின்தங்கியுள்ள பல்கலைக்கழகங்கள் செயல்படுவதில் சிரமப்படும் என்பதால், வேறுபாடுகள் மேலும் விரிவடையக்கூடும். செயல்திறன் அடிப்படையிலான நிதி உதவி உருவாக்கும் போட்டி சூழலானது, திறம்பட இயங்கும் சந்தையின் மற்றொரு அடையாளமாக விளங்குவதுடன், பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பையும் குறைக்கும்.
முடிவுரை
நாம் விரும்பும் சமூகத்தை – எனக்கு அது நியாயமான, கருணையுள்ள, ஜனநாயகமான சமூகம் ஆகும் – உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்த இலக்குகளை நனவாக்குவதற்கு வலுவான, அனைவருக்கும் அணுகக்கூடிய, வளமான கல்வி அமைப்பு தேவையானது.
1960 களிலும் 1970 களிலும் உலகளாவிய அளவில் கல்விக் கொள்கைகளை வடிவமைத்ததில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த கவலைகள் முக்கிய பங்கு வகித்தன. (Klees, 2008) ஆனால் இன்றைய ஆதிக்க கருத்துக்கள் பொதுவாக இந்த பிரச்சினைகளைப் புறக்கணிக்கின்றன. கல்வி மற்றும் நலத்திட்டங்களில் அரசின் முதலீடுகளை அதிகரிப்பதற்கு உலகளவில் அரிதாகவே ஆதரவு கிடைக்கிறது. அதற்குப் பதிலாக, கொள்கை விவாதங்கள் தர உறுதிப்பாடு போன்ற ஆட்சி அமைப்புக்களைச் சுற்றி மையப்படுகின்றன. இலங்கை போன்ற நாடுகள், பொருளாதார நெருக்கடியின் கீழ் சிக்கனமான நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளதால், தங்களுக்கு துணிவான ஒரு நோக்கை உருவாக்கக்கூடிய திறன் இல்லாதவைகளாகக் கருதப்படுகின்றன.
எனினும், 1930 களிலும் 40 களிலும் நமது கல்விக் கொள்கையை வடிவமைத்த விவாதங்களைப் பின் நோக்கிப் பார்க்கும் போது, அப்போது பல அதிகாரத்திலிருந்தவர்களும் இலவசக் கல்வியை வழங்குவதற்கு நமக்குத் திறன் இல்லை என நம்பியிருந்தது தெளிவாகிறது. ஆயினும், பெருமளவிலான பொதுமக்கள் அழுத்தத்தின் காரணமாக, இலவசக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று, கிளீஸ் கூறுவது போல, “நவதாராளவாதம் என்ற ஒரே இசையை அதிகளவில் பாடுகின்ற” உலகில் தான் நாம் இருக்கின்றோம். இந்த இசையை, மேலும் உள்ளடக்கியதாகவும், துணிச்சலான தாகவும் ஒன்றாக மாற்ற வேண்டிய நேரமாக இருக்கலாம். பாகுபாடுகளை இயல்பானவையாக ஏற்றுக்கொள்ளாமல், அவற்றைக் குறைக்கும் வகையிலும், வெறுமனே இலவச சந்தை அமைப்புக்களை உருவாக்காத உண்மையான இலவசக் கல்வியை உருவாக்கும் வகையிலும், கல்வி மறுசீரமைப்புகளை மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த வாய்ப்பை முன்னெடுக்க NPP அரசுக்கு அரசியல் விருப்பம் இருக்கிறதா என நான் சிந்திக்கின்றேன்.



