அனுஷ்கா கஹந்தகமகே
தற்சமயம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களின் பிரதான அரசியல் உந்துசக்தியாக இருந்தது சமுதாயத்தை “நெறிப்படுத்துவது” ஆகும். மக்கள் பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தமைக்குப் பின்னால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கிணங்க சமுதாயத்தைப் பாதுகாக்கவும் நெறிப்படுத்தவும், போரை வென்ற பரிபாலனத்தின் ஒரு முக்கிய பங்காளரும் முன்னைய இராணுவ அதிகாரியுமாகிய ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஆகவே இராணுவமயத்துடன் கூடிய ஆண்மையின் தேர்தல் வெற்றி, பெரும்பான்மை மக்கள் விருப்பத்தோடு நடந்ததொன்றேயொழிய ஒரு எதேர்ச்சியான விபத்தல்ல. இதனைத் தொடர்ந்து வந்த சமூகம் மற்றும் நிறுவனங்களின் இராணுவமயமாக்கலும் மக்கள் அறியாமல் நடந்தவையல்ல.
போர் முடிவடைந்த காலம் முதலே கல்வித்துறையில் இராணுவமயமாக்கலானது ஊடுருவ ஆரம்பித்து விட்டது. பள்ளிக்கூட அதிபர்கள் உட்படக் கல்வி அதிகாரிகள் ஊதியமற்ற படைத்துறை உயர்பணியாளர்களாக (ப்ரெவட் கர்னல்) நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இராணுவத்தின் தலைமையிலான பயிற்சித் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்தது. தற்போது போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் தலை தூக்கியுள்ள போரை வென்ற பரிபாலனமானது இராணுவமயமாக்கலைப் பேணுவதற்கான புதிய வழிமுறைகள் மூலம் இராணுவத்தின் ஆதிக்கத்தை விரைவாக விரிவுபடுத்துகின்றது. இவர்களின் ஆரம்ப உபாயங்களிலொன்று பொதுத்துறையை நெறிப்படுத்தும் பெயரில் பொதுமக்கள் நிறுவனங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தலாகும். அண்மையில் முன்வைக்கப்பட்ட கொத்தலாவல சட்டமானது கல்வித் துறை மூலம் இராணுமயமாக்கலை முன்னெடுப்பதற்கான முயற்சியைப் பிரதிபலிக்கின்றது.
நெறிப்படுத்தலும் பண்டமாக்கலும்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது 1981 இன் 68ஆம் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. அண்மையில் முன்வைக்கப்பட்ட சட்டத்தின் படி பாதுகாப்பு அமைச்சரால் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவர். இதன் ஒன்பது அங்கத்தவர்களில் பாதுகாப்பு அமைச்சின் பொருளாளர் மற்றும் துணைப் பொருளாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் திறைசேரியிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள் (இரண்டிலுமிருந்து ஒவ்வொருவர்), பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர், முப்படைகளினதும் படைத்தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் உள்ளடக்கப்படுவர். இங்கு துணைவேந்தரும் ஒரு இராணுவத் தளபதியாவார். முன்வைக்கப்பட்ட இந்த சட்டத்தின் படி கொத்தலாவல பல்கலைக்கழகமானது இராணுவப் பயிற்சி மட்டுமன்றி வேறு எந்தத் துறையிலும் உயர் கல்வியை சட்டபூர்வமாக வழங்க முடியும். அதாவது இப் பல்கலைக்கழகமானது நாட்டின் அரச பல்கலைக்கழகங்களைப் போன்று இயங்குவதுடன், மாறாக இராணுவத்தால் நிர்வகிக்கப்படுவதோடு முற்றாகக் கட்டணம் அறவிடும் ஒரு நிறுவனமாகவும் காணப்படும்.
இந்த சட்டமானது பெரும்பான்மை மக்களின் “இராணுவமயப்படுத்தப்பட்ட மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சமூகம்” என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. இங்கு மக்கள் கோரும் ” நெறியானது” ஒரு அதிகாரம் மிக்க அரச நிறுவனத்தினால் உயர் கல்வி வாயிலாகச் சந்தைப்படுத்தப்படுகின்றது. கவர்ச்சிகரமான ஒரு வியாபாரத்தைத் தாபிக்க வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான கல்வி மற்றும் நெறிப்படுத்தல் ஆகியன இங்கு வெகு சாமர்த்தியமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் இலவசக் கல்வி முறைக்காக வரி செலுத்தும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தேசியக் கொள்கைக்கேற்ப “நெறிப்படுத்தலைத்” தொடர்ந்து கல்வியும் பண்டமாக்கப்படும் நிலை உருவாகலாம்.
நிதி அமைச்சின் அறிக்கையொன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அண்மையில் இலங்கை வங்கி (BOC) மற்றும் தேசிய சேமிப்பு வங்கி (NSB) ஆகியவை திறைசேரி உத்தரவாதம் ஒன்றின் கீழ் 36.54 பில்லியன் ரூபாக்களை கொத்தலாவல பல்கலைகழகத்திற்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டன. மக்களின் வரிப் பணத்தில் பாரிய தொகையொன்று இவ்வாறு கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் போது இயல்பாகவே அரச பல்கலைக்கழகங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுவிடும். கல்வியைத் தனியார்மயமாக்குவதன் சுமை உண்மையில் மாணவர்களையே சென்றடையும். அரசிடமிருந்து நிதி ரீதியான ஆதரவு குறைவடைந்து பல்கலைக்கழகங்கள் பலவீனப்படுகையில், தேசத்தின் இலவசக் கல்விக்காக ஏற்கனவே செலவிட்டிருக்கும் மாணவன் கட்டணம் அறவிடும் கற்கை நெறிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகின்றான். மறுபுறம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் வளங்கள் குறைந்த அரச பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க நேரிடும். இது சமூக வர்க்கங்களுக்கிடையிலான பிரிவினையை மேலும் விரிவுபடுத்தும். இப் புதிய கல்வி முறையானது, இலவசக் கல்வியின் (முன்னைய) நோக்கிற்கு முற்றிலும் மாறுபட்டதாகும்.
ஜனநாயகத்துகாக இலவசக் கல்வி
ஜனநாயகமான தேசத்தைப் போலவே கல்வியும் மக்களின் உரிமையாகும். ஜனநாயகத்துக்கான அடிப்படையை உருவாக்குவது சுதந்திரமான கல்வியாகும். அத்தோடு அக் கல்வியைச் சகலரும் பெறக்கூடிய தன்மை காணப்பட வேண்டும். தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் கல்வியும் அறிவும் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும். அநீதிக்கெதிராகப் போராடவும், தமது உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கங்களின் சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் கல்வியானது மக்களைத் தயார் செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆகவே கல்வியானது அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளின் ஆதிக்கத்திற்குட்படாது தன்னிச்சையாக இயங்க வேண்டும். கல்வியைப் பெறும் தகவானது செல்வந்தர்கள், பெரும்பான்மையினர், அல்லது அதிகாரம் மிக்கவர்களின் பால் பக்கச்சார்பாக இருக்கும்போது உருவாகும் நடுநிலையற்ற ஜனநாயகமானது முடக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறுகின்றது.
நாட்டின் இலவசக் கல்வி முறைக்கு அடித்தளமிட்ட 1943 இன் கன்னங்கர அறிக்கையானது கல்வியின் “தன்னாட்சி” பற்றி விவரித்துள்ளது. இங்கு கல்வியைத் தன்னாட்சியான ஒரு அமைப்பு மூலம் நிர்வகிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு முதலாம் நிலை முதல் மூன்றாம் நிலை வரை கல்வியானது இலவசமாக அமைய வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது. இங்கு தவறான நபர்களிடம் கல்வி ஒப்படைக்கப்படுவதன் ஆபத்துக்களும், ஜனநாயகத்துக்கும் இலவசக்கல்விக்கும் இடையிலுள்ள தொடர்பும் கருத்தில் கொள்ளப்பட்டமை தெளிவாகின்றது. இதனாலேயே கல்வியானது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இன்றோ எமது அரசாங்கமானது கல்வியை மக்களுக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளதுடன் அதனை இரணுவத்திடம் ஒப்படைக்கவும் எத்தனித்துள்ளது.
எமது எதிர்காலம்
போர் முடிவடைந்த இக்காலப் பகுதியில் கல்வியானது நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும். கூறப்படாத வரலாற்றுக் கதைகளை மீண்டும் எழுதுவதற்கு மாணவர்கள் தூண்டப்பட வேண்டும். இங்கு சமாதானம் மற்றும் ஒற்றுமையை வளர்க்க சமூகங்களை ஒன்றுபடுத்துவதை விடுத்து, கல்வியானது மக்களை அடக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த இராணுவமயமாக்கல் திட்டமானது முறையான கல்வியின் அனைத்து வடிவங்களையும் இராணுவ அமைப்பொன்றின் கீழ் தாபிக்க எத்தனிக்கின்றது. குடியேற்றவாதிகள் குடியேற்றத்தினை நியாயப்படுத்த நாகரிகமான ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தைக் காரணம் காட்டியது போன்று, எமது அரசாங்கமும் இராணுவமயமாக்கலை நியாயப்படுத்த “நெறிப்படுத்தப்பட்ட” ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தினைச் சுட்டுகின்றது.
கல்வியை இராணுவமயமாக்குவதன் பின்விளைவுகள் பல. இதனால் ஏனைய அறிவுசார் அமைப்புக்களின் பெறுமதி குறைத்து மதிப்பிடப்படுவதோடு, தர்க்க ரீதியான சிந்தனையை வளர்க்காது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் போக்கே மாணவர் மத்தியில் வளர்க்கப்படும். சமுதாயத்தில் அநீதிகள் எதிர்க்கேள்வி கேட்கப்படாது விடப்படுவதுடன், மனித உரிமை மீறல்களும் நிறைந்து காணப்படும். கல்வியின் இராணுவமயமாக்கலைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதன் காரணம் இக்கல்வி முறையானது இராணுவ அமைப்புகளுக்குக் கீழ்ப்படியும் மேலாதிக்கக் கொள்கையை உருவாக்குவதாகும். பொது அறிவுச் சிந்தனையானது இராணுவ விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும். கொத்தலாவல சட்டம் அதிகாரபூர்வமாக்கப்படுவது கல்வியின் வியாபாரம் மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக அமைந்துவிடும். கொத்தலாவல சட்டத்தை ஏற்றுக் கொள்வது பொதுமக்கள் என்ற வகையில் எம்மை அழிப்பதற்கான கருவிகளை நாமே விலை கொடுத்து வாங்குவதற்குச் சமானமாகிவிடும்.