கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல‌

ரம்யா குமார்

மக்கள் மிகத்தீவிரமாக அரசாங்க மாற்றத்தை வேண்டுகின்றார்கள் என்பதற்கு
ஜூலை 9ல் நடைபெற்ற பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும்
சாட்சியங்களாக இருக்கின்றன. நாம் அரசாங்கத்தின் பங்காளர்களாக
இருப்பதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதை விடுத்தும் நாட்டின்
வளங்களின் சமமான பங்கீட்டுக்கும் ஜனநாயகமானதும்
உள்ளீர்க்கக்கூடியதுமான சமூகத்துக்காகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இத்தீவிர மாற்றங்களை வேண்டும் விடயங்களுக்காகவன்றி எமது அமைப்பு
ஆளும் வர்க்கத்துக்கே சேவகம் செய்கின்றது. குழப்பகரமான விடயம்
என்னவென்றால் நாட்டின் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை IMF
முன்மொழ்ந்திருக்கின்றது. இந்த ஆக்கத்தின் மூலம் IMFன் முன்மொழிவுகள்
சமூக நலன்புரிசேவைகளுக்கு குறிப்பாக இலவசக்கல்வி மற்றும் இலவச
மருத்துவத்துக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனப்
பார்க்கலாம்.

IMFம் அதன் நிகழ்ச்சிநிரலும்

சர்வதேச நாணய நிதியமும் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானத்துக்கான
சர்வதேச வங்கியும் (தற்போது உலக வங்கி) 1944ஆம் ஆண்டு ஐக்கிய
ஒன்றிய அரசுகளில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது ப்ரெட்டன் வூட்ஸ்,
நிவ் ஹெம்ஷியர் நகரில் உருவாக்கப்பட்டன. IMFஆனது இரண்டாம் உலகப்
போருக்கு பின்னரான, நிலுவை தொகை கட்டணம் உட்பட‌ சர்வதேச நாணய
அமைப்பை நிர்வகிக்கவும் உலக வங்கியானது இரண்டாம் உலகப் போருக்கு
பின்னரான மீள்கட்டமைப்புக்கான அபிவிருத்தி செயற்றிட்டங்களை
நிர்வகிக்கவும் தாபிக்கப்பட்டன. ப்ரெட்டன் வூட்ஸ் நிலையங்கள் என
அழைக்கப்பட்ட IMFஉம் உலக வங்கியும், 1950களில் பனிப்போருக்கு பின்னைய
காலகட்டத்தில், கம்யூனிச அச்சுறுத்தலை காரணங்காட்டி தமது கவனத்தை ஐரோப்பா, கிழக்காசிய நிலப்பரப்புகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு
திருப்பின.


அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளதும் விருப்பப்படி IMFன்
நிகழ்ச்சிநிரலானது நவதாராளவாத கருத்தியலை பரப்புவதும் மூலதனத்தின்
இலாபமிகுமையை அதிகரிப்பதற்காக சந்தைகளை விரிவாக்குவதன் மூலம்
உலகளாவிய முதலாளித்துவத்தை வளர்ச்சியடையச் செய்வதாகும். 1970களில்
ஏற்பட்ட நீண்டகால பொருளாதார மந்தைநிலை, 1973ல் இடம்பெற்ற
எரிபொருள் நெருக்கடி போன்ற நிகழ்வுகள் மற்றும் கடன் நெருக்கடிகளையும்
தொடர்ந்து IMFஉம் உலக வங்கியும் கடன்பட்ட நாடுகளுடன் பல்வேறு
நிபந்தனைகளுடனான‌ கட்டமைப்பு சீராக்க கடன் வசதிகள் கொண்ட
நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டு பேரம்பேசலாயின, அவையாவன: வர்த்தகத்தை
தாராளமயமாக்குதல், நிதி ஒழுங்குமுறை மறுசீராக்கம், தனியார்மயப்படுத்தல்
மற்றும் பாதீடுகளில் நலன்புரி சேவைகளை குறைத்தல் போன்றனவாகும்.
இவ்வாறான நிபந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளின் சிக்கல்களை
தீர்ப்பதற்கு பதிலாக கடன்பட்ட நாடுகளின் நிலுவை தொகைக் கட்டணங்கள்
அதிகரிப்பு, அவை மேலும் கடன்படும் நிலைக்கு, அதிலும் குறிப்பாக
நிலையற்ற சந்தைகளிடம் கடன்படும் நிலைக்கு தள்ளப்பட்டமை, IMFன்
உடன்படிக்கைகள் மற்றும் அதன் நிலைப்படுத்தும் நிகழ்ச்சிகளின்
தேவைப்பாட்டுக்கு அடிமையானமை, இதனால் அரசாங்கங்கள் நலன்புரி
சேவைகளுக்கான நிதியீட்டை குறைத்தமை போன்ற நிகழ்வுகளுக்கு
காரணமாயின. இவ்வாறான நிகழ்ச்சிநிரல்கள் இலங்கை போன்ற நாடுகளின்
நலன்புரி அரசாங்க சேவைகளின் மீது பலத்த அடியாக விழுந்துள்ளதோடு
கடன்பட்ட நாடுகள் மேலும் மேற்கு நாடுகளில் தங்கியிருக்கும் நிலையை
உருவாக்கியுள்ளன.

உலகளாவிய நலன்புரி எனும் அபத்தம்

நவதாராளவாத கருத்தியல் கொண்ட ப்ரெட்டன் வூட்ஸ் நிலையங்கள்
தொடர்ந்தும் உலகளாவிய நலன்புரி செயற்றிட்டங்களை கலைக்கும்
வேலைகளையே செய்து வருகின்றன; IMF அரசாங்கங்களை தாராள சந்தை பொருளாதாரக் கொள்கைகளை உள்வாங்கி பொதுச்செலவுகளை குறைக்க
வலியுறுத்துதல், உலக வங்கி தலையிடுவதற்கான நிலமைகளை
உருவாக்கிவிட்டு பின்னர் உலக வங்கியானது பொதுத்துறை சீர்திருத்தங்கள்
என்ற பேரில் தனியார்மயமாக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை
அறிமுகப்படுத்த வலியுறுத்துதல் போன்றன. பின்னைய நடைமுறையானது
சமத்துவம் குறித்த சிதைந்த பொருள்கோடலோடான நியாயப்படுத்தலை
முன்வைக்கின்றது; பணக்காரர்கள் ஏழைகளுக்கு சமமாகும் புள்ளி அவர்கள்
(தனியார்) சேவைகளுக்காக பணம்வழங்கும் போதாகும்; உலகளாவிய
நலன்புரிச்சேவைகள் இலக்குவைக்கப்பட்ட நலன்புரி சேவைகளால்
இடமாற்றப்பட வேண்டும்; நிபந்தனையுடன் கூடிய பணம்மாற்றம் அல்லது
முன்பணச்சீட்டுகள் மூலம் “கேள்வி வழியான நிதியளிப்பு”
நிகழ்ச்சித்திட்டங்கள் (சேவைகளை வழங்குவோரிடம் இருந்தன்றி
சேவைகளை பாவிப்போரிடமிருந்து நிதிகளை பெறல்).
மருத்துவ சேவையில் முன்பணச்சீட்டு முறை, கல்விச்சேவையில்
நிபந்தனையுடன் கூடிய நிதியளிப்பு போன்ற கேள்வி வழியிலான
நிதியளிப்புகள் தனியார் மற்றும் பொதுச்செவை வழங்களுக்கிடையில்
பாகுபாடு பார்ப்பதில்லை, ஆனால் தனியார் சேவை வழ்ங்குவதில்
நுழைவதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றன. மேலும்,
அரசாங்கமும் (அதன் அதிக சம்பளம் வாங்கும் ஆலோசகர்களும்)
தேவையுடையவர்களுக்கான திட்டங்களை உருவாக்கத் தவறுவதால்
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் முழுமையான பலன் பெறுனர்களாக
மாறாமல் சிக்கலுக்குள்ளாக்கப்படுகின்றார்கள். சுகாதாரத்துறையில் காப்புறுதித்
திட்டங்கள் நுகர்வு மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு வெறுவேறாக
வாங்குவதன் மூலம் வறியோருக்கான சேவை வழங்கல்களில்
(வரையறுக்கப்பட்டளவில்) “செலவு‍ப்பகிர்வு” ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக
தனியார் நிறுவனங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில்
மாணவர்களுக்கான கடன் வழங்கல்கள் (தனியார் நிலையங்களுகே)
வழங்கப்படுகின்றன.

இவ்வனைத்து ஏற்பாடுகளுக்கான கூடிய முதலீடு அரசாங்கத்தாலேயே
மேற்கொள்ளப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார அமையம்
மற்றும் உலக வங்கி ஆகியவை கல்விக்கும் சுகாதாரத்துக்குமான
பொதுமக்களுக்கான நிதியளிப்பையே வரவேற்கின்றன. இவை,
கோட்பாட்டளவில் இவ்வாறு வரவேற்று கல்விக்கும் சுகாதாரத்துக்குமான
அரசாங்க ஆதரவை அதிகரிக்கக் கோரினாலும், நிஜத்தில் இவ்வாறான
அரசாங்க நிதிகள் “பொது- தனியார் பங்குடமை” என்ற பேரில் தனியாரின்
ஊடாகவே நிதியளிக்கப்படுவதோடு பொதுச்சேவைகளிலிருந்து
நிதியுடமையை தூரமாக்குகின்றன.

நலன்புரி அரசும் ஆதன் வீழ்ச்சியும்

இலங்கையானது நலன்புரி அரசென்ற ரீதியில் நீண்ட நெடிய வரலாற்றைக்
கொண்டதாகும். உலகளாவிய உணவு மானியம் வழங்கும் நடைமுறை
உணவுப்பஞ்சம் ஏற்பட்ட காலப்பகுதியில் 1940களில் இரண்டாம்
உலகப்போருக்கு பிந்திய சூழலில் உருவாகியது. முன்பள்ளி மற்றும்
இரண்டாம்நிலைக் கல்வி பிரஜைகளுக்கான உரிமையாக
பிரகடனப்படுத்தப்பட்ட போது இலங்கையில் 1945ல் இலவசக்கல்வி
கொள்கையாக வரையப்பட்டது. 1951ல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச
மருத்துவம் அதற்கு முன்னர் கட்டணம் அறவிடப்பட்டு அரச
வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த சேவைகளை
இலவசமாக்கியதோடு பிற்பட்ட காலங்களிலும் அதே நடைமுறை
தொடர்வதை உறுதிப்படுத்தியது.

உலக வங்கியின் இலங்கையுடனான இணைவு 1951ல் கொரியப்போரின்
விளைவாக ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தின் போது ஏற்பட்டது. பரந்தளவில்
பேசுவதாயின், உலக வங்கியின் கொள்கைகள் நாட்டில் தனியார் முதலீட்டை
ஊக்கப்படுத்தியதோடு அரிசி மானியம் வழங்குவதை படிப்படியாக
குறைக்குமாறு ஆலோசனையும் வழங்கியது. இதன் போது ஆட்சியில் இருந்த
UNP அரசாங்கம், உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்டத்தை
நடைமுறைப்படுத்தியதோடு 1953ல் அரிசி மானியத்தை இல்லாமலாக்கியதுடன் அதன் விளைவையும் அனுபவித்தது. தொழிலாளர்
இயக்கம் இக்கொள்கைக்கெதிராக 1953ஆம் ஆண்டு பாரிய ஹர்த்தாலொன்றை
மேற்கொண்டதோடு அதன் விளைவாக அரிசி மானியம் மீண்டும்
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோடு 1956ல் UNP அரசாங்கத்தின்
ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

IMFன் முதலாவது உடன்படிக்கை 1965ல் ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியோடு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்மூலம்
அறிமுகப்படுத்தப்பட்ட நிலைப்படுத்தும் நிகழ்ச்சிநிரல்கள் மானியங்களை
குறைத்தல், தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கான கொள்கைகளை
அறிமுகம் செய்தல், நாணய மதிப்பு இழப்பு மற்றும் வர்த்தக
தாராளமயமாக்கம் ஆகிய செயற்பாடுகளை கொண்டிருந்தன. IMF அறிவுரைகள்
உள்நாட்டின் நுகர்வுக்கான‌ விவசாய உற்பத்திகள் மீதான முதலீட்டை
அதிகரித்தல், அத்தியாவசிய பண்டங்களுக்காகவும் உணவுக்காகவும்
வெளிநாட்டு இறக்குமதிகளில் தங்கியிருப்பதை தடுப்பதற்கான
வழிமுறைகளை முன்வைத்தல் போன்ற விடயங்களை
ஊக்கப்படுத்தவில்லை. IMFன் தலையீடுகள் அதிகமாக UNP அரசாங்கங்களின்
காலத்திலேயே நடைபெற்றுள்ளதோடு அதன் மிகவும் முக்கியமான திருப்பம்
நாட்டில் “திறந்த பொருளாதாரத்தை” அறிமுகப்படுத்தியதோடு 1977ல் UNP
பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றியாகும்.

ஒரு வேளை இலங்கையில் காணப்படும் நலன்புரி சேவைகளால் மானுட
வளர்ச்சியில் சர்வதேச அளவில் இலங்கை காட்டும் உதாரணம்,
இலவசக்கல்வி மற்றும் மருத்துவத்தை இல்லாமலாக்குவதால் நிகழக்கூடும்
அரசியல் விளைவுகள் காரணமாக இலங்கையில் அரசாங்கங்கள்
இலவசக்கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான கொள்கைகளை
குறைந்தளவேனும் பேணி வருவதோடு குறைந்தபட்ச அளவிலாவது அதன்
உட்கட்டுமானம் மற்றும் வசதிகளுக்கான‌ முதலீடுகளை மேற்கொண்டு
வருகின்றன. IMF மற்றும் உலக வங்கியின் படி, கல்வியும் மருத்துவமும்
சந்தைக்காக திறந்துவிடப்பட வேண்டியவையாக இருப்பதோடு தனியார்
நிலையங்களின் விரிவாக்கத்துக்காக நிதி ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டிய துறைகளாகும். இன்று, தனியார் கல்வி நிலையங்களும்
வைத்தியசாலைகளும் முதலீட்டுக்கான வாரியத்தின் கீழ் காணப்படுவதோடு
பொதுமக்களின் வரிப்பணத்தில் தனியார்துறை அனுபவிக்கும் பேறுகளான
இறக்குமதிகள் உள்ளிட்ட விடயங்களில் வரிச்சலுகைகள், அரச காணிகளில்
குத்தகைகள் போன்றவற்றை அனுபவிக்கின்றன.


இதே வளர்ச்சிமுறை அரசாங்கத்தின் கொள்கைகளிலும் வெளிப்படுகின்றன.
உதாரணமாக, 2021ல் அரச பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே
வழங்கப்பட்டிருந்த நிதியீட்டத்துக்கு மேலதிகமாக எவ்வித நிதியும்
வழங்கப்படாத நிலையில் பல்கலைக்கழக நுழைவு வீதத்தை 30%ஆல்
அதிகரிக்க கோரப்பட்ட நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் தனியார்
பட்டப்படிப்புகளை பெறும் மாணவர்களுக்கான கடன் வசதிகள் உள்ளிட்ட பல
நிதியொதுக்கீடுகளை பெற்றன. இதன் விளைவாகவே நாங்கள் பலமிழந்த
இலவசக்கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கும் அமைப்புகளையும்
அவையால் பாதிக்கப்பட்டுள்ள‌ அதிருப்தியான மக்களையும் தொடர்ந்து
வளர்ச்சியடைந்துவரும் தனியார் கல்வி மற்றும் மருத்துவ
நிலையங்களையும் காண்கின்றோம்.

ஆபத்திலிருப்பது என்ன?

பெருங்கொள்ளை நோய்த்தொற்றுக்கு பின்னரான இரண்டாண்டுகளில்
கல்வியும் சுகாதாரமும் இடிந்து போயுள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டு
பல்கலைக்கழகங்கள் முடக்கப்பட்டுள்ளன. மருந்துகள் மற்றும் மருத்துவ
வழங்குபொருட்களும் தொடர்ந்தும் வெளியேறும் சுகாதார ஊழியர்களுமின்றி
சுகாதாரத்துறை பெரும் சீரழிவை எதிர்நோக்கியுள்ளது. பல
நலன்புரிச்சேவைகள் ஏற்கனவே ஸ்டம்பிதமாகியுள்ளதோடு அவற்றில்
முக்கியமாக, போஷணைக்குறைபாடு பரவலாக நிலவும் நிலையில்
திரிபோஷ மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு வழங்கும்
சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பல செயற்றிட்டங்கள்
பொருளாதார நெருக்கடி என்ற பேரில் முடிவுக்கு கொண்டுவரப்படவும் கூடும். கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கும்
நிலையில் IMFஆனது இதன் மூலம் பொதுச்செலவுகளை கட்டுப்படுத்தல்
உட்பட இன்னோரன்ன நிபந்தனைகளோடு வரக்கூடும். இதனால்
எதிர்பார்க்கப்படக்கூடியது என்ன? ஜூலை 13, 2022ல் IMF தலைவர்
வெளியிட்ட தொடர்ச்சியான வலைப்பதிவுகளில் பெருந்தொற்றுக்குப்
பின்னரான “இருளும் பொருளாதார சூழ்நிலையில்” நிதிசார் மற்றும் அரசாங்க
வருமானம் சார்ந்த கொள்கைகளை சுருக்குதல், பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்த
குறிப்பான நடவடிக்கைகள் (பணம் வழங்குதல்), உணவு இறக்குமதி
கொள்கைகளை மீளப்பெறல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டுமென வெளியிட்டிருந்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில்
இலங்கையின் பகுப்பாய்வாளர்கள் IMFன் இவ்வாறான முன்மொழிவுகளை
வரவேற்றதோடு IMF தனது பழைய நடைமுறையிலிருந்து பின்வாங்கி கல்வி
மற்றும் மருத்துவ சேவைகளில் அரசாங்கம் நிதியீட்டம் செய்வதை
வரவேற்பதாகக் கூறி IMF அணுகுமுறையை ஏற்பதற்கான விருப்பப்பாடுகளை
காட்டினர். ஏற்கனவே நாம் கலந்துரையாடியதை போல இவ்வாறான IMFன்
நடவடிக்கைகள் பொதுச்சேவைகளை பலப்படுத்துவதை விடுத்து மாணவர்
கடனுதவிகள், சுகாதார காப்புறுதி வசதிகளாகியவற்றை வழங்குவதன் மூலம்
தனியார் நிறுவனங்களையே பலப்படுத்தும்.

பொருளாதார நெருக்கடிகள் அடிப்படையான அம்சங்களில் நீண்டகால
மாற்றங்களை ஏற்படுத்தவல்ல சமூகக்கிளர்ச்சிகளை கொண்டுவரக்கூடியன.
IMF தான் வழங்கும் கடன்கள் மூலம் (கடன்படும்நிலையை அதிகரித்து)
இதற்கான குறுகிய கால ஓய்வை வழங்கினாலும் சந்தை சார் கொள்கை
முன்மொழிவுகள் நீண்ட காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும்
அதிகரிக்கும். இவ்வாறான அமைப்பும் IMFம் ஆளும் வர்க்கமும்
எம்மைப்போன்ற நாடுகளின் தங்கிவாழும் தன்மையில், அதாவது
சுற்றுலாத்துறை, தேயிலை, அல்லது வெளிநாட்டிலிருந்து உழைத்து
அண்ணிய செலாவணியை நாட்டுக்கு அனுப்பும் ஊழியர்கள் போன்ற
இன்னோரன்ன விடயங்களில் மேற்கிலிருந்து நுகரும் தன்மையிலேயே
தங்கியிருக்கின்றன. IMFன் பொதுச்சேவைகளுக்கான செலவீடுகளை
வரையறுக்கும் முன்மொழிவுகள் நாட்டின் கல்வி மற்றும் மருத்துவத்தை மேலும் பலமிழக்கச் செய்யும். இதுவா எங்களின் மாற்றத்துக்கான
தூரநோக்கு? இலங்கை இதற்கு முன்னைய காலங்களின் பொதுச்செவைகளை
இல்லாமலாக்கும் முயற்சிகளை தடுத்துள்ளது. IMFன் வழிமுறைகளை விட,
உலகளாவிய கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான பொதுநிதியீட்டை
பாதுகாப்பதற்கும், நீண்ட காலத்திலும் சரி, குறுகிய காலத்திலும் சரி,
எம்மிடமுள்ள செல்வத்தை உணவு வழங்கும் திட்டங்கள் மற்றும்
இன்னோரன்ன வழிமுறைகளில் மறு பங்கீடு செய்யும் வழிமுறைகள்
நெருக்கடியால் உருவான காரணிகளாலும் அதுவல்லாத காரணிகளூடும்
எம்மால் செய்யமுடியுமாயிருக்கும்.