கவர்ச்சிகரமான உபாத்தியாயர், சில அவதானங்கள்

பியரி போர்தோ: கவர்ச்சி என்பது சமூகக் கோட்பாட்டாளரான பியரி
போர்தோவின் கருத்துப்படி ஒரு ‘இயல்புநிலையாகும்’‍- ஒருவர் உலகில்
தன்னை நிலைநிறுத்தும் பொருட்டு வெளிப்படுத்தும் சில பண்புக்கூறுகளாகும்.

ஹர்ஷன ரம்புக்வெல்ல‌

இலங்கையின் கல்வி உலகில் எனது அறிமுகமும் தூண்டுதலும் ஆரம்பமான
10 வருடங்களுக்கு முந்தைய காலப்பகுதியில் நான் ஆசிரியர் பயிற்சியில்
ஈடுபட்டிருந்தேன். உயர்கல்வியில் ஆசிரியப் பயிற்சியென்பது அக்காலத்தில்
புதியதொரு நடைமுறையாக இருந்தது. இருப்பினும், தற்காலத்தில்
அதுவொரு முக்கியமான மற்றும் கட்டாயமாக்கப்பட்ட தேவைப்பாடாக அரச
பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் (எனது
அனுமானப்படி) மாறியுள்ளது. ஒருவகையில், ஆசிரிய பயிற்சியென்பது
தேவைப்பாடாக கருதப்பட்டாலும்- ஏனெனில், யாருமே ஆசிரியராக
‘பிறப்பதில்லை’ என்பதோடு பட்டப்பின்படிப்போ கலாநிதிப்பட்டமோ நம்மை
கற்பித்தலுக்கு தயார்படுத்துவதில்லை- இன்னொரு வகையில் பார்க்கும்
போது, ஆசிரிய பயிற்சியென்பது உயர்கல்வித்துறையில்
ஒருமைப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ தர்க்கத்தை கொண்டுவருவதாக
தோன்றுகின்றது. உயர்கல்வித்துறையில் காணப்படும் ஒரு வஞ்சகமான
தர்க்கம் இன்னும் பல்வேறு விடயங்களின் ஒருங்கிணைவிலும் தாக்கம்
செலுத்துவதாக நான் உணர்கின்றேன். அவ்வாறான ஒரு விடயமே
பல்கலைக்கழக ஆசிரியர்கள் அனைவரும் ‘தொழில்முறைமயமாக்கப்பட”
வேண்டியவர்கள் என்ற நம்பிக்கையாகும். இவ்வாறான ஒரு விடயம்
காலமாகிய பேராசிரியர் ஏஷ்லீ ஹல்பே போன்றோருக்கு அன்னியமான
விடயமாயிருக்கலாம். நான் பேராசிரியர் ஹல்பே அவர்களை
குறிப்பிட்டதற்கான காரணம் பேராதனைப் பல்கலைக்கழகத்தை ஒரு
விதிவிலக்கான பொற்கால உலகாகக் கொண்ட வியன்புனைவான
நோக்கத்தில் அல்ல; பல்கலைக்கழகத்தை குறித்த வித்தியாசமான, உணர்வுபூர்வமான அதேவேளையில் விமர்சனரீதியிலான உருக்கமான
ஏக்கநிலையிலிருந்து வெளிப்பட்டதாகும்.

நான் அறிந்த, நான் கற்று வளர்ந்த பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகளுக்கு
அப்பாற்பட்ட மக்களுக்குமான இடமாக இருந்தது. அதுவொரு மொத்தமாக
அதிகாரப்படிநிலைக்குட்பட்ட கலாசாரத்தோடும் அளவீடுகள், தரவரிசைகள்
மற்றும் வினைத்திறன் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்ட அமைப்பாக
இருக்கவில்லை. கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நடைமுறை கூட இலவச
இணைப்பாக வரமுடியாது, அதற்கான விலை நான் கீழே குறிப்பிட்டதன்படி
வகுப்புவாதமாகவும் மேட்டிமைத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். இந்த
ஒருமைப்படுத்தப்படும் தர்க்கத்துக்கு பங்களிப்பு வழங்கும் இன்னொரு
காரணியாக நான் கருதுவது தர உறுதிப்பாட்டு அமைப்பையாகும். இவ்விரு
தர்க்கங்களுமே சந்தைத் தர்க்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையனவாக
இருப்பதோடு ஒன்றையொன்று வலிமைப்படுத்துவனவாகவும் இருக்கின்றன.
ஒப்புதல் பெறுவதற்கும் தர உறுதிப்பாட்டை பெறுவதற்கும்
தொழில்முறைமையாக்கம் முக்கியமான தேவைப்பாடாக இருக்கின்றது-
தொழில்முறைமையாக்கம் மேற்கொள்ளப்பட உயர்கல்வித்துறையில்
ஒருவகையான வஞ்சகமான ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு பேணப்பட
வேண்டும்- அவ்வொழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு பல்கலைக்கழக
ஆசிரியர்களில் காணப்படும் விமர்சன சிந்தையை தூக்கியெறிந்து மாயமான
பிம்பத்தோற்றங்கொண்ட ஒப்புமை நிலையை ஏற்பத்தவல்லது. இந்த
பின்புலத்திலேயே நான் ‘கவர்ச்சி’ என்பதை ஒருமைப்படுத்தப்பட்ட மற்றும்
அதிகாரப்படிநிலையுள்ள தர்க்கத்துக்கு எதிராக இயங்கக்கூடிய ஒரு
பண்பாகவும் பண்புகளின் கூறாகவும் கண்டு ஆய்ந்தறியப் போகின்றேன்.

கல்வியிலும் வகுப்பறையிலும் கவர்ச்சிக்கு எப்போதுமே தனியிடம் உண்டு
என நான் நம்புகின்றேன். ‘கவர்ச்சி’ என்பது பல பொருள் கொள்ளக்கூடிய
விடயமாகும். கவர்ச்சி என்பது பால்மையை அடிப்படையாகக் கொண்டோ,
அல்லது வர்க்கம், அல்லது பௌதீகக் காரனிகளைக் கூட அடிப்படையாகக்
கொண்டு பொருள்கொள்ளப் படலாம். இதனடிப்படையிலேயே பியரி போர்தோவின் கருத்தையும் புரிந்து கொள்ளலாம்- ஒரு ‘இயல்புநிலை’‍-
ஒருவர் உலகில் தன்னை நிலைநிறுத்தும் பொருட்டு வெளிப்படுத்தும் சில
பண்புக்கூறுகளாகும். இப்பண்புக்கூறுகள், போர்தோவின் கருத்துப்படி நாம்
எதேர்ச்சையாக பெறுவன அல்ல, அவை எமது சமூகப்பின்னணி, நாம் பெறும்
கல்வியின் தன்மை மற்றும் நாம் எதிர்நோக்கும் கலாசாரம் ஆகியவற்றால்
தீர்மானிக்கப்படுகின்றன. இருப்பினும் தற்காலத்தைய
கல்விமுறைமையானது, ஆசிரியருக்கு இருக்க வேண்டிய‌ இப்பண்புக்கூறை
குறைத்து மதிப்பிடுவதோடு ஆசிரியரை வெறுமனே ஒரு
‘வழிநடத்துனராகவே’ காண்கின்றது. இவ்வாறான நடைமுறை
கல்விப்புலத்தில் ஏற்பட்ட ‘மாணவ அடிப்படையிலான கற்றல்’ என்ற
கோட்பாட்டின் பேரில் உருவான விளைவாகும். அறிவின் உருவாக்கம்,
பரவல் மற்றும் கையகப்படுத்தும் தன்மையில் கடந்த தசாப்தங்களில்
ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை நோக்கும் போது ஆசிரியர்களின்
மாறிவரும் பாத்திரத்தை நாம் புரிந்து கொள்ள‌லாம். மாணவர்கள் தற்போது
அறிவை பெற பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துவதோடு ஆசிரியர்களின்
பாத்திரமான அறிவுக்கான வழி எனும் தேவை காலப்போக்கில்
குறைவடைந்துகொண்டே வருகின்றது. இவ்வாக்கத்தின் மூலம் நான்
மேற்கொள்ள விழைவது என்னவெனில், உயர்கல்விப்புலத்தில் ஏற்பட்டுள்ள
இம்மாற்றத்தை கோடிட்டுக்காட்டுவதும் கவர்ச்சியின் ஐயுறவான
வினைத்திறனை குறித்த தேடலுமாகும். நான் கவர்ச்சியை ஐயுறவான
விடயமெனக் கருதக் காரணம், அது ஒருவகையான வர்க்க சிறப்புரிமையை
கொண்டுவருவதாலும் அதன் வெளிப்பாட்டால் இதனில் ஒரு
மேட்டிமைத்தன்மை கொண்ட விதிவிலக்கும் தோன்றுவதனாலாகும்.
இருப்பினும், எனது பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் ஊடான கல்வி
வாழ்க்கையில் நான் பல கவர்ச்சிகரமான ஆசான்களால்
உருவாக்கப்பட்டிருக்கின்றேன்- அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர்,
துணிவூட்டினர், மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் சிந்திக்கவும்
செயற்படவும் தூண்டினர்.

உயர்கல்விப்புலத்தில் வகுப்பறை என்பது தொடர்ந்தும் வரையறுக்கப்பட்டு
வரும் இடங்களாகவே இருக்கின்றன. கசப்பான முரண்நகை என்னவெனில், இந்நடைமுறை விடுதலை தரக்கூடிய ‘ஊடறு புதுமையாக்கத்துடன் கூடிய’
மாற்றமென்ற பேரில் அரங்கேறுவதே. இதுவே தற்காலத்தில்
உயர்கல்விப்புலத்தில் ‘மாணவ அடிப்படையிலான கற்பித்தல்’, ‘பல அறிதிறன்’,
மற்றும் ஏனைய விடயங்களின் அடிப்படையிலான அறிவுசார்
பயிற்சிநெறியில் காணப்படும் வழமையாகும். இவ்வாறான கோட்பாடுகள்
உய்ர்கல்விப்புலத்தில் கட்டாயமான மாற்றங்களாக இருந்தபோதிலும் இவை
அடிப்படையில் வெளித்தரப்பிலிருந்து பெறப்படும் நிதியுதவிகளால்
மேற்கொள்ளப்படுவதால்- அடிப்படையில் உலகவங்கி- இவை வகுப்பறையில்
ஆசிரியர்களின் புத்தாக்கத்தன்மையை பெரிதும் கட்டுப்படுத்தும் பாரிய
விடயப்பரப்பின் அம்சங்களாகவே கொள்ளப்பட வேண்டும். இந்நடைமுறை
ஆரம்பமாகும் புள்ளி ஒரு கற்கைநெறி உருவாக்கப்படும் போது அதன்
பாடநெறிகளை கற்றல் விளைவுகள், கற்கைநெறியை கற்பதற்கான
விளைவுகள், கணிப்பீட்டு உத்திகள், கற்றல் மணித்தியாலங்கள் உள்ளிட்ட
இன்னபிற விடயங்களை வரிசைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு
காணப்படுவதிலாகும்.

இவ்வாறான அளவுகோல்கள் ‘அளவிடக்கூடிய வெளியீடுகளை’ கொண்டிருக்க
வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனால் மேம்போக்கான மற்றும்
தெளிவற்ற அளவுகோல்கள், உதாரணமாக, ‘விமர்சன சிந்தனையை
ஊக்குவித்தல்’ போன்ற பொருத்தமற்ற விடயங்களாகின்றன. விமர்சன
சிந்தனையை அடைவதற்கான கண்ணுக்குப் புலப்படக்கூடிய விடயங்கள்
எதிர்பார்க்கப்படுவதனால் விமர்சன சிந்தனையை கட்டுப்பாடான
எல்லைகளுக்குள் வரவிலக்கணப்படுத்த வேண்டிய தேவையும் எழுகின்றது.
இந்நடைமுறை மானுட மற்றும் சமூகவியல் துறைகளில் மேற்கொள்ளப்பட
முடியாததன் காரணம், இத்துறைகள் திறமைகள் அடிப்படையிலன்றி
மாணவர்கள் தம்மை சுற்றியுள்ள உலகை எவ்வாறு விமர்சன மற்றும்
சிந்தனை பிரதிபலிப்போடு நோக்குகின்றார்கள் போன்ற பயிற்சிகளையே
வழங்குகின்றன. இத்திறமை சார்ந்த தேவைப்பாடு மானுட மற்றும்
சமூகவியல் கற்கைநெறிகளின் தற்போதைய பாடநெறிகளில் கூட
சுமத்தப்படுகின்றன. இதற்கான காரணம் அனைத்து பாடநெறிகளும்
அடிப்படை தர நிர்ணயத்தை பெற வேண்டிய நிலையில் அவை ‘முறையாக ஒப்புக்கொள்ளப்பட’ வேண்டியிருப்பதாகும். ‘முறையாக ஒப்புக்கொள்ளப்பட
வேண்டிய தன்மை’ தற்போது அனைத்து பாடநெறிகளுக்கும்
கற்கைநெறிகளுக்கும் தலையாய தேவையாக மாறியுள்ளதால் அது
பல்கலைக்கழகங்களுக்கும் தலையாய தேவையாக மாறியுள்ளது, காரணம்
இவ்விடயம் நிதியீட்டம் மற்றும் வள ஒதுக்கீடு சார்ந்த நிறுவனங்களின்
அளவுகோல்களை எட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையாகும். இதுவொரு
சந்தை தர்க்கமாக மாறும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், இவ்வாறான
‘அளவிடக்கூடிய’ மற்றும் ஒருபடித்தான குறியீடுகளை உருவாக்குவதன்
மூலம் உயர்கல்வி ஒரு ‘விற்பனை’ பண்டமாக மாற்றமுடியுமாக
இருப்பதோடு, ஒருபடித்தான கல்வித்தகுதிகள், பாட அலகுகள் மற்றும்
தரங்களின் மூலம் அதனை ஒரு அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு
கைமாற்றும் செயலும் இலகுவாக நடத்தப்பட முடியும்.

இருப்பினும், இவ்வாறான செயற்பாடுகளிலுள்ள முரண்நகை யாதெனில், ஒரு
வகுப்பறை ‘மாணவ மைய’ வகுப்பறையாகவோ ஆசிரியர்கள் ‘பல அறிதிறன்
கோட்பாட்டை’ கடைபிடிப்பவர்களாகவும் இருக்க எதிர்பார்க்கப்படும்
சூழ்நிலையில் மேற்குறிப்பிடப்பட்டவாறான் ஒருபடித்தான செயன்முறை
பொருத்தமாக அமையாததே. ஒரு வகுப்பறை ‘மாணவர் மைய’
நிலையமாகவோ ஆசிரியர்கள் ‘பல அறிதிறனி’ வளர்ப்பவர்களாகவோ இருக்க
எதிர்பார்க்கப்படும் சூழலில் இவ்வாறான ஒருபடித்தான அளவுகோல்கள்
பயனற்றதாக இருப்பதோடு அவ்வெதிர்பார்ப்புகளை சூழ்நிலைக்கேற்ற
நடவடிக்கைகளே பூர்த்திசெய்வனவாக இருக்கும். உதாரணமாக,
மொழிக்கோட்பாடு பற்றிய கற்கையொன்று தமிழ் அல்லது சிங்கள மொழிப்
பீடத்தின் கீழ் கற்கப்படும் சூழல் ஆங்கிலமொழிப் பீடத்தின் கீழ் கற்கப்படும்
சூழலோடு ஒப்பிடுகையில் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறான
சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ளாமல் இருப்பது பொருத்தமற்ற செயல்
என்பதோடு அவை கற்கை வருவிளைவுகளில் எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தப்போவதில்லை.

இதன் அடிப்படைஇய்ல் பார்க்கும் போது ‘கவர்ச்சி’ என்பதன் தேவைப்பாடு
உணரப்படுகின்றது. ஆரம்ப மற்றும் இடைநிலை கற்கைகளை ஒப்பிடுகையில்
குறைவான ஒருபடித்தான கற்கை கட்டமைப்பை கொண்ட உயகல்வி
அமைப்பில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக உயர்கல்வி
ஆசிரியர்களுக்கு (இருப்பினும் நான் கல்வியின் அனைத்து தரங்களிலும்
இம்மாதிரியான அமைப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையையே ஆசிக்கின்றேன்)
புத்தாக்கத்துக்கான சுதந்திரதை வழங்க வேண்டும். கற்பிக்கும் நடையின் ஒரு
பகுதி எப்போதுமே அமைப்பு சாராத வடிவமற்ற நிலையில் இருக்க
வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஆசிரியர்கள் உயர்கல்விக்கு
பெறும் மூலதனமாக இருப்பவர்கள், இருப்பினும் இவர்கள் தமக்கான களம்
வழங்கப்படாமலும் ஏனைய அரசியல் காரணங்களாலும்
பாதுகாக்கப்படாமலிருக்கின்றனர். இந்த அடிப்படையில் கவர்ச்சியாக நான்
காண்பது எதிர்ப்பறிவிப்பின் நடவடிக்கையாகும்- உங்கள் நடை, உடை,
பாவனை, நீங்கள் கற்பிப்பதற்கு தேர்வு செய்யும் உபகரணம் ,அதனை
பாவிக்கும் விதம் போன்றன அவற்றின் வெளிப்பாடுகளாகும். இவ்வாறான
நிலையில் ஒரு சுறுசுறுப்பான சூழ்நிலையை நீங்கள் வகுப்புகளில்
ஏற்படுத்துவீர்கள். இதன் மூலம் நீங்கள் வகுப்பறைகளில் உள்ள மரபுகளை
தகர்ப்பதோடு நான் மேலே குறிப்பிட்ட ஒருபடித்தான கலாசாரத்துக்கும்
அதற்கு இணங்கும் மழுங்கிய மனநிலைக்கும் மாறாக இயங்கலாம்.

இருப்பினும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘கவர்ச்சி’ என்பது
தெளிவற்ற விடயமாகும். ஒருவர் சமூக மற்றும் கலாசார
மேட்டிமைத்தன்மையை மேலுயர்த்தும் நிலையிலும் ‘கவர்ச்சியாக’
இருக்கலாம். உதாரணமாக, இதன் வெளிப்பாடுகள் நீங்கள் எவ்வாறு
ஆங்கிலம் பேசுகின்றேர்கள், மற்றுமேனைய மேட்டிமை உணர்வுகள் மூலம்
வெளிப்படலாம். கவர்ச்சி ஒருவகையில் இறுமாப்பாகவும் இருக்கலாம்.
கவர்ச்சியான ஆசிரியர்கள் சில வேளைகளில் பன்மைத்துவத்தை பொருந்தாத,
ஆதிக்கம்சார்ந்த, கூட்டு செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாடவர்களாகவும்
இருக்கலாம். நான் வர்ணிக்க எத்தனிக்கும் ‘கவர்ச்சித்தன்மை’
இத்தகையதன்று; அது, வகுப்பறைகளில் ஒரு ஆசிரியரால் கொண்டுவர
முனையும் ஒருவகை மலர்ச்சி, தற்காலத்தில் உயர்கல்வி சந்திக்கும் அதிகாரப்படிநிலைகளால் உருவாக்கப்பட்ட மரத்துப்போன நிலைக்கு எதிராக
மரபொழுங்குகளை உடைத்தெறியும் தன்மை. கற்பித்தல் பயிற்சிநெறிகள்
உண்மையில் ஊக்கமளிப்பனவாக இருந்தால் அவை இவ்வாறான
மரபொழுங்கை பேனும் தன்மை, ஒருபடித்தான நடவடிக்கைகள்
ஆகியவற்றுக்கெதிரான சீர்திருத்தங்களுக்கான தளத்தை அடைவதாக
இருக்கும்.