சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி

எரந்திகா டீ சில்வா

கண்டி நகரத்தில் பிறந்து பாடசாலைக்கு சென்றவள் என்ற வகையில் நான்
குறைந்தது பத்து தடவைகளாவது எசல பெரஹெரவை பார்த்திருப்பதோடு
பாடசாலை நாட்களில் குறைந்தது ஐந்து தடவைகளாவது அதனை
வரைந்திருப்பேன். கண்டி வாவியை சூழ இருக்கும் பாடசாலைகளுக்கு
ஆகஸ்ட் மாதமே சிறந்ததாகும். எசல பெரஹெரவுக்கு பாதுகாப்பு வழங்கும்
படைகளுக்கான தங்குமிட வசதிகளை மேற்கொள்ள வேண்டி பாடசாலைகள்
அதிக நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும். ஐஸ்கிரீம் வண்டிகள், தும்புமிட்டாய்
வியாபாரிகள், சோளகப்பொரி, இறால்வடை, மிருக உருவ பலூன்கள்,
ஊதிகள், பளபளக்கும் குச்சிகள் என எனது சிறுபராயம் மிக
கொண்டாட்டமானதாக இருந்தது. சிறுவயதில் அதனை நான் ஒரு சர்க்கஸ்
கூடமாகவே ரசித்தேன். ஏன் மக்கள் “சாது சாது” என கைகளை
உயர்த்துகிறார்கள்? ஏன் யானைகள் ஊர்வலம் வருகின்றன? ஏன் தாய்மார்
தம் குழந்தைகளை நற்சகுனத்திற்காக யானைகளின் வயிற்றினடியில்
கொண்டுசெல்கிறார்கள்? யானைகளுக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி
உள்ளதா? அவை தெய்வீகமானவையா? அப்படியாயின் அவை ஏன்
விலங்கிடப்பட்டிருக்கின்றன? அவை பயங்கரமானவையா?

எனது பாடசாலை நாட்களை எண்ணும் போது எசல பெரஹெர பற்றியோ
அல்லது சிங்கள புதுவருடம் பற்றியோ எவ்வித விமர்சன நோக்கமோ
கேள்வியோ அன்றி பத்து இருபது பக்கங்களுக்கு ஒப்படைகளை
சமர்ப்பித்ததை எண்ணி இப்போது வருந்துகின்றேன். பாடசாலையில்
ஏற்படுத்தப்பட்ட “அவுருது கம” (புதுவருட வீடு) இன்றும் என் நினைவில்
உள்ளது; அதில் நியமிக்கப்படும் ஆண் தலைவர் ஆண்மைய சமூக
ஒழுங்கையும் அதனுல் பின்பற்றப்படும் பால்மை சார் பங்குகளையும்
குறிப்பதாக இருக்கும். வெசக் மற்றும் பொசன் போயா தினங்களில் கூடுகளை
வைத்து அலங்கரிக்கப்படும் நிலையில் கிரிஸ்துமஸ் பண்டிகைகளின் போது எந்த அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது உறுத்தலான
விடயம். நாம் எசல பெரஹெர பற்றி மேற்கொள்ளும் ஒப்படைகள் கூட
வரிசையில் நிற்கும் படையினரையே காட்டும். பாடசாலைகள்
என்றைக்காவது எசல பெரஹெராக்களின் வரலாறுகளில் காணப்படும்
சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தைப் பற்றி கற்பித்ததுண்டா? யானைகளின்
அணிவகுப்புகளில் உறைந்திருக்கும் அவற்றை பழக்கப்படுத்தல் மற்றும்
அணிவகுப்புக்கான பயிற்சி ஆகியவை குறித்து விமர்சனரீதியில் கருத்துகளை
முன்வைக்க வாய்ப்புகள் உள்ளதா? பாடசாலைகளில் வழங்கப்படும்
ஒப்படைகள் எமது வரலாற்று மற்றும் கலாசாரப் பயிற்சிகள் குறித்தான
விமர்சன அறிவை வளர்க்க உதவுமா? இவ்வாறான விமர்சனங்களற்று
வழங்கப்படும் ஒப்படைகள் மாணவர்களில் ஒரு வகையான தேசிய
உணர்வை அதிகப்படுத்துகின்றன. இலங்கையில் கற்பித்தல் கலையானது
அறிவை ஒரு படிப்பினையாகவோ அல்லது எதிர்த்தலின் கலையாகவோ
பார்க்கப்படுவதில்லை.

ஜேர்மனின் கல்வி அமைப்பு பாடசாலை மாணவர்களிடையே யூதவெறுப்புக்கு
எதிரான ஏற்பு, வாசிப்பு மற்றும் அதற்கெதிராக செயற்படுவது ஆகியவை
குறித்து பல முயற்சிகள் எடுக்கின்றது. அவர்கள் யூத இனப்படுகொலையின்
வரலாற்றை தெரிந்துகொள்வதற்கான முக்கியத்துவம், அதன் உருவாக்கம்,
வெளிப்பாடுகள் மற்றும் விளைவுகள் என்பவற்றையும் அவற்றை
ஒழிப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும்
ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறான மிகக்கவனமான நடவடிக்கைகளை
முன்னெடுத்தாலும் கூட இன்றும் யூத இனவெறுப்பு சார்ந்த நிகழ்வுகள்
பாடசாலைகளில் பதிவாகின்றன. எமது நாட்டில் காணப்படும் இனமுறுகலின்
வரலாறு, இடம்பெற்ற யுத்தம் மற்றும் இதனால் ஏற்படுத்தப்பட்ட
வன்முறையான கடந்தகாலத்தை குறித்து என்னென்ன நடவடிக்கைகளை
எடுப்பதென எமது நாடு தீர்மானித்திருக்கிறதா என்பது கேள்விக்குறியே.
இலங்கையின் பாடசாலைகளுக்கான பாடத்திட்டம் எப்போது சுதந்திரத்துக்குப்
பின்னரான வரலாறு மற்றும் யுத்தத்தை குறித்து இணைக்கப்போகின்றதென்ற
கருத்தாடல்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. எமது பாடசாலை கல்வித்திட்டங்கள் இன உறவுகள் மற்றும் தேசியவாதம் போன்ற
கருதுகோள்கள் குறித்த கேள்விகளுக்கான விடைகளை வழங்கவில்லை.

இதனை நான் எழுதுவதற்கான காரணம், இன்னமும் எனது தங்கை தம்பிகள்,
மருமக்கள் நான் இருபது வருடங்களுக்கு முன்னர் படித்த அதேவகையான
பாடத்திட்டத்தையே கற்பதை நான் காண்பதே. எமது மாணாவ்ர்களின்
உணர்திறனை அதிகரிக்கும், விமர்சனரீதியான புரிதலை விரிவுபடுத்தும்,
குடும்பம், பால்மை, சுற்றாடல், கலாசாரம் மற்றும் மதம் குறித்தான
அறிதல்களை விரிவுபடுத்தும் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதை
குறித்து சிந்திக்க வேண்டியது கட்டாயத்தேவையாகும். பாடசாலைகளில்
நிகழும் கலாசார மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்களை நாம் எவ்வாறு
பார்க்கின்றோம் என்பதை மீள வாசிப்பது முக்கியமாகும். இவ்வாறான
பெரும்பாலான கொண்டாட்டங்கள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய
நிகழ்வுகளாக தலைமுறைகளாக கடத்தப்படுவதை நாம் காண்கின்றோம். சில
சமய மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள் தடைசெய்யப்படுவதால் எழும்
விமர்சனங்களை விடுத்து இவ்வாறான விடயங்களை எவ்வாறு கையாளா
வேண்டுமென விமர்சன ரீதியில் சிந்திக்க வேண்டியது கல்வியியலாளர்களின்
கடமையாகும். எசல பெரஹெர நிஅழப்போகும் இக்காலத்தில் 2022ஆம்
ஆண்டு பரிமாறப்பட்ட நெடுங்கமுவே ராஜா மற்றும் அதன் பாகனின்
புகைப்படம் என் கண்களில் நிழலாடுகின்றது. இந்த புகைப்படம் பதித்த
ஸ்டிக்கர் அட்டைகளை என்னிடம் எப்படியாவது விற்று அதற்கு கிரிக்கட்
மட்டையொன்றை வாங்குவதற்காக எனது குட்டி மருமகன் மிகவும்
முயன்றுகொண்டிருந்தான். ஒரு சிறுவன் அறிந்துகொள்ளக்கூடிய வகையில்
அந்த புகைப்படத்தை குறித்த கலந்துரையாடலை நான் அவனுடன்
மேற்கொண்டிருந்தேன். இவ்வாறான ஸ்டிக்கர் அட்டைகளை விடுத்து அவன்
வரைந்த ஒரு படத்தை எனக்கு விற்பதாக கடைசியில் முடிவெடுத்தோம்.

2022ல் பரிமாறப்பட்ட அந்தப்புகைப்படம் பலரிடமும் பலவகையான
கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. சமூக ஊடகங்களில்
செல்லமாக “நெதுன்” என பெயரிடப்பட்ட அந்த யானை பலராலும் சென்று வணங்கப்பட்டது. ஒரு காலத்தில் வெறுமனே சேவை புரியும் மிருகமாக
கருதப்பட்ட “நெதுன்”, புத்தரின் தந்தத்தை தாங்கி நடந்தமைக்காக புனிதமாக
மாற்றப்பட்டு பலராலும் வணங்கப்பட்டது. அந்த இறந்த யானையில்
குவிக்கப்பட்டிருந்த கவனம் அப்படியே யானைப் பாகனுக்கு மாறியது. ஒரு
சமூக வலைத்தள பதிவொன்று இவ்வாறு காணப்பட்டது, “கலு மாமாவின்
சிறந்த நண்பன் ராஜாவாக இருந்தான். ராஜாவின் நம்பிக்கைக்குரிய
நண்பனாக கலு மாமா காணப்பட்டார். இப்போது கலு மாமா எவ்வாறு இந்த
இழப்பை தாங்கப்போகின்றார்?”. நெதுன் குறித்தான சமூக ஊடகங்களின்
எதிர்வினைகள் யானை- மனித இடையீட்டில் மனிதனின் மையநிலைத்
தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருந்தது. யானை- பாகனின் உறவு
பண்டமாக மாற்றப்பட்டு ஸ்டிக்கர்களாகவும் அரசின் முத்திரை மற்றும்
அட்டை நினைவுகளாகவும் வெளிப்படுத்தப்பட்டன. நெதுன்- கலு மாமாவின்
உறவு மீதான் இவ்வியன்புனைவுப் போக்கானது யானைகளை
பழக்கப்படுத்தல் மற்றும் அணிவகுப்புகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகளில்
நிகழும் அதிகார இயங்கிசைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.
நெதுனுக்கான இரங்கற்பாக்கள் கூட மனிதர்களை மையமாக வைத்த
போக்கையே கொண்டிருந்தன. அதன் இறப்பு ஒரு மிருகத்தின் இறப்பாக
அன்றி “புனிதமான” ஒரு சேவையை மேற்கொண்ட ஒரு சேவகனின்
இறப்பாகவே பார்க்கப்பட்டது.

நெதுன் பழக்கப்படுத்தலின் காரணமாக ஒரு மனிதனற்ற வகைப்படுத்தலைத்
தாண்டி மனித குணாம்சங்களை கொண்டதாக மாறிவிட்டது. இதுவொரு
நுட்பமான இரண்டுக்கும் இடைப்பட்டதான வகையீட்டில் இணைந்துவிட்டது.
அதேநேரத்தில், பழக்கபப்டுத்தல் மற்றும் அணிவகுப்பு பயிற்சியின் காரணமாக
மேலுயர்த்தப்பட்டு, “புனித” சேவையை மேற்கொள்ளும் ஒரு சேவை
மிருகமாக மாற்றப்ப‌ட்டது. இதனால் அது மனித மற்றும் மிருக
வகையீடுகளை மீறி புனிதத்துவம் ஏற்றப்பட்டுவிட்டது. மக்கள் அதனை
தெய்மாக மாற்றி மனிதனை மீறிய அம்சமாக மாற்றி விட்டனர். இந்த
தத்துவம் கடந்த நிலை மனித- மனிதனற்ற வகையீடுகளை மீறி இதனை
சாத்தியமாக்கிய மிருகங்களை பழக்கப்படுத்தும் தன்மையூடாக அதிகாரப்படிநிலைகளையும் தற்சிறப்பினத்தன்மையையும் மீள பலப்படுத்தவே
உதவியிருக்கின்றது. மிருகங்களை பழக்கப்படுத்தும் செயற்பாடு
மனிதர்களுக்கும் காட்டுயானைகளுக்குமான இடைவெளியை மேலும்
குறுக்கிவிட்டுள்ளதோடு மனித- மனிதனற்ற அங்கிகளுக்கிடையிலான அதிகார
அரசியலை மேலும் வலுப்படுத்தி மனிதனற்ற அங்கிகளை
கீழ்நிலைப்படுத்தியிருக்கின்றது. இது அதிகாரப்படிநிலை மற்றும்
தற்சிறப்பினத்தன்மை அடிப்படையிலான கீழ்நிலையாக்கத்தை ஊக்குவித்து
யானைகளின் மீதான வன்முறையை அதிகரித்துவிட்டது. இருந்தும், எசல
பெரஹெராவில் நெதுங்கமுவே ராஜா தெய்வீக அந்தஸ்து வழங்கப்பட்டு
பார்வையாளார்களால் கொண்டாடப்படுகின்றது. முரண்நகை யாதெனில்
கடவுள் அந்தஸ்து வழங்கப்படுவதர்கு முன்னர் அது இழிவுபடுத்தப்படும்
மனிதாபமனற்ற முறையில் நடத்தப்பட்டது.

இன்னொரு இணையப் பதிவின்படி நெதுன் மற்றும் அதன் பாகன் ஆகியோர்
இரு நண்பர்களாக பார்க்கப்பட்டு அவர்களின் புனிதமான பயணத்தில்
உச்சநிலையான அறிவொளியை அடைந்துவிட்டதாக காட்டப்பட்டது. யானை
ஒரு புனிதமான இடத்துக்கு கொண்டுவரப்படுவதல்ல இங்கு எழுப்பப்படும்
வினா, மாறாக அந்த யானை பௌத்த மத இலக்கான புனித அடைவை
மேற்கொள்ள விரும்புவதான அனுமானம் எடுக்கப்பட்டிருப்பதே
கேள்விக்குப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இது, மிகவுமே மனிதமைய
கருத்தாடலாக இருப்பதோடு மனித- யானைப்பாகனுக்கிடையிடான
இடையீட்டை மையநிலைக்கு கொண்டுவருவதோடு அதனூடாக மனிதனை
ஒப்புயர்வற்றவனாக மாற்றுகின்றது. சமய பாதிப்புகள்: விலங்கியல்பு,
பரிணாமம், மற்றும் அதிகாரம் எனும் நூலில் ஈ. டொனொவன் அவர்கள்,
சமய பாதிப்புகள் குறித்து பேசும் போது மனிதனற்ற விலங்குகள்
வெளிப்படுத்தும் சில விடயங்கள் எவ்வாறு சமய மற்றும் தெய்வீக
முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகின்றதென்பதை அலசுகின்றார். அவர்
பாவிக்கும் ஒரு உதாரணமாக ஒரு சிம்பன்ஸி குரங்கின் நீர்வீழ்ச்சி
நடனமாகும். மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட சமயங்கள் அல்லது
சமய பாதிப்புகள் மனித அறிதலுக்கு அப்பாற்பட்டவையாகும். எமது அனுமானங்களான மனிதனல்லாத விலங்குகளுக்கும் அதே சமய அவாக்கள்
இருப்பதானது மனித மைய கருத்தாடலாகும்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் பாடசாலைகளில் இடம்பெறாமைக்கான
காரணம் எமது பாடத்திட்டங்களில் இவற்றை விவாதிக்கக்கூடிய அளவுக்கான
விமர்சன கற்பித்தல் கலையோ அதற்கான கலாசார ஏற்போ
இல்லாதிருப்பதாகும். விமர்சனங்களையும் சொற்கலகங்களையும் தவிர்க்கும்
பொருட்டு எமது பாடத்திட்ட அமைப்பாளர்களும் கொள்கைவகுப்பாளர்களும்
இயங்குவதாகவே இதனை கொள்ளலாம். உயர்கல்வி பாடத்திட்டத்திலும் கூட
எமது கொள்கைவகுப்பாளர்களின் நோக்கம் சந்தை தொழில்வாய்ப்புகளை
தக்கவைத்தலாகவே இருப்பதோடு விளைவு அடிப்படையான கல்வித்திட்டம்,
தரக்கட்டுப்பாட்டு அலகுகள் தொடர்பான விமர்சனரீதியான பார்வை
பலராலும் குப்பி பத்திகளில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின்
கல்வித்திட்டத்தில் நான் காணும் முக்கியமானதொரு சிக்கல், கல்வியை
அதிகார எதிர்ப்பிற்கான கருவியாக பார்க்காமல் வெறுமனே அனைவரும்
கொண்டிருக்க வேண்டிய துணைக்கருவியாக நோக்குவதே. 2024 ஜனவரியில்
மகேந்திரன் திருவரங்கனால் எழுதப்பட்ட ஆக்கம் எதிர்ப்பு வெளிப்பாடும்
கல்வியும் என்பதாக இருப்பதோடு 2023ஆம் ஆண்டு மார்ச்சில் ஹர்ஷன
ரம்புக்வெல்ல அவர்கள் அனுசரிப்புக்கான கலாசார உருவாக்கம் குறித்து
எழுதியிருக்கின்றார். இவர்கள் கற்பித்தல் கலையின் அனுசரிப்புக்கான
கலாசாரத்தை உருவாக்கும் தன்மை மற்றும் விமர்சனமற்ற பார்வையையும்
கேள்விக்குட்படுத்தி இருக்கின்றனர். 2024 ஜனவரியில் சுமதி சிவமோகனால்
வரையப்பட்ட ஆக்கம் உருமாறும் கற்பித்தல் கலையின் வாயிலாக
இல‌ங்கையில் வாழும் பிரஜாவுரிமை நீக்கப்பட்ட
தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்றை உள்ளிணைப்பதை பற்றி
பேசுகின்றார். இதன் தொடர்ச்சியாக நான் இந்த ஆக்கத்தை எமது
பாடத்திட்டமானது புரட்சிகரமான கற்பித்தல் கலையை உள்ளாடக்க
வேண்டும் என்பதோடு அறிவை அதிகார எதிர்ப்பிற்கான கருவியாக
மாற்றுவதற்கு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டுமென்ற அழைப்போடு
முடித்து வைக்கின்றேன்.